அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 6 arrow ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 31 May 2004
பக்கம் 1 of 5

-கம்பவாரிதி அருளும் உபதேசம்-
ஈழத்தின் இலக்கிய சஞ்சிகைகளில் ஒன்றான மல்லிகையில்தான் இந்தக் கம்பவாரிதி ஜெயராஜ் என்பவரின் வாராதே! வுரவல்லாய்.. என்ற புலம்பெயர்ந்தோருக்கான அறிவுரைக் கட்டுரை முதலில் வெளிவந்திருக்கின்றது. (மல்லிகை ஜீவா கம்பவாரிதியுடன் இணையும் இந்தப்புள்ளி ஆச்சரியம் தருகின்றது. தற்போதைய சந்திரிகா-வீரவன்ச கூட்டுப்போல்) பின்னர் 2004ஐன.04-10 என திகதியிடப்பட்ட சுடர் ஒளி என்னும் வார இதழ் அதனை மறுபிரசுரம் செய்துள்ளது. மறு பிரசுரத்தின் நோக்கம் எதுவானாலும் அனுமானின் வால்போல் இரண்டு பக்கம் வரையில் நீண்டு செல்லும் இக்கட்டுரை தாயகத்திற்கு வெளியே 1980களின் பின் வாழத்தலைப்பட்ட ஈழத்தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் கோலங்களை இகழ்ந்து பேச முற்பட்டுள்ளது என்பது மட்டும் அதில் துலக்கமாகத் தெரிகின்றது. (சத்தியமாய் சொல்கிறேன் உங்களை இழிவுபடுத்த நான் இக்கட்டுரையைத் எழுதவில்லை என்ற  வாக்குமூலத்தையும் மறக்காமல் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளமை அவரது உள்நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றது)
தன்னை ஆத்மீகவாதி என்றும், இலண்டன் கனடாவுக்கு சென்றுவந்தவரென்றும், (இந்த நாடுகளுக்குச் சென்றுமீள உதவியவர்களுக்கு தேசம்கடந்தும் நேசங்கடவா நெஞ்சங்கள் என்ற தொப்பியும் அவரால் வழங்கப்பட்டுள்ளது) ஆன்றவிந்தடங்கிய கொள்கைப் பெரியோன் என்றும் தன்னிலை விளக்கம் கூறி, புலம்பெயர்ந்து வாழும் அற்பர்களுக்கான அறிவுரைகளை மன்னிக்க வேண்டும் அருள்வாக்குகளை கட்டுரை முழுவதும் அருளியுள்ளார் கம்பவாரிதி ஜெயராஜ். கம்பவாரிதி என்பது கம்பராமாயணம் என்னும் இலக்கியத் தடாகத்தில் மூழ்கித் திளைத்தவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். மேலும் அதனைச் சுருக்கமாக, கம்பவாரிசு என்றும் எடுத்துக் கொள்ளலாம். (இதனால் அவரது மனம் மகிழ்ந்தால் அடியேன் பாக்கியசாலிதான். சாது ஒருவரைத் திருப்திப்படுத்திய, சாந்தப்படுத்திய பேறு எனக்குக் கிட்டட்டும்) இந்தக் கம்பவாரிசு என்ற முன்னொட்டுத்தான் அவருக்குப் பொருத்தம் என்பது என் தாழ்மையான கருத்து. ஏன் என்பதைப் பின்னர் கூறுவேன். (உண்மையில் சங்க இலக்கியம் தொட்டு நிற்கும் தமிழிலக்கியப் பரப்பை பெருங்கடலெனெக் கொண்டால்  இராமாயணம் ஒரு குளம் குட்டை அளவே இருக்கக் கூடும். அதற்காக, கம்பராமாயணத்தை மட்டுமே உருப்போடும் கம்பவாரிதியை  ஓரு குட்டையில் ஊறிய மட்டை எனக் கூறுவது அபச்சாரமாகும்) 
வுடமொழியில் வான்மீகியால் எழுதப்பட்டதான இராமகாதையைத் தழுவி தமிழில் கம்பனால் எழுதப்பட்டதுதான் கம்பராமாயாணம் என்பதை நாம் அறிவோம். ஏறத்தாழ பத்தாம்  நூற்றாண்டின் பின்னால் தமிழில் எழுதப்பட்டதான இக்காப்பியம் இலங்கை மன்னனான வெற்றியை உடைய இராவணனை வெற்றி கொண்ட திருமாலாகிய இராமனது வீரத்தை விளக்கிச் சொல்கின்றது என்பதைப் படித்தவர்கள் அறிவர்.  ஆனால் இந்த இராமாயணம் தமிழ் மக்களை அரக்கரென இழிவுபடுத்துகிறது அவமானப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் விளக்கமும்  அறிஞர்களால், சமூக சிந்தனையாளர்களால் முன்வைக்கபடுவதையும் நாம் மறந்துவிடுதல் கூடாது. அதனால் இதற்கு மறுப்பாக, புலவர் குழந்தை அவர்களால் இராவணகாவியம் எழுதப்பட்டதும் சமூக விரோத இலக்கியமாக அடையாளம் காணப்பட்ட இராமாயணம் தீயிட்டு கொளுத்தப்படவேண்டுமமென்ற முழக்கங்கள் முன்வைக்கப்ட்டதும் ஒரு அரை நூற்றாண்டுக்கு உட்பட்ட நிகழ்வுகளாகும். இராமாயணத்தின் உள்ளடக்கம் தமிழர் விரோதம் அல்லது சமூக விரோதம் கொண்டதாக இருக்கும் அதேவேளையில் இராமாயணத்தைத் தழுவி, தமிழில் கம்பனால் எழுதப்பட்டதான கம்பராமாயணம் காமரசம் ததும்பியது பாலியல் கிளர்ச்சி ஊட்டுவது என்ற குற்றச்சாட்டும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதிலும் தனது காவிய நாயகியான சீதையின் உறுப்புகளான அல்குல்(பெண்குறி), கொங்கை, தொடை பற்றியெல்லாம் காமரசம் சொட்டச் சொட்ட கம்பன் வர்ணனை செய்துள்ளான். இதனால் கம்பன் ஒரு வம்பன் என்ற வழக்காறும் தமிழில் புழக்கத்தில் உள்ளதை நாம் நினைவில் கொள்ளலாம். காவிய நாயகியான சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்த வண்ணம் துயருற்று அழுத கண்ணீர் எவ்வகையாக வடிந்து செல்கின்றது என்பதைக் கம்பன் வர்ணிப்பதிலும், காட்டுக்கு அனுப்பப்பட்ட இராமனும் குழுவினரும் குகனின் உதவியுடன் படகில் ஆற்றைக் கடக்கையில் தண்ணீர்த் திவலைகளால் ஆடை நனைந்த பெண்களை வர்ணிப்பதிலும், சீதையின் அல்குலின் அளவை பாம்பின் படத்துடன் ஒப்பிடுகையிலும் (இன்னும் பல கட்டங்களைச் சுட்டிக்காட்டலாம்) கம்பன் ஒரு வம்பன் என்பது நிரூபணமாகும். இப்படிக் கம்பன் ஒரு வம்பன் என்னும்போது கம்பவாரிதி வம்பவாரியாவதும் அல்லது கம்பவாரிசு வம்பவாரிசாவதும் ஆச்சரியமில்லை. அதிலும் கட்டுக்குடும்பியும் காவியும் தரித்த ஜெயராஜ் வாராதே வரவல்லாய் கட்டுரையில் தன்னை வம்பவாரிசு என நிறுவிக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09
TamilNet
HASH(0x55f4a3cc9138)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09


புதினம்
Thu, 28 Mar 2024 21:09
















     இதுவரை:  24713994 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4252 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com