அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 23 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நன்றி கெட்டதுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி. பி. அரவிந்தன்  
Thursday, 07 October 2004

(பாரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் முற்றம் சஞ்சிகையின் நாய்ச் சிறப்பிதழில் இருந்து இக்கவிதை இங்கு மீள் பிரசுரமாகின்றது. இப்படி ஒரு சிறப்பிதழை தயாரிக்க எண்ணியதுடன் அதனை சிறப்புறத் தயாரித்தளித்த நண்பர் மனோ (ஓசை,அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர்) அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அந்த சிறப்பிதழின் பல படைப்புகள் இங்கு இடம் பெறுவதால்   வண்ணச் சிறகின் தோகை-10 நாய்க்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்த இதழ் உங்களிடம் நாய்கள் பற்றிய அருட்டலை ஏற்படுத்துமாயின் அவற்றை படைப்புகளாக்கி (கதை,கவிதை, கட்டுரை) எமக்கு பாமினியில் எழுதி அனுப்புங்கள். நிச்சயம் பிரசுரிப்போம் அனுப்ப வேண்டிய முகவரி kipian@gmail.com.)

(இந்தகவிதையில் பேசப்படுபவர் இவர்தான்)

கண்களில் வேட்டைப்பற்கள்;
காயத்தை தின்னும் ஈக்கள்.
கால்களிடைத்
தொங்கும் நிமிராவால்.
காலடியை முகரும் என் நாய்.
தாண்டிச்சென்றால் குதறிடுமோ?. . . .
என்னில்
பசியாறிடுமோ?. . . .


நன்றி கெட்டது
நாயா . . . நானா..?

அல்ஷேசன், பார்மேனியன்
மேல்சாதியானால்
மடியில் தோளில்
ஏன்
சைக்கிளிலிலும் பெட்டிகட்டிக்
காவிச் சென்றிருக்கலாம்.
ஆனால் நீ!


ஊர் நாய்
தெரு நாய்,
பற நாய் . . .

ஐம்புலனும் ஒடுங்க
அந்தகாரம் சூழும்.
வேட்டைகள் தொடங்கும்
எம் விழியாய், செவியாய்
உணர் நரம்பாய்
நீ இருந்தாய்.
அந்நிய வாடை சுமந்த
காற்றையும் எதிர்த்தாய்.
இந்திய ஜெனரல்களின்
சிம்ம சொப்பனமானாய்.
இசையின் சுருதியென
குலைப்பினில் உரைத்தாய்.
உயர்சாதி நாயெல்லாம்
ஷோபாவில், குஷனில்
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க
மண் விறாண்டிக் கிடங்கெடுத்து
ஊர் முனையில் காவல் இருந்தாய்.
இருந்தும் தான் என்ன?
கைவிடப்பட்டாய்.

அப்படிப் பார்க்காதே.
கம்பியால் இழைத்த
சுருக்குத் தடத்தினுள்
உன் மூதாதையரின்
உயிரின் யாசிப்பு.
நாய்களின் தொல்லையென
முன்னம் ஒரு நாளில்
காட்டிக்கொடுத்தது.


உனக்கு
நினைவுத் தொடர் உண்டா?

ஐந்தறிவு ஜீவன்
வாஞ்சையுடன் தாவுகின்றது.
பரிதவிப்பின் முனங்கல்.
புண்களின் வீச்சம்.
கண்களில் சுடரிட
செவிமடல் துடிக்கின்றது.

அன்னதண்ணி இல்லாமல்
எப்படி நீ...?

சோற்றுப் பருக்கையுமின்றி
விடுப்பல்லவா
பார்க்க வந்தேன்.
ஈனப் பிறவியடா நான்.
இந்த எஜமானனுக்காகவா
நீ...

மூசி..மூசி
மூச்சிரைத்து, சிணுங்கி
பிறாண்டி, கவ்விப்
பிடித்துழுத்து,
வானை மோப்பமிட
தெற்கிலிருந்து வரும்
சாவின் இரைச்சல்.
நிலத்தில் முகம் கவிழ
நான்.
மூச்சிழந்திருந்தது
நாய்.
கண்களில் வேட்டைப்பற்கள்...

-ஓகஸ்ட் 1990. யாழ்ப்பாணம்.

(முகம்கொள் (1992) தொகுப்பில் இடம்பெற்ற இக்கவிதை, முற்றத்தின் நாய்ச்சிறப்பிதழிலும் இடம்பெற்றது)


     இதுவரை:  24797366 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2461 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com