அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி அனர்த்தத்திலிருந்து மீண்டெழுதல் தொடர்பாக   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஜயதேவ உயன்கொட  
Thursday, 17 February 2005

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:                                 சா.திருவேணிசங்கமம்.


2004 - 12 - 26ம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் பின் விளைவுகள் இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளன. ஆரம்ப கட்டத்தில் உடனடித்தேவைகள் பற்றிய முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. அதாவது முதலாவது வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்தல், சடலங்களை அடக்கம்செய்தல், உணவு, மருந்து, இருப்பிடம் வழங்கல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாவது வாரத்தில் பல நடுத்தர பணிகள் மேற்கிளம்பின. அவை நலன்புரி நிலயங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உயிர்தப்பியவர்களை மேற்பார்வையிடல், நிவாரணங்களை ஒழுங்குபடுத்தல், தகவல்களைத் திரட்டல், சர்வதேச உதவிகளை பங்கிடல் என்பன. இப்போதுள்ள மூன்றாவது கட்டத்தில் நீண்ட கால நிவாரணங்களும் மீள்கட்டுமானப் பணிகளும் வெளிப்போந்துள்ளன.

அரசியல்: 


பாரிய பணிகள் முன்னுள்ளன. அவைகள் சிக்கலான அரசியல் செயற்பாடுகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. மேலும் அவைகள் ஆழமான, சிக்கலான அரசியலோடு பின்னிப்பிணைந்துள்ளன என்பது அலட்சியமாக நோக்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இவைகளே எதிர்காலத்தில் நிவாரணப் பணிகளின் வீச்சையும் அவைகளின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கப் போகின்றன. முதலாவது இன முரண்பாடு இது உள்நாட்டு யுத்தத்தை சமாதானத்துக்கு இட்டுச் செல்லும் விரிந்த நிகழ்ச்சி நிரலோடு அனர்த்த நிவாரண செயற்பாடுகளை இணைக்குமாறு கோருகிறது. ஏனெனில் சமாதான முயற்சிகளை சிதைக்காமல் அவைகளை மீளிணைத்து முன்னெடுத்தல் ஏற்கனவே ஒரு சவாலாக இருந்தது. இரண்டாவது பிளவுண்டு கிடக்கும் இலங்கையின் யதார்த்தம். அது ( நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளுக்காக ) விரிந்தளவிலான சமூக அரசியல் ஒன்றிணைப்புகளை நாடி நிற்கின்றது. உண்மையில் இதுவோர் அரசியல் ரீதியான ஒத்துழைப்பை அவாவி நிற்கிறது. மூன்றாவது அரசு விட்ட தவறு. அது அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், உள்ளுர் அதிகார அமைப்புகளுடனும் தன்னை பங்காளியாக்கிக் கொண்டு செயல்படத் தவறி விட்டது. இதனால் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் இத் தீவின் சகல பாகங்களிலுமுள்ள பாதிக்கபட்ட மக்களுக்கு பொருத்தமானதும், அரசியல்ரீதியாக ஏற்றுக் கொள்ளத் தக்கதும், சமூக ரீதியாக நியாயமானதுமான நிவாரனப் பணிகளை முன்னெடுக்க இயலாமல் போய்விட்டது.  கண்காணிப்பற்ற நிவாரண நடவடிக்கைகள் வேலையை சிக்கலாக்குவதையும் பிளவுகளைத் தூண்டுவதையும் சமீக கால நடைமுறைகளின் போக்குகள் தெளிவாகக் காட்டத் தொடங்கியுள்ளன. இதில் முக்கியமானது விரிந்த அளவிலான மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாக அரசுக்கும்  LTTE க்குமிடையிலான முரண்பாடாகும். அரசும் LTTE  யும் இணைந்து சில மாவட்டங்களிலும் சில பிரிவுகளிலும் வேலைகள் செய்துள்ள போதிலும் அவைகள் அரசியல் தலைவர்களின் வெற்றுச் சொல்களாலும் பரஸ்பர சந்தேகங்களாலும் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டன.


அனானின் வருகை:


யு.என்.செயலாளர் நாயகத்தின் வருகை அரசாங்கத்துக்கும், LTTE  க்கும், சர்வதேச சமூகத்துக்குமிடையே ஒரு முரண்பட்ட உணர்ச்சசிக்கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. அவரின் வருகை இந்த பாரிய மனித அவலத்துக்கு ஆறுதல் செயற்பாடாக இருந்த போதிலும் அது மீள் இணக்கப்பாட்டை கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் ஒன்றையும் கொண்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டிருந்ததற்கு மாறாக சுனாமியினால் பாதிக்கப்பட்டிருந்த  LTTE  பகுதிகளுக்கு விஜயம் செய்வதை அவர் தவிர்த்தமையினால் பிளவுகளை மேலும் தூண்டிவிடுவதற்கு உடந்தையாகியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு அனானின் விஜயத்தின் நிகழ்ச்சி; நிரலானது ஐ.நா. அதிகாரிகளினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று அறிவித்துள்ளது. ஆயினும் LTTE  தன்னையும் தமிழ் மக்களையும் சர்வதேச செயற்பாடுகளிலிருந்து புறம் தள்ளுவதற்கு எடுக்கப்படும் எத்தனமாக அதை கருதுவதற்கு தகுந்த ஆவணங்களைக் கொண்டுள்ளது. நான் சந்தித்த தமிழ் மக்கள் யாவரும் இது பற்றி தமது மனவருத்தத்தையும் துக்கத்தையும் தெரிவித்தனா. மேலும் நொந்து போயிருக்கும் அவர்களை அந்நிகழ்வு மேலும் வேதனை கொள்ளச் செய்திருக்கிறது. மேலும் இன உறவுசார் அரசியலில் அக்கறை கொண்ட தமிழர்களுக்கு கொபிஅனான் வடகிழக்கு தமிழர் பகுதிகளுக்கு வராமல் போனமையானது, தமிழர் சமூகத்தை மறுதலிப்பதன் குறியீடாகப்படுகிறது. சிறுபான்மையினர் உரிமைகளைப் பற்றி பகட்டு வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கின்ற இலங்கை அரசாங்க பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அரசுரிமையற்ற ஒரு சமூகத்தினரின் இந்த ஆழமான மனத்துயரத்தை உணர்ந்தவர்களாக இல்லை
ஓர் அரசு ஓர் அரசாங்கம் என்ற சுலோகத்தையும் அரச இறைமைக் கோட்பாட்டையும் இறுகப் பற்றிக் கொண்டிருப்பதால் இலங்கை அரசாங்கமும் ஐ.நா.வும் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் இணக்கப்பாட்டையும் கட்டியெழுப்பும் மகத்தான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுள்ளன. டிசம்பர் 26 ல் நிகழ்ந்த பேரழிவு விடயங்களில் இலங்கை அரசாங்கம் வெறுமனே இறுக்கமான வார்த்தைப் பிரயோகங்களில் ஆறுதல்காண முடியாது இவைகளுக்கு மாறாக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களினதும் அரசியல்வாதிகளினதும் சிந்தனைகளில் நெகிழ்வுப்போக்கை தூண்டுபவை எவை?

பாதிக்கப்பட்டவர்கள்:


மனிதாபிமான நிவாரண செயற்பாடுகளின் புறக்கணிப்பு பல துறைகளுக்கும் தாவுகிறது. சுனாமியினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்க அதிகாரிகளின் நிவாரணம் மீள்கட்டுமானம் தொடர்பாக கணிப்பீடுகளில் ஒதுக்கப்படுகின்றார்கள். பாதிக்கப்பட்ட பட்டினங்களுக்கும் கிராமங்களுக்குமான நீண்டகால புணரமைப்பு பணிகளின் திட்டங்களை வரையும் முக்கிய அதிகாரிகளாலேயே அடிப்படைநிலையில் இப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு வேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி குழுவினருக்கு பாதிக்கப்பட்டவர்களை அணுகி ஆராய போதிய கால அவகாசமோ அறிவுதுறைப் பரிச்சயமோ இல்லாததன் காரணத்தினால் ஏற்பட்டிருக்கலாம். அவர்களின் விரைந்த தேவைமதிப்பீடுக்கு பாதிக்கப்பட்டவர்கள் வெறும் புள்ளி விபரங்களே. இவ்வாறான தொழிநுட்ப அப்பியாசங்களில் பாதிக்கப்பட்வர்கள் எண்ணங்கள் பிரியோசனமான கோட்பாட்டு மூலப்பொருட்கள் அல்ல உண்மையில்  யாவற்றையும்விட நிபுணத்துவ ஆலோசகர்கள் என்பவர்கள் மக்கள் எவற்றை விரும்புகின்றனர் என்பதை அறியவே விரும்புவார்கள். அரசாங்கம் உடனடியாக இந்த ‘யாவற்றிலிருந்தும் மீண்டும் கட்டியெழுப்பல்’ என்ற தொழிநுட்பவாதத்தின் வெற்று அணுகுமுறை பற்றி மீள் சிந்தனை செய்தல் வேண்டும். ஏனெனில் இது பாதிக்கப்பட்டவர்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றி நீண்டகால ஓட்டத்தில் அவர்களுக்கு ஒரு சமூக அனர்த்தத்தை விளைவிக்கும். அரசியல் மற்றும் சமூக ரீதியான தாக்கங்களிலிருந்து நிவாரணம் அடைதல் பற்றிய அடிப்படைக் கோட்பாடு ஒன்றை மீறுவதற்காகவும் இவ்வணுகுமுறை உள்ளது. எவ்வாறெனில் இவ் நிவாரணப்பணிகளில் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு கொண்டு அரசியல் மற்றும் இயற்கை அனர்த்தத்திலிருந்து தங்களது சொந்த வாழ்க்கையை கட்டமைத்தலுக்கு இது இடையூறாக அமைகிறது. மத்திய அரசினாலும் சர்வதேச கொடையாளிகளினாலும் தொழில்நுட்பவாத அதிகாரவர்க்க செயற்பாடுகள் சமூகத்தின் மீது திணிக்கப்படுகின்றன. இவை நீண்ட காலம் நீடிக்காதன. மேலும் இவை எவ்வகையிலும் மக்களின் வாழ்வை நீடித்து நிற்கும் பான்மையில் புணரமைக்கமுடியாது.

உள்ளுர் ஆற்றல் வளங்கள்:


இலங்கையின் நிவாரண நடவடிக்கைகள் உள்ளுர் ஆற்றல்களையும் நிபுணர்களையும் ஒதுக்குவது ஒரு குறைபாடாகும். இது இன்று அனர்த்த முகாமைத்துவம் சர்வதேசமயமாக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அனர்த்த உதவிகள் வழங்கல் சர்வதேச மயப்பட்டிருத்தல் இரு அரசியல் விளைவுகளை உருவாக்கியுள்ளது. சமாதான செயற்பாடுகளின் பின்னடைவுக்குப் பின்னர் சர்வதேச அரசுகள் இங்கு மீண்டும் வந்துள்ளன. அவை தங்களுடன் ஒரு தொகை NGO களை உதவித்தொகை கொடுப்பதற்காக கூட்டிவந்துள்ளன. யார் விரும்பியோ விரும்பாமலோ சுனாமிக்குப் பின்னர் இலங்கை பூகோளமயமான கொடுக்குப் பிடியின் சிக்கலான வலைப்பின்னலுக்குள் வகையாக மாட்டப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமூட்டும் விடயம் என்னவெனில் ( வெளிநாட்டிலிருந்து)  நிபுணர்கள் பெயரில் விடலைப்பருவத்துக் கன்றுக்குட்டிப் பயங்கள் வந்து விரைந்த தேவை மதிப்பீட்டில் ஈடுபடுவதுதான். அவர்கள் விமான நிலையத்திலிருந்து உடனே மாவட்டங்களுக்கு பறந்து போய் தங்களுக்கு பரிச்சயமல்லாத மக்களைப் பற்றி விரைந்த மதிப்பீட்டில் ஈடுபடுகின்றனர். இதை நடத்தும் கொடையாளி சமூகங்களுக்கோ சர்வதேச NGO க்களுக்கோ உள்ளுர் நிபுணர்களின் உதவிதேவைப்படுவதில்லை. அவர்கள் நமது பல்கலைக்கழகங்களில் உள்ள சமூக விஞ்ஞானிகளுடன் எவ்வித உசாவுதலும் வைத்துக் கொள்வதில்லை வெறும் திடீர் கேள்வி பதில் ரீதியான சில தொலைபேசி அழைப்புகளைத் தவிர இந்த வழியில் ஜனாதிபதி நியமித்த தேசத்தை புணர்நிர்மாணம் செய்வதற்காக செயலணிக்குழுவில் (மிகக் கூடிய அதிகாரம் கொண்டது ) ஒரு உள்ளுர் சமூகவியலாளன் தன்னும் இடம் பெறவில்லை என்பது ஒன்றும் வினோதமானதில்லை. இன்றைய உலகளாவிய தொழிநுட்பவாத கலாச்சாரத்தின் வெளிப்பாடே இதுவாகும்.
அரசாங்கம் இப்போது மீள்கட்டுமாணப்பணிகளை நகரங்கள், பாதைகள், சந்தைகள்  கடற்கரைமுன்னரங்கங்கள் ஆகியவற்றின் கட்டடவேலைகளை மேற்கொள்ள எத்தனிப்பதாக தோன்றுகிறது. ஒரு பேண்தகு மீள்கட்டுமானத்தில் முதலில் கருதப்படுபவை வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் சமூகத்தையும் புனர்நிர்மாணம் செய்வதாகும். கட்டடங்களை கட்டுதல் ஒரு சமூகத்தைக் கட்டுதல் ஆகாது என்பது கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலான அநுபவங்களுக்கூடாக வளர்ச்சியடைந்த நாடுகள் கற்றுக் கொண்ட கசப்பான பாடமாகும். அபிவிருத்தியின் தோல்வி பற்றிய முழுவரலாறே எங்களுக்கு பின்னே உள்ளது. அதனை மறக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்படாமல் மீளவும் அதன் பிழைகளை எண்ணிப்பார்த்தல் வேண்டும்


உள்ளுர் நிறுவனங்கள்:


நிவாரணப்பணிகளில் அரசாங்கம் விடுக்கின்ற அடுத்த தவறு உள்ளுர் நிறுவனங்களைத் தவிர்த்தலாகும் அரசின் தற்போதைய அணுகுமுறை அவற்றை (உள்ளுர் நிறுவனங்களான பிரதேசசபை நகரசபை என்பனவற்றை-) பாரிய கட்டுமானப்பணிகளில்- திட்டமிடுதல் அமுலாக்கல் போன்றவற்றில்- ஈடுபடுவதை ஊக்குவிப்பதாகத் தோன்றவில்லை. இவ்வாறு உள்ளுர் நிறுவனங்களைப் புறக்கணித்தல் இரு காரணங்களால் ஆகும். முதலாவது உள்ளுர் நிறுவனங்கள் கொழும்பு மையநோக்கு அணுகுமுறைகளை தொடர்ந்த சந்தேகக் கண்ணுடனும், செயலாற்றலில்லாததாகவும் மோசடியானதாகவும் பார்க்கின்றன. இரண்டாவது கொழும்பின் தொழிநுட்பவாதச் சிந்தனை சுனாமிக்கு பின்னரான பாரிய கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் ஆற்றல் உள்ளுர் நிறுவனங்களிடம் இல்லை என்று கருதுவதாகும். ஆனால் இந்த விலகலுக்கு இவைகள் தகுந்த காரணங்கள் இல்லை அவைகள் உண்மையில் ஒரு திட்டவட்டமான செயல்பாடுடன் மீள்கட்டுமானப் பணிகளையும் சமூக நிறுவனங்களையும் கண்காணிக்கும் திறன்வாய்ந்தவை. அரசாங்கமானது, உள்ளுர் சமூகங்களை, ஆற்றல்களை, நிறுவனங்களை ஒதுக்கிய மீள்கட்டுமானம் சமூகத்தின் ஆதரவையும் ஏற்பையும் ஒரு போதும் பெற்றதில்லை என்பதை உணரத் தவறக்கூடாது.
சுருங்கக் கூறுவதாயின் இலங்கைக்கு முன்னுள்ள பணி அரசியல் சார்ந்ததாகும். இங்கு அரசியல் சார்ந்ததாகும் என்பதில், அரசியல் என்ற வார்த்தை அதன் முழு அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது. அது அபிவிருத்தி செயல்முறைகளில் கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதையும் அவைகளிலிருந்து பெற்ற படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்வதையும் வேண்டிநிற்கின்றது மேலும் அது ஒரு புதிய அரசியல் உடன்பாட்டினைக் கொண்டு, மக்களை இணைத்து செயற்படுத்தும் சமூகத்துக்கு ஏற்புடைய உறுதியான கொள்கை மிகவும் அவசியமானது என்பதையும் தெளிவாக்குகிறது. சுனாமியிலிருந்து மீண்டெழுதலும் உள்நாட்டு யுத்தத்திலிருந்து சமாதானத்துக்கு மீளுதலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அது ஒரு புதிய நெகிழ்ச்சியுடைய  சட்டகத்தை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையே கோரி நிற்கிறது.


                                

 


     இதுவரை:  25811714 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6511 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com