அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 10 arrow பரிதாபத்துக்குரியவர்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பரிதாபத்துக்குரியவர்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஈழநாதன்  
Wednesday, 13 October 2004

எனக்கும் அந்த நாய்க்குமான விரோதம் எப்படி ஆரம்பித்ததென்றே தெரியவில்லை.சமாதானமாகப் போய்விடுவதற்கு பலமுறை நான் முயன்ற போதும் அது இலங்கை இனப்பிரச்சனை போல முறுக்கிக் கொண்டே நின்றது.அப்படி நின்றிருந்தால் பரவாயில்லை அந்தத் தெருவால் போகும் போதெல்லாம் தனது உரிமையை நிலைநாட்டுவதற்காக குரைத்தது சிலவேளை கடிக்கக் கூட வந்தது.

எனக்கு இது மானப்பிரச்சனையாகப் போய்விட்டது "கையை நீட்டியும் குலுக்காமல் முறைக்கும் மனுசத்தனமில்லாத பிறவி" சே என்ன நினைக்கிறேன் நாய்க்கு எப்படி மனுசத்தனம் வரும்? சரி மனுசத் தனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாய்களுக்கென்று சில உருப்படியான குணங்கள் இல்லாமலா போய்விடும்.அதிலொன்று மன்னித்தலாக இருக்காதா?

ஒரு நாள் ஒரே ஒரு நாள் தெருவில் கல்லொன்று அழகாக உருண்டையாக இருக்கிறதே என்று எடுத்து உள்ளங்கையில் வைத்துப் புரட்டிய போது ஆரம்பித்தது சனியின் விளையாட்டு .

அந்த நேரம் பார்த்துத் தானா அது எதிரில் வந்து தொலைக்கவேண்டும?் அது என்னவோ சும்மா தான் வந்தது நான் தான் எடுத்த கல் வீணாகப் போய்விடக்கூடாதென்று எறிந்து வைத்தேன்.எறிந்தததையும் வேலியிலோ அல்லது வெளியிலோ எறிந்து வைத்திருக்கலாம் எனக்குப் பிடித்த சனி உச்சியில் நின்று ஆடியதன் விளைவாக கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் பழமொழியும் கூடவே நினைவுக்கு வந்து தொலைத்தது பிறகென்ன கையிலே கல் எதிரிலே நாய் எதற்கு அரியதொரு சந்தர்ப்பத்தை வீணாக்குவான் இப்படியான சந்தர்ப்பங்கள் ஆயிரத்திலொன்றுதான் கிடைக்கும் என்பது போல நேராக நாயைக் குறி வைத்து எறிந்தேன்.

என்னைப் பிடித்த சனியன் அதையும் பிடித்திருக்க வேண்டும் எறிந்த கல் நேராகப் போய் காது மடலுக்கு சற்றுக் கீழே பட்டுத் தொலைத்தது.ஏற்கனவே அப்படி இப்படி  இருந்த முன் விரோதம் பரம விரோதமாக அது காரணமாயிற்று.அதுவரை முறைப்பதும் குரைப்பதுமாக இருந்த நாய் அன்று முதல் கடிப்பது போன்று துரத்துவதற்கும் நானே அடிகோலினேன்.

அன்றைக்கு அந்த நாய் போட்ட ஓலச் சத்தத்தை இன்று வரை என் வாழ் நாளில் நான் கேட்டதில்லை.அப்படியொரு வலியின் கதறல்.அப்போது கூட மனசாட்சி உறுத்தத்தான் செய்தது ஆனாலும் 'நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத்தான் தூக்கும் ' என்று சும்மாவா சொன்னார்கள் அந்த நாயும் காலைத் தூக்கிக் கொண்டு ஓடியதில் பழமொழி உண்மையாகிவிட்ட பரம சந்தோஷம்.

நாயைப் பற்றி இவை மட்டுமா பழமொழிகள.் நாய் வாலை நிமிர்த்த முடியாதிலிருந்து,நாய்க்கேன் போர்த்தேங்காய்,நய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத்தண்ணி நக்குத் தண்ணிதான் வரை, அப்பப்பா நாயை வைத்துத்தான் எத்தனை பழமொழிகள் உவமைத்தொடர்கள?்.எனக்கென்னவோ இதற்குக் காரணம் நாய்தான் காட்டிலிருந்து மனிதனுடன் கூடவே வந்த மிருகம் என்பதைவிட, நாயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அதிகம் என்பதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.

அவ்வளவேன், இப்போது எனக்கு மட்டும் பழமொழி இயற்றும் பாக்கியம் கிடைத்தால் நாயை என்னைவிடக் கேவலமாக குறிப்பிடக் கூடியவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது என்று தோன்றுகிறது!.

அது முறைத்தால் முறைத்துவிட்டுப் போகட்டும் எனக்கென்ன என்று விட்டுவிட முடியவில்லை.சிறு குச்சொழுங்கை ஒன்றால் பிரதான வீதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் எனது வீட்டிலிருந்து ஒழுங்கைக்குக் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஒழுங்கையின் முகப்பில் நாய் படுத்திருந்தால் எப்படியிருக்கும்?.முகப்பு வீட்டு நாய்தான் அது.பக்கத்து வீட்டுக்காரன் என்று ஒரு நட்பு ரீதியான பார்வை அது கூட வேண்டாம் கடந்து போகும்போதாவது சும்மா இருக்கலாமே!.

ஏதோ பெரும் சண்டைக்குத் தயாராவது போல எழும்பி உடலை ஒரு உதறு உதறி குரைக்க ஆரம்பித்தால், நான் வீட்டுக்குள்ளே போய்ப் பதுங்குவதை விட வேறு வழியில்லை.நான் வீட்டுள்ளே திரும்பியதும் வெற்றி வீரனைப் போல் திரும்பவும் இடையில் விட்ட நித்திரையை விட்ட இடத்திலேயே தொடர்வதைப் பார்த்தால் யாருக்குத்தான் கோபம் வராது?.பெரியதொரு கல்லாக எடுத்துப் போட்டு கதையை முடிக்கலாம் என்றால் அதிலும் பிரச்சனை இருந்தது.

 à®¨à®¾à®¯à¯à®•à¯à®•à¯à®®à¯ எனக்கும் இடையிலான பனிப்போர் சாடை மாடையாக முகப்பு வீட்டுக்காரருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தெரிந்திருந்தது.நாய் அசந்து நித்திரையாகிய நேரம் பார்த்து சைக்கிளுக்கு மேலே காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு நான் ஓடும் ஓட்டம் அவர்களுக்கு இரகசியத்தைப் பரகசியமாக்கிவிட்டிருந்தது.இதனால் தற்செயலாக நாய் செத்துப்போய்விட்டால் கூட அந்தப் பழி என்மேல்தான் விழுமென்பது எனக்கு நிச்சயமாகிவிட்டிருந்தது.

நானும் மெதுவாக அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்தேன். அவர்களுக்கெல்லாம் அந்த நாய் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது. அந்தத் தெருவுக்கு புதிதாக வருபவர்களைக் காட்டிக் கொடுப்பதிலிருந்து, மூன்றாவது வீட்டில் இரவு ஓடு பிரித்து இறங்கிய கள்வனை விரட்டிய வீர சாகச நிகழ்ச்சி வரை அந்த நாயின் வீரப்பிரதாபங்கள் அவர்களால் பேசப்பட்டன.

அந்த தெருவில் அந்த நாய்க்கு ஒரே ஒரு எதிரியாக நானே இருந்தேன்.இத்தனைக்கும் முகப்பு வீட்டுக்காரரை விட எனது அம்மா மேல் நாய் பிரியமாக இருந்தது.ஒருவேளை அம்மா அடிக்கடி போடும் சாப்பாடு காரணமாக இருக்கலாம். அதனாலேயோ என்னவோ தங்கையை விளையாட்டுத் தோழியாகவும் ஏற்றுக்கொண்டுவிட்டது.இந்தக் காரணங்களால் அம்மாவினதும் தங்கையினதும் கேலிக்கும் நான் ஆளானேன் என் எதிரிலேயே அதைத் தடவுவதும் செல்லம் கொஞ்சுவதுமாக வெறுப்பேற்றுவார்கள்.

தங்கையை இதற்காக அடிக்கலாம் போலத் தோன்றினாலும் ஒரு காரணத்துக்காக அவளையும் பொறுத்துக்கொண்டேன்.நாய் படுத்திருக்கும் நேரத்தில் தெருவால் சைக்கிளையும் கொண்டு போவதற்கு தங்கையின் உதவி தேவைப்பட்டது.அவசரமாக எங்கேயும் போவதாக இருந்தால் தெருமுனை வரை தங்கையையும் அழைத்துச் செல்லவேண்டியதாயிற்று.ஏற்கனவே ஒருமுறை நாய்கடித்து நாற்பத்து இரண்டு ஊசி போட்டுக்கொண்ட நண்பனின் அனுபவம் என்னை அலட்சியப்படுத்தாமல் காத்தது.தங்கையில்லாத நேரங்களில் வீட்டிலிருந்து வெகுவேகமாக சைக்கிளில் ஓடி நாய் படுத்திருக்கும் இடம் வந்தவுடன் கைப்பிடி மீது காலைத்தூக்கி வைத்துச் சமாளித்துக்கொள்வேன். அப்படியும் அந்தப் பிசாசு கொஞ்சத் தூரம் கூடவே ஓடிவந்து அப்புறம் திரும்பி வா பார்த்துக்கொள்வோம் என்ற மாதிரி திரும்பும்.

எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது, அன்றைய நாள் வரும் வரை.

அன்று எதிர்பாராத சுற்றி வளைப்பில் அகப்பட்டுக்கொண்டேன் எங்கோ வெடித்த குண்டுக்கு என்னை வீடுபுகுந்து பிடித்தார்கள் அம்மாவினதோ தங்கையினதோ கதறல் எனக்கு விழுந்த அடிகளைக் குறைக்க உதவவில்லை.

காயங்களிலிருந்து ஒழுகும் இரத்தத்துடன் என்னை தெருவால் இழுத்துச் சென்று இராணுவ வண்டியில் ஏற்றும்போது நாய் தெருமுனையில் நின்று குரைத்துக்கொண்டிருந்தது.அது எனக்கான எதிர்ப்பாக இருக்கவில்லை என்னை இழுத்துச் செல்வதற்கு தன்னுடைய எதிர்ப்பை பலத்த சத்தத்துடன் காட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்து வீடுகளில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த தலைகளை விட நேரடியான அந்த எதிர்ப்பு எனக்கு ஆறுதலளித்தது.முதன் முறையாக, அவர்கள் நாயைச் சுட்டாலும் என்று பயந்தேன்.

மாதக்கணக்கில் தடுப்பு முகாமிலிருந்துவிட்டு ஒருநாள் வீடு திரும்பினேன் நாய் என்னைப் பார்த்துக் குரைக்கவில்லை தலையைத் துக்கிப் பார்த்தது அதன் கண்ணில் விரோதத்துக்குப் பதிலாக பரிதாபமே எஞ்சி நின்றது.தன்னை விடப் பரிதாபத்துக்குரிய ஒரு சீவனை அது என்னில் கண்டிருக்கவேண்டும்.
இப்போதெல்லாம் அந்த நாய் முகத்தில் விழிப்பதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது.


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Apr 2024 21:39
TamilNet
HASH(0x555bca376be8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Apr 2024 21:44


புதினம்
Tue, 16 Apr 2024 21:44
















     இதுவரை:  24773163 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2248 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com