அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 02 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow தமிழ்த் திரையுலகு: [பகுதி 3] [பகுதி 4]
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ்த் திரையுலகு: [பகுதி 3] [பகுதி 4]   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….யேசுராசா  
Saturday, 25 September 2004
பக்கம் 2 of 2

[பகுதி - 4] 

4. தமிழ்த் திரைப்படத்துறை சரியான திசையில் வளர்ச்சி அடைவதை அதனது  ஆரம்பகாலங்களில் ஏற்பட்ட நாடகத்துறையின் தாக்கம் தடைப்படுத்திவிட்டது. கதை, பாடல்கள் நடிப்புமுறை என்பன திரைப்படத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரானவையாக அமைந்து, இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அகில இந்திய ரீதியில்கூட - ஒருசில புறநடைகளைத் தவிர்த்தால் - தமிழ்த்திரைப்படங்கள் கலைரீதியான அங்கீகாரத்தினைப் பெறமுடியவில்லை. இலங்கையின் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான "லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்", எழுபதுகளில், ஒரு நேர்காணலில், "இந்த நூற்றாண்டின் மாபெரும் கலாசாரப் படுகொலை தமிழ்த் திரைப்படங்கள்தான்" என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இன்றுவரையான வரலாற்றில் முன்னேற்றகரமான மாறுதல்களுக்கான முயற்சிகளோ, சாதகமான விளைவுகளோ இல்லையெனத் தள்ளிவிடமுடியாது.

4.1. சமூக அக்கறையும் புதுமை நாட்டமும் கொண்டோர் 70ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்து, திரைப்படச் சங்கங்கள் மூலமாகவும் சிற்றேடுகள் மூலமாகவும், நல்ல திரைப்படங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரப்பினர், "புனேயில் அமைந்துள்ள இந்தியத் திரைப்பட - தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒழுங்கு செய்த திரைப்பட இரசனைப் பயிற்சி முகாம்களும் இதற்குத் துணைசெய்தன. சென்னையிலுள்ள திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறும் இளைஞர்களின் வருகையும் இவற்றுடன் சேர, "அழுத்திநசிக்கும்" திரைப்படத்துறையின் வியாபாரச் சூழலையும் மீறி, மாறுதலான போக்குகளைக் கொண்ட தமிழ்ப் படங்கள் வெளிவரும் நிலைமை, அண்மைக் காலங்களில் தோன்றியிருக்கிறது. காட்சிப்படுத்தும் பண்பினைப் பேணுதல், கருப்பொருளை இயல்பு நெறியில் கையாளுதல், பன்முகப் பாங்கான திரைக்கதைகளைத் தெரிதல், இயல்பான பாத்திர உருவாக்கம், சில வடிவப் பரிசோதனைகள் போன்றவற்றை அவதானிக்க முடிகிறது.


4.2. வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்னரே, மாறுதலான முயற்சிகளைக் கொண்ட படங்கள் சிலவற்றைக் காணமுடிகிறது.

4.2.1. இயக்குநர் கே. ராம்நாத் உருவாக்கிய "ஏழைபடும் பாடு" (1951) திரைப்படத்தை "அற்புதப் படைப்பு" என வியக்கிறார், சு.தியடோர் பாஸ்கரன். விக்ரர் ஹியூகோ என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் மூலக்கதையை, இந்திய சுதந்திரப் போராட்டச் சூழலில் நிகழ்வதாகப் பொருத்தமாக மாற்றித் திரைக்கதையை அமைத்திருக்கிறார், இயக்குநர். வி. நாகையாவினதும், ஜாவர் சீதாராமனது பாத்திரப் படைப்புக்கள் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

4.2.2. ராம்நாத்தின் மற்றொரு படமான "மனிதன்" (1954), சந்தர்ப்ப சூழ்நிலையால் வேற்று ஆடவனுடன் சோரம்போன தனது மனைவியை மன்னித்துக் கணவன் ஏற்றுக்கொள்ளும் முற்போக்கான கதையினைக் கொண்டது.

4.2.3. வேதாந்தம் ராகவையாவின் இயக்கத்தில் உருவான "தேவதாஸ்" (1953), சரத்சந்தரின் வங்காள நாவலின் திரைவடிவமாகும். மனதைப் பிணிக்கும் பாடல்களுடன் மையக்கதை நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது. வங்காள மொழியில் "பரூவா", இந்தியில் "சைகால்", திலீப் குமார், ஷாருகான் ஆகியோர் நடித்து வெளியான - நான்கு "தேவதாஸ்" படங்களை விடவும், தமிழில் ஏ. நாகேஸ்வரராவ் நடித்த "தேவதாஸ்" பாத்திரச் சித்திரிப்பு மிகச் சிறப்பானதென்கிறார், முக்கிய திரைப்பட வரலாற்றாய்வாளரும் விமர்சகருமான "விட்டல்ராவ்". மேலும், "நாகேஸ்வரராவையும் தேவதாஸையும் இன்னும் 100 ஆண்டுகளிற்கு மறக்க முடியாது" [15] என்றும் கூறுகிறார்.

4.2.4. எஸ்.பாலச்சந்தர் இயக்கிய "அந்தநாள்" (1954) பாடலோ, நாட்டியமோ இல்லாத அந்தக் காலத்திலேயே உருவாக்கப்பட்ட படம். ஒரு கொலை எப்படி நடைபெற்றிருக்கலாம் என்பது ஐந்தாறுபேரின் கோணங்களில் காட்டப்பட்டு, இறுதியில் உண்மைக் கொலையாளி யார் என்பது வெளிக்காட்டப்படுகிறது.


4.3. மாறுதலான முயற்சிகளாய் அமைந்த படங்கள் பலவற்றை, அவற்றை உருவாக்கிய முக்கிய இயக்குநர்கள் வழியாக நோக்குவதும் நல்லது.

4.3.1. த.ஜெயகாந்தன்.
இவர் உருவாக்கிய "உன்னைப்போல் ஒருவன்" (1964) படத்தினையே "முதலாவது தமிழ்த் திரைப்படம்" என்கிறார், தீவிர கலை இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன். சத்யஜித் ரே, லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோரிற்கு இப்படம் காண்பிக்கப்பட்டபோது அவர்கள் பாராட்டியதாகவும் தெரிகிறது. சென்னையின் சேரிவாழ் மனிதர்களைப் பற்றியது இந்தப்படம். இவரது "யாருக்காக அழுதான்" படமும் எளிமையாக உருவாக்கப்பட்ட படைப்பாகும். இரண்டு திரைப்படங்களும் அவரது குறுநாவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை.

4.3.2. ஜே. மகேந்திரன்.
பெண்களின் ஒடுக்கப்பட்ட - உதவியற்ற - இயலாமை நிறைந்த நிலைமைகள் மீது பரிவை வெளிப்படுத்துபவை இவரது படங்கள். காட்சிரூப வெளிப்பாட்டைக் கொண்டிருத்தல், இயல்புத் தன்மை, சிறிய பெரிய பாத்திரங்களினதும் செம்மையான உருவாக்கம், குறியீடுகளைக் கையாளுதல், உணர்வுச் சூழலுக்குரிய இசைத்தேர்வு என்பன இவரது திரைப்படங்களிற்குச் சிறப்பை ஏற்றுகின்றன.

உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நண்டு முதலிய படங்களின்மூலம் தமிழின் முக்கிய நெறியாளரில் ஒருவராகிறார்.

4.3.3. சிங்கிதம் சீனிவாசராவ்.
காட்சி மொழி இவரது எல்லாப் படைப்புக்களிலும் சிறப்பாகக் கையாளப்படுகின்றது. வேறுபட்ட திரைக்கதைகளையும், பாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்குகிறார். திக்கற்ற பார்வதி, ராஐபார்வை, குருதிப்புனல், உரையாடலே இல்லாத "பேசும் படம்" ஆகியவை முக்கிய படைப்புகளாகும்.

4.3.4. பாலு மகேந்திரா.
காட்சி மொழியினால் கட்டமைக்கப்படுவதே திரைப்பட்ம் என்பதைத் தனது பெரும்பாலான படங்களில் வலுவாக நிலைநிறுத்தியுள்ளார். எனினும், பலவீனமான திரைக்கதைகளினால் இவரது படங்கள் பல நிறைவானதாக அமையவில்லை. வளரிளம் பருவத்தினரைச் சித்திரிக்கும் "அழியாத கோலங்கள்", முதுமை நிலையில் -தங்கியிருத்தலிற்கும் சுயஉணர்விற்குமிடையில் நெருக்குப்படும் முதியவரின் "சந்தியா ராகம்" பிறழ்நிலை உளப்போக்கைக் கொண்ட இளைஞனின் சித்திரிப்பான "மூடுபனி" ஆகியன இவரது பங்களிப்பு எனச் சொல்லத்தக்கவை.

4.3.5. பாரதிராஜா.
படப்பிடிப்பு நிலையத்துள் முடங்கிக் கிடந்த தமிழ்த் திரையுலகை, ஸ்ரீதரை அடுத்து வெளியே கொண்டு வந்து, குறிப்பாக கிராமத்தின் இயற்கையை - மனிதர்களை - காட்சிப்படுத்தலுடன் முக்கியப்படுத்தியமை இவரது பங்களிப்பாகும். மனோரதியத் தன்மை, அசட்டு நகைச்சுவை, மிகையான உணர்ச்சி வெளிப்பாடு என்பன இவரது படங்கள் பலவற்றின் பலவீனங்களாக உள்ளன.

ஆயினும் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், என்னுயிர்த் தோழன், கறுத்தம்மா, அந்திமந்தாரை ஆகியன மாற்று முயற்சிகளாகும்.

4.3.6. ஞான ராஐசேகரன்.
நல்ல கலைத் திரைப்படங்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்படுபவர், திரைப்பட இரசனையின் அடிப்படைகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துபவர்.

போலித்தன்மையே - முகமூடியே - உண்மையைவிட உலகினரால் வரவேற்றுப் போற்றப்படும் கசப்பான  யதார்த்தத்தை "முகம்" திரைப்படம் வலுவானதாக வெளிப்படுத்துகிறது, விகாரமானவன் கதாநாயகனாவதும் மாறுதலானது. வெவ்வேறு காலங்களில் பலரும் தயக்கத்துடன் கைவிட்டுவிட்ட - பாரதி வரலாற்றைப் படமாக்கும் முயற்சியைத் தொடங்கி, சிறப்புற "பாரதி" படமாக உருவாக்கியுள்ளார். இரண்டு படங்களிலும் முறையே நாசரினதும், சாயாஜி ஷிண்டேயினதும் பாத்திரச் சித்திரிப்புகள் சிறப்பானவை. தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற "மோகமுள்" நாவலின் திரை உருவாக்கமும் கவனத்தைக் கோரும் மாற்று முயற்சியாகும்.


4.4. திரைப்பட மொழியின் அடிப்படைப் பண்புகளைப் பேணி, வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, பாத்திரச் சித்திரிப்புக்களுடன் "தேவையற்ற அலட்டல்கள் - பிசிறல்களைக்" குறைத்து, பெருமளவிற்கு இயல்புத்தன்மைகளுடன் நெஞ்சில் பதியும் வண்ணம் உருவாக்கப்பட்ட மாறுதலான வேறு படைப்புகளும் உள்ளன. அவற்றுள், தொழிற்சங்கப் போராட்டத்தைச் சித்திரிக்கும் "பாதை தெரியுது பார்" (நிமாய்கோஷ்), காந்திய ஆசிரமப் பின்னணியில் காந்திய விழுமியங்களைப் பரிசீலிக்கும் "தாகம்" (பாபு நந்தன்கோடு), அக்கிரகாரத்தில் வைதீக மனப்பாங்குடன் முரண்படும் தத்துவப் பேராசிரியரைப்பற்றிய "அக்கிரகாரத்தில் கழுதை" (ஜோன் ஏபிரகாம்), ஆணாதிக்கத்திற்கு எதிரான மனநிலைகொண்ட பெண்ணின் கதையான "அவள் அப்படித்தான்" (ருத்திரய்யா), அரசியல்வாதிகளின் அடிநிலை மக்கள் மீதான அலட்சியப்போக்கை வெளிக்கொண்டுவரும் "தண்ணீர் தண்ணீர்" ( கே. பாலச்சந்தர்), வெளிப்பாட்டு முறையில் புதிய தடத்தைப் பதிக்கும் "தேவதை" (நாசர்), பாதிக்கப்பட்டோரின் புரட்சிகர வன்முறையை நியாயப்படுத்தும் "நாயகன்" (மணிரத்தினம்), நகர்ப்புறச் சேரி மாந்தரின் வாழ்நிலையைக் காட்டும் "பசி" ( துரை), குழந்தைத் தொழிலாளரின் துயர்நிலைகள்மீது கவனத்தைப் பாய்ச்சும் "குட்டி" (ஜானகி விசுவநாதன்) -"கருவேலம் பூக்கள்" (பூமணி) - "நிலாக்காலம்", வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிட்டபோதிலும் மங்கிமறையாத உண்மைக் காதலின் அக்கறையை உயிர்ச்சித்திரமாக்கிய "அழகி" (தங்கர்பச்சான்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


4.5. வடிவுப் பரிசோதனை என்ற வகையில் மாறுதலான முயற்சிகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன.

4.5.1. அந்தநாள்: பாடல் எதுவுமற்று முதலில் வெளியாகிய படம். உண்மை எது என்பதை வெவ்வேறு கோணங்களில் பரிசீலிக்கும் போது கதாநாயகன்  ஐந்தாறு தடவைகள் வேறு வேறு நபர்களால் சுட்டுக்கொல்லப்படுவதாகக் காட்டப்படுகிறது , எனினும் உலகப் புகழ்பெற்ற "அகிரா குரோசாவா"வின் "ரஷோமோன்" திரைப்படத் தாக்கம் இதில் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது.

4.5.2. ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்" (1962) படத்தின் கதை முழுவதும் ஒரே களத்தில் - ஓர் ஆஸ்பத்திரியில் நிகழ்கிறது.

4.5.3. நாசரின் "தேவதை" படக்கதை ராஜா காலத்திலும் நிகழ்காலத்திலும்  நடக்கின்றது : மூன்று பாத்திரங்கள் காலத்தைத் தாண்டி நிகழ்காலத்திலும் நடமாடுகின்றனர். "நாசரின் "தேவதை" ஒரு கதையைச் சொல்லும் முறையில் சோதனைகளைச் செய்துள்ளது. ஒரு படைப்பிற்கு அடித்தளமான வெளி (Space), காலம்  (Time)  பாத்திரங்கள் (Characters) என்பவற்றில் மந்தைத்தனத்தை மறக்கடிக்கும் விதத்தில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு  சினிமா எனும் ஊடகத்தின் மொழியையும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. [16]

4.5.4. "அவ்வாறு நடந்திருந்தால்... இப்படியாகியிருக்கும்" என்ற கற்பிதத்தில் புனைவு - நிஐம் என்ற இரு தளங்களில் மாறி மாறி நிகழ்வதாக ஜீவா இயக்கிய "12பி" வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இழப்பு உண்மையில் இழப்பாகவே இருக்க வேண்டுமென்பதில்லை,பெறுவதற்கு வேறு வாய்ப்புக்களும் இருக்கின்றன என்ற செய்தி  புதிய வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.


4.6. இலங்கைத் திரைப்படங்கள்

4.6.1. இலங்கைத் திரைப்படங்களில் யாழ்ப்பாணச் சூழலையும், மனிதர்களையும், பேச்சு மொழியையும் கொண்டு "குத்துவிளக்கு", "வாடைக்காற்று" என்பன மாற்று முயற்சிகளாக உள்ளன.

சாதி - சீதனப் பிரச்சினைகளையும், இந்து- கத்தோலிக்க மதப் பாத்திரங்களின் திருமண உறவு என்பவற்றையும் யாழ்ப்பாணச் சூழலில் வெளிப்படுத்தும் "பொன்மணி" சிறப்பான காட்சிப்படுத்தும் பண்பினாலும் முக்கியம்  பெறுகிறது. இதன் இயக்குநரான "தர்மசேன பத்திராஐ" மாற்றுச் சினிமாவிற்காகச் சிங்களத் திரையுலகில் தீவிரமாகச் செயற்படும் ஒருவராவர்.

4.6.2. "நிதர்சனம்" அமைப்பு போர்ச் சூழல்சார்ந்த சமகால ஈழத்து அரசியல் - சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்தும் படங்கள் பலவற்றை "வீடியோ"வில் உருவாக்கியுள்ளது. திரைப்பட அழகியலின் அம்சங்கள் பலவற்றைப்பேணி, உரிய பாத்திரச் சித்திரிப்புக்களுடன் இறுக்கமானவையாக ஞானரதனால் உருவாக்கப்பட்ட "முகங்கள்", "காற்றுவெளி", "நேற்று" (குறும்படம்) ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. வேறு கலைஞர்கள் உருவாக்கிய "அழியா நிழல்கள்", "நெருப்பு மலர்கள்", "தாய்"  போன்ற குறும்படங்களும் குறிப்பிடத்தக்க மாற்று முயற்சிகளாகும்.


5. நிறைவுரை
ஆரம்பநிலையிலிருந்தே "தமிழ்த் திரையுலகு" தவறான தாக்கங்களிற்கு உட்பட்டதனால, சரியான திசையில் வளர்ச்சியடையவில்லை. அதன் பிரதான போக்குகளாக தவறான பல அம்சங்களே தொடர்ந்து காணப்பட்டன. வளர்ச்சிக்குரிய மாறுதலான போக்குகள் ஆங்காங்கு காணப்பட்டபோதும், பிந்திய காலஙகளிலேயே  "மாற்று முயற்சிகள்" அதிகரிக்கத் தொடங்கின, சமகாலத்தில் புதியவர்களிடம் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை ஊக்குவிக்கப்பட்டு விரிவடையச் செய்யப்பட வேண்டும். கேரளா, வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களில் அரசாங்கங்களும் தனியார்  நிறுவனங்களும் தமது மொழியிலான கலைத் திரைப்பட வளர்ச்சிக்கு வழங்கிவருவது போன்ற ஊக்குவிப்புக்கள், தமிழகத்தில் மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுவது இன்றியமையாததாகும்.

இறுதியாக, "ஆந்திரே மால்றோ" என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளின், "நாம் சிறந்த இரசிகர்களானால் தான் சிறந்த படங்கள் உருவாக்கப்படும்" என்ற கூற்றுடன், இந்த உரையினை நிறைவு செய்கிறேன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)



அடிக்குறிப்புகள்

1. கோவிந்தன், க., முனைவர், ஆய்வாளர் பார்வையில் திரைப்படக்கலை, சென்னை, 1999, பக்.80.
2. மௌனப்படக் காலகட்டம் பற்றிய இத்தகவல்கள், சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய, தமிழ் சினிமாவின்முகங்கள், சென்னை, 1998என்ற நூலிலிருந்து பெறப்பட்டவை.
3 கோவிந்தன், க., முனைவர், மு.கு.நூ. பக். 86-87
4. பீர் முகமது, திரைப்படம் ஒரு வாழும் கலை, சென்னை, 1998, பக். 219.
5 தியடோர் பாஸ்கரன், சு., மு.கு.நூ. பக் 56, பக. 58.
6. மேற்படி நூல், பக் 65, பக் 74.
7. யேசுராசா, à®…., ஆத்மா, நொவம்பர் - டிசம்பர் 2002 யாழ்பாணம்,   பக். 04.
8. கோவிந்தன், க., முனைவர், மு. கு. நூ. பக. 119.
9. பிஸ்மி, ஜெ., தமிழ் சினிமாவில்..., சென்னை, 2000, பக். 59-60.
10. மேற்படி நூல், பக் 61, பக். 54.
11. மேற்படி நூல், பக் 110.
12.அணிந்துரையில் திலகவதி, இடைவேளை, திண்டுக்கல், 1999.
13. ஸ்டீபன், அ., மேற்படி நூல், பக்.31.
14. இலங்கை சினிமா ஓர் அறிமுகம், பொறல்லஸ்கமுவ, 2001, பக். 153.
15. நிழல், டிசெம்பர் 2002 இதழ்,பக்.22.
16. நாமசாமி, அ., அலையும் விழித்திரை, பெங்களூர், 2000, பக். 157.




மேலும் சில...
மனமுள்
சமாதானச்சுருள் திரை மாலை
தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 02 May 2024 10:35
TamilNet
HASH(0x5627f76c9c28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 02 May 2024 10:35


புதினம்
Thu, 02 May 2024 10:35
















     இதுவரை:  24853241 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2604 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com