அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 21 September 2019

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 13 arrow ஒரு பெரிய புத்தகத்தின் சிறிய வரலாறு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு பெரிய புத்தகத்தின் சிறிய வரலாறு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அ.முத்துலிங்கம்  
Monday, 07 February 2005

என் வாழ்க்கையில் நான் வாசிகசாலைக்கு படிக்கப் போனது கிடையாது. அங்கே அமர்ந்து புத்தகங்கள் வாசித்ததோ, அல்லது இரவல் வாங்கி வந்து படித்ததோ இல்லை.  இப்படி ஒரு பழக்கம். புத்தகங்களை வெகு காலமாக காசு கொடுத்து வாங்கி சேர்த்து வந்தேன். கனடாவில்தான் முதன்முதலாக நூலகத்தில் புத்தகம் இரவல் வாங்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு காரணம் இருந்தது. மனைவியின் எதிர்ப்பு. பார்த்தவுடன் ஆசைப்பட்டு புத்தகங்களை வாங்கிவிடுவதால் அவற்றில் பல படிக்கப்படாமலேயே பல அறைகளை நிறைத்துக்கொண்டு கிடந்தன. புத்தக அறையின் தட்டுகள் நிரம்பி வழிந்து மற்ற அறைகளிலும் மெள்ள  எட்டிப்பார்த்தன. ஆனபடியால் புதுப் புத்தகங்களை இனிமேல் வாங்குவதில்லை என்ற உத்தரவுக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். தவறான நேரத்தில் தவறான இடத்தில் எடுத்த தவறான முடிவு. இந்த முடிவு எடுத்த அன்றே ஒரு புதுப் புத்தகம் வெளியானது. அதைப் பற்றி சில ஆங்கிலப்பத்திரிகைகளும், வார இதழ்களும் வானளாவப் புகழ்ந்தன. கலிபோர்னியாவில் இருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல்கூட அனுப்பினார். நான் என்னுடைய நூலகத்துக்கு சென்று இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்தேன். இங்கேயெல்லாம் நூலகங்களில் போய் உங்களுக்கு தேவையான புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு உடனே புறப்பட முடியாது. அநேகமாக நீங்கள் கேட்கும் புத்தகம் வெளியே போயிருக்கும். உங்கள் பெயரை கம்புயூட்டரில் பதிவு செய்து வைத்து, உங்களுக்கு முன்பு அந்தப் புத்தகம் கேட்டவர்கள் எல்லாம் வாசித்து முடித்த பிறகே அது உங்களுக்கு கிடைக்கும்.
நான் புத்தகத்தை பதியச் சென்றபோது நூலக அலுவலர் கம்புயூட்டரில் விபரத்தை பதிந்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். 'மிக அதிசயமாயிருக்கிறது. நீங்கள் இந்தப் புத்தகத்துக்கு பதிந்த 311வது நபர். இந்த 310 பேரும் படித்த பிறகே இது உங்கள் கைக்கு வந்து சேரும்' என்றார். நான் வாயை மூடுமுன் அவர் அடுத்த ஆளைக் கவனிக்க போய்விட்டார். இப்பொழுது எனக்கு ஆவல் அதிகமானது. இவ்வளவு பேர் ஆசைப்பட்டு வரிசையில் நிற்பதென்றால் ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்யும். 310 பேர் வாசிக்கும் வரைக்கும் காத்திருப்பது நடக்கிற காரியமா? எப்படியும்  இந்தப் புத்தகத்தை கைப்பற்றிவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆகப் பெரிய நூலக அதிபரைச் சந்தித்து ஒரு புத்தகத்திற்காக ஐந்து வருடத்திற்கு மேலாக
காத்திருக்கவேண்டிய என்னுடைய துர்ப்பாக்கிய நிலையை பற்றி கூறினேன். அவர் பெயர் Patricia. புத்தகங்களை நேசித்த அளவு அவர் மனிதர்களையும் நேசித்தார். வாசிப்பு சுற்றுக்கு அல்லாமல் ஆராய்ச்சிக்கு மட்டும் ஒதுக்கி வைத்த ஒரு புத்தகத்தை 'ஒரு வாரத்திற்கு மட்டும்' எனக்கு இரவல் தரவேண்டும் என்ற விசேஷமான முடிவு ஒன்றை எடுத்தார். அப்படிப் பெற்றதுதான் அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தில் இருந்து என் கண்களை ஒரு வாரமாக எடுக்க முடியவில்லை. சட்டம் என்றால் என்ன. நமக்கு நாம் போடுவதுதானே. இது கட்டாயம் ஒருவர்  வீட்டிலே இருக்கவேண்டிய அபூர்வமான புத்தகம். ரொறொன்ரோவில் உள்ள ஒரு பிரபலமான புத்தகக் கடைக்கு சென்று இந்தப் புத்தகத்தை 30 டொலர்  கொடுத்து வாங்கினேன். இப்பொழுது வேண்டியமட்டும் புத்தகத்தில் அடிக்கோடுகள் போட்டபடி இருக்கிறேன்.
                                        *                             *                          *
Bill Bryson என்பவர் அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதிகமானவை பயணப் புத்தகங்கள். இவர் இருபது வருடகாலம் இங்கிலாந்தில் வாழ்ந்தவர். திரும்பி அமெரிக்கா வந்தபோது தான் கண்ட புது அமெரிக்காவை பற்றி புத்திஜீவித்தனமான பல கட்டுரைகள் எழுதினார். அவை நகைச்சுவையின் சிகரம். அமெரிக்காவின் போக்குகளை இந்தக் கட்டுரைகள் மூலம் மெலிதாக கண்டனமும், பெரிதாக கேலியும் செய்கிறார். ஒருமுறை அவர் பசிபிக் சமுத்திரத்தின்மீது பறந்துகொண்டிருந்தபோது அவர் மூளையில் ஒரு சிந்தனை ஓடியது. சூரியனை சுற்றி ஓடும் ஒன்பது கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியம் படைத்த ஒரே கிரகமான பூமிக்கிரகத்தில் நான் வாழ்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு ஒருமுறையே சாத்தியம். ஆனால் எனக்கு பூமியை பற்றி என்ன தெரியும்? கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற சாதரண கேள்விக்கு கூட எனக்கு விடை தெரியாது.' சிறுவயதாக இருந்தபோது விஞ்ஞானப் புத்தகங்களைப் படித்திருக்கிறார். ஆனால் புத்தகத்தை எத்தனை வேகமாக படிப்பதற்கு எடுப்பாரோ அத்தனை வேகமாக திருப்பி வைத்துவிடுவார். ஏனென்றால் ஒன்றுமே புரியாது. விஞ்ஞானிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஒரு சாதாரண நிகழ்வையும் விளக்க முற்படும்போது அதன் காரண காரியங்களை புரியவைக்காமல் ஒரு விதியாகவோ, சூத்திரமாகவோ அந்த செயல்பாட்டை சொல்லிவிடுவார்கள். அப்படிச் செய்தால் போதிய விளக்கம் கொடுத்துவிட்டதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. என்ன ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார்களோ அதை வார்த்தைகளைப் போட்டு ஒன்றுக்குமேல் அடுக்கி மூடிவிடுவார்கள். எவ்வளவு கிண்டிப்பார்த்தாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு சாமர்த்தியமாக மறைத்திருப்பார்கள்.  பில் பிரைஸன் விஞ்ஞானி அல்ல; அதற்கான படிப்பும் இல்லாதவர். ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றி அறியவேண்டும் என்று அடங்காத ஆசை கொண்டவர். விஞ்ஞானம் பற்றி இவருடைய மூளையிலே முளைத்த கேள்வி எல்லாம் 'ஏன்? ஏன்?' என்பது அல்ல, 'எப்படி? எப்படி?' என்பதுதான். பூமியின் எடையை எப்படி கண்டுபிடித்தார்கள். சூரியனிலிருந்து பூமியின் தூரத்தை எப்படி அளந்தார்கள்? தனிமங்களை எப்படி ஒழுங்குபடுத்தி அடுக்கினார்கள்? அப்பொழுது பில் பிரைஸன் தன்னுடைய வாழ்நாளில் மூன்று வருடங்களை இதற்காக ஒதுக்குவது என்ற முடிவை எடுத்தார். விஞ்ஞான புத்தகங்களை முறையாக கற்று தேர்வது. இது சம்பந்தமாக கையில் கிடைத்த ஆய்வேடுகள், பத்திரிகை துணுக்குகளை எல்லாம் படிப்பது. அந்த அந்த துறையில் பேர்போன உலக விஞ்ஞானிகளை, நிபுணர்களை, பேராசிரியர்களை, ஆய்வாளர்களை அணுகி சந்தேகங்களை தீர்ப்பது, இப்படி. மூடத்தனமான கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து ஒரு சாதாரண மூளை கொண்டவன் எந்த அளவுக்கு விஞ்ஞான நுட்பங்களை அறிந்து கொள்ளமுடியுமென்று பரிசோதிப்பது. அப்படி சோதித்து, தான் கிரகித்ததை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது. சகல துறைகளும்  இந்த புத்தகத்தினுள் அடக்கம். சாதாரண மூளைக்காரர் கிரகித்து, சாதாரண மூளைக்காரர்களுக்காக எழுதியது.

அதுதான் 'A Short History of Nearly Everything' என்ற புத்தகம். 'கிட்டத்தட்ட சகல விஷயங்களையும் சொல்லும் சிறிய வரலாறு' என்று சொல்லலாம். விஞ்ஞானத்தின் அத்தனை மூலைகளையும் இது தொடுகிறது; விளக்கிச் செல்கிறது. எப்படி என்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. முப்பது அத்தியாயப் புத்தகத்தில் உள்ள அவ்வளவையும் இங்கே சொல்லமுடியாது. ஒன்றிரண்டு மாதிரிகளை மட்டுமே காட்டலாம். 
                *                             *                           *
அவுஸ்திரேலியாவில் வாழும் Robert Evans என்ற பாதிரியாரின் பொழுதுபோக்கு இரவு நேரங்களில் வானத்தில் சுப்பர்நோவாக்களைத் கண்டுபிடிப்பது. சுப்பர்நோவா என்பது பிரம்மாண்டமான நட்சத்திரம் (எங்களுடைய சூரியனிலும் பார்க்க பல்லாயிரம் மடங்கு பெரிசானவை) இவை திடீரென்று வெடித்து மடியும்போது கோடி சூரியப் பிரகாசமான ஒளியை சிந்தும். இந்த ஒளிப்பிழம்பு வெடிக்கும் தருணத்தை பதிவு செய்வதுதான் இவருடைய பொழுதுபோக்கு.

ஒரு நட்சத்திரம் கோடானுகோடி வருடங்கள் உயிர் வாழ்ந்து ஒளியை விடலாம். ஆனால் அது ஒரு தருணத்தில் ஒரே ஒருமுறை பிரம்மாண்டமாக வெடித்து உயிரைவிடும். கோடிக்கணக்கான பால்வெளிகளில் தரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று இப்படி வெடிக்கலாம். வானவெளியில் இது எங்கேயும் நடக்கும். அது நடக்கும்போது அதை முதலும் கடைசியுமாக பார்த்து 
பதிவுசெய்வதுதான் அவருக்கு பிடித்த வேலை.

இந்த நட்சத்திர மரணங்கள் நடப்பது வெகு தொலைவில், பல்லாயிரமாயிரம் ஒளிவருட தூரத்தில். ஒவ்வொரு இரவும் இவர் தன்னுடைய 16 அங்குல தொலைநோக்கியால் வானத்தை துளாவுவார். அபூர்வமாக நடக்கும் நட்சத்திர மரணங்களை இவான்ஸ் எளிதாக பதிவு செய்வதற்கு காரணம் அவருடைய அபாரமான மூளைதான். கறுப்பு விரிப்பால் மூடிய ஒரு மேசையில் ஒரு கை நிறைய அள்ளிய உப்பை சிதறவிடுகிறீர்கள். இதுதான் பால்வெளி. இப்படியே 1500 மேசைகள் இருக்கின்றன. இவான்ஸ் இந்த மேசைகளை சுற்றி ஒரு ரவுண்ட் வருகிறார். அடுத்த சுற்று வரும்போது ஒரு மண்லும் சிறிய உப்புக்கல்லை ஒரு மேசையில் போட்டு வைக்கிறீர்கள். இவான்ஸ் அந்த உப்புக்கல்லை அடையாளம் காட்டுவார். ஒரு சுப்பர்நோவாவை தேடிப்பிடிப்பதும் அவ்வளவு கடினமானது. அவருடைய மூளை பிரபஞ்சத்து பால்வெளிக் கூட்டங்களை அப்படியே படம் பிடித்து வைத்திருக்கிறது. அதிலே ஒரு புதிய நட்சத்திரம் எரியும்போது அவர் இலகுவாகக் கண்டுபிடித்துவிடுகிறார். உண்மையில் இது ஒரு வரப்பிரசாதமான அபூர்வ திறமை. வானிலை ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் ( 1980க்கு முன்பு) அவதானித்த சுப்பர்நோவாக்களின் தொகை 60. ஆனால் இவான்ஸ் கடந்த 23 வருடங்களில் 36 சுப்பர்நோவாக்களை தன்னந்தனியாக கண்டுபிடித்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் வானத்தை நிமிர்ந்து பார்க்கும்போது ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு நட்சத்திரத்தின் ஒளி பிரயாணம் செய்துகொண்டிருக்கலாம். 2001 ஓகஸ்ட் இரவு வானத்தின் ஒரு சிறிய மூலையை இவான்ஸ் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் 60 மில்லியன் வருடங்களாக பிரயாணம் செய்த பெரும் நட்சத்திரத்தின் புகை சூழும் ஒளிப்பிழம்பு ஒன்று வந்து சேர்ந்தது. அந்த நேரம் வானத்தின் அதே கோணத்தில் படிந்திருந்த இவான்ஸின் 16 அங்குலம் தொலைநோக்கி அதைக் கைப்பற்றியது.

இப்பொழுது சுப்பர்நோவாவை கம்புயூட்டர்கள் 24 மணிநேரமும் வானத்தின் பல மூலைகளையும் ஒரே சமயத்தில் கண்காணித்து படம்பிடித்து பதிவு செய்கின்றன. இவான்ஸ் போன்றவர்கள் தேவை இல்லை. ஆனாலும் இரவு நேரங்களில் வானத்தின் மூலைகளை நோக்கி அவருடைய தொலைநோக்கி இன்னும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
                    *                         *                         *
ஐஸக் நியூட்டன் என்ற அபூர்வமான மூளை படைத்த பெரும் விஞ்ஞானி தான் கண்டுபிடித்தவற்றை அவசரமாக வெளியிடமாட்டார். காலை நேரங்களில் படுக்கையில் இருந்து இறங்க காலை கீழே வைத்துவிட்டு அப்படியே மணிக்கணக்காக இருப்பார். மூளையிலே கட்டுக்கடங்காத வேகத்துடன் புது சிந்தனைகள் பெரு வெள்ளம்போல அடிக்கும். அதை நிறுத்தமுடியாமல் உறைந்துபோய் வெகுநேரம்  இருப்பார். இவருடைய சிந்தனைகளை வெளி உலகத்துக்கு கொண்டுவந்த பெருமை ஹேலி ( Halley's comet என்னும் வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர்) என்பவரையே சாரும். நியூட்டனும் இவரும் நண்பர்கள். ஹேலியும் இன்னும் சில நண்பர்களும் கிரகங்களின் சஞ்சாரம் பற்றி பந்தயம் கட்டியிருந்தனர். அந்த பந்தயத்தை தீர்ப்பதற்காக நியூட்டனிடம் வந்த போது, கிரகங்கள் ஓடும் பாதை பற்றிய விதியை தான் எப்போதோ நிரூபித்துவிட்டதாக அவர் கூறினார். ஹேலி அந்த நிரூபணக் கணிதமுறைகள்  வேண்டும் என்று கேட்டபோது நியூட்டன் தன் பேப்பர்களில் புரட்டி புரட்டி தேடியும் அது கிடைக்கவில்லை. உலகத்தை மாற்றப் போகும் விதிகளைக் கண்டுபிடித்ததுமல்லாமல் அவற்றை வெளியிட தவறிவிட்டார்; கணித செய்முறைகளையும்  தொலைத்துவிட்டார்.

ஹேலியுடைய தூண்டுதலினால் யூட்டன் தன்னுடைய கணிதங்களை  மீண்டும் செய்து மூன்று முக்கிய விதிகள் கொண்ட புகழ்பெற்ற Principia என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் ஒரு விதி ஆகர்ஷணம் பற்றியது. இரண்டு பொருட்கள் ஒன்றையொன்று ஆகர்சிக்கும். அந்த பொருள்களுக்கிடையில் இருக்கும் தூரத்தை இரண்டு மடங்காக்கினால் ஆகர்சிக்கும் சக்தி நாலு மடங்கு குறையும். தூரம் மூன்று மடங்கு கூடினால் இழுப்பு சக்தி ஒன்பதுமடங்கு குறையும்.

இந்த காலப்பகுதியில்தான் பூமியிலிருந்து சூரியனுடைய தூரம் கணக்கிடப்பட்டது. சூரியனுக்கு குறுக்காக வீனஸ் கிரகம் பயணிப்பதை  அளப்பதற்காக பல விஞ்ஞானக் குழுக்கள் இறங்கினாலும் அவை எல்லாம் தோல்வியில் முடிந்தன. கடைசியில் அவுஸ்திரேலியாவை கண்டுபிடித்த காப்டன் குக் என்பவர்தான் சரியான அளவுகளை தாஹிற்றி மலை உச்சியில் இருந்து செய்துமுடித்தார். இந்த அளவுகளை வைத்து பிரெஞ்சு விஞ்ஞானி ஜோசெப் லாலண்டே பூமியிலிருந்து சூரியனுடைய தூரம் 150 மில்லியன் கி.மீட்டர் தூரம் என்பதை சரியாகக் கணித்து வெளியிட்டார். கல்லூரியில் வேதியியல் படித்தவர்களுக்கு Cavendish என்ற விஞ்ஞானியின் பெயர் ஞாபகம் இருக்கும். இவர்தான் முதன்முதலில் ஹைட்ரஜினும், ஒக்ஸிஜினும் சேர்ந்தால் தண்ணீர் கிடைக்கும் என்பதை பரிசோதனைமூலம் காட்டியவர். ஆனால் இவருடைய உண்மையான புகழ் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது.

இவருக்கு 67 வயது நடக்கும்போது, John Mitchell என்பவர் பெருமுயற்சியில் கண்டுபிடித்த ஒரு மெசின் அவர் இறந்தபின் காவெண்டிஷிடம்  வந்துசேர்ந்தது. மிற்செல் அந்த மெசினை பூமியின் எடையை கணிப்பதற்காக உண்டாக்கியிருந்தார். ஆனால் அந்த வேலையை செய்து முடிப்பதற்குள் இறந்துபோனார். கவெண்டிஷ் இந்த யந்திரத்தை கட்டி நிறுத்தினார். இது 350 இறாத்தல் எடைகொண்ட இரண்டு பந்துகளையும், இரு சிறு பந்துகளையும் கொண்டது. நியூட்டன் கண்டுபிடித்த விதிப்படி இந்த பந்துகள் ஒன்றை ஒன்று ஈர்த்து தம் இடத்தில் இருந்து சிறிது விலகும். இந்த அளவுகளை துல்லியமாக அளந்து அதிலிருந்து பூமியின் எடையை கணிக்கவேண்டும். காவெண்டிஷ் 17 நுணுக்கமான அளவுகள் எடுப்பதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்டு அந்த தரவுகளை  வைத்து தன் கணிப்பை செய்து முடித்தார். பூமியின் எடை 13 x 10^ 21 இறாத்தல். காலம் காலமாக விஞ்ஞானிகள் தலைமுடியை பிய்த்த ஒரு விடயத்தை தன் அறையை விட்டு வெளியே வராமல் காவெண்டிஷ் செய்து முடித்தது பெரிய சாதனை. விஞ்ஞானம் வெகுதூரம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் விஞ்ஞானிகள் இந்த கணிப்பை பெருதும் வியக்குகிறார்கள். காரணம் அவருடைய கப்பில் இன்றுவரை பெரிய மாற்றம் இல்லை.
                    *            *                        *
டைனஸோர் என்ற விலங்குகள் ஒருகாலத்தில் உலகை வலம் வந்தன. ஆனால் அப்படி அவை வாழ்ந்ததற்கான எலும்பு தடயம் ஒன்று 1787 ல் கிடைத்தது. ஆனால் அது டைனஸோர் என்ற தொல்விலங்கினுடையது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. முதலில் கிடைத்த எலும்பு முதலில் தொலைந்தும் போனது. இன்னும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.ஆனால் அவையும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

இங்கிலாந்தில் மருத்துவராகப் பட்டம் பெற்ற மான்ரெல் என்பவரின்  மனைவி தொல்லுயிர் பல் ஒன்றைக் கண்டுபிடித்தார். மான்ரெல் அதைப் பாரிஸிக்கு அனுப்பி ஆராய்ந்தபோதும் அப்போதைய விற்பன்னர்களுக்கு அதன் பெருமை தெரியவில்லை. இதற்கு பிறகு வந்த ரிச்சார்ட் என்பவர்தான் டைனஸோர் என்ற விலங்கு குடும்பத்தை கண்டுபிடித்தார். தகுதியிருந்தும் அந்தப் பெருமை மான்ரெல்லுக்கு தவறிப்போய்விட்டது. தன் வாழ்க்கை முழுக்க தோல்வியே கிடைக்கும் என்பது தெரியாமல் மான்ரெல் ஒரு வெறியோடு தன் மருத்துவ தொழிலை மறந்து தொல்லுயிர் எச்சங்களை சேகரித்தார். வறுமை அவரைப் பீடித்தது. மான்ரெல்லுடைய அதிதீவிர ஈடுபாடு ரிச்சார்டுக்கு பிடிக்கவில்லை. மன்ரெல்லுடைய அறிவும், உத்வேகமும் தன் முன்னேற்றத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று பயந்தார். தன் உத்தியோக பலத்தை பாவித்து மன்ரெல்லை உதாசீனம் செய்தார்; அவமதித்தார், தன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். கேட்டுக் கேள்வியில்லாமல் மான்ரெல் கண்டுபிடித்தவைகளை எல்லாம் அயோக்கியத்தனமான வழிகளில்  தன் பெயரில் பதிவு செய்தார். இந்த அநீதிகளை தாங்க முடியாமல் மான்ரெல் தற்கொலை செய்தார். மான்ரெல்லுடைய முதுகெலும்பை மியூசியத்தில் வைத்து மரியாதை செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த மியூசியத்துக்கு டைரக்டர் ரிச்சார்ட். இறந்த பின்னும்கூட ரிச்சார்டின் வலுக்கட்டாயமான கண்காப்பில் இருந்து மான்ரெல்லின் முதுகெலும்பு தப்ப முடியவில்லை.

இரண்டு தொல்பதிவு ஆய்வாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முதல் வன்மமான போர் இது. இதனிலும் மோசமான ஒரு சண்டை அமெரிக்காவிலும் நடந்தது. அந்தக் கதையும் நம்பமுடியாதது. அதில் ஒருவர் பெயர் எட்வர்ட் கோப், மற்றவர் பெயர் கார் மார்ஸ். இருவருமே பணக்காரர்கள். தொல்பதிவு ஆராய்ச்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இருவரும் பெரும் போட்டி போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான தொல்லுயிர் எச்சங்களை ( பெரும்பாலும் டைனஸோர் குடும்ப எச்சங்கள்) ஒரு வெறியுடன் சேகரித்தார்கள். கண்டுபிடித்தவற்றை அடையாளம் காணவோ, பதிவு செய்யவோ நேரம் இருக்கவில்லை. மற்றவரை போட்டியில் முறியடிப்பதுதான் ஒரே குறிக்கோள். ஒருவரை ஒருவர் பேச்சிலும் எழுத்திலும் திட்டிக்கொண்டார்கள். ஒருவரின் தொல்லுயிர் எச்சத்தை மற்றவர் களவாடினார். கல்லால்கூட  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். போட்டி ஆவேசத்தில் ஒரே விலங்கை 22 தரம் திருப்பி திருப்பி கண்டுபிடித்தார்கள். இவர்களில் முதலில் இறந்துபோன கோப் என்பவருக்கு ஓர் ஆசை இருந்தது. தன் எலும்புக்கூட்டை உத்தியோக பூர்வமாக மனித எலும்புக்கூடு என்று அறிவித்து மியூசியத்தில் வைத்து பாதுகாக்கவேண்டும் என்று. அப்படியே உயிலும் எழுதி வைத்தார். 1600 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய அவருடைய அந்த சின்ன ஆசைகூட  நிறைவேறவில்லை. அவருடைய எலும்பில் மேக நோயின் அறிகுறி இருந்ததால் அந்த எலும்பு நிராகரிக்கப்பட்டது.
                              *            *            *
எப்படி என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றில்லை. நைரோபியிலிருந்து நாற்பது மைல் தொலைவில் ஒலர்கஸாலி (Olorgesailie) என்ற தொன்மையான சமவெளிப் பிரதேசம் இருக்கிறது. இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு புதிராக விளங்கும்  இடம். பன்னிரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். கல்லினால் செய்த ஆயுதங்கள் இங்கே விரவிக் கிடக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் செய்த கற்கள் 10 கி. மீட்டர் தொலைவில்தான் அகப்பட்டன. எப்படி அந்தக் கற்களை இங்கே நகர்த்தினார்கள். இந்தச் சமவெளி  ஒரு கல் ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலைபோல 10 லட்சம் வருடங்களாக செயல் பட்டிருக்கிறது. ஆனால் மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு தடயமாக இங்கே ஒரு மனித எலும்புகூட கிடைக்கவில்லை. விஞ்ஞானிகளால் விடுவிக்க முடியாத புதிர்களில் இதுவும் ஒன்று.
                                *                *                    *
இந்தப் புத்தகத்தில் 30வது அத்தியாயம்தான் இறுதியானது. 1680 ஆண்டுகளில் ஐஸக் நியூட்டன் பிரபஞ்சத்தின் ஆழமான ரகஸ்யங்களை விடுவிக்கும் விதிகளைக் கண்டுபிடித்த அதே நேரத்தில் இன்னொரு பரிதாபகரமான விஷயமும் இந்த உலகில் நடந்தது. மொரீசியஸ் தீவில் காலம் காலமாக வசித்துவந்த, பறக்கத் தெரியாத டோடோ பறவைகளை மாலுமிகள் விளையாட்டுக்காக சுட்டுத் தள்ளினார்கள். இது ஒரு கெடுதலும் செய்யத் தெரியாத பறவை. இதன் இறைச்சியைக்கூட உண்ணமுடியாது. மூளை  குறைவான இந்தப் பறவைக்கு பயந்து ஓடி தப்பவும் தெரியாது. ஆகையால் இவை ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டன. இந்த உலகத்தில் ஒரு பறவைகூட மிச்சம் இல்லை; முட்டை இல்லை; பாடம் செய்த உருவம்கூட இல்லை. முற்று முழுதாக பூமியிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. இது ஒரு உதாரணம்தான். இன்னும் எத்தனையோ பறவைகளும், மிருகங்களும் அழிந்துபோயின; பெரும் ஆமைகள், ராட்சத ஸ்லொத்துகள். இப்படி மனிதனால்
அழிக்கப்பட்ட உயிரினம் மட்டுமே 120,000 என்று விஞ்ஞானிகள் கணக்கு சொல்கிறார்கள்.

உலகத்து ஜ“வராசிகள் அனைத்தையும் காவல் காக்க வேண்டுமென்றால் அதற்கு மனிதன் நிச்சயமாக தகுதியானவன் அல்ல. ஆனால் இயற்கை மனிதனைத்தான் தேர்வு செய்திருக்கிறது. மனிதன்தான் இருக்கும் உயிரினங்களில் எல்லாம் உயர்வானவன். இவனே கேவலமானவனும். இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களை தரிக்கும் கிரகம் ஒன்றே ஒன்றுதான். பூமிக் கிரகம். ஒரே ஒரு கிரகம். ஒரே ஒரு பரிசோதனை' என்றார் ஒரு ஞானி. மனிதன் ஒருவனால் மட்டுமே அழிக்கமுடியும். அவனால் மட்டுமே காக்கவும் முடியும். மனிதன் எதனைத் தேர்ந்தெடுப்பான் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
                            *                    *                    *
இப்படி  சரித்திரமும், உண்மைகளும், அபூர்வமான தகவல்களும் புத்தகம் நிறையக் கிடக்கின்றன. புத்தகத்தின் கடைசிப் பக்கத்துக்கு வரும்போது  இன்னொரு முறை படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படும். சுவாரஸ்யம் கூடுகிறது. இப்பொழுது எனக்கு முன்னால் 310 பேர் இந்தப் புத்தகத்தை படிப்பதற்காக காத்துக்கொண்டிருந்த மர்மம் புரிந்தது. மறுபடியும் அந்த நூலக மேலதிகாரியை ( Patricia ) சந்தித்து என் நன்றியை சொன்னேன். 'புத்தகம் எப்படி இருந்தது?' என்றார். 'மிகவும்  அருமை. எல்லோரிடமும் இருக்கவேண்டிய, எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். நான் ஒரு புத்தகத்தை ஏற்கனவே சொந்தமாக வாங்கிவிட்டேன்,' என்றேன். 'எல்லோரும் மெச்சுகிறார்கள். நானும் அதைப் படிக்கவேண்டும். என் முறைக்காக காத்திருக்கிறேன்' என்றார் அந்த அதிபர். 'அப்படியா! என்னுடைய புத்தகத்தை உங்களுக்கு இரவல்தர நான் தயார்' என்றேன். பத்து லட்சம் புத்தகங்களுக்கு அதிபதியாக இருக்கும் ஒருவருக்கு புத்தகம் இரவல் கொடுப்பது எவ்வளவு ஒரு பெருமையான விஷயம். அந்தப் பெண் அதிகாரி புன்சிரிப்பு கொஞ்சமும் குறைக்கப்படாமல் என்னைப் பார்த்து ' பார்ப்போம்' என்றார்.
 
முற்றும்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 21 Sep 2019 12:42
TamilNet
Tamil villagers from Kachchatkodi-Swami-malai village, which is located 18 km southwest of Batticaloa, complain that the SL Police and the Sinhala Special Task Force (STF) commandos discriminate them from worshipping their village deity of Murukan represented at the hill-top in the form of a ‘divine javelin’(Saiva Veal). The occupying Sinhala police and commandos are also blocking them from conducting rituals for Naaka-thampiraan deity at the foothills. The STF is providing security to the Sinhala monks who have established a Theravada Buddhist temple. The hill-top with ancient Buddhist remains from the times of Tamil Nagas have been Sinhalicised and projected as Sinhala heritage in the island, the Tamil residents complain.
Sri Lanka: SL Police, STF refuse Tamil devotees accessing Kachchatkodi hill-top for worship


BBC: உலகச் செய்திகள்
Sat, 21 Sep 2019 11:50


புதினம்
Sat, 21 Sep 2019 11:52
     இதுவரை:  17632839 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10922 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com