அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 15 arrow வாசகர் கடிதம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாசகர் கடிதம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….முத்துலிங்கம்  
Wednesday, 06 April 2005

இப்படி நடையாக நடப்பது வழக்கமாகிவிட்டது. நான்தான் முதல் ஆளாக நிற்பேன். கடை சரியாக ஒன்பது மணிக்கு திறக்கும். நான் 8.55க்கு வீட்டைவிட்டு புறப்பட்டு நிதானமாக நடந்தால் ஒன்பது மக்கு அங்கே போய்விடுவேன். கடைக்காரர் என்னைக் கண்டதும் நாளிதழ், வார இதழ், மாத இதழ்கள் என்று  ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவார். நான் ஏற்கனவே மனதில் நினைத்து வந்ததை வாங்குவேன். ஆனால் இந்த இதழ்கள் எல்லாம் ஒரே நாளில் வருவதில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் நடையாக நடக்கவேண்டி இருந்தது. 

நான் முதலில் படிப்பது வாசகர் கடிதம் பகுதியைத்தான். அதில் என் கடிதம் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். நின்று கொண்டே மற்றக் கடிதங்களையும் படித்துவிடுவேன். பத்திரிகையில் நிறைந்திருக்கும் மீதி எழுத்துக்களை ஒருநாளும் படிப்பதில்லை. இதுதான் மனைவிக்கு கோபம். இவ்வளவு காசு கொடுத்து பத்திரிகைகள் வாங்கி வாசகர் கடிதம் மட்டுமே படிப்பது அநியாயமாகப் பட்டது. ஒரு பிளேட் நிறைய சோறு போட்டால் அதில் ஒரு பருக்கை தவறாமல் தின்று முடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவள் அவள். எப்படி இதை அனுமதிப்பாள்.  

வாசகர் கடிதம் படிப்பதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஒரே பத்திரிகையில் வரும் கடிதங்களை தவறாமல் படிக்கவேண்டும். அப்படிச் செய்தால் வேறு ஒன்றும் படிக்கவேண்டிய அவசியமே இல்லை. சுருக்கமாக உங்களுக்கு எல்லா விஷயங்களையும் வாசகர்களே கூறிவிடுவார்கள். நேரம் மிச்சப்படும். 

மஃர்பியின் விதிகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மஃர்பி எனக்காகவே இந்த விதிகளையெல்லாம் உண்டாக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். என் விஷயத்தில் அவை அப்படியே பலிக்கின்றன. அவருடைய முதலாவது விதி 'தவறு நேரும் என்றால் அது நேரும்'. இன்னொரு விதி, 'இரண்டு மூன்றுக்குச் சமமில்லை; மிகப் பெரிய இரண்டுகூட.' இப்படி அவர் புத்தகம் நிறைய எழுதி வைத்திருக்கிறார். கடைசியில் இவர் எப்படி இறந்தார் தெரியுமா? இதுவும் ஒரு வாசகர் கடிதத்தில் படித்ததுதான். à®’ருநாள் மஃர்பி தன் கிராமத்து வீதியில் மிகக் கவனமாக உலாத்தச் சென்றார். எதிர் வரும் வாகனங்களை தவிர்ப்பதற்காக இடது பக்க ரோட்டில் நடந்து போனார். அப்பொழுது பார்த்து இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு புதியவர் தவறான சைட்டில் காரை ஓட்டி வந்து அவரை அடித்து கொன்றுவிட்டாராம். தவறு நேரும் என்றால் அது நேரும். அதை அவர் வாழ்ந்தபோதும் நிரூபித்தார்; இறந்தபோதும் நிரூபித்தார். 

மஃர்பி நிரூபித்ததுபோல அந்த அதிமுக்கியமான நாள் புத்தகக் கடைக்கு நான் போனபோது பிந்திவிட்டது. என்னுடைய கடிதம் ஒன்று வாசகர் பகுதியில் அன்று வருவதாக இருந்தது. ஆனால் கடையோ பூட்டியிருந்தது. கடைக்கு வெளியே ஆரம்பமாகிய கியூவில் மூன்றுபேர் நின்றார்கள். கடைவாசலில் அதன் சொந்தக்காரர் ஒரு போர்டு தொங்கவிட்டிருந்தார். அவர் 30 நிமிடங்களில் திரும்பி வந்துவிடுவாராம். இதிலும் ஒரு தந்திரம் ஒளித்திருந்தது. அந்த முப்பது நிமிடம் எங்கே ஆரம்பிக்கிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. கடைக்காரர் அடுத்த நிமிடத்திலும் வருவார், 29 நிமிடம் கழித்தும் வருவார். ஆகவே நான் திரும்பிவிட்டேன். அடுத்தநாள் வேறு நேரம்
பார்த்து போனால் அப்போதும் பூட்டு. பிறகு விசாரித்ததில் சஞ்சிகை தீர்ந்துவிட்டது என்றார்கள்.  அடுத்த வாரத்து சஞ்சிகையில் வந்த கடிதங்களைப் புரட்டிப் பார்த்தேன், என்னுடைய கடிதத்துக்கு எதிர்வினை ஏதாவது இருக்குமா என்று. அப்படி இல்லை. இன்றுவரை அந்தப் பத்திரிகையில் என் கடிதம் வந்ததா என்பது தெரியவில்லை. 

தமிழ் பத்திரிகை வாங்க வேண்டுமென்றால் அதற்கு பிரத்தியேகமான ஒரு கடைக்கு செல்லவேண்டும். அங்கே கடைக்காரர் என்னைக் கண்டதும் கீழே குனிந்து லாச்சியை இழுத்து திறந்து அதற்குள் இருக்கும் கறுத்த அட்டை கொப்பியை எடுத்து என் பேருக்கு எதிரில் புள்ளடி போட்டுவிட்டு என்னுடைய இதழைத் தருவார். ஆள் மாறாட்டம் நடந்துவிடக் கூடாது, பாருங்கள். 

சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரேகன் இறந்துபோனார். பத்திரிகைகள் தலைப்புச் செய்திகள் போட்டன. பத்தி பத்தியாக எழுதின. அவை எல்லாவற்றையும் நான் படிக்கவில்லை. ஆனால் ஒரு வாசகர் எழுதிய கடிதம்தான் மேலானதாக, மனதைத் தொடும் விதமாக இருந்தது. ரேகனுக்கு மறதி வியாதி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் செய்த அளப்பரிய செயல்கள் அனைத்தும் கடைசிகாலத்தில் அவருக்கு மறந்துவிட்டது. தான் ஜனாதிபதியாக இருந்தவர் என்பதுகூட மறந்துபோனது. தன் மனைவி பெயர் மறந்துவிட்டது. ஆனால் தான் இளவயதில் உயிர்காக்கும் நீச்சல்காரராக லோவல் பார்க் கடற்கரையில் வேலை செய்தபோது 77 உயிர்களைக் காப்பாற்றியது அவருக்கு ஞாபகத்தில் இருந்தது. இப்படி அந்த வாசகர் எழுதியதைப் படித்தபோது எனக்கு வேறு ஒன்றுமே தேவையாக இருக்கவில்லை. à®µà®¾à®šà®•à®°à¯ கடிதத்தில் அருமையான அறிவுரைகளும் வரும். சுப்பர்மார்க்கட்டில் பத்துக்கு குறைவான சாமான் வாங்குபவர்களுக்கு விரைவு லைன் ஒன்று இருக்கும்.

அதுபோல விமான நிலையங்களிலும் ஒரு சூட்கேஸ் மாத்திரமே இருப்பவர்களுக்கு விரைவு லைன் கொடுக்கவேண்டும் என்று ஒருவர் எழுதினார். உடனேயே இன்னொருத்தர் சுப்பர்மார்க்கட் வேறு, விமானப் பயணம் வேறு. உண்மையில் அதிக சூட்கேசுகளை எடுத்துப் போவோருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று எழுதினார். à®’ரு வாசகர் பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை கூறினார். நாய்களுக்கு வெடிமருந்துகளை மணக்கப் பழக்குவதுபோல கம்புயூட்டர்களுக்கும் பழக்குவது. தான் ஏற்கனவே தன் கம்புயூட்டருக்கு ஒரு குறிப்பிட்ட மணத்தை கண்டுபிடிப்பதற்கு நிரல் எழுதியிருப்பதாகவும், இன்னும் சில வருடங்களில் எல்லாவிதமான மணத்தையும் கம்புயூட்டர் மணந்து இனம்பிரிக்க முடியும் என்றார். அதன்பின் விமான லையங்களில் பயங்கரவாதிகளை கம்புயூட்டர் மணந்து பிடித்துவிடும். 

செட்னா என்ற புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தைப் பற்றி ஒரு வாசகர் உணர்ச்சி பொங்க எழுதினார். இது 40 நாளில் தன்னைத் தானே சுற்றும்; ஒரு சூரிய வட்டம்போட 10,500 வருடங்கள் எடுக்கும்; புளூட்டோவிலும் பார்க்க கொஞ்சம் சிறியது. இவ்வளவு காலமும் அதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் அது விஞ்ஞானிகளின் பிழை. செட்னாவின் பிழை அல்ல. அது குற்றமற்ற கிரகம். அதையும் சூரியக் குடும்பத்தில் சேர்த்து பத்து கிரகம் என்று அறிவிக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர் இன்னும் சில வானவியல் ஆர்வலர்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டு போராட வேண்டிவரும். இப்படி அவர் விடுபட்டுப்போன கிரகத்துக்காக வாதாடுகிறார்.   

தமிழ் பத்திரிகைகளில் வரும் கடிதங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். சில கட்டுரைபோல நீளும். ஒரு நீண்ட கட்டுரையை எழுதிய வாசகர் பாதி தூரத்தில் மனதை திருப்பி ஆசிரியருக்கு கடிதமாக மாற்றியதுபோல இருக்கும். சிலர் நேரிடையாக இன்னொரு வாசகரை அல்லது எழுத்தாளரை மட்டம் தட்டி எழுதுவார்கள். இன்னும் சிலர் குறுக்கெழுத்து போட்டிபோல பேரைச் சொல்லாமல் பலவிதமான ரகஸ்யக் குறிப்புகள் கொடுத்து எழுதுவார்கள். இதை வைத்து மண்டையைப் போட்டு குழப்பி ஆளைக் கண்டுபிடிப்பதற்கிடையில் அடுத்தமாத சஞ்சிகை வந்துவிடும். 

சமீபத்தில் ஒரு வாசகர், எழுத்தாளர் ஒருவரைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டார். அவர்களுக்குள் நடந்த கடிதச் சமரில் வாசகர்தான் வெற்றிபெற்றார். அந்த எழுத்தாளர் கொடுங்கோன்மைக்கு உதாரணமாக நீரோ மன்னனைக் காட்டியிருந்தார். அவன் தாயைக் கொன்று, மனைவியைக் கொன்று பிறகு  சகோதரனையும் கொன்றான். கடைசியில் அரிய தத்துவ மேதையான அவனுடைய குரு சேனகாவையும் கொன்றுவிட்டான். இவன்தான் ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தவன். à®µà®¾à®šà®•à®°à¯à®•à¯à®•à¯ பற்றிவிட்டது. கொடுங்கோல் மன்னன் என்றால் நீரோ மட்டும்தானா? தமிழில் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லலாமே. ஏன் சங்ககாலத்தில்கூட நன்னன் என்ற மன்னன் கொடுங்கோலாட்சி செய்திருக்கிறான். நீராடப்போன பெண் நீர் இழுத்து வந்த பசுங்காயை தெரியாமல் உண்டுவிட்டாள். மன்னன் அதற்கு தண்டனை விதித்தான். அவள் இழப்பீடாக 81 யானைகளும், அவள் எடைக்கு எடை பொன்னும் தருவதாகச் சொல்லியும் மன்னன் திருப்தியடையாமல் அவளைக் கொன்றான். இவ்வளவு சிறப்பான அரசர்கள் இருந்தும் கொடுங்கோல் தன்மையில் தமிழ் நாடு குறைவானது என்று சொல்லியது இவருடைய ரத்தத்தை சூடாக்கிவிட்டது. இவருடைய தேசப் பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த தமிழ் பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த சங்கப் பாடல் பற்றும் என் பக்கத்தில் நிற்பவர் மயிரைக்கூட சிலிர்க்கவைக்கும். 

ஆனால் வாசகர் கடிதம் படிப்பதில் என்னைத் தாண்டிய ஆர்வம் கொண்ட ஒருத்தன் இருக்கிறான். இவன்கூட என்னைப்போல நடையாக நடக்கிறான். இவன் சாதாரணமான ஆள் இல்லை. உலகப் புகழ் பெற்றவன். ஒரு நாள் இவன் பெயரை உலகத்து பத்திரிகைகள் அனைத்தும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அவன் பேர் ரிச்சர்ட் ரீட். சப்பாத்துக் குண்டுதாரி. à®‡à®µà®©à¯ விமானம் பறந்து கொண்டிருக்கும்போது தன் சப்பாத்து குண்டுக்கு தீவைக்க முயன்றான். அப்போது பயகள் அவன் மீது பாய்ந்து அமுக்கிப் பிடித்ததும் அவன் முயற்சி தோல்வியில் முடிந்தது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இப்போது சிறைத்தண்டனை அனுபவிக்கிறான்.  à®…வனும் என்னைப்போல தீவிரமாக வாசகர் கடிதம் படிப்பவன். அவன் டைம் இதழுக்கு வருட சந்தா கட்டியிருந்தான். ஆகவே அவனுக்கு டைம் இதழ் வாராவாரம் கிடைத்தது. ஆனால் ஒரு வித்தியாசம். சிறை விதிகளின் பிரகாரம் ஆசிரியருக்கு கடிதம் பகுதி முற்றிலும் வெட்டப்பட்டிருக்கும். à®…வன் சொல்கிறான் தான் முழு டைம் பத்திரிகைக்கு சந்தா கட்டியதாக; பாதி வெட்டப்பட்ட இதழுக்கு அல்ல. அவனுக்கு சொந்தமான இதழை கூறுபோடுவது அவனுடைய உரிமையில் குறுக்கிடுவதாகும். சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள் வாசகர் கடிதத்தில் சங்கேத வார்த்தைள் மூலம் எதிரிகள் தகவல்கள் பரிமாறிக் கொள்ளுவார்கள் என்று. அதனால் தடை அவசியம். அவனுக்கோ வாசகர் கடிதம் அவசியம். 

கத்தரிக்காத டைம் பத்திரிகை தனக்கு கிடைக்க வேண்டும் என்று அவன் போட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடியானது. ஆனால் தீவிரமான ஒருத்தன் இத்துடன் விட்டுவிடுவான் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் திருப்பி அப்பீல் பண்ணுவான். அதுவும் தோற்றால் அதுக்கும் அப்பீல் பண்ணுவான். கோர்ட்டுக்கும் சிறைக்கும் இடையில் நடந்துகொண்டே இருப்பான் - சப்பாத்து தேயும்வரை அல்லது குண்டு வெடிக்கும்வரை. எது முதல் நடக்கிறதோ அதுவரை.
 

(முற்றும்)
 
 
 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 19 Sep 2024 11:11
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Thu, 19 Sep 2024 11:11


புதினம்
Thu, 19 Sep 2024 11:14
















     இதுவரை:  25694775 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9146 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com