அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எங்களுக்கானதொரு சினிமா!?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 09 September 2004
பக்கம் 4 of 4

5

1975ம் ஆண்டுடன் தமிழர் தேசிய அரசியல் ஒரு மாறுபட்ட நிலையை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. ஆயுதரீதியான செயற்பாடுகள் முனைப்புப் பெற்றன. எங்களுக்கானதொரு தனித்துவமான வளர்ச்சியென்பது, எங்களை நாங்களே தீர்மானிக்கும் சுதந்திரமான இருப்பினூடாக சாத்தியப்படக் கூடிய ஒன்றேயன்றி சிங்கள அரசிடம் யாசித்துப் பெறும் ஒன்றல்ல, என்ற கருத்து நிலை பலமடைந்தது. இந்த வரலாறும் இதன் பின்னரான நிகழ்வுகளும் அரசியல் அறிந்தோர் அறிவர். இந்த அரசியல் சூழல் அதுவரை சிங்கள சினிமாக் கலைஞர்களுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக் கலைஞர்கள் பலரையும் சினிமாத் துறையிலிருந்து அன்னியப்படுத்தியது. சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். உண்மையில் சிங்கள சினிமாவின் ஆரம்ப நிலை வளர்ச்சிக் கட்டத்தில் தமிழ், முஸ்லீம் கலைஞர்களின் பங்களிப்பு கணிசமானது. குறிப்பாக லெனின் மொறாயஸ், எஸ்.ராமநாதன், அன்ரன் கிரகரி, எம்.எஸ்.ஆனந்தன் (நிதானய படத்தின் ஒளிப்பதிவாளர்), ஈழத்து ரத்தினம் போன்ற தமிழ்க் கலைஞர்களும் எம்.மஸ்தான், ஜபீர் ஏ.காதர், எம்.ஏ.கபூர், சுபைர் மக்கீன், போன்ற முஸ்லீம் கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் இவர்களின் பங்களிப்பு சிங்கள சினிமா உலகில் பெரிதாக பேசப்படும் நிலையில்லை. 1983ம் ஆண்டு தமிழ் மக்களால் மறக்கக் கூடிய ஆண்டல்ல. இந்த ஆண்டு இடம் பெற்ற சிங்களத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையில் பல ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. இதனை சினிமாத் துறையோடு மட்டும் மட்டுப்படுத்தி நோக்கினால், இலங்கையின் மிகப்பிரமாண்டமான சினிமா ஸ்ரூடியோவாகக் கருதப்பட்ட கே.குணரத்தினத்தின் விஜயா ஸ்ரூடியோ அழிக்கப்பட்டது. சினிமாஸ் லிமிட்டேட்டிற்கு சொந்தமான பல திரையரங்குகள் தீக்கிரையாகப்பட்டன. இதன்போது, கே.வெங்கட் என்ற தமிழ் சினிமா நெறியாளர் கொல்லப்பட்டார். இவரே முதல் முதலாக தென்னிந்தியாவிலிருந்து நடிகர்களை வரவழைத்து மாமியார் வீடு என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் நிலூகா, ஸ்ரீ பந்துல, மகே அம்மா போன்ற சிங்கள திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு சிந்தித்தால் நாம் இரண்டு முடிவுகளுக்கு வரமுடியும். ஒன்று, ஒரு புறம் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வியல் இருப்பு கேள்விக்குள்ளான நிலையில் சிங்கள தேசம் தன்னை சகல வழிகளிலும் வளர்த்துச் செல்கிறது. இரண்டு, ஈழத்துத் தமிழர்கள் கலாசார ரீதியான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக் கொண்டிருந்த நிலையில், ஈழத்து தமிழர்கள் மீதான கலாசாரச் சுரண்டலை, சிங்களம் தனது கலை கலாசார வளர்சிக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டு விடயங்களைத் தழுவித்தான் நாம் சிங்கள சினிமாவின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஈழத்து தமிழ்ச் சூழலில் தனித்துதவமானதொரு சினிமாவை வளர்த்துச் செல்வதற்கான சகல வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் அல்லது முடக்கப்பட்ட நிலையில், தேசிய சினிமா என்ற பேரில் சிங்கள சினிமா வளர்த்துச் செல்லப்படுகிறது. இதற்காக சிங்கள சினிமாக் கலைஞர்கள் ஆற்றலற்றவர்கள் என முட்டாள்தனமாக நான் வாதிடவில்லை. இன்று இவர்கள் சர்வதேச தரத்திலான பல திரைப்படங்களை வழங்கியிருக்கிறார்கள். தென்னிந்தியா வருடத்திற்கு அதிகமான திரைப்படங்களை தயாரிப்தாக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், சிங்கள சினிமாவின் சர்வதேச தரத்துடன் ஒப்பிட்டால் தமிழக சினிமாவில் ஒன்றும் இல்லை என்பதே என் அபிப்பிராயம். சிங்கள சினிமா நெறியாளர்களில் பலர் தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் நாமறிவோம். ஆனால் வாய்ப்புகளில் ஒரு சமத்துவம் பேணப்பட்டிருக்குமாயின் ஈழத்துத் தமிழ்ச் சூழலிலும் ஒரு தனித்துவமானதொரு சினிமா வளர்ச்சியடைந்திருக்கும் என்றே வாதிடுகிறேன். மேலும் சிங்கள சினிமாவின் வளர்ச்சியில் பொருளாதாரமும் பாரிய பங்காற்றியிருக்கிறது. சிங்கள தேசம் ஒடுக்கும் தேசமாகவும் தமிழர் தேசம் ஒடுக்கப்படும் தேசமாகவும் இருப்பதால் பொருளாதார திட்டமிடல்கள் யாவும் சிங்கள தேசத்தின் நலன்கள் சார்ந்தே திட்டமிடப்பட்டன. இந்நிலைமை சிங்கள தமிழ் சமூகங்களுக்கிடையில் பொருளாதார வளர்ச்சியில் பாரிய இடைவெளியை தோற்றுவித்தது. 1977ல் அறிமுகமான திறந்த பொருளாதாரக் கொள்கை இந்நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது. இதனை சுருங்கச் சொல்வதானால் தமிழர்கள் மீது மிக மோசமானதொரு பொருளாதார அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது பற்றி நியூட்டன் குணசிங்கா குறிப்பிடுகையில், திறந்த பொருளாதாரக் கொள்கை பல்வேறு குழுக்களையும் சமனற்ற முறையில் முன்னேறச் செய்தது என்கிறார். (1984)

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கடந்த கால் நூற்றாண்டாக தமது ஆற்றல் அவதானம் முழுவற்றையும் விடுதலைப் போராட்டத்திலும், அதுசார்ந்த அகக் கட்டுமானங்களிலும் குவித்திருந்த ஈழத்து தமிழர் இன்று ஒரு தனித்தேசமாக பரிணமித்திருக்கின்றனர். எனவே ஒரு தேசம் என்ற வகையில் எங்களுக்கானதொரு தனித்துவமான சினிமா குறித்த தேடல் அவசியமான ஒன்று. எங்களால் முடியும் என்பதன் அறிகுறியாக நிதர்சனம் அமைப்பின் முயற்சிகள் இருக்கின்றன. நிதர்சனத்தினூடாக வெளிவந்த குறும்படங்கள், கதைப்படங்கள் (எ.கா-கடலோரக்காற்று) நமது கவனத்திற்கும் கரிசனைக்கும் உரியவை. போர்ச் சூழலின் மத்தியிலும் குறைந்த வசதி வாய்ப்புகளே கைவசப்பட்ட நிலையிலும் நிதர்சனத்தின் முயற்சிகள் சிலாகிக்கத் தக்கவை. நவீன திரைவெளிப்பாட்டு முறைமைகள் சார்ந்து நோக்கும் போது நிதர்சனத்தின் திரைப்பட முயற்சிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கும் இடமிருக்கலாம். எவ்வாறாயினும் நிதர்சனத்தின் முயற்சிகள் ஆரம்ப நிலை முயற்சிகளாகக் கருதப்படவேணடியவை. போர்ச் சூழலினால் அகநிலையில் பல்வேறு சிதைவுகளை எதிர் கொண்டிருக்கும் நாம் தனிப்பட்ட சில கலைஞர்களின் முயற்சியால் எங்களுக்கானதொரு சினிமா என்ற இலக்கை எய்த முடியுமென்று நான் நம்பவில்லை தமிழ்த் தேசிய கலைஞர்கள் பலரதும் கூட்டிணைவின் முலம்தான் இதனைச் சாத்திப்படுத்தலாம். அதற்கு முதல் எங்களுக்கானதொரு சினிமாவின் வளர்ச்சியின்மைக்கான சரியான காரணங்களை கண்டு கொள்வோம். சரியான மதிப்பீடுகள்தான் எம்மை சரியான திசைவழி நோக்கி நகர்த்திச் செல்லும். ஒரு ஒடுக்குமுறை வரலாற்றில் வாழும் நாம் அந்த வரலாறு தழுவித்தான் எங்களின் அகநிலைசார்ந்த எந்த விடயத்தையும் பேச முடியும். அது சினிமாவிற்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்குமே பொருந்தும். அந்த அடிப்படையில்தான் எனது பார்வையை முன்னிறுத்தியிருக்கிறேன்.  

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)



தகவலுக்காக உதவிய நூல்கள்
பொன்விழா கண்ட சிங்கள சினிமா - தம்பிஜயா தேவதாஸ்
இலங்கை சினிமா ஓர் அறிமுகம்  - ஆசிய திரைப்பட மைய வெளியீடு




     இதுவரை:  24716795 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4132 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com