அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலாசார தினைக்களத்தின் இலக்கிய விழாவும் ஒரு இறாத்தல் பாணும்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - நெய்தல்நம்பி -  
Thursday, 04 November 2004

வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கலாசாரப்பிரிவு வருடாவருடம் நடாத்திவரும் இலக்கியவிழா இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. (யாழ் இந்து மகளிர் கல்லூரி-9,10,11-2004) வழமைபோல் காலையில் ஆய்வரங்கும் மாலையில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இம்முறை விழாவின் ஆய்வுப் பொருள் 'ஈழத்தின் கல்வி அறிவியல்சார் எழுத்துக்கள் - வரலாற்று விமர்சன நோக்கு' என்பதாகும். வழமைபோல் பல்கலைக்கழக புத்திசீவிகள் தாங்களே தெரிவுசெய்த தலைப்புகளில் தாங்களே முழக்கித் தள்ளினர்.  தயவு செய்து மேற்படி தலைப்பிற்கும் இல்கியத்திற்கும் என்ன தொடர்பென்று கேட்க வேண்டாம். அப்படியே நீங்கள் கோட்டாலும், அவர்கள் வசம் சில விளக்கங்கள் உண்டு. நாங்கள் கல்விப்பரப்பின் பாடவிதானத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. புதிய கல்வி அனுகுமுறைகளைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது என்பர். இந்த இடத்தில் நீங்கள் சற்று பின்நோக்கிப் பயணிக்கலாம்.  1998ம் ஆண்டின் இலக்கியவிழா, 'அரசகரும மொழியாகத் தமிழ் - இலங்கை நிலையும் நிலைமைகளும்' என்ற தலைப்பில் நடைபெற்றது. பின்னர் அது ஒரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டது. நான் நினைக்கிறேன் அத்தெகுப்பு இப்பொழுது பல அதிகாரிகளின் வீட்டு அலமாரிக்குள் முடங்கிக் கிடக்கலாம். இன்றும் சிங்களம் தெரியாததன் காரணத்தால் எத்தனை தமிழாகள் சிங்கள நீதிமன்றங்களில் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் அறிந்திருக்க நியாயமில்லை. இங்கு கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் அவர்களை கட்டுப்படுத்தக் கூடிய மேலதிகாரிகளும்; ஒரு முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு என்பது சிறிலங்கா அரசின் உப நிர்வாகப்பிரிவுகளில் ஒண்றாகும். சிறிலங்காவின் நிர்வாகப்பிரிவொன்றின் ஊடாக, சிறிலங்காவின் கட்டமைப்புகளை கேள்விக்குள்ளாக்க முடியுமா? ஆகவே இந்தக் கட்டமைப்பை எங்களது இலக்கிய வளர்ச்சிக்கும் கலாசார மேம்பாட்டிற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திப்பதுதான் உசிதம். அதற்காக கல்வியியல் சார்ந்த சிந்தனைகள் அறவே கூடாது என்பதல்ல வாதம். அதுவும் ஒரு சில தலைப்புகளாக இருக்கட்டும். அதுவே முழுமையாக இருப்பதுதான் பிரச்சனை. இலக்கியவிழா NGOக்களின் செமினார் போலாகிவிடுதல் கூடாது. இலக்கியம் குறித்து ஆய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக போர்க்கால இலக்கிங்கள் குறித்து எத்தகைய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன? வன்னி எழுத்துக்கள் பற்றிய எங்கள் மதீப்பீடுதான் என்ன? இவையெல்லாம் ஆய்வுப் பொருளாக வேண்டாமா? இதனைப் புரிந்து கொள்ளக் கூடியளவிற்கு கலாசாரத் திணைக்களத்தில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை நாமறியோம் பராபரமே.

இந்த விழாவின் ஒழுங்கமைப்பும் மனதிற்கு சங்கடத்தைத் தந்தது. குறிப்பாக உணவு படு மோசம். இவன் என்னடா சிறு பிள்ளைத்தனமாக உணவைப்பற்றியெல்லாம் பேசுகிறான் என்று நீங்கள் எண்ணக் கூடும். இந்த விழாவிற்கு செலவளிக்கப்பட்ட பணம் அதிகாரிகள் சிலரின் பாட்டன் சொத்தல்ல. மக்களின் பணம். மக்களது பணம் செலவழிப்பது தொடர்பில் கேள்வி கேட்கும் உரிமை, ஒவ்வொரு குடிமனுக்கும் உரித்தானது என்பதை கருத்தில் கொள்க. ஆனால் நாம் எவரும் கேட்பதில்லை. உண்மையில் எமது மௌனம்தான் அதிகாரிகளின் பலம். இதில் வேடிக்கையானதும் ஆதங்கத்துக்குரியதுமான ஒரு விடமிருக்கிறது. அது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு பாண் வழங்கிய கைங்கர்யம் தொடர்பானது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பாண் கேட்டிருக்கிறார். ஒரு சொப்பிங் பேக்கில் கட்டியவாறு ஒரு இறாத்தல் பாண் அவரது கட்டிலில் வந்து விழுந்தது. அவர் பாணை வெட்டுவதற்கு கத்திகேட்டு, அவரது நண்பரொருவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். பேராசிரியர். சிவத்தம்பி அவர்கள் தமிழர் தேசத்தின் ஒரு சொத்தாகக் கருதப்படுபவர். தேசமும் அவரை மிகவும் உயர்ந்த இடத்தில்தான் வைத்திருக்கிறது. அவரது நிலையைக் கொண்டே ஏனைய பேராளர்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் பேராசிரியருக்கும் இது தேவைதான் என்றும் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது.

நான் எவரையும் விமர்சிக்கும் நோக்கிலோ அல்லது ஒரு பத்தியை எழுதிவிட வேண்டுமென்ற அவசரத்திலோ எனது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. கலாசாரத் திணைக்களவாதிகளும் மாகாணசபை அதிகாரிகளும் சில விடங்களை புரிந்துகொள்ள முன்வர வேண்டும். மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக பேராசிரியர்களின் ஆலோசனைச் சட்டகங்களிலிருந்து விடுபடவேண்டும். அதற்காக பேராசிரியர்களை நிராகரிக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. இலக்கியவிழா குறித்து இலக்கியவாதிகளுடனும் இலக்கியச் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆய்வரங்கில் இடமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடமளிக்கலாம் ஆனால் நடைபெற்ற ஒவ்வொரு விழாவையும் எடுத்து நோக்கினால் அது வடக்கு கிழக்கு மாகாண இலக்கியவிழா என்றல்லாமல் ஒரு பல்கலைக்கழக விழா என்பதற்கான அடையாளத்தைத்தான் கொண்டிருக்கிறது. உண்மையில் கலாசார திணைக்களம் என்ற அமைப்பு ஒரு பிரச்சனையல்ல ஆனால் நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம். என்பதில்தான் பிரச்சனையிருக்கிறது. இனியாவது கலாசாரத் திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு ஆணையிடும் அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்வார்களென நம்புவோமாக.

நான் இந்த விழாவிற்காக கிழக்கிலிருந்து பயணித்தவன். இந்த விழாவால் எனக்கு கிடைத்த பயன்தான் என்ன? ஓமந்தையில் சிறிலங்காவின் எல்லைக் கோட்டைத்தாண்டி தமிழர் ஆட்சிப்பரப்புள் நுழைந்ததும் ஏற்பட்டதொரு மகிழ்ச்சி, சிறிலங்காவின் நீதிமன்றங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் (எங்களுக்கான) உச்ச நீதிமன்றத்தை கண்டவுடன் ஏற்பட்ட புளகாங்கிதம்.  நீண்டகாலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றதால் இலக்கிய நண்பர்கள் பலரைக் கண்ட திருப்தி. அதிலும் கடிதங்கள் வாயிலாக மட்டுமே உறவாடிக் கொண்டிருந்த சில இலக்கிய நண்பர்களை காணமுடிந்தது. இதற்கப்பால் சொல்லுவதென்றால் சில கலை நிகழ்ச்சிகளைப் பார்த்த திருப்தியையும் குறிப்பிடலாம்.  கண்ணனின் இசை நிகழ்வு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய ஈழக்கூத்து என்பவை சிலாகிக்கத்தக்கன. ஆனால் ஈழக்கூத்து முடிவில் பேராசிரியர் மௌனகுரு சொன்னதொரு விடயம் எரிச்சலையூட்டியதையும் சொல்லிவிடுகிறேன். கிழக்கு பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து ஈழத்தமிழர்களுக்கான நடனமொன்றை உருவாக்கப் போவதாக பேராசிரியர் மௌனகுரு பிரகடணம் செய்தார். நானும் இந்த  பிரகடனத்தை பத்து வருடங்களுக்கும் மேலாகக் கேட்டு வருகிறேன். பிரகடணங்கள் செய்ததைத் தவிர எதுவும் உருப்படியாக ரோசிரியர் மௌனகுருவானவர் செய்ததாகத் தெரியவில்லை. இனியாவது அவர் செயலில் இறங்குவாராக. இவ்வாறான சில நன்மைகளுக்கு வாய்ப்பளித்த கல்வி அமைச்சின் பெரியோர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுதல் பெரும் பாவமாகும். நன்றி.
 
……….


     இதுவரை:  25811796 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6505 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com