அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 21 September 2019

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 13 arrow சுனாமி அரசியல்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி அரசியல்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நிலாந்தன்  
Monday, 21 February 2005

1
‘சுனாமி 2004’ கொண்டு வந்திருக்கும் சவால்கள் மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய புதிய திருப்பங்கள் போன்றவற்றைக் கருதிக் கூறுமிடத்து சுனாமி 2004 என்பது ஒரு காலப் பிரிகோடு எனலாம். தமிழர்களின் ஆதி வரலாறும் இவ்வாறு கடற்கோள்களின் அடிப்படையில் பிரித்துக் கூறப்படுவதுண்டு. தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன், பின் என்று பிரிப்பது போல ரிவிரசவுக்கு முன், ரிவிரசவுக்குப பின், ஜெயசிக்குறுவுக்கு முன், ஜெயசிக்குறுவுக்குப்பின் என்று பிரிப்பது போல இனி சுனாமி 2004 இற்கு முன், பின் என்றும் பிரிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக நவீன தமிழ் அறிவியல் மற்றும் அரசியல் போன்றவற்றில் சுனாமி கொண்டு வந்திருக்கும் சவால்கள் மற்றும் திருப்பங்கள் நிர்ணயகரமானவை போலத் தோன்றுகின்றன.

2

முதலாவதாக தமிழ் அறிவியலில் சுனாமி என்னென்ன புதிய சவால்களை கொடு வந்திருக்கிறது என்று பார்ப்போம். தமிழீழ விடுதலைப் போராட்டமே நவீன தமிழ் அறிவியல் மீது முதலாவது பெரிய சவால்களைக் கொண்டுவந்தது. அது பாடப்புத்தகங்களுக்குள் அடங்க மறுத்ததோடு முற்றிலும் புதிய ஓர் அனுபவமாகவும் காணப்படுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக வீடுதலைப் போராட்டம் தமிழ் அறிவியலை அதிகமதிகம் செயல்பூர்வமானதாக் சமூகப்பிரக்ஞை உடையதாக் புரட்சிகரமானதாக மாறவேண்டிய தேவைகளைக் கொண்டுவந்தது. செயலுக்குப் போகும் ஒரு அறிவியலையே தமிழீழ விடுதலைப்போராட்டம் கோரி நிற்கிறது.சுனாமி 2004 உம் இப்படித்தான் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அறிவியலின் மீது புதிய நிர்பந்தங்களை கொண்டுவந்திருக்கின்றது. இது உயிர்களும் சொத்துக்களும் சம்பந்தப்படும் ஒரு விவகாரம். எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது தற்காப்புப் பொறிமுறை ஒன்றுக்குப் போகும் ஓர்  அறிவியலே. சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திர விவகாரம் சூடுபிடித்தபோது அதுதொடர்பான வாதப்பிரதிவாதங்களில் துறைசார் தகைமையுடைய அநேகமானவர்கள் விலகி நின்றதோடு தற்காப்பு உணர்வுடன் கூடிய ஒரு வித மௌனத்தைக் கடைப்பிடித்ததை இங்கே சுட்டிக்காட்டலாம்.

இது விசயத்தில் தமிழ் பகுதிகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தமக்குரிய கூட்டு அறிவியல் பங்களிப்பை போதியளவு செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபோலவே சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, உடனடுத்து வந்த நாட்களில் துறைசார் தகைமையுடையோர் தமக்குரிய அறிவியல் கடமையை செய்த வேகமும் அளவும் போதாது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இதில் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை திரு. அன்ரனி நோபேர்ட் போன்ற சிலரே விதிவிலக்கு. இவருடைய கட்டுரைகளும் அன்ரனி நோபேர்ட்டின் பேட்டியும் முறையே உதயன், தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. ஆனால் அதேசமயம் கொழும்பில் அங்குள்ள துறைசார் அறிஞர்கள் நிபுணர்கள் போறோர் இது தொடர்பாக உடனடியாகவும் பெருமளவிலும் எமுதிவருவதைக் காணலாம்.சுனாமி பேரழிவு என்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள துறைசார் நிபுணர்கள் அறிஞர்களுக்கு முற்றிலும் புதிய ஒரு அனுபவமாக இருப்பதாக ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஜெயராஜ் கூறுகின்றார். சுனாமி பற்றிய எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும்கூட இந்திய அமைச்சர் கபில்சிங் அதைக்குறித்து அசட்டையாகவும் மந்த மாகவும் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
உண்மை. இது இந்தப்பிராந்தியத்தின் நவீன வரலாற்றில் முற்றிலும் புதிய ஓர் அனுபவமே கடற்கோள்களை ஐதீகங்கள் என்ற முற்கற்பிதத்தோடு அலட்சியம் செய்ததிற்குக்கொடுத்த விலை இது. ஆனால் இது விசயத்தில் அனுபவஸ்தர்களாய் உள்ள நாடுகள் இது பற்றிய அனுபவமற்ற நாடுகளை ஏன் எச்சரிக்கவில்லை? இதை அறிவியல் மந்தத் தனம் என்பதா? அல்லது இந்தப்பிராந்தியத்தில் பூகம்பம் நிகழாது அல்லது பூகம்பத்தின் விழைவுகள் இந்தப்பிராந்தியத்தைத் தாக்காது என்ற முற்கற்பிதம் அறிவைக் குருடாக்கியதா? அல்லது புலிகளின் குரல் வானொலியில் செய்தி வீச்சு நிகழச்சியில் திரு. தவபாலன் விமர்சித்தது போல இதை மேற்கின் பொறுப்பற்ற தனம் என்பதா? எதுவோ இனி ஒரு சுனாமி தமிழர்களைத் தாக்காதிருக்குமாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இப்பொழுது தமிழர்களுக்கும் வந்துவிட்டது. இந்தச்சவாலை தமிழ் அறிவியல் எதிர்கொள்ள வேண்டிய வேளை இது. இப்பொழுது தமிழர்களுக்குத் தேவை செயலுக்குபோகும் ஓர் அறிவே. இது முதலாவது.
3

இரண்டாவதாக சுனாமி 2004, தமிழ் அரசியல் கொண்டு வரக்கூடிய திருப்பங்கள் பற்றியது. நாடு சமாதானத்திலிருந்து மெல்ல விலகிச் சென்றுகொண்டிருந்த ஒருதருணத்தில் சுனாமிதாக்கியது. இதனால் ஏற்கனவே நடைமுறையிலிருந்து வந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் குழப்பப்பட்டுவிட்டன. இப்பொழுது மனிதாபிமானப் பிரச்சனைகளே நிகழ்ச்சி நிரலின் முதல் வரிசைக்கு வந்துவிட்டன. மனிதாபிமானப்பிரச்சனை என்று வரும்போது அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. அதிலும் ஒரு அரசியல் இருக்கும். உதாரணமாக  சுனாமிப் பேரழிவை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு வெளிநாடுகள் இலங்கைத்தீவினுள் துருப்புக்களை இறக்குவது என்பது சுனாமி அரசியலின் பாற்பட்டதே.எனவே, இப்பொழுது உள்ள பிரச்சனை மனிதாபிமானப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கான அரசியல் எப்படி இருக்கப்போகிறது என்பதே. முக்கியமாக, உதவிகளை நிர்வகிப்பதிலும் விநியோகிப்பதிலும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு களயதார்த்தம் உண்டு. இதுவிசயத்தில் உதவி வழங்கும் நாடுகள் எப்படி நடந்துகொள்ளப்போகின்றன என்பது சமாதானத்தின் அடுத்த கட்டத்திற்குரிய எதிர்பாராத ஒரு தொடக்கமாக அமையக்கூடும். எப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விசயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகளின் மேலாண்மையை ஒப்புக் கொள்வது என்பது சில சமயம் பின்னாளில் ஒரு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் புனர்வாழ்வு புனர் நிர்மானப் பணிகளில்  புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் ஒரு வளர்ச்சிக்குக் கொண்டு போய்விடக்கூடும்.இது தவிர்க்க முடியாததும் கூட. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்தும் நிவாரணம் வழங்கிக் கொண்டிருப்பதை விடவும் அவர்களை சொந்தக்கால்களில் நிமிர்ந்தெழவைக்கும் விதத்தில் இனி அடுத்த கட்ட உதவிகள் அமைய வேண்டி இருக்கின்றது. அதாவது தூர்ந்து போயுள்ள மீன்பிடித்துறையின் அடிக்கட்டுமானங்கள் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதைச் செய்யும்போது சுனாமி தற்காப்பு ஏற்பாடுகள் யாவும் கவனத்தில் கொள்ளப்படவும் வேண்டும். இப்படிச் செய்யும் போது பல கிராமங்களையும் பட்டினங்களையும் சில நூறு மீற்றர்களுக்காவது நகர்த்த வேண்டியிருக்கும். அதாவது மீளக்கட்டுமானம் எனப்படுவது சுனாமி தற்காப்புக் கட்டுமானமாகவும் அமையவேண்டியிருக்கிறது. எனவே முற்றாகத் தூர்ந்து போயுள்ள ஒரு வாழ்வை ஒரு துறைக்குரிய அடிக்கட்டுமானத்தை எல்லாவற்றையும்விட ஒரு சனத்திரளின் உளவியலை மீளக்கட்டியெழுப்புவதென்றால் அதற்குப் பெருமளவு நிதியும் ஏனைய துறைசார் ஆளணி வளங்களும் தேவை. இப்படி ஒரு இயற்கை அனர்த்தத்தை கையாள்வதற்குரிய துறைசார் நிபுணத்துவம் எதுவும் இதற்கு முன்பு தமிழர்களுக்குப் பெருமெடுப்பில் தேவையாக இருக்கவில்லை. இத்தகைய துறைசார் நிபுணத்துவத்தை, இனித்தான் துரிதகதியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது.

இந்நிலையில் தேவைகளையும் உதவிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மையக் கட்டமைப்பு அவசியம். அது புலிகளிடம் உள் நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏற்கனவே உண்டு. அது யுத்த தேவைகளையொட்டி உருவாக்கப்பட்ட படைத் துறைச் சிவில் கட்டமைப்பாகவும் காணப்படுகிறது; என்பதனாலேயே அது அதிகம் வினைத்திறன் உடையதாகவும் மக்கள் மயப்பட்டதாகவும் காணப்படுகின்றது. சுனாமி 2004 இன் மீட்புப்பணிகளை ஒப்பிடுமிடத்து இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளைவிடவும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடப்பதற்கு இதுவே காரணம்.எனவே இந்த நிர்வாக கட்டமைப்புக்கு ஊடாக புனரமைப்பு புனர்நிர்மாணப்பணிகளைச் செய்வதுதான் நடைமுறைச் சாத்தியமாய் இருக்கும். மேலும், இதில் ஏற்கனவே இருந்துவரும் ஒரு நடைமுறையையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முழு அளவிலும் படையினரின் பிடியிலுள்ள தமிழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிலும் அரச நிர்வாகம் எனப்படுவது புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போகும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த நடைமுறையை ஏதோ ஒரு விதத்தில் உத்தியோக பூர்வமானதாக மாற்ற வேண்டிய நிர்பந்தங்களை சுனாமி 2004 இன் பின்னான நிலைமைகள் கொண்டுவந்திருக்கின்றன.தேவைகள் பெரியவை மட்டுமல்ல மிக அவசரமானவையும் கூட. எனவே இதிலுள்ள மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கும், அரசியல் பிரச்சனைகளுக்கும் இடையில் ஏதோ ஒரு சமநிலையைக் காணவேண்டியிருக்கிறது. அதையும் உடனடியாகச் செய்யவேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சமநிலையை காப்பது என்பது புலிகளின் மேலாண்மையை ஏதோ ஒரு விகிதமளவுக்காவது ஏற்றுக்கொண்டால்தான் உண்டு. எனவே ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சில அம்சங்களையாவது உடனடியாகவும் நடைமுறைச் சாத்தியமான விதங்களிலும் அணுகவேண்டிய ஒரு அவசரம் கலந்த நிர்ப்பந்தத்தை சுனாமி கொண்டு வந்திருக்கின்றது.முன்பு டோக்கியோவில் வாக்களிக்கப்பட்ட நிதி சமாதானத்துடன் பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருந்தது. எனவே  சமாதான முயற்சிகளில் ஒரு முன்னேற்றம் உண்டாகி ஏதாவது இடைக்கால நிர்வாகக்கட்டமைப்பு என்ற, ஒன்று உருவாகும் போதே அந்த நிதி விடுவிக்கப்படலாம் எனும் ஒரு நிலை. ஆனால், இப்பொழுது அப்படியல்ல. சுனாமியின் பெயரால் வரும் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் வேறு எதனோடும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவை மக்களின் உடனடித் தேவைகளோடு ஒரு பேரழிவின் காயங்களை சுகப்படுத்துவதோடு தொடர்புடையவைகளாய் இருக்கின்றன. எனவே இது விசயத்தில் விரைந்து செயற்படவேண்டிய ஒரு கட்டாயம் உதவி வழங்கும் நாடுகளுக்கு உண்டு.மேலும் இடைக்கால நிர்வாகக்கட்டமைப்பு ஒன்றுக்கு பெரும்பாலான மேற்கு நாடுகள் கொள்கையளவில் ஆதரவாகக் காணப்படுகின்றன. இப்பொழுது இந்தக் கொள்கையை நடைமுறையில் நிரூபித்துக் காட்டவேண்டிய ஒரு தருணம் வந்திருக்கிறது.அண்மையில் உதவிகள் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் அமெரிக்காவின் வழமையான உத்தி;யோக பூர்வ நிலைப்பாட்டிலிருந்து சிறிது விலகியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கும் உதவி போகுமா? ஏன்ற தொனிப்பட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர் இது அரசியல் பிரச்சனை அல்ல மனிதாபிமானப் பிரச்சனை என்ற, தொனிப்பட கூறியிருந்தார். (ஆனால் மட்டக்களப்பில் வைத்து இந்தியத் தூதுவர் இதற்கு மாறான கருத்துக்களை தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.)எனவே சுனாமி கொண்டுவந்திருக்கும் மனிதாபிமானத் தேவைகளினடியாகப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை ஏதோ ஒரு விகிதத்திற்காவது அங்கீகரிக்கவேண்டிய ஒரு அவசரத் தேவை உதவி வழங்கும் நாடுகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.உதவி வழங்கும் நாடுகள் இதை எப்படிக் கையாளப்போகின்றன என்பதில்தான் பாதிக்கப்பட்ட மக்களின் விரைந்த மீட்சி மட்டுமல்ல சமாதான முயற்சிகளின் அடுத்த கட்டமும் தங்கியிருக்கிறது. 

                   
 

    


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 21 Sep 2019 12:42
TamilNet
Tamil villagers from Kachchatkodi-Swami-malai village, which is located 18 km southwest of Batticaloa, complain that the SL Police and the Sinhala Special Task Force (STF) commandos discriminate them from worshipping their village deity of Murukan represented at the hill-top in the form of a ‘divine javelin’(Saiva Veal). The occupying Sinhala police and commandos are also blocking them from conducting rituals for Naaka-thampiraan deity at the foothills. The STF is providing security to the Sinhala monks who have established a Theravada Buddhist temple. The hill-top with ancient Buddhist remains from the times of Tamil Nagas have been Sinhalicised and projected as Sinhala heritage in the island, the Tamil residents complain.
Sri Lanka: SL Police, STF refuse Tamil devotees accessing Kachchatkodi hill-top for worship


BBC: உலகச் செய்திகள்
Sat, 21 Sep 2019 12:51


புதினம்
Sat, 21 Sep 2019 12:52
     இதுவரை:  17632905 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10846 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com