அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


துளிக்குள் ஒரு தியானவெளி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Thursday, 13 January 2005

 

1.
அர்த்தமற்ற வெளியில் அலைந்த
தூசிப்படலத்துள் தொடங்கியது நம் வரலாறு
அன்னையே, ஆழியலையே.

தனித்திருந்த இரண்டு ஐதரசன் கன்னிகளைத்
தனக்காக்கிப் பிராணன் தன்னிலை தணிந்தபோது
நீ பிறந்தாய் நீரே.

வாயுப்பிரபஞ்சத்தில் இருந்து நீ தோன்றியபின்தான்
சடப்பிரபஞ்சத்தில் இருந்து தோன்றியது
ஜீவனப் பிரபஞ்சம்.

நீ இன்றி எதுவுமில்லை
ஆதவனின் இனிய காதலியே
உன்னிலிருந்துதானே பிறந்தன உயிர்கள் அனைத்தும்.

கடலுறங்கும் நீ உன் காதலனின் அழைப்பில்
வான் சென்று வரும்போதுதானே இன்னும்
நம் வயிறுகள் தணிகின்றன.

தாயே, தண்ணீரே, தண்ணீரே,
ஏன் நீ வன்னீரானாய்?

படைத்து தீனூட்டிப் பாதுகாத்த நீ, உன் குழந்தைகள்
இத்தனையை ஏன் வாரியிழுத்தாய்?

வாரியிழுத்து உன் வயிற்றில் அவர்களின்
உயிர்களைச் சமித்துவிட்டு உடல்களை மட்டுமேன்
மீளத்தந்தாய்?

2.

பூமியின் அகத்திருந்து குமுறும் அனற்குழம்பை மூடிப் போர்புரியும் இராட்சத ஓடுகளின் பிரமாண்ட யுத்தத்தில்
அகப்பட்டு அல்லலுற்றேன் மகனே
சொல்லொணா அல்லலுற்றேன்.

நெருக்கடியால் நான் அலையுண்டேன்.
நெருக்கிடியால் நான் அலைகொண்டேன்.

பிராணனின் மகள் நான் உயிர்க்கெல்லாம் அன்னை.
பிரபஞ்ச பேர்வெளியில் மகாபோரில் பிறந்தவள்.
உயிர்களுக்காய் உருவெடுத்தேனெனினும்
நான் உயிர் கொல்லும் நிலைமைக்குள் பலதடவை
தள்ளப்பட்டேன்.

உயிர் கொடுத்து உயிர்காக்கும் என்னை உயிரெடுக்கும்
இராட்சசியாய் மாற்றியது ஓர் இராட்சதப்போர் மகனே.
கொலைகாரி, கொடும்பாவி, கொடியவளே என
வசைமாரி பொழியாதே.

மூச்சடங்கி உடல்கடந்த உயிர்களெல்லாம்
எல்லையற்ற என் கருணைக்குள்.
அந்தமற்ற என் அன்புக்குள் உறக்கம் கொள்கின்றன மகனே.

பசுமை விரவி உயிர்களை காக்க நாளை
நான் மழையாய் பொழிகையில்
ஒவ்வோர் துளியிலும் நான் அவர்களின்
உயிர்களை மீண்டும் தருவேன். ஒவ்வோர்
துளியிலும் அவர்கள் அனைவரினதும்
உயிர்களையும் நான் மீ்ண்டும் மீளத்தருவேன்.

3.
கடவுளரும் ஆளரவும் அற்ற
ஒரு பெருவெளியில் பிதற்றிப்பின்
வானத்தைப் பார்க்கையில்
நெற்றியில் வீழ்ந்தது
ஒரு மழைத்துளி.

08-01-2005

 


     இதுவரை:  24714209 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4405 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com