அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாரிஸ் கதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Wednesday, 04 August 2004

(அப்பால் தமிழின் வெளியீடாக பாரிஸ் கதைகள் என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள "இந்த கதைகளின் கதை" என்னும் முன்னுரை இங்கே மீள் பிரசுரமாகின்றது.)

பாரீஸ் கதைகள்

1
கடந்த ஆண்டு எனது தாயாரின் இறுதிச் சடங்கினில்  கலந்து கொள்வதற்காக இலங்கை சென்றிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த பதினைந்து நாட்களில் யாழ்பாணம், வன்னி, திருக்கோணமலை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கும் பயணித்திருந்தேன். அப்போது பல இலக்கியச் செயற்பாட்டாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களுடனான உரையாடலின்போது கண்டம் தாண்டி புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் மற்றும் சமூக அசைவியக்கம் பற்றி அறியும் ஆவலைத் தெரிந்து கொள்ள முடிந்தது. புலம்பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையேயான இலக்கியப் பரிமாற்றமும் சரிவர நிகழவில்லை என்றும்,  புலம்பெயர் இலக்கியம் மற்றும் படைப்பாளிகள் பற்றியும் போதுமான அறிமுகம் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.  அதேபோல் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் வெளிவந்த இலக்கியப் படைப்புகள் பற்றிய அறிதலுக்கும் புலம்பெயர் நாடுகளில் வாய்ப்புகள் இருக்கவில்லை. இவை எல்லாவற்றிற்கும் நடந்து கொண்டிருந்த போரின் உக்கிரம்  ஒரு முக்கிய காரணமாகலாம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.  அத்துடன் கடைப்பிடிக்கப்படும் போர் நிறுத்த சூழலைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோர் பெருமளவில் ஊருக்கு சென்றிருந்தனர். அவ்வேளைகளில் அவர்கள் தங்களின் அசலான வாழ்வியல் சூழலை மறைத்து பொய்ப் பெருமைகளையே பறைசாற்றியிருந்தனர். புலம்பெயர்ந்து வாழ்வோர் பணம் காய்க்கும் மரங்கள்தான் என்ற பிம்பத்தையே உருவாக்கியிருந்தனர். இவற்றை அங்கு கேட்க பார்க்க நேர்ந்தபோது கவலை மிகுந்தது. இந்தப் பயண அனுபவமே இந்தத் தொகுப்பிற்கான அத்திவாரத்தை அமைத்துத் தந்தது.

இப்படியான தொகுப்பொன்றின் தேவைபற்றி பாரிசின் இலக்கியச் செயற்பாட்டாளரில் ஒருவரான நண்பர் மனோ அவர்களுடன் உரையாடினேன். அவர் தந்த ஒத்துழைப்பே இத்தொகுப்பிற்கான செயல்வடிவத்தை அளித்தது. முதலில் பாரிசில் இருந்து எழுதும் சிறுகதையாளர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தோம். தொகுக்கப்படும் கதைகள் புலம்பெயர் வாழ்கையை பிரான்சை களனாக கொண்டிருக்க வேண்டுமென்றும் வரையறை செய்து கொண்டோம். ஆதலால் சிறந்த சிறுகதைகளைத் தொகுப்பது என்னும் நோக்கத்தைத் தவிர்த்தோம். 

பின்னர் ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு வெளிக்கொணர இருக்கும் தொகுப்பு பற்றித் தெரிவித்தோம். அத்துடன் அதில் அவர்களின் படைப்பு இடம்பெறுவதற்கான  அனுமதியையும் பிரசுரமான படைப்பு ஒன்றினைத் தந்துதவும்படியும் கேட்டோம். இதனை ஏற்ற பலரும் உற்சாகமாக படைப்பினைத் தந்துதவியதுடன் தொகுப்பு வெளிவருவதற்கான அனைத்து ஆதார உதவிகளையும் மனநிறைவுடன் அளித்தனர். இது மேலும் உற்சாகத்தைத் தந்தது. நாம் பட்டியலிட்ட படைப்பாளிகளில் சிலர் எழுதிய கதைகள் பாரிசை களனாக கொண்டிருக்கவில்லை என்பதை அந்த படைப்பாளிகளே எமக்குக் கவலையுடன் தெரியப்படுத்தினர். அதனால் அவர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறாமல் போய்விட்டன. தொகுப்புப் பணியின்போது வேறு சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. எமது பட்டியலில் இருந்த ஓரிருவர் கேட்டும் கதைகளைத் தரமறுத்தனர். சீப்பை ஒளித்தால் கலியாணம் நடக்காது என்று எண்ணினார்கள் போலும்.


2
ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய மூன்று வலையங்களில் புலம்பெயர்ந்து வாழமுனையும் இலங்கைத்தமிழ் பேசுவோரின் எழுத்து முயற்சிகள் புலம்பெயர் இலக்கியம் என தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் சுட்டப்படுகின்றது. தொடக்கத்தில் ஈழத்து இலக்கிய நீட்சியாகக் காணப்பட்ட இலக்கிய முயற்சிகள் காலப்போக்கில் புதிய தடத்தில் கால்பதிக்கத் தொடங்கின. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்து பொருளாதார வருவாய், உயர்குடிகௌரவம், மேற்படிப்பு, சிறந்த வாழ்க்கைத்தரம் போன்ற காரணங்களால் புலப்பெயர்வுகள் நிகழ்ந்தபோது இவ்வகை கலை இலக்கிய முயற்சிகள் வெளிப்படவில்லை. ஆனால் 1970களில் இலங்கைத்தீவில் அரசியல் முனைப்புற்று சுயநிர்ணய போராட்டம் உருப்பெற்றதன் பின்னர் ஐரோப்பாவிற்குள் நுழைந்தவர்களால் படைக்கப்பட்டு காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பு முயற்சிகளே புலம்பெயர் இலக்கியம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இச்சிறப்பிற்கு வெளிவந்த சிற்றிலக்கியச் சஞ்சிகைகளும் தொகுப்பு மலர்களும் பெருமளவில் பங்காற்றியிருந்தன. அத்துடன் இருபத்தைந்துக்கும் மேற்பட்டதான ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு நிகழ்வுககளும் அதனைச் சாத்தியமாக்கியவர்களும் கூட கணிசமான பங்காற்றியுள்ளனர்.

தமிழில் புலம்பெயர் இலக்கியம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தியது, பழமைவாய்ந்தது என்றும் கூறலாம். தமிழ்நாட்டு மக்கள் இலங்கை, மலேயா, பிஜி மற்றும் ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள் போன்ற கடல்கடந்த நாடுகளுக்கு பெருந்தோட்ட பணப்பயிர்ச் செய்கைக்காய் கூலிகளாக ஐரோப்பியரால் அழைத்துச் செல்லப்பட்டனர். இப்படி கூலிகளாக புலம்பெயர்க்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் நாட்டார் இசை வடிவத்திலான வாய்மொழிப் பாடல்கள் புலம்பெயர் இலக்கியத்திற்கும் அதன் பழமைக்கும் சான்றுகளாக உள்ளன. மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டோரின் "சஞ்சிக்கு போனாக்கா காலாட்டி பிழைக்கலாமுன்னு வந்தேன், முப்பது காசு கொடுத்து என் முதுகெலும்பை முறிக்கிறானே!" என்னும் மலேசிய நாட்டார் பாடலும் "நட்டமரமெல்லாம் நிமிர்ந்து விட்டன இவன் நடும்போது குனிந்தவன்தான் இன்னும் நிமிரவேயில்லை" என்னும் மலேசிய புதுக்கவிதை வரிகளும், இலங்கைக்கு புலம்பெயர்க்கப்பட்டவர்களால் 'நாங்கள் உழைக்கவும் சாகவும் பிறந்தவர்கள்" எனும் கல்லறையில் பொறிகக்கப்பட்ட வாக்கியமும், "ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெற்றதாயை நான் மறந்தேன்" எனும் பாடல் வரிகளும்,  இதேபோன்றதான வாய்மொழி இலக்கியங்களும் புலம்பெயர் இலக்கியத்தின் அடிநாதத்தை- சாரத்தை உணர்த்தி நிற்கின்றன. "பேரான கண்டியிலே" என்னும் இடத்தில் பேரான ஐரோப்பாவிலே என்னும் வரியைமட்டும் சேர்த்து "ஊரான ஊர் இழந்தேன்" எனும் அப்பாடலை மீள இசைப்போமானால் அது ஐரோப்பிய வாழ்வியலின் சாரத்தை பிழிந்தெடுத்தது போல் இருக்கும்.

இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். ஆனால் இது இவர்களுக்கு வருத்தத்தை அளித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் கூலிகளாக அல்லாமல் இரண்டாம் நிலை அதிகாரிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனால்தான் போலும்  மலேசியத் தமிழ் இலக்கியம் தொகுக்கப்பட்டபோது அதில் இலங்கைத் தமிழரின் குரல் பதிவாகவே இல்லை. அதற்கடுத்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னும் முன்னும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகச் சென்று இலண்டன் கனவை சமூகத்தில் உருவாக்கிய பயணமாகும். இதற்குப்பின் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகளை நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. இந்தப் புலப்பெயர்வுகள் தனியே பொருளாதாரக் காரணியைக் கொண்டவை. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக, 1980களில்  தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்களாகும். இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் இன்னும் இந்துத்துவா மொழியில் கூறினால் சூத்திரர்கள்.

புலம்பெயர் இலக்கியத்தில் அதன் உள்ளீட்டில் தாயகம் பற்றியதான இழப்பின் சோகமும், நினைவும், ஏக்கமும் புலம்பெயர்ந்த இடத்துடனான ஒப்பீடும் நிரவி நிற்பதை நீங்கள் காணலாம். "நாட்டை நினைப்பாரோ? எந்த நாளினிப்போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ.." எனும் பாரதியின் கூற்றே எப்போதும் புலம்பெயர் இலக்கியத்தில் முதன்மை பெறுகின்றது. அதேவேளையில் இப்பண்புகள் இலக்கியவாதியினதும் இலக்கியத்தினதும் விமர்சனக்குரலாக கலகக்குரலாக மாறுவதும் புலம்பெயர் இலக்கியத்தின் சிறப்பம்சமாகும். புலம்பெயர் இலக்கியத்தின் பதிவுகள் கவிதையிலேயே து}க்கலாகத் தென்படுகின்றன. ஏனைய வெளிப்பாட்டு வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம், இசைப்பாடல், சினிமா ஆகியவற்றில் போதுமான அளவுக்கு வெளிப்பாடு கொள்ளவில்லை. கவிதைக்கு அடுத்ததாக சிறுகதையில்தான் புலம்பெயர் வாழ்வியல் பதிவாகியுள்ளதெனலாம்.
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் தாயக ஏக்கமும் பிரிவாற்றாமையும் ஒப்பீடும் பெறும் முதன்மை போன்றே புலம்பெயர் பயணமும், வாழ்வுச் சு10ழலும், முகம்கொள்ளும் பிரச்சனைகளும் முதன்மை இடத்தை பெறுகின்றன. உதாரணத்திற்கு இலங்கையில் இருந்து அதாவது தாயகம் துறந்து தொடங்கப்படும் பயணமானது தங்கள் இலக்கான ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய வலையங்களுக்குள் நுழையும் வரையான கால தூர இடவெளியானது துன்பியல் மிகுந்த பெருங்கதையாகும். இந்தப் பயணகால இடைவெளியில்தான் நமது சமூகத்தின் விழுமியங்கள் பெறுமானங்கள் ஏன் பவுத்திரங்கள் எல்லாமே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இப்பெருங்கதை இதுவரை சொல்லப்படவில்லை.

 
3
இலங்கைத் தமிழர்கள் பிரான்சில் வாழத்தொடங்கி கால்நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனால் எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற கணக்கெடுப்பை யாராலும் சரிவரக் கூறமுடியவில்லை. கடந்த ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பிரான்சின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், நீதிவிசாரணை ஆணையத்தின் அதிகார பலமிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவருமான திரு.புருகேர் (Mr.Bruguiere) கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்றிருந்தார். அவரது கூற்றுப்படி பிரான்சில் 60000 பேரைக்கொண்ட தமிழ் சமூகம் வாழ்வதாகவும் அது வளர்ந்து கொண்டு செல்வதாகவம் அவர்கள் சட்டப்படி பதிவு பெற்ற சங்கங்களின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிந்திருந்தார். அத்துடன் பாரிஸ் நகர மையத்தின் வடக்கே அமைந்துள்ள சர்வதேச இரயில் நிலையமான பாரி நோர்ட்(Paris Nord) குட்டி யாழ்ப்பாணமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவருடைய இந்தத் தொகை மதிப்பீடு கவனத்திற்கு உரியது என்றே கருதுகின்றேன். அவர் குறிப்பிட்டதான இந்த பாரி நோர் பகுதி பிரான்சின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான லூ மொன்ந் (le monde) நாளிதழால் 1992ல் குட்டி இந்தியா என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஒரு பத்தாண்டு காலத்தில் இன்று அது குட்டி யாழ்ப்பாணமாக சுட்டிக்காட்டப்படுவது பிரான்சில் தமிழரிடையே நிகழ்ந்த அசைவியக்க மாற்றத்தைக் குறிக்கின்றது.
இலங்கைத் தமிழருக்கும் பிரான்சுக்கும் அல்லது தமிழுக்கும் பிரெஞ்ச்மொழிக்கும் உள்ள உறவு பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை நோக்குவதும் நல்லதென்று நினைக்கின்றேன். பிரான்ஸ் நாட்டிற்கும் தமிழ்மொழி பேசுவோருக்கும் இடையேயான உறவு முன்னூற்றைம்பது ஆண்டுகால பழமை வாய்ந்தது. 1673ல் பிரெஞ்சுக்காரர் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கரையோரத்தை வந்தடைவதுடன் இந்த உறவு தொடங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பிரெஞ்ச் உறவின் அசலான சாட்சியங்களாக தமிழ்நாட்டில் உள்ள பாண்டிச்சேரி காரைக்கால் பிரதேசங்கள் இன்றைக்கும் திகழ்கின்றன. 1770ம் ஆண்டுகளில் இந்திய தீபகற்பத்தில் ஆளுமை செலுத்துவதில் பிரித்தானியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே போட்டியும் போரும் அதிகரித்திருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையின் துறைமுகமான திருக்கோணமலையை பயன்படுத்துவது யாரென்ற பிரச்சனையும் முக்கியத்துவம் பெற்றது. 1782ல் கப்பித்தான் சவ்றனின் தலைமையிலான பிரெஞ்சுக் கடற்படை திருக்கோணமலையைக் கைப்பற்றியது. அதன்பின் பிரித்தானிய - பிரான்சிய பிணக்குத் தீரும் வரையில் திருக்கோணமலை பிரான்சியரின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இது பற்றி பாண்டிச்சேரியை சேர்ந்த வீராநாயக்கரின் நாட்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த நாட்குறிப்பு 1778ம் ஆண்டிற்கும் 1792ம் ஆண்டிற்கும் இடையில் எழுதப்பட்டதாகும். இந்த வீராநாயக்கரின் நாட்குறிப்பை பிரான்சின் தலைநகரான பாரிசிலுள்ள தேசிய நூல்நிலையத்தில் தூரகிழக்கு நாடுகளின் கையெழுத்துச் சுவடிகளுக்கான பகுதியில் கண்டெடுத்ததாக பதிப்பாளர் ஓர்சே மா. கோபாலகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார். தமிழ்நாட்டின் வரலாற்றை சமூகப் பண்பாட்டியலை எடுத்தியம்பும் இவ் ஏட்டுப்பிரதிகள் எப்படி பிரான்ஸ் நாட்டுக்குள் வந்து சேர்ந்தன? இதனைத் தெரிந்து கொள்வதும் சுவையான விடயம்தான். இந்த பெருவாரியான பழைய தமிழ்நாட்டு கையேட்டு சுவடிகளை சேகரித்து பிரெஞ்ச் அரசின் கையில் சேர வழிவகுத்தவர் எதுவார்ட் அரியேல் என்னும் பிரெஞச்-தமிழ் அறிஞராவார். இவர் 1840ம்-1850ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் அரசாங்கத்தில் பணியாற்றினார். அவ்வேளையில் எதுவார் அரியேல் தமிழ்நாட்டு பண்பாட்டிலும் தமிழ்மொழியிலும் பற்றுக்கொண்டு தமிழை நன்கு கற்றார். அத்துடன் தனக்குக் கிடைத்த எல்லாத் தமிழ் நூல்கள், சுவடிகள் என அனைத்தையும் தேடி சேகரிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பாண்டிச்சேரியின் வரலாறு கூறும் ஆனந்தரங்கப்பிள்ளையின் தினசரிதையை அதாவது நாட்குறிப்பை அவரது சந்ததியாரின் வீட்டில் கண்டுபிடித்தார். இந்த எதுவார் அரியேல்தான் திருக்குறளின் ஒரு பகுதியையும் நாலடியாரையும் பிரெஞ்சுக்கு மொழிமாற்றம் செய்தவராவார். இவ்வகையாகத்தான் தமிழ்மொழி பிரெஞ்சுக்கு வந்து சேர்ந்தது. தமிழை பிரெஞ்சுக்கு கொண்டுவந்த அந்த பிரெஞ்ச்-தமிழ் அறிஞன் பின்னாளில் என்னவானான் என்பதுபற்றி சரிவரத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் முதலில் எப்போது பிரான்சுக்கு வந்த சேர்ந்தனர் என்னபதற்குத் திட்டவட்டமான வரலாறு கூறமுடியவில்லை. ஆயினும் சந்துஉடையார் என்பவர் 1869 அல்லது 1870ம் ஆண்டளவில் பிரான்சுக்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. சந்து உடையார் தமிழ் நாட்டின் சோழமண்டலக் கரையில் இருந்து பிரெஞ்ச் ஆதிக்கத்திற்கு உட்பட்ட காPபியன் தீவுகளான குதலோப்புக்கோ அல்லது மார்ட்னிக்கிக்கோ செல்லும் நோக்குடன் புறப்பட்டார் என்றும், கடற்பயண வழியில் பிரான்சிலேயே அவர் தரித்து நிற்கவேண்டியதாயிற்று என்றும் கூறப்படுகின்றது. இவ்வேளையிலேயே பிரான்சின் கீழைத்தேய மொழியியல் கல்லு}ரியின் இயக்குநர்களில் ஒருவரான யூலியன் வின்சன்ற் என்பர் சந்து உடையாரைச் சந்தித்திருக்கின்றார்;. யூலியன் வின்சன்ற் காரைக்காலில் பிறந்து தமிழ்மொழியையும் அறிந்த பிரெஞ்சுக்காராவார். அவரின் ஏற்பாட்டில் சந்து உடையார் பாரிசில் உள்ள கீழைத்தேய மொழியியல் கல்லூரியில் தமிழ் கற்பித்திருக்கிறார். பின்னர் அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பமுடியாமலே 1878ல் பிரான்சில் இறந்துவிட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புத் தெரிவிக்கின்றதது. தற்செயலாக வந்து பிரான்சில் தனித்துப்போன சந்து உடையாரின் இறுதிநாள் வாழ்க்கையும் தொலைந்து போனவரின் வாழ்க்கையாகவே வரலாற்றின் பக்கங்களில் மறைந்து கிடக்கின்றது. தமிழை பிரான்சுக்குள் கொணர்ந்த எதுவார் அரியேலும், பிரான்சில் தமிழைக் கற்பித்த சந்து உடையாரும் வரலாற்றில் தொலைந்து போனவர்கள்தானா? வரலாறு இப்படி எத்தனையோ விடயங்களை மறைத்து வைத்திருகின்றது. இங்கு வந்து சேர்ந்த இலங்கைத்தமிழரின் வரலாறும் நாளை மறைந்து போய்விடலாம்!

4
எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து இலங்கைத் தமிழரில் அநேகர் பிரான்சுக்குள் வந்து சேரத் தொடங்கினர். குறிப்பாக எண்பத்தேழுக்குப் பின்னர்தான் அலைஅலையக நம்மவர் பிரான்சுக்குள் படையெடுத்தனர். பிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரை மூன்று வகையினராகக் கொள்ளலாம்;. இலண்டனுக்குள் நுழைவதற்கென்றே பயணத்தை தொடங்கி பிரான்சுக்குள் முடங்கிப் போனோர் ஒருவகையினர். ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்குப் போவோம் திரவியம் தேடுவோம் என்றெழுந்த அலையில் அள்ளுண்டு பிரான்ஸ் என்னும் நாட்டுக்குள் வந்து சேர்ந்தோர் இன்னொரு வகையினர். இந்த இருவகையினரையும் மையமிட்டு ஊராகவும் உறவாகவும் வந்து சேர்ந்தோர் மூன்றாவது வகையினர். இந்த மூன்று வகையினரே பிரான்சில் இலங்கைத் தமிழரின் வாழ்வியல் போக்கை வடிவமைத்தவராவர். இந்த பிரான்ஸ்வாழ்  இலங்கைத் தமிழரின் தற்போதைய வாழ்வியலை சமூகவியலை எழுதுவதானால் இந்த முன்னுரை மிக நீண்டதாகிவிடும். இந்தச் சிறுகதைகள் அவைகளை தெரிவிக்க கூடும்.

பிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரில் பெரும்பான்மையினர் பாரிஸ் நகருக்குள்ளேயே முதலில் முடங்கிக் கொண்டனர். ஆனால் பிற்பாடு புறநகர்ப்பகுதிகளிலும், பாரிஸ் நகருக்கு தொலைவில் உள்ள நகரங்களிலும் வாழத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் அவர்களும், ஏனைய ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர் அனைவரும் பாரிசின் மையத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். ஏனெனில் ஐரோப்பாவிலேயே தமிழ்க் கலாச்சாராம் விற்கும் மையமாக பாரிஸ் நகரத்தின் "லா சப்பேல்" பகுதி நிலைபெற்றுவிட்டது என்பதனாலேயே. இந்தப் பாரிஸ் நகரில் இருந்துதான் வாரச் செய்திப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படுகின்றதென்பதும், இருபத்திநான்கு மணிநேர வானொலிகளும் தொலைக்காட்சியும் நிறுவப்பட்டு ஒலி ஒளி பரப்புகின்றன என்பதும் முக்கிய விடயங்களாகும். இங்கே நான்கு புத்தக விற்பனை நிலையங்கள் உள்ளன என்பதே இந்தத் தமிழ்க் கலாச்சாரம் விற்கும் மையத்தின் சிற்பம்சத்தை குறிக்கும்.
இந்தப் பின்னணியிலேயே பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இம்முயற்சிகளின் முன்னோடியாக ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் விளங்குகின்றது. இவ்வொன்றியம் நடாத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளின் தொகுப்பாக 1986ம் ஆண்டில் மண்ணைத் தேடும் மனங்கள் என்னும் தொகுப்பு வெளிவந்தது. அத்தொகுப்பின் முன்னுரையில் "சித்திரம் வரையத் துடித்தவர்கள் சுவர் இல்லாது வேதனையுற்ற காலம் ஒன்றிருந்தது. இதோ ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் போதிய சுவர்களைக் கட்டித்தர ஆயத்தமாய் உள்ளது. இனி நீங்கள் எத்தகைய சித்திரங்களையும் வரையலாம். உங்களை வரையப்பண்ணுவதே எமது நோக்கம்." என அவ்வொன்றியத்தின் தலைவரும் பதிப்பாசிரியருமான எம். அரியநாயகம் எழுதியுள்ளார். அந்தத் தொகுப்பில் வெளிவந்த கதையொன்று இந்ந பாரிஸ் கதைகள் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பைப்போல் 1994ம் ஆண்டில் மகாஐன வெளியீடாக புலம்பெயர்ந்தோர் கதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்தத் தொகுப்பின் முன்னுரை "புலம்பெயர்ந்தோர் கதைகள் ஏராளம். ஆனால் அவற்றைச் சொல்வதற்குத்தான் பலருக்குக் கூச்சங்கள். பிறந்தநாள், திருமணம் இன்ன பிறகொண்டாட்டங்களின் போது வீடியோக்களில் பதிவாக்கப்படும் எங்கள் முகங்கள் போலியானவை. பொய்யானவை. நெருக்கடி மிக்க அகதிக் கோலத்தை மறைத்து வாழ்வதுபோல் நடிக்க முயற்சிக்கின்றோம். அதில் ஒருவித திருப்தியும். ஒருவிதத்தில் அதுவும் குறைகாண முடியாததுதான். ஆனால் போதிய நெறிப்படுத்துவாரற்று சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் எங்கள் புலம்பெயர் உண்மை வாழ்வு பதிவாக்கப்படல் வேண்டும். இது ஈழத்தமிழ் சமூகம் பற்றிய ஆய்வுகளுக்கும் வளப்படுத்தல்களுக்கும் மிகவும் அவசியமானது." எனச் சுட்டிக்காட்டியது. இரு தொகுப்புகளின் முன்னுரையிலும் புகலிட எழுத்தின் நோக்கங்களின் மாற்றத்தை அடையாளம் காண முடிகின்றதல்லவா?

இதேவேளையில் பிரான்சில் வாழும் கலை இலக்கிய செயற்பாட்டாளரான க.கலைச்செல்வன் அவர்கள் 1993ல் எழுதிய "பிரான்ஸ் - தமிழ்ச் சஞ்சிகைகள் - ஒரு பதிவு" என்னும் கட்டுரையில் "பிரான்சில் புகலிட இலக்கியத்தின் உருவாக்கம் கார்த்திகை 1981ல் வெளியான தமிழ்முரசு என்னும் சஞ்சிகையுடன் உருவாகின்றது. இலங்கைத் தமிழர்களிடையே 1981ம் ஆண்டுகளில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப் போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதல் முதல் தமிழ்முரசு 1981ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியது. தமிழ்முரசைத் தொடர்ந்து எரிமலை, எழில், பகடைக்காய்களின் அவலக்குரல், தாயகம், கண், தமிழ்த்தென்றல், புதுவெள்ளம், குமுறல், தேடல், பள்ளம், இந்து, ஆதங்கம், ஓசை, சமர், வான்மதி, சிரித்திரு, மௌனம் என பதினேழு (மாத-காலாண்டு) சமூக அரசியல் இலக்கிய இதழ்கள் பாரிசில் உருவாகிவிட்டன." எனக் கூறியுள்ளார். அதேவேளையில் 1993க்கும் பின்னால் பாலம், எக்ஸில், உயிர்நிழல், அம்மா, தமிழ்நெஞ்சம் ஆகிய சஞ்சிகைள் வெளிவந்தன. அத்துடன் இனியும் சு10ல்கொள், தோற்றுத்தான் போவோமா?, சனதர்ம போதினி, கறுப்பு போன்ற தொகுப்பிதழ்கள் வெளிந்தன என்பதும் இவை புகலிட இலக்கியத்தின் வெளிப்பாடுகளாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.  2004ம் ஆண்டு தொடங்கியதன் பின்னால் இந்த முன்னுரை எழுதும் வரையில் வேறெந்தப் புதிய சஞ்சிகையும் வெளிவரவில்லை. தற்போது இணையத் தளங்களின் ஊடாக சஞ்சிகைள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த தொகுப்பில் 1980க்கும் பின்னால் எழுதப்பட்ட பதினைந்து படைப்பாளிகளின் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் சிறுகதையாளர் மட்டுமல்லாது கலை இலக்கியத்தின் வேறு தளங்களிலும் - நாடகம், சினிமா, மொழிபெயர்ப்பு, சஞ்சிகை - தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர்கள். இன்னும் சிலர் இப்போது எழுதுவதில்லை. அத்துடன் இத்தொகுப்பில் உள்ள ஒரேயொரு கதையை மட்டும் எழுதியவர்களும் உள்ளனர். இந்தக் கதைகள் புலம்பெயர் வாழ்வியலை, பிரான்ஸ்வாழ் இலங்கைத் தமிழர்களின் முகத்தை உங்களுக்கு அறியத்தருமாயின் அதுவே இந்த தொகுப்பின் நோக்கமுமாகும்.

இந்த தொகுப்பு வெளிவர உதவியவர்கள் அனைவருக்கும் நன்றிகள். இவ்வகை முயற்சிகளில் அப்பால் தமிழ் தொடர்ந்தும் ஈடுபடும் என்ற உறுதி மொழியுடன்

கி.பி.அரவிந்தன்
நெறியாளர் அப்பால் தமிழ்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  25811428 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6523 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com