அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எங்களுக்கானதொரு சினிமா!?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 09 September 2004
பக்கம் 3 of 4

4

ஆரம்பத்தில் ஈழத்து சூழலில் சில தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சமுதாயத்தில் தொடங்கி சர்மிளாவின் இதயராகம் வரை ஏறக்குறைய 28 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. எனினும் சினிமா உலகில் இததிரைப்படங்கள் பெரிதாக பேசக் கூடிய நிலையை எட்டியிருக்கவில்லை. ஆனால் இந்நிலைமை அப்படியே தொடர்ந்திருக்குமென்று நாம் ஆருடம் கூறிவிட முடியாது. காலப்போக்கில் இந்த ஆரம்ப நிலை முயற்சிகள் தேசிய தமிழ்ச் சினிமா என்ற  இலக்கை நோக்கி நகர்த்தப் பட்டிருக்லாம். சிங்கள சினிமாவிற்கு நிகரானதொரு தமிழ் சினிமாவின் வரவு நிகழ்ந்திருக்கும். ஆனால் சிங்கள பெருந்தேசியவாத நலன்களும, திட்டமிட்ட இன அழித்தொழிப்பும் இந்நிலைமைகளை முற்றிலும் சிதைத்து விட்டது. சிங்கள சினிமாவின் வரலாறு 1947ம் ஆண்டுடன் ஆரம்பமாகின்றது. இக்காலப்பகுதியிலேயே இலங்கையின் முதலாவது சிங்களத் திரைப்படமான “கடுவுனு பொறந்துவ” வெளிவருகின்றது. இதே வேளை தமிழர்களின் அரசியலைப் பார்ப்போமானால் 1956ம் ஆண்டுடன் ஈழத்து தமிழர்களுக்கானதொரு தனித்துவமான அரசியல் போக்கு முளைவிடத் தொடங்குகிறது. அதே வேளை தமிழர்கள் மீதான சிங்கள மேலாதிக்கமும் படிப்படியாக விஸ்தீரணம் கொள்கிறது. பொருளாதாரம் கல்வி கலாசாரம் எனப் பல வழிகளிலும் தமிழர்கள் மீது பாரியளவில் அடக்கு முறையும், சுரண்டலும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்தப் பின்னனியில் சிங்கள சினிமாவின் வளர்ச்சிப் போக்கை நோக்குவோமானால், ஆரம்ப காலத்தைய, சிங்கள சினிமா தனித்துவமானதொரு வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. பெரும் பாலும் தென்னிந்திய படங்களின் தழுவல்களாகவும் தென்னிந்திய திரை வெளிப்பாட்டு முறைமைகளைச் சார்ந்துமே வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இந் நிலைமையில் 1956ன் அரசியல் பெரும் உடைவை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த S.W.R.D பண்டாரநாயக்கா, சினிமா தொடர்பில் புதிய சட்ட நடைமுறையொன்றை அமுல்படுத்தினார். சிங்களப் படங்கள் தென்னிந்திய படங்களைத் தழுவி தயாரிக்கப் படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக உள்ளுர் திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப் படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பண்டாவின் சினிமா தொடர்பான சட்ட நடைமுறை அது வரை தென்னிந்தியாவை நம்பியிருந்த சிங்கள சினிமாக் கலைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தையும், புதிய பார்வையையும் வழங்கியது எனலாம். இக்காலப் பகுதியிலேயே சிங்கள சினிமா உலகின் சத்தியஜித்திரே என்று வர்ணிக்கப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் “ரேகாவ” என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகின்றார்.

பண்டாவின் வரவையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையும், சிங்கள சினிமா விமரிசகர்கள் எதிர்ப் புரட்சியாக அடையாளம் காண்கின்றனர். அக்காலத்தைய சிங்கள முன்னனி எழுத்தாளரான மார்ட்டின் விக்கிரமசிங்க, பண்டாவின் நடவடிக்கைகளை பிராமணியத்தின் வீழ்ச்சி என வர்ணிக்கிறார். இது பற்றி நான் ஏலவே குறிப்பிட்ட விமல் திசாநாயக்கவும் அஷ்லி ரத்னவிபூஷணவும் தொகுத்த “இலங்கை சினிமா ஓர் அறிமுகம்” என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது, “1956ல் மூன்று முக்கிய கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் “ரேகாவ” இலங்கையில் கலைத்துவ சினிமாவை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. எதிரிவீர சரத்சந்திரவின் படைப்பான “மனமே” நாடகக் கலையின் மிக முக்கியமானதொரு மைல்கல்லை குறித்துக் காட்டியது. மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நாவலான “விராயக” சிங்கள புனை கதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கிவைத்தது.” இதே போன்று சிங்கள சினிமா கோட்பாட்டாளர்களால் 1970ம் ஆண்டு அரசியல் மாற்றமும் விதந்து கூறப்படுகிறது. இது பற்றி மேற்கூறிய நூலில் கூறப்படுகிறது “ 1970ல் நாட்டில் மிக முக்கியமான ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. சிறி லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கம் உள்நாட்டு கலாசாரம், நவீனத்துவம் என்பன தொடர்பாக பல புதிய தரிசனங்களை அறிமுகம் செய்து வைத்தது. சிறி லங்கா சுதந்திரக் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி கொண்டிருந்ததுடன் அரசாங்கத்தின் சிந்தனைப் போக்கில் பெருமளவிற்கு ஒரு சோசலிச நோக்கம் தென்பட்டது. உள்நாட்டு திரைப்படக் கைத்தொழிலை முழுவதுமாக மூன்று தனியார் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் முலம் தோன்றக் கூடிய அபாயங்களை உணர்ந்து அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தை 1972ல் ஸ்தாபித்தது.” இந்தக் காலத்தில் சிங்களத் திரைப்டங்களை காண்பிப்பதற்கென ஒவ்வொரு திரையரங்கும் குறித்த எண்ணிக்கையிலான நாட்களை கட்டாயமாக ஒதுக்க வேண்டுமென்ற நடைமுறை இருந்ததாகவும் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகுதி நாட்களில்தான் ஏனைய மொழிப் படங்கள் காண்பிப்பதற்கு அனுமதிக்கப்படும். (ஏனைய மொழி என்பதில் தமிழையும் உள்ளடக்கிக் கொள்ளுங்கள்)

பலங்ஹற்றியோசிங்கள சினிமாத் துறையினரால் விதந்து கூறப்படும் 1956, 1970ம் ஆண்டுகளின் அரசியல் சூழலை மறு தலையாக தமிழ் நிலை நின்று பார்த்தால் எவ்வளவு மோசமான அரசியல் சூழல் என்பதை புரிந்து கொள்வதில், அரசியல் பரிச்சயம் உள்ள ஒருவர் சிரமப்படமாட்டார். 1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா 24 மணித்திலாயத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். மொழிரீதியான அடக்கு முறைக்குள்ளான ஒரு சமூகம் எவ்வாறு தனக்கானதொரு தனித்துவமான சினிமாவை வடிவமைத்துக் கொள்ள முடியும். 1970ல் ஆட்சிபீடமேறிய சிறி லங்கா சுதந்திரக் கட்சி 1972ல் சினிமாத் துறையை வளர்க்கும் நோக்கில் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கியது. அதே ஆண்டுதான் தரப்படுத்தலை அமுல்படுத்தியது. 1972 யாப்பினூடாக சிங்கள மதத்தை, சிங்கள மொழியை நாட்டின் உத்தியோக பூர்வ விடயங்களாக பிரகடனப் படுத்தியது. கணவனின் சினிமா தொடர்பான சட்ட நடைமுறையும், பின்னர் 1970ல் கதிரையை கைப்பற்றிய மனைவி காலத்தைய சிறி லங்கா சுதந்திரக் கட்சி, திரையரங்குகளில் குறிப்பிட்ட நாட்கள் சிங்களப் படங்கள் காண்பிப்பதை கட்டாயமாக்கியதும், ஒன்றை தெளிவுபடுத்துகின்றன. இலங்கையின் சினிமா என்பதே சிங்கள சினிமா என்பதுதான் அது. பண்டாவின் புதிய அனுகுமுறையிலும் பின்னர் சிறிமாகாலத்தைய சில அணுகு முறையிலும், கருத்தில் கொள்ள வேண்டிய நல்ல அம்சங்களென சிலதைக் குறிப்பிடலாம், அவை ஒரு இனவாதக் கண்னோட்டத்தில் அணுகப்படாமல் இருந்திருந்தால். குறிப்பாக தரப்படுத்தல் கூட சிறப்பானதுதான் இனவாதற்கு அப்பாற்பட்டதாக இருந்திருந்தால்.




     இதுவரை:  24782522 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5933 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com