அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரான்ஸ் 'தமிழ் சஞ்சிகைகள்' ஒரு பதிவு - I   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.கலைச்செல்வன்  
Wednesday, 06 April 2005

(கலைச்செல்வனால் எழுதப்பட்ட இக்கட்டுரை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவ்வண்ணச்சிறகில் மீள்பிரசுரமாகின்றது.)

குறிப்பு:: (இக்கட்டுரை பிரான்ஸில் வெளியான தமிழ் சஞ்சிகைகள் பற்றிய வரலாற்று பதிவு என்பதால் வெளியாகி நின்றுபோன சஞ்சிகைகள் பறறிய விபரங்களக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகை பற்றிய விரிவான குறிப்புகள் இதில் இடம்பெறவில்லை.  பல சஞ்சிகைகளின் பெயர்கள் குறிப்பிடாதபோதும் எதிர்கால ஆய்வாளர்களின் வசதிக்காக ஆசிரியர்களாக பணியாற்றியவர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுடள்ளது.)(ஜுலை 1993) க.கலைச்செல்வன்

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலேயே தமிழர்கள் பாரிஸில் இருந்தார்கள். இலங்கைத் தமிழர் 77ற்குப் பிறகு பாரிஸிக்குப் புலம்பெயரத் தொடங்கி, பின் 83களிற்குப் பிறகு படையெடுத்தபோது பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாரிஸில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.
பாண்டிச்சேரி, பிரெஞ்சு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தமையால் அந்த உறவின் பிரகாரம் கல்வி மற்றும் உத்தியோகம் காரணமாக வந்து நிரந்தரமாகக் கால்பதித்து வளர்ந்தவர்கள். அறுபதுகளில் இவர்களுக்கென இப்நிக் கடை திறக்கப்பட்ட போதும் தமிழில் எவ்வித இலக்கிய முயற்சிகளும் தொடங்கப்படவில்லை. இவர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும்போதே பிரெஞ்சு மொழிக்கும் பரிச்சயமானதாய் இருந்தமையினால் அதற்கான அவசியப்பாடுகளும் இருக்கவில்லை என்றே சொல்லலாம்.
காலனி ஆதிக்கத்திற்கு பிற்பட்ட காலத்தில் இலங்கையர்கள் இங்கிலாந்து வந்து குடியேறியிருந்த நிலைமைகள் இதனோடு  ஒத்த தன்மையுடையன.

இதற்கும் முற்பட்ட காலத்தில் இதேபோல் இலங்கையர்கள் மலேசியாவிற்கு படையெடுத்த காலம் ஒன்று உண்டு. அப்போது  அவர்கள் 'மலே' ((malay) பேசிக்கொண்டு சும்மா இருந்து விட்டார்கள். பின்நாளில் இந்தியாவில் இருந்து தோட்ட வேலை செய்வதற்காகத் தமிழர்கள் பெரும் தொகையாக மலேசியாவிற்குள் கொண்டு  செல்லப்பட்டபோதே அங்கு தமிழ்ப் பத்திரிகை தோற்றம் பெறுகின்றது.

1875களில் இந்தியாவில் இருந்து  இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மலையகத்தில் இருந்துதான் இலங்கையில 1915களில் முதல் தமிழ்ப் பத்திரிகை தோற்றம் பெறுகின்றது. இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் மங்காது தன்பெயரை நிலைநாட்டி மறைந்த திரு.கோ.நடேசய்யர் அவர்களால் 'வர்த்தக மித்திரன்' வெளியிடப்படுகின்றது.
இதையும்விடத் தமிழர்கள் தென்ஆபிரிக்கா, பர்மா, பிஜிதீவுகள்,  மொறிஷியஸ் போன்ற இடங்களுக்குப் புலம்பெயர்ந்தார்கள்.  ஆயினும் அங்கெல்லாம் தமிழில் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டத்றகான தடயங்கள் எதுவும் நம் பார்வைக்கு எட்டவில்லை.

ஆரம்பத்தில் மலேசியாவிற்குச் சென்றவர்களும் பிரான்ஸ் இங்கிலாந்துக்கு வந்தவர்களும் அந்தந்த நாடுகளின் சூழலோடும் இயல்போடும் இணைந்து கொண்டார்கள். இவர்கள் தம்மை அந்நியராக உணரவில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்தந்த நாட்டு மொழியுடன் அதிக பரிச்சயத்தை கொண்டிருந்ததுதான். இவர்களது இலக்கிய பங்களிப்புகள் அந்தந்த நாட்டு மொழிகளிற்கூடாகவே விளைந்தது.

இந்நூற்றாண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்து  வந்த இலங்கைத் தமிழர் தம்பிமுத்து துரைராஜா என்ற ஆங்கிலக் கவிஞர் இங்கிலாந்தின் இலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்த முக்கியமானவர் என்பது இக்கணத்தில் நினைவிற்கு வருகின்றது. இதே நிலைமைதான் பிரான்சிலும் இருந்தது.

ஆனால் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் தமிழர்கள் கொண்ட செல்லப்பட்டபோது அவர்கள் தமக்கெனத் தாம் பகிர்ந்து கொள்ள தம்முடைய அவலங்களை உருவாக்கினார்கள். இலங்கையில் தமிழர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள் என்பதும் அவர்களிடையே இலக்கியம் வளர்ந்து கொண்டுதான் இருந்தது என்பதும் வேறுவிடயம்.

மலையகத்தின் ஆரம்ப இலக்கிய முயற்சிகளைப் போலவே அவ்விலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்ட அவலங்களும், அந்நியப்பாடும், ஏமாற்றங்களும் இன்றைய எமது புலம்பெயர் நாடுகளின் இலக்கியத்தன்மையும் ஒரு சில வகைகளில் ஒத்த தன்மைதாக இருந்தாலும் இவை எல்லாவற்றில் இருந்தும் வேறுபட்டதுதான் இலங்கைத் தமிழர் உலகெங்கும் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளும் இலக்கிய முயற்சிகளுமாகும்.


"தெம்மாங்கு பாடித்
தெருவழியே போனாலும்
அன்பான வார்த்தை சொல்லி
அழைப்பாரு யாருமில்லை."


மற்றும்,


"ஊரான ஊரிழந்தேன்
ஓத்தப் பனைத் தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்."

போன்ற மலைநாட்டு மக்களின் பாடல் வரிகள் போல் நூற்றுக்கணக்கான கவிதை இலக்கியத்தைப் படைத்துவரும் நகலிடம் ஒரு வகையில் உணர்வு ரீதியாக ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும் - மொழி இனம் மற்றும் கலாச்சாரம் - மற்றும் தாய்நாட்டு அரசியல் போராட்டம் போன்றவற்றில் வேறுபட்டுத் தனித்துவம் பெறுகின்றது.
இவர்கள் புலம்பெயர் நாடுகளில், நிரந்தரமாகக் கால்பதித்துவரும் அதேநேரத்தில் தங்களை ஒரு அந்நியராக உணர்வதோடு தமது தாய்நாட்டை மிகவும் நேசிப்பவர்களாய் அது தமது தாய்  நாடாகக் கொள்வதோடு அதற்காக இன்னும் ஓயாது போராடுபவர்களாயும் உள்ளனர்.

இப்புகலிடங்களில் உருவாகி வளரும் இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில், புகலிட இலக்கியத்தின் தொடக்கமாக் கொள்ளப்படுகின்றனது. இவ்விலக்கியங்களில் தாய்நாட்டில் வாழவேண்டும் என்ற ஏக்கத்தையும், அதற்கான போராட்டத்தில் பங்குகொள்ளும் தன்மைகளையும், மனிதனின் விடுதலைபற்றிய தேடலும் முயற்சியும் மற்றும் சகிக்க முடியாத கூலியுழைப்புக்கு ஆளாவதால் ஏற்படும் மன உளைச்சல்களும், பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளும் அதற்குரிய போர்க்குரல்களுமாகப் பல்வேறு துறைகளில் தடம் பதித்துச் செல்வதை காணலாம்.

பிரான்சில் புகலிட இலக்கியத்தின் உருவாக்கம் கார்த்திகை 1981ல் வெளியான தமிழ்முரசு என்னும் சஞ்சிகையுடன் உருவாகின்றது.  இலங்கைத் தமிழரிடையே 1981ம் ஆள்டுகளில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப்போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதன்முதல் தமிழ்முரசு 1981ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியது.
தமிழ்முரசைத் தொடர்ந்து எரிமலை, எழில், பகடைக்காய்களின் அவலக்குரல், தாயகம், கண், தமிழ்த்தென்றல், புதுவெள்ளம், குமுறல், தேடல், பள்ளம், இந்து, ஆதங்கம், ஓசை, சமர், வானமதி, சிரித்திரு, மௌனம், என பதினேழு (மாத-காலாண்டு) சமூக அரசியல் இலக்கிய இதழ்கள் பாரிசினில் உருவாகிவிட்டன. இன்னும் பாரிசில் தமிழ்மூலம் நடைபெறும் பாடசாலைகளினால் உன்னையே நீ அறிவாய், நகர்வு, தகவற்சுருள் போன்ற ஆண்டு மலர்களாகவும், தனிச் சஞ்சிகையாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கும் எரிமலை, ஓசை, சமர், வான்மதி, மௌனம் ஆகிய ஐந்தும் மற்றும் பாடசாலைகளின் உன்னையே நீ அறிவாய், தகவற்சுருள் இரண்டுமேயாகும்.


தமிழ்முரசு::

இது ஆரம்பத்தில் பிரான்ஸ் தமிழர் இயக்கத்தினால் வெளியிடப்பட்டுப் பின்னர் தமிழீழ விடுதலைப் பேரவையினாலும் இறுதியில் ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையம் பிரெஞ்சுக் கிளையினாலும் வெளியிடப்பட்டது. ஆரம்பத்திலிருந்து  இறுதிவரையில் திரு.உமாகாந்தன் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கின்றார். ஆரம்பத்தில் 16 பக்கங்களை கொண்ட கையெழுத்தினாலான போட்டோக் கொப்பி தொடக்கம் மாதந்தோறும் ஒழுங்காக வெளிவந்து பின்னர் 40-60 பக்கங்கள் வரையிலான தட்டச்சுப் பிரதியாக வெளிவந்தது. நவம்பர் 81 தொடக்கம் மாதந்தோறும் ஒழுங்காக வெளிவந்து பின் இறுதிக்காலங்களில் இருமாத இதழாக வெளிவந்தது.  எல்லாமாக 72 இதழ்கள் வெளியாயின. ஆரம்ப காலங்களில் "செய் அல்லது செத்துமடி" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டும், இறுதிச் சஞ்சிகையின் அட்டையில், -சவப்பெட்டியின் மீது துப்பாக்கி இயந்திரமனிதன் குந்தியிருக்கும் அட்டைப்படத்துடன் இலங்கை கொலைக்களம் எனக் குறிப்பிட்டு வெளிவந்தது. இச்சஞ்சிகை எந்தவொரு இயக்கம் குறித்தும் செயற்படாமல் நீண்டகாலம் இயங்கி வந்திருப்பினும் இறுதிக்காலகட்டங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையத்திற்காக வெளிவந்தது. ஆயினும் ஆரம்பம் கொண்டு இறுதிவரை ஈழத்தின் இனமுரண்பாட்டையும், விடுதலைப்போராட்டத்தையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டதால் சகல இயக்கங்களைச் சோந்த பலரும் (அது ஈழத்திலும் சரி, புகலிடத்திலும் சரி) இச்சஞ்சிகையின் ஆக்கதாரர்களாக இருந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்து இலக்கியதிற் தரமான வரலாற்று பதிவுகளால் பல இலக்கிய சிருஷ்டிகளையும்-இலக்கிய கர்த்தாக்களையும் உருவாக்கியிருக்கின்றது.
திருவாளர்கள் உமாகாந்தன், செல்வம், கலாமோகன், அருந்ததி, சுகன்,  தேவதாஸ், எனப்பல சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிய பெருமை இச்சஞ்சிகைக்கு உண்டு. இச்சஞ்சிகையில் எழுதத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இன்று பல்வேறு சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய சஞ்சிகைகளில் காணமுடியாதனவாக இருந்த வெளிநாடுகளின் அரசியல் பிரச்சனைகள் குறிப்பாக லத்தின் அமெரிக்க நாடுகள், பாலஸ்தீனம், போன்ற நாடுகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் நிலைமைகளையும் அதன் விடுதலைப் போராட்டங்களையும் பற்றிய தகவல் கட்டுரைக்ளும் விமர்சனக் கட்டுரைகளும் மேலும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியிட்டிருப்பதும் இச்சஞ்சிகையின் சிறப்பம்சமாகும்.
பிரான்சில் வெளிவந்த சகல சஞ்சிகைகளையும் ஒருமித்து பார்க்குமிடத்து சகலதுறைகளிலும் கவனம் செலுத்திப் புகலிட இலக்கியத்திற்கு நேர்த்தியான பங்களிப்பைத தமிழ்முரசு வழங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.


எரிமலை::

இது விடுதலைப்போராட்ட செய்திகளையும், செய்திக்கட்டுரைகளையும் தமிழர் அரசியல் சார்ந்த அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டன. இது ஆரம்பத்தில் இருந்து ஒரு அரசியல் சஞ்சிகையாகவே இருந்து வருகின்றது.

எரிமலை நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு பத்திரிகையாக அல்லது அவ்வியக்கப் பத்திரிகையாகவே வெளியிடப்பட்டது. 12 பக்கங்களைக்கொண்ட கையெழுத்திலான போட்டோக் கொப்பிப் பிரதிகளாக வெளிவந்தன. ஆரம்பத்தில் இலங்கை தமிழர்களைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்டுரைகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டாலும் சில ஆண்டுகளில் போராட் சூழலில் வாழ்வோர் மத்தியில் இருந்து எழும் இலக்கியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அண்மைக்காலங்களில் இருந்து இந்த அந்நிய மண்ணின் அவலங்களையும் இந்த அகதி வாழ்வின் பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் இலக்கிய சிருஷ்டிகளையும் தாங்கிவரும் ஓர் அரசியல் சஞ்சிகையாக இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 
எழில்::

எரிமலை வெளிவரத் தொடங்கிய பிற்பாடு 1983ம் ஆண்டு தைமாதம் எழில் எனும் கலை இலக்கிய இதழாக இருமாதத்திற்கு ஒருமுறையாக மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. திரு.அரியநாயகம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியிடப்பட்ட இச்சஞ்சிகை 52பக்கங்களைக் கொண்டதும், ஓவியர் சிறிபாலாவின் அழகான அட்டைப்படத்துடனும் வெளிவந்தது. இங்கு போட்டோக்கொப்பிப் பிரதியாக்கம் செய்யப்பட்டது. எழில் பிரான்சின் முதல் கலை-இலக்கிய பத்திரிகை என்ற குறிப்புடன் வெளிவந்த போதும் முதலிரு இதழ்களையும் பார்க்கும்போது இலங்கையில் இன ஒடுக்குமுறையை விபரிக்கும் அரசியல் கட்டுரைகளும் இடம்பெற்றன. ஆசிரியர் தலைங்கத்தையும் மற்றும் பிரான்சின் முதல் தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து இயக்கியவருமான திரு.ஞானம் பீர்pஸ் அவர்கிளின் பேட்டியையும் தவிர ஏனைய படைப்புகள் பிரான்சை தளமாக கொண்டிருக்கவில்லை.  ஒருசிலர் பிரான்சில் இருந்து எழுதியபோதும் இலங்கையின் நிகழ்வுகளையே கருவூலமாக கொண்டிருந்தன. மற்றும் பெரும்பாலான படைப்புகள் இலங்கையில் இருந்து பெறப்பட்டவையாகவும் மேலும் சில தென்னிந்திய சிற்றேடுகளில் இருந்து போட்டோபிரதி பண்ணப்பட்டவையாகவும் உள்ளன.
இதில் அதிகமாக காரை சுந்தரம்பி;ளளைää நவாலியூர்க் கவிராயர் போன்றவர்களின் கவிதைகளும் சொக்கன்ää சிவசங்கரிää ஈழத்துச் செல்வி, புதுவை பெனடிக்ற், தேவி பரமலிங்கம் ஆகியோரின் கவிதைகளும் வண்ணைத்தெய்வத்தின் உருவகக்கதையும் இன்னும் சிற்சில சினிமாச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் திரு.அரியநாயகம் அவர்கள் பின்நாளில் ஐரோப்பிய தமிழ் ஒன்றியம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தூரத்து விடிவெள்ளி(கவிதைத்தொகுதி), இன்னும் மண்ணைத்தேடும் மனங்கள், தேசம் தாண்டிய நதிகள், நம்பிக்கை நாற்றுகள் என்னும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும வெளியீடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்முரசும், எரிமலையும் அரசிலையே பிரதான நோக்கமாகக் கொண்ட  தொடங்கப்பட்ட போது எழில் கலை இலக்கியத்தை பிரதானமாகக் கொண்ட வெளிவந்தது.
இச்சஞ்சிகையும் நின்றபின் சுமார் இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் பகடைக்காகய்களின் அவலக்குரல் வெளிவந்தது. இது ஒரு சஞ்சிகைக்கான தன்மையை கொண்டிருக்கவில்லை.

 
பகடைக்காய்களின் அவலக்குரல்::

01-01-86 முதல் இதழ் வெளியிடப்பட்டது. 12பக்கங்களைக் கொண்ட கையெழுத்திலான போட்டோக்கொப்பி பிரதியாக இரு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. இதன் இரண்டாவது இதழ் தற்போது கிடைக்ககூடியதாக இல்லை.

இதன் ஆசிரியராக திரு வி.அசோகன் இருந்தார்.  (சஞ்சிகையில் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தொடர்பு முகவரியாக அவரது பெயர் மட்டும் குறிப்பிடப்படுகின்றது). இச்சஞ்சிகை எந்தக்கட்சியையோ இயக்கத்தையோ தனிநபரையோ சார்ந்ததல்ல - எதிர்ப்பதும் அல்ல என ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்படுகின்றது.  முதல் இதழில் ஆசிரியத்தலையங்கம்ää எண்ணம் தவிர தமழனுக்கு விமோசனம் எப்போது? என்னும் கட்டுரை மட்டும் இடம்பெற்றுள்ளது.  அக்கட்டுரையில் தமிழ்கட்சிகள் பலவாகி எல்லாம் மக்களை ஏமாற்றிப் பகடைக்காய்களாய் பாவித்ததை இனங்காட்டி இன்று இயக்கங்கள் பலகூறுகளாக பிரிந்து போவதையும் அதற்குள் பகைமைத்தன்மை வளர்ந்து வேரூன்றுவதையும் தெளிவாக விளக்கி எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்வதை வேண்டி வெளிநாடுகளில் செயற்படவேண்டும் என வலியுறுத்தி நிற்கிறது.


கண்::

இது இலங்கை மகளிர் சங்கம் - பிரான்ஸ் வெளியீடு. 1986ம் ஆண்டு யூலைமாதம் முதல் இதழ் வெளியாகியுள்ளது. இதன் சிவப்புநிற அட்டையில் கண்ணீரும் கம்பலையுமான முகத்தைத் தன்னிரு கைகளிலும் முட்டுக் கொடுக்கும் ஒரு பெண்ணும்ää கண் எநத் தமிழ் ஆஙிகில சிங்கள மொழிகளில் எழுதப்பட்டும் இருக்கின்றது. 1986 யூலை மாதத்தில் இருந்து 1990 தை மாதம் வரைää 36 தொடக்கம் 54 பக்கங்களை கொண்ட 13 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் பெண்களுக்கு பிரயோசனப்படக்கூடிய பலவிதமான கட்டுரைகளுடன்ää பெண்விடுதலை பற்றிய கட்டுரைää கதைää கவிதைகளும் உலகெங்கும் ஒடுக்கப்படும் பெண்கள் பற்றிய செய்திகள் தகவற்கட்டுரைகள்ää பிரான்சின் அகதிகளுக்கான அரச நிருவாக ஒழுங்குகள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இச் சஞ்சிகையில் சந்தியா, ஜெயா, லக்மி, அருநததி, M.R.வசந்தி, யோகம் நவஜோதி, சுசி போன்ற பெண்களும் அகஸ்தியர், அருந்ததி, கலைச்செல்வன், அன்ரன்யூட், கருணாநிதி, வாசு, கவிஞர் செல்வம் போன்ற ஆண்களும் எழுதியுள்ளனர். இன்னும் சாந்தி சச்சிதானந்தம், செ.யோகநாதன், சுபமங்களா, சிவரமணி போன்றவர்களின் படைப்புகள் மறுபிரசுரம் செய்யப்படடுமுள்ளன. கண் ஓன்று மட்டுமே பெண்விடுதலையை முன்னிறுத்தி பிரான்ஸ்சில் வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகையாகும்.

 
தாயகம்::

1986ம் ஆண்டு கார்த்திகை மாதம் முதல் 1987ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரையில் ஏறத்தாழ 70 பக்கங்களைக் கொண்ட 5 இதழ்கள் வெளிவந்துள்ளன.  எல்லா இதழ்களும் அழகான குழந்தைகளை (கலர்படம்) அட்டைப்படமாக கொண்டிருக்கின்றன. இவ்விலக்கியச சஞ்சிகையின் அட்டையைப் பிரித்தவுடன் (சகல இதழ்களிலும்) ஈழத்தின் விடுதலையை நோக்கிய கவிதை அதன் இலக்கியப் பக்கங்களை தொடக்குகின்றது.  இச்சஞ்சிகையின் ஆசிரியராக விமலா பாலச்சந்திரன் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.  அரசியல், தகவல் கட்டுரைகள், உடல்நலம், மருத்துவம், விளையாட்டு, உளவியல் எனப் பலதுறைகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.  நிறைந்த அளவு சிறுகதைகள் காணப்படுகின்றன.  இதன் பெரும்பகுதியை திருமதி விமலா பாலச்சந்திரனும், திரு.பாலச்சந்திரனும் (புனைபெயர்களில்) எழுதியுள்ளார்களென ஆசிரியர் மூலம் அறிய முடிகின்றது.  மற்றும் மதன், ஜெய், புங்கை அமுதன், வே.கா.கேசவன் போன்றவர்களின் கதை கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் ஜரோப்பிய சூழலைத தளமாகக் கொண்டிருக்கின்றன. பிரான்சில் வெளிவந்த சகல சஞ்சிகைகளின் ஆசிரியர்களிலும் விமலா பாலச்சநதிரன் மட்டுமே (இலங்கை மகளிர் சங்கம்) நீங்கலாக பெண்பிரதம ஆசிரியராக இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் 'தமிழ் சஞ்சிகைகள்' ஒரு பதிவு - II


     இதுவரை:  24784187 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5085 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com