அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 30 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 10 arrow நாய்கள் - நாங்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நாய்கள் - நாங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -முகிலன்  
Wednesday, 06 October 2004

(பாரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் முற்றம் சஞ்சிகையின் நாய்ச் சிறப்பிதழில் இருந்து இக்கட்டுரை இங்கு மீள் பிரசுரமாகின்றது. இப்படி ஒரு சிறப்பிதழை தயாரிக்க எண்ணியதுடன் அதனை சிறப்புறத் தயாரித்தளித்த நண்பர் மனோ (ஓசை,அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர்) அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அந்த சிறப்பிதழின் பல படைப்புகள் இங்கு இடம் பெறுவதால்   வண்ணச் சிறகின் தோகை-10 நாய்க்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த இதழ் உங்களிடம் நாய்கள் பற்றிய அருட்டலை ஏற்படுத்துமாயின் அவற்றை படைப்புகளாக்கி (கதை,கவிதை, கட்டுரை) எமக்கு பாமினியில் எழுதி அனுப்புங்கள். நிச்சயம் பிரசுரிப்போம் அனுப்ப வேண்டிய முகவரி kipian@gmail.com.)

chien = francais
 dog = english
 perro= espagnol
 hund = allemagne
 cão = portugal
 cane = italien
 balla = singalam

(ஓவியர் மருது அவர்களால் வரையப்பட்டது)


வனவாழ்வில் இணைந்த உறவால் வனத்தைவிட்டு மனிதனுடன் அண்டி வாழும் உயிரினத்தில் நாய் முக்கியமானது. நாய் என்ற பெயர்ச்சொல் எப்படி வந்ததென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதில் இடம் பெற்றுள்ள முதல் எழுத்தை நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆம் ‘நா’ ! இந்த நா வைப் பற்றிய விபரணம் இங்கே தேவையில்லை. « ஆறாதே நாவினால் சுட்ட வடு……… » என்றார் திருவள்ளுவர். நரம்பில்லா அவையம், சுவையை இனங்காணும் தன்மையைக் கொண்டிருந்த போதும் ஒலி எழும்பலைத் தரும் பண்பிலேயே அதிகம் பிரசன்னமாகியது.
‘குரைக்கிற நாய் கடிக்காது’
‘நாய்படாப் பட்ட வாழ்வாய்ப் போய்ச்சு !’
‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’
‘நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி’ இப்படியாகப் பல முதுமொழி வாக்கியங்களை பல்வேறு மொழிகளிலும் கொண்டது நாயின் இருப்பு. உவமைக் கதைகளிலும் நாய் தாராளமாகவே இடம்பெற்றிருக்கிறது. ‘உஞ்சு’ என எம்மால் அழைக்கப்படும் பொதுச் விழிப்புச்சொல் நம் மண்ணின் தனித்தன்மையைக் காட்டும். இந்த « உஞ்சு » என் வாழ்வில் ஒரு சுவை அனுபவத்தைத் தந்திருக்கிறது.
நான் கலியாணம் செய்த வருடம், கொழும்பின் புறநகர் தெகிவளையில் எங்களைப் போல் திருமணம் புரிந்த இளம் தம்பதியுடன் தங்கியிருந்தோம். பொழுது போக்காக கரம் விளையாட்டு அமைந்திருந்தது. நண்பனின் மனைவியின் தம்பியும் எங்களுடன் தங்கியிருந்து படித்துவந்தான். கரம் விளையாட்டில் ஒரு கை குறையும் போதெல்லாம் அவன்தான் சுண்டுவான். இரு தம்பதியினருக்குள்ளான அழைப்புச் சொல் அவனுக்குக் குழப்பமாக இருந்திருக்கிறது. ஒரு நான் கேட்டேவிட்டான், ‘என்ன நீங்கள் « உஞ்சு.. உஞ்சு …. » என அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? திகைத்தோம்….. பின் சுதாகரித்தவாறு நமட்டுச் சிரிப்போடு விளக்கமளித்தோம் ‘தம்பி அது உஞ்சு அல்ல குஞ்சு என்று.’ உஞ்சையும் , குஞ்சையும் அவன் ஒரே மாதிரி எவ்விதம் யதார்த்தமாகப் பார்த்திருக்கிறான் என்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது, அந்த வேளையில் நாளாந்த அழைப்புச் சொல்லாகத் திகழ்ந்த அந்த « குஞ்சு » இப்போது மெல் மெல்ல அருகி எப்போதாவது புல்லரிப்புக்காகப் பயன்படுவது வேறுகதை.
வீமன், அர்ச்சுனன், அன்ரன், றெக்சி, றோய், பப்பி, சிங்கன், ரைகர்…… இவ்வாறு பல பெயர்களை நாம் அதற்கு இட்டு அழைத்திருக்கிறோம். நம்மூர் நாய் என்றவுடன் ‘அடீக்’…  என்ற சொல் ஞாபகத்துக்கு வராமல்விடாது.  ஊர் நாய்களில் எத்தனை வகையிருந்தாலும் பொதுப் பெயர் பறைநாய்தான். இந்தப் பெயர் ஏன் வந்ததென்பது எனக்கு இன்றுவரை தெரியாது. நம்மளுக்குள் சாதி, ஊர், வட்டாரப் பிரிவுகளாகக் கூறுகண்டது மாதிரி நாய்களுக்கும் இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒருவரது வட்டாரத்தில் வேறு நாய்கள் வரவே முடியாது. தப்பித்தவறி வேறு நாய் வந்ததென்றால் வாலை மடக்கிக் கொண்டு அரக்கப் பரக்க விழித்துக் கொண்டே செல்ல…. ஊர் நாய்கள் முழுவதும் கூடி நின்று முழங்கி விரட்டும் காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம். வேட்டை நாய், கடிநாய், ஊர் நாய் என சிறுபிரிவுகள் பற்றியே நாம் அறிந்திருந்தோம். அந்நியத்திலிருந்து வந்த அல்செசன், பொமேனியன், கட்டைநாய், புல் டோக்,….. என்பவை வசதிபடைத்தவர்கள் மூலமும், கனவுலகக் காட்சிகள் மூலமும் வந்தேறின. இவை பற்றிய கதைகளை வாயைப் பிளந்தவாறு கேட்டதை என்னால் மறக்கவே முடியாது. இவ்வகை நாய்களும்தான் எமக்குள் ஐரோப்பியக் கனவை விதைத்தன என்றால் சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் நான் மகாஜனாக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த காலத்திற்தான், அல்செசனை முழுமையாகக் கண்டிருந்தேன். எமது விடுதிப் பொறுப்பாளரது செல்லப் பிராணி அது. அவருக்கு பிள்ளைகள் இல்லாத குறையை அதுதான் போக்கியது என்பார்கள். ஆனால் அது கடித்து அவர் மரித்ததால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் இன்று வரை தொடர்கிறது. அவருக்கு சலரோகம் இருந்ததால் புண் மாறாமல் அவர் இறந்ததாக அப்போது சிலர் சொன்னாலும் நான் சமாதானமாகவில்லை. அப்போதிருந்தே அல்சேசன் எனக்கு அந்நியமாகிவிட்டது.
‘சிறிமா’ என்ற பெயரில் என் வீட்டில் ஒரு பெண் நாய் எழுபதுகளின் கடைசியில் இருந்தது. இந்தப் பெயர்த் தெரிவு எனது அப்பாவடையது. அது கட்டை நாய். இதனுடன் கலப்பு செய்து பிறக்கும் குட்டிகளுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு. அப்பாவின் இந்தப் பெயர்த் தெரிவு என்னை இன்று வரை ஆச்சரியமூட்டத் தவறுவதில்லை. நாங்கள் வைத்திருந்த ‘அன்ரன்’ என்ற நாயை அப்பாவின் நண்பர் விரும்பிக் கேட்டதால் அப்பாவும் கொடுத்து விட்டிருந்தார். சுமார் மூன்று வருடங்களின் பின் ஒருநாள் அது தானாக எம் வீட்டுக்குத் திரும்பிவிட்டிருந்தது. எங்களுக்கு அது ஏன் எனப் புரியவில்லை. உரியவருக்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது. ஆனால் அடுத்த நாள் அது இறந்துபோனது. இந்தப் புதிரை இன்றும் என்னால் அவிழ்க்க முடியவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தீவகத்தில் ஏற்பட்ட படை நகர்வு எங்களது குடும்பத்தை முதற்தடவையாக மண்ணைவிட்டு வெளியேற்றியது. இது தற்காலிகமானதென்றே அப்பா நினைத்திருக்கக்கூடும். வழமையாக அப்பாவுடன் செல்லும் ‘வீமன்’ அன்று செல்லவில்லை. பக்கத்து வீட்டு பெரியதம்பி ஐயாவும், அம்மாவும் வயதான தங்களை சிறிலங்கா நேவிக்கராரனால் என்னதான் செய்யமுடியும்? என்ற நம்பிக்கையில் வெளியேற மறுத்து விட்டனர். அடுத்த நாள், கட்டிய மாட்டை அவிழ்த்தாவது விடவேண்டும் என்ற மனவுந்துதலால் தங்கையின் மறுப்பையும் உதாசீனப்படுத்திப் புறப்பட்ட அப்பாவுக்குத் துணையாகச் சென்றவர் சபா மாஸ்டர்தான். வெறிச்சோடிக்கிடந்த கிராமத்தினூடாக வீட்டுக்கு வந்தபோது உற்சாக வரவேற்பைக் கொடுத்தது வீமன்தான். ஓருநாள் உணவும் இல்லாமல் அதனால் எப்படி, ஏன், எதற்காக எமது வீட்டை காவல் செய்ய முடிந்தது? மாட்டை அவிழ்த்து விட்ட அப்பா, மீண்டும் ஊரைவிட்டுக் கிளம்ப வீமனை அழைத்தபோது அது மூர்க்கமாக மறுக்கிறது. அப்பாவையும் போகவிடவில்லை. பக்கத்து வீட்டைப்பார்த்து குரைக்கிறது. வழமைக்கு மாறான அதனது செய்கையின் மொழி அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். பக்கத்து வீட்டு ஐயாவை விழிக்கிறார். எந்த அசமந்தத்தையும் காணோம்.
ஒருவேளை இவர்களும் வெளியேறியிருக்கலாம் என சபா மாஸ்டர் சொன்ன ஊகம் சரியெனப்பட்டதால் மேலும் விசாரிக்காமல் அப்பா புறப்பட முனைந்தபோது வீமன் விடவில்லை. வேட்டியை பிடித்து இழுக்கத் தொடங்கியது. என்னவோ நடந்து விட்டது என்பதைப் புரிந்த அப்பாவும், சபா மாஸ்டரும் பக்கத்து வீட்டினுள் நுழைகின்றனர். வீடு திறந்தபடி இருந்தது. ஆள் அரவம் ஏதுமில்லை. பலவித மனக்கிலேசத்துடன் அங்குமிங்கும் சென்றவாறு அழைக்கிறார்கள். நாயைப் பார்க்கிறார்கள் அது வாலை மடித்தவாறு  விட்டுப் பின் பக்கம் நோக்கிச் செல்வதும் வருவதுமாக இருக்கிறது.
மன இறுக்கத்துடன் இருவரும் மலகூடம் நோக்கிச் செல்கிறார்கள். தூரத்தில் பெரியம்மாவின் சேலைத்துணி மலகூடத்தின் நிலவறை மூடியில் தொங்கியிருப்பதைக் கண்டு பதைபதைப்புடன் நெருங்கினார்கள். கொங்கிறீற் மூடி திறபட்டதாலான மணம் குமட்டியெடுக்க மூக்கைத் துவாயால் மூடியவாறு கிடைத்த பெருந்தடியின் உதவியுடன் விலக்கிப் பார்க்கிறார்கள். பெரிய்யாவும் கூடவே அம்மாவும் மலக்குழியில்.!!!
ஊரில் ஆளில்லாத சுமையுடன் இருவரும் பெரிய்யா, அம்மாவின் கடைசிப்பணியை முடித்த பின் நாயுடன் திரும்பிய கதையை அப்பா அடிக்கடி நினைவுகூறுவார். இந்தச் சம்பவத்தை அடியொட்டி இளையவன் ஒரு சிறுகதையை எழுதியிருந்தார். நான் ஐரோப்பாவுக்கு வந்த பின்தான் வகை வகையான நாய்களைப் பார்த்தேன். பூனை மாதிரி, முயல் மாதிரி, பன்றி மாதிரி,….. என்ன மாதிரியிலும் படைக்கும் தன்மையை உயிரியல் விஞ்ஞானம் தந்துவிட்டதல்லவா. பரிசோதனை முயற்சிகள் முதலில் விலங்கினத்திலும் பின் வில்லங்கமில்லாத விலங்குகளிலும்தானே செய்வது வழக்கம். நாயை ஒத்த ஓநாய்கள் பற்றிய அறிதலும் விரிவாக இங்கேதான் எனக்குக் கிடைத்தது.
பாரிஸ் என்றதும் முதலில் நினைவில் தட்டுவது ஈபிள் கோபுரம் என்பார்கள். அடுத்தது…. வாசனைத்திரவியங்கள், வைன், பைக்கத்- தடிபோன்ற பாண், குறோசான்- காலை உணவுக்காகத் தயாரிக்கப்படும் உள்ளே ஏதுமில்லாத குண்டுப் பணிஸ்,…. என்றவாறு அடுக்கலாம். ஆனால் நான் அடித்துச் சொல்லுவேன் ‘நாய்ப் பீ’ !! அண்ணாந்து பார்த்த காலத்தை நாமெல்லோரும் இழந்துவிட்டிருக்கிறோம். கவனத்தோடு நடக்க வேண்டுமென்றால் குனிந்த தலை நிமிரக் கூடாது. தவறினால் ‘சதக்’ பிறகென்ன சீச் சீ… அருவெருப்புடன் சப்பாத்தைத் தேய்க்க வேண்டியதுதான். ஆனால் உணர்வு சப்பாத்தைத் துளைத்தவாறு உள்ளங்காலால் உச்சிக்குச் சென்றுவிடும். இந்த நாய்க் ‘கக்கா’ பற்றிய செய்திகளும், விவாதங்களும் மிக மிக நீண்ட தொடர் கதைகள். ‘கக்கா’ என்ற சொல் எம்மவருக்குப் புதியதல்ல. போர்த்துக்கேயரின் கடந்தகால காலனி இருப்பின் சுவடாக எம்மவர் தலைக்குள் ஏறிய சொல்.
நான் இவ்விடம் வந்தபோது எனக்குக் கிடைத்த முதல் வேலை பூனை பராமரிப்பு. அந்தச் சீமாட்டி வளர்த்த மூன்று பூனைகளைப் பராமரிப்பதுவே எனது வேலை. இதற்குக் கூட நேர்காணல் செய்துதான் தெரிவாக்கப்பட்டிருந்தேன். பூனை என்னை ஏற்றுக் கொண்டதாலேயே எனக்கு அந்த வேலை கிடைத்தது. பூனை பற்றி ஏதாகிலும் அறிந்துள்ளீரா ? என வினவினார் சீமாட்டி. « ஓ !! எனக்கு நல்ல பழக்கம். எனது வீட்டில் புனைகளும், நாய்களும் இருந்தன. » எனது பதில் அவருக்குத் திருப்தியைத் தராவிட்டாலும் எனக்கான வேலை உறுதியானது.
வேலைக்கு அழைத்துச் சென்ற நண்பன் என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘மூன்றாம் உலகிலிருந்து வந்த நாம் இவற்றை அறிந்துள்ளோம் எனச் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்காது. இவர்களுக்கான பெருமதிப்புக்குரிய தன்மையே இவ்வகை விலங்குகளை வளர்ப்பதுதானே ! எங்களை மாதிரி பிச்சக்காரரெல்லாம் இதை வளர்தால்….’ நண்பனின் அறிவுரை என் உச்சியல் ஓங்கிக் குட்டிய இடம் வீங்கிக் கண்டியுள்ளதாக நினைவு.
ஆயினும், இவர்கள் மூலம் விலங்கின உளவியலின்படி பலவிபரங்களை அறிய முடிந்தது. புத்தகங்களாகச் சேகரித்து வைத்துள்ளார்கள். அவர்கள் சொன்னபடி சிலரைக் கண்டால் பூனை ஓடி ஒளிப்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்.
இவ்வளவு பூனை வளர்க்கின்றீர்களே ஏன் நாய் வளர்க்கவில்லை என ஒருநாள் நான் கேட்டேன். « பூனை துப்பரவானது. பிரச்சனைகள் குறைவு. ஆனால் நாய்களால் தொல்லை அதிகம். சற்றே பிந்தி வந்தால் கூட வீட்டை அசிங்கப்படுத்திவிடும். இருக்கிற வேலையை அதிகப்படுத்திவிடும். »  நான் எதுவுமே பேசவில்லை.
எங்களது வீட்டு நாய்கள் பாம்பு பிடித்த சம்பவங்களை கதையாக என் பிள்ளைகளுக்கு சொல்லும்போது எவ்வளவு ஆர்வமாகக் கேட்கிறார்கள். ஏங்கள் வீமன் பாம்பிலிருந்து எத்தனை தடவை காப்பாற்றியிருக்கிறது. கீரி பாம்பைப் பிடித்ததை நான் பார்க்கவில்லை. ஆனால் எங்கள் நாய் பாம்பைப் பிடித்த காட்சி என் மனதில் பசுமையாக இருக்கிறது. சும்மா பாம்பில்லை. நாக பாம்பு அதன் துள்ளலும் மூர்க்கமான கண்களும் பாம்பைக் கௌவியபின் அங்குமிங்கும் ஆட்டிவிட்டு கிடாசி எறியும். யாருமே கிட்டே போக முடியாது. பாம்பு செத்த பின்தான் சாதுவாகும். இதன் பின் பார்த்தால், இந்த நாயா இப்படியான வீரத்தைக் காட்டியது… ஆச்சரியமாக இருக்கும். யுத்த பூமியான பின்பு ஆயுதங்களுடனான பயணங்கள் தொடங்கியபின், நம்மூர் நாய்களின் சேவைகளை கல்வெட்டாகத்தான் பொறிக்க வேண்டும். இந்தியப் படையின் மறைவும் தேடலாகட்டும், சிறிலங்கா இராணுவ நகர்வாகட்டும் முதலில் இனங்காட்டியவை இவைதான். இவை குரைக்கும் திசைகளுக்கு எதிர்த் திசைகளில் நகரும் எமது மறைவுகள். ஏன் இவை எம்மைப் பார்த்துக் குரைக்கவில்லை ? நம்மண்ணின் நேசிப்பில் அதிக பற்றைக் கொண்ட விலங்கு நம் நாய்தான். விடுதலைப் போரின் வெற்றி நினைவாக ஒரு நாட்டில் நாய்க்குச் சிலை வைத்துள்ளதாக நண்பன் சொன்னான். நாங்கள் காத்தல் கடவுளான வைரவருடன் நாயையும் வைத்துள்ள பாரம்பரியமுடையவர்கள்.
அண்மையில் தாயக மண்ணைத் தரிசித்து வந்த நண்பனும் கவிஞனுமாகிய சுபாஸ் நினைவு கூர்ந்த விடயமொன்று ஞாபகப் பொறியிலிருந்து இராணுவக் காப்பரண்களிலும் வீட்டுச் சுவர்களிலும் சிங்கள இராணுவத்தினர் கரிக்கட்டிகொண்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். ஏராளமான கவிதைகள் காணப்படுகின்றன அவற்றில் ஒன்று பின் வரும் பொருளில் எழுதப்பட்டிருக்கிறது.
« வட பகுதியில் இராணுவமாக நின்று கடமை புரிவதிலும் பார்க்க தாயகத்தில் நாயாகப் பிறந்து வீட்டைக் காத்திருக்கலாம் »
ஐரோப்பிய- அமெரிக்க- ஆஸ்திரேலியப் புலப்பெயர்விலுள்ள எமக்கு ?
குற்றவுணர்வுடன் நான்,

நாங்கள் ?

 


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 30 Sep 2023 13:09
TamilNet
HASH(0x55aea1306f58)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 30 Sep 2023 13:32


புதினம்
Sat, 30 Sep 2023 13:09
     இதுவரை:  24058701 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2364 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com