அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கோடை விடுமுறைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இணுவையூர் பவன் கணபதிப்பிள்ளை  
Tuesday, 12 April 2005

நேற்றுப் போலவே இன்றும் வெயில் கொழுத்தியது, ஆனாலும்; எனது தடித்த மேலங்கியை ஞாபகமாக எடுத்துக்கொண்டு வந்திருந்தேன்.  புறப்படும்போது  பத்துவயது மகள் கிண்டல் செய்தாள், "அப்பா இண்டைக்கு ஜக்கற் போட்டுக்கொண்டு உலாவுற ஆக்களை பொலிஸ் பிடிக்கிறாங்களாம்"  நாற்பது தாண்டிய எனது உடம்பு குளிரை அதிகம் வரவேற்பதில்லை என்பது அவளுக்கு எங்கே தெரியப்போகிறது.
மகளுக்கும் மகனுக்கும் கோடைகால விடுமுறையை எங்காவது போய் அனுபவிக்க விருப்பம்.  எனது வாழ்க்கைத் துணைநலமும் "சமைக்கிறதும், வீடுவாசல் துப்பர வாக்குறதும் தவிர வேற என்னத்தை கண்டன்" என அடிக்கடி சலித்துக் கொள்வாள்.  வருடத்துக்கு ஐந்தாறு தடவை திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, பிறந்தநாள் என்பவற்றைச் சாட்டி முன்னர் உலகப்படத்தில் தொட்டுக்காட்ட மட்டும் முடிந்த, நாடுகளுக்கெல்லாம் போய் வந்ததையும், சென்ற வருடம்; பெருஞ்செலவில் இந்தியாவை சுற்றி சில புடவைக் கடைகளை வெறுமையாக்கியதையும், அவள் விடுமுறைப் பயணங்களாக கருதுவதில்லை.  நான் அதிகாலை புறப்பட்டு வேலை முடித்து வீடுவர இரவு 8.00 மணி ஆகிவிடும்.  தொழில்அனுமதி கிடைத்த காலத்தில் இந்த வேலையை பதிவுசெய்து, அருகேயே வீடும் எடுத்துக்கொண்டேன். ஆனால் மனைவிக்கு அனுமதியில்லை என்பதால்  அவள் இருந்த சிறு கிராமத்துக்கே குடிபெயர்ந்தேன்.  இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.
இந்த நீர்த்தேக்கம் நான் வந்து சேர்ந்த ஆரம்ப காலங்களிலேயே என்னை கவர்ந்துவிட்டிருந்தது.  பல குளங்களை ஒன்றிணைத்தது போல இருக்கும் இந்த நீர்நிலையின் நடுவே சிறுசிறு தீவுகள் போலவிருக்கும் புல் முளைத்த மண் திட்டுகள் தனியழகு.  கோடை காலங்களில் இங்குவந்து பொழுது போக்காக படகு செலுத்துவோர், தூண்டிலில் மீன் பிடிப்பபோர், வெள்ளைத் தோலை மண்ணிறமாக்க  வெயிலைக் கண்டால் எண்ணெய்வகை ஏதாவது பூசிக்கொண்டு படுத்திருப்போர் என கணிசமான கூட்டமிருக்கும்.
சிற்றுந்தை நல்ல இடமாக நிறுத்தி தயாராகக் கொண்டுவந்திருந்த மேசை, கதிரைகளை ஒழுங்குபடுத்தி, நிழற்குடையை மேசைமேல் செருகிவிட்டேன்.  மகளுக்கு மிகவும் உற்சாகம் பரவியிருந்தது.  என் மனைவியும் கொண்டு வந்திருந்த சிற்றுண்டிகளை எடுத்து வைத்துவிட்டு, கறுப்புக் கண்ணாடியை அணிந்தபடி அமர்ந்தாள்.
மகன் அருகே இருந்த சிற்றுண்டிக் கடையைக் கண்டு என்னை தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டான்.  இத்தனை வருடங்களாக இங்கு வசித்தும் என்னால் வாயில் வைக்க முடியாத பன்றி இறைச்சியில் செய்த இந்த உலக்கை மாதிரி உருப்படியை ஐந்து வயதில் உருளைக் கிழங்குப் பொரியலோடு சேர்த்து  உள்ளே தள்ளுவான்.
மனைவி பிள்ளைகளை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு கொஞ்சத்தூரம் உலாவிவர மனதில் ஒரு விடுதலை உணர்வோடு கிளம்பினேன்.   நடந்த போனவன் எதிரே கண்ட உருவங்களை கண்டதும் திகைத்துப்போய் நின்றுவிட்டேன்.  வாய் என்னையும் அறியாமல் "ஒல்காஸ்" என்று கூவியது.  அவன் என்னை அடையாளம் காணவில்லை.  அவன் அருகே வந்தது  அவனது மகள் என்று பிறகு நினைப்பு வந்தது  பெண் தான் "ஓ! சிரீ" ஆச்சரியப்பட்டாள்.  சற்று நேரத்தின் பின் தான் ஒல்காஸ் என்னை அடையாளம் கண்டான்.  அவனது மகள் ரசீமா என்னை சுகம் விசாரித்துவிட்டு ஏதோ அவசரம் என்று விடைபெற்றாள்.  அவனும்  "சிரீ" இருந்துகொள், கொறிக்க ஏதாவது வாங்கி வருகிறேன், கொறித்தபடியே பேசுவோம்; என நான் தடுத்தும் கேளாமல் போய்விட்டான்.
இப்போ நினைத்தாலும் நேற்று நடந்தது போல இருக்கிறது.  நான் இந்த ஜெர்மன் மண்ணில் கால் பதித்து என் ஊர் நண்பனைச் சந்தித்து அவன் என்னை அகதி விண்ணப்பம் கோர அழைத்து வந்த போதே சொன்னது "துருக்கிக்காரரை நம்பாதை, ஊத்தையள், கள்ளர்".  நானும் என்னோடு விமானப் பயணத்தின்போது அறிமுகமான சிவபாலன், ரமேஷ், காந்தன் ஆகிய நால்வருமே அவன் கருத்தை வேதவாக்காக எடுத்துக் கொண்டுதான் அந்த வெளிநாட்டவர் தொடர்பான அலுவலகத்தினுள் காலடி எடுத்து வைத்தோம்.  அப்போதே சந்தித்த ரஞ்சன் என்னும் வண்ணார்பண்ணை ரஞ்சனும் ஏனைய நாங்கள் நால்வருமாக சேர்ந்து ஒரு விடுதிக்கு அனுப்பப்பட்டோம்.  ஏதோ தெரிந்த ஆங்கிலம், ஒருசில ஜெர்மன் மொழிச்சொற்கள் எனப் பேசி அந்த சமூகசேவை அதிகாரிக்கு இடைஞ்சல் கொடுத்ததில் தமிழர்களே இல்லாத அந்தக் கிராமத்தில் இருந்த ஒரேயொரு எட்டுமாடிக்கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
அங்கு போனதும் சமூகசேவை அதிகாரி என்னையும் நண்பர்களையும் அந்த வீட்டுப் பராமரிப்பாளரிடம் அறிமுகப்படுத்திவிட்டான்.  சில நாட்களிலேயே அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவன் ருசிய நாட்டைச் சேர்ந்தவன். உலக யுத்தகாலத்தில் ஜெர்மனியில் சரணடைந்துவிட்டவன்.  அவன் குடிப்பதை அவன் மனைவி அனுமதிப்பதில்லை, அதனால் எங்கள் வீட்டில் கொண்டுவந்து குடிப்பான்.  இதனால் மட்டும்தான் என்னோடு நெருக்கம் என்பதில்லை.  எனக்கு தட்டித்தடுமாறி கொஞ்சம் ஜெர்மன் மொழி பேசமுடிந்ததும் அப்போது வெளியான “சில்வஸ்ரர் ஸ்ராலோனின்” முதல் ரத்தம்      திரைப்படத்தை நான் கொஞ்சம் அரசியல் கலந்து விமர்சித்து, அமெரிக்காவை கண்டித்ததிலும், ரசியனான அவனுக்கு என்னில் பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
அவன் எங்களை அந்தக் கட்டிடத்தில் குடியிருக்கும் யாருடனும் பழகவிடமாட்டான்.  எங்கள் வீட்டின் எதிர்ப்புற முதல் அடுக்கு வீட்டில் ஒரு துருக்கிக் குடும்பம் குடியிருந்தது.  அந்த குடும்பத்தின் முதல் இரண்டு ஆண் மக்களும் துருக்கி இராணுவத்தில் பணியாற்ற, ஏனைய ஒரு மகனும் மகளும் அவர்களுடன் இருந்தனர்.  இருவருக்கும் 15 - 18 வயது இருக்கும் பார்ப்பதற்கு முரடன் போலிருக்கும் அந்த துருக்கிக்காரனைப் பற்றி வீடடுப் பராமரிப்பாளன் குறை சொல்வான், அவ்வாறே எங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறினானோ தெரியாது.  துருக்கியன் மகள் ஒரு தடவை சில்லறை மாற்றக் கேட்க, நான் மாற்றிக் கொடுத்ததை மேல்மாடியில் நின்று பார்த்த பராமரிப்பாளன், துருக்கியர்கள் ஒரு மாதிரி, தங்கள் பெண்களுடன் வம்பு பேசுவதைக் கண்டால் காலைக் கையை வெட்டிவிடுவார்கள் என்றான்.  நான் நடந்ததைச் சொல்லியும் அவன் நம்பவில்லை.  "வயதுக் கோளாறு கவனம்" என்று என்னையும் தேவையில்லாமல் பயமுறுத்தினான்.
அந்த வருட கோடை கால, நீண்ட பாடசாலை விடுமுறையின் போது தங்கள் விடுமுறையைத் தொலைப்பதற்கு அலைந்த காலத்தில்தான், எங்கள் வீட்டிற்கு முதன்முதலாக “வெரோனிக்காவும், லூசியனும்” வந்தார்கள்.  எங்கள் வீட்டின் சாளரத்தை திறந்து வைத்துவிட்டு  ரமேஷ் புகை பிடித்துக்கொண்டு நிற்பான்.  அதற்காகத்தான் அவர்கள் இருவரும் முதன்முதலில் வந்து எங்கள் கதவைத் தட்டினார்கள்.  இரண்டு இளம் பெண்களை கண்ட உற்சாகத்தில் காந்தன்தான் விரைவாய்க் கதவைத்திறந்து உள்ளே அனுமதித்தான்.  அதுவரை கையால்கூட அதைத் தொடாதவன் அவசரமாக ஓடிச்சென்று வீட்டுக்கு வெளியேயிருந்த தன்னியங்கியில் (யேர்மனியில் ஒவ்வொரு தெரு முனையிலும் à®ªà¯à®•à¯ˆà®ªà¯à®ªà®µà®°à¯à®•à®³à®¿à®©à¯ வசதி கருதி காசு உள்ளிட்டால் சிகெரட் தரும் தன்னியங்கி இயந்திரம் உண்டு) ஒரு பெட்டி “சிகரட்”டை எடுத்துக்கொண்டு வந்து நீட்டினான்;  அவர்களும் நன்றி சொல்லிச்  சென்றுவிட்டார்கள்.  இந்தவிடயம் ரமேசிற்கும் காந்தனுக்கும மட்டுமே தெரியும்.  வெளியே உலாவச் சென்றுவிட்ட சிவபாலனுக்கும் சரி, வழக்கம் போல வீட்டுப் பராமரிப்பாளருடன் வெட்டிவேலை செய்யச் சென்றுவிட்ட எனக்கும் இதுபற்றி எதுவும் தெரியாது.  அவர்கள் சொல்லவும் இல்லை.  கிழமையில் இரண்டு நாட்களுக்கு குறைவான ஊதியத்தில் நகரசபைப் சார்பில் துப்பரவு வேலைசெய்வது எமக்கு அப்போது கட்டாயம்.  மீதிப் பொழுதை கொல்வது மிகச் சிரமம்.  இப்போது போல தொலைக்காட்சி, வானொலி சேவைகள் தமிழில் கிடையாது.  வாரம் ஒருமுறை கொழும்பிலிருந்து செய்திப் பத்திரிகைகள், எப்போதாவது தமிழ்ப் படம் ஒளிப்பேழையில், இதைவிட்டால் ஜெர்மனிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துத்தான் பொழுதைக் கொல்ல வேண்டும்.  அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள்; ஏதாவது வகையில் செய்திகளைச் சேகரித்து, விவாதித்து நேரம் கடத்த முடியும்.  இதனால் தான் ஐரோப்பாவில் அரசியல் அடைக்கலம் கோரிய சில இளைஞர்கள் பல தவறான பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டிருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது. இந்தக்காலத்தில் ரமேஷ் “சிகரட்” பிடிக்கவும், காந்தன் பெண் நட்புகளை நாடவும் பழகிக் கொண்டார்கள்.  நான் வீடு திரும்பும் சமயம் வாசலில் நின்ற எதிர் வீட்டுத் துருக்கியன் தன் கரகரத்த குரலில் என்னை அழைத்தான்.   நானும் அவன் முரட்டு மீசையையும் குத்துச் சண்டை வீரன் போலிருக்கும் உருவத்தையும் கண்டு, பயந்தபடியே ஏறிட்டேன். "உங்கட வீட்டுக்குள்ளை இரண்டு டொச் பெட்டையள் வந்ததை கண்டனான் நீங்கள் தேவையில்லாத சிக்கல்லை மாட்டப் போறியள் கவனம்" அடிப்பவன் போல எச்சரித்து விட்டுச் சென்றான்.  இதைச் சொல்லி நான் விசாரித்தபோது "கிழட்டுத் துருக்கிக்கு பொறாண்மை" என்று கோபித்தான் காந்தன்.  சிறிக்கும் பொறாமை என்று மெல்ல முணுமுணுத்தான்.  சிவபாலன் வந்ததும் விடயத்தை அவர் காதிலும் போட்டேன் அவரும் காந்தனை அழைத்து மெதுவாக புத்திமதி சொன்னார்.
அந்த பெண்கள் தொடர்ந்தும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  “சிகரட்” மட்டுமன்றி இரண்டொரு தடவை எங்கள் வீட்டில் உணவு உண்டதாகவும் நான் பின்பு அறிந்தேன்.  காந்தனுடன் ரஞ்சன் கூட்டணி சேர்ந்துவிட இருவருக்கும் ரமேஷ் வெளியே இருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.  எமது ஊரைப்போல் யாரும் யாரையும் கண்டித்து வழிநடத்த முடியாது என்ற உண்மை மனதில் உறைக்க நானும் சிவபாலனும் அமைதியாக இருக்க வேண்டியதாகிவிட்டது.
அந்த கோடைகால விடுமுறையில் ஒன்றரை மாதம் கழிந்து விட்டிருந்தது.  காந்தன் அந்தப் பெண்களுடன் வெளியே சந்திப்பு வைக்குமளவுக்கு நெருங்கிவிட்டான்.  ஆனாலும் அவர்கள் பாடசாலை மாணவிகள் என்று நாங்கள் பயமுறுத்தியிருந்தபடியால் அவனது தொடர்பு நட்பு எனும் அளவுக்குள்ளேயே இருந்தது.  திடீரென்று ஒருநாள் அதிகாலை ஐந்து மணியிருக்கும் அழைப்பு மணி அலறியது, எழுந்து கதவைத் திறந்தேன்.  ஐந்து பொலிசார் சடுதியாக என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.  கடைசியாக நுழைந்தவன் கதவைப் பூட்டினான் .  ஏனையவர்கள் நாங்கள் இருந்த வீட்டின் ஒவ்வொரு அறையையும் சோதனையிட்டார்கள்.  படுக்கையில் கிடந்தவர்களின் போர்வையை உதறி உதறிப் பார்த்தார்கள்.  அலுமாரிகள், அலுமாரியின் பின்புறம், குளியலறை, மலகூடம் என ஒன்றையும் மிச்சம் விடவில்லை.  சற்று நேரத்தில் அனைவரையும் ஆடைமாற்றிக்கொண்டு புறப்படச் சொன்னார்கள்.  அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களை பிடித்து நாட்டுக்கு அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம், ஒரு வேளை அப்படியிருக்குமோ? என்ற சந்தேகம் எனக்கு வந்தது.  ஆனால் எங்கள் விண்ணப்பங்கள் தான் பரிசீலிக்கப்படவே இல்லையே? எங்களோடு வேறு ஊரில்இருந்து வந்து நின்ற ரஞ்சனின் மைத்துனரும் இந்த தேடுதலின்போது மாட்டிக்கொண்டார்;.  அக்கால வழக்கப்படி அவருக்கு தனியாக  தண்டம் வரும். பாவம் அவர்.  நான் இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் அனைவரும் தயாராகிவிட்டார்கள் நான் எனது புத்தகங்கள் சிலவற்றை எடுக்க,  சிவபாலன் தனது “பிரஷ்”,  “றேசர் போன்றவற்றை எடுத்து தனது காற்சட்டைப் பையினுள் அடைத்தார்.  காந்தனுக்கு தனது நடைமனிதனைக்  கொண்டுவர ஆசை,  ரஞ்சனுக்கு தனது கலர் கலரான சேட்டுகளை விட்டுப்பிரிய மனமில்லை.  வந்தவர்களில் உயரமானவனாயும், அவர்களில் மேலதிகாரியாக இருந்திருக்கக் கூடியவனுமாகிய ஒருவன் "வெறும் ஆட்களாக வாருங்கள்" என்று கத்தினான்.  காவல் நிலையம் செல்லும்வரை ஏன் அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது எமக்கு தெரிந்திருக்கவில்லை.
அனைவரும் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டோம் காலை ஒன்பது மணியளவில் மொழிபெயர்ப்பாளர் கோவைமகாலிங்கம் துணையோடு என்னை விசாரணைக்கு அழைத்தபோதுதான் எனக்கு விபரம் புரிந்தது.  இரண்டு நாட்களாக வெரோனிக்காவை காணவில்லை, அவள் காணாமல் போன மறு நாள் காலையிலிருந்து அவள் பெற்றோர் தேடிக் களைத்து காவற் துறையில் புகார் செய்திருந்தார்கள். காவலர்கள் அவளது நட்புகளை விசாரித்து லூசியானா மூலம் எங்களைப் பற்றி அறிந்து, அதிகாலையிலேயே எங்களைக் கைது பண்ணியிருக்கிறார்கள்.  ஒவ்வொருவiரையும் தனித்தனியாக முதற்கட்ட விசாரணை முடிந்ததும் எம்மை வெளியே விடுவதாகவில்லை.
எங்களை மீண்டும் தனித்தனியாக அடைத்துவிட்டார்கள், கூண்டுகளிலேயே மொழிபெயர்ப்பாளர் மகாலிங்கமும் என்னை தனிப்பட்டமுறையிலே தெரிந்தவர் என்பதால் என்மீது ஒரு கோபப்பார்வையை வீசினார்.  எப்படியும் உள்ளுக்குத்தான். அதுவும் 18 வயது நிரம்பாத ஒரு பெண்ணுடன் தொடர்பு என குற்றச்சாட்டு என்றால்; வெளியேவர எந்த வாய்ப்பும் இல்லை.  சொந்த மனைவியே கணவன் தன் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதாகப்  புகார் கொடுத்தால்  தண்டனை வழங்கும் நாட்டிலே, இப்படி மாட்டி வைத்துவிட்டானே காந்தன் என்ற ஆத்திரம் தான் மிகுந்தது.  வெளியே வந்ததும் அவன் பற்களை உடைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன், ஆட்களை காயப்படுத்தினாலும் தண்டனை, தண்டம் என்ற ஞாபகமும் வந்து தொலைத்தது.
இப்படிச் சிந்தனைகளில்  நான் தடுமாறிக் கொண்டு நிற்க, ஒரு காவலன் என்னை வந்து அழைத்தான்.  மீளவும் விசாரிக்கப்போகிறார்கள் என்ற எண்ணத்தோடு சென்றேன்.  அனைவரும் அந்த காவல் நிலையத்தின் எழுத்தர் அறையில் கூடினோம்.  சிவபாலன் காந்தனை எரித்து விடுவது போல பார்த்துக்கொண்டு நின்றார்.  ரஞ்சனின் மைத்துனர் ரஞ்சனை எழுதமுடியாத ஒரு வார்த்தையைச் சொல்லி வாய்விட்டே திட்டினார்.  அங்கு நின்ற காவலரில் ஒருவன் தான் அவரை அடக்கினான்.
அந்த இடத்தில் எதிர் வீட்டு துருக்கியனான “ஒல்காஸ்” ஒரு வழக்கறிஞரோடு நின்றிருந்தான்.  வெரோனிக்கா காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட அந்த மாலையிலிருந்து பொலிசார் எம்மைக் கைது செய்த அந்த அதிகாலையின் நள்ளிரவு வரையில் நாங்கள் வீட்டில் இருந்ததைத் தான் கண்டதாகவும், சத்தமாகப் பேசிக் கொண்டு சீட்டாடியதை, உயர்த்தப்பட்டிருந்த சாளர மறைப்பினுடு கண்டதாகவும், தான் கோபமுற்று காவற்றுறையை தொடர்புகொள்ள எண்ணியதாகவும் சாட்சிசொன்னான்.  அவன் பிள்ளைகளையும் அவ்வாறே சாட்சி சொல்லச் செய்தான்.  அவனது சட்டத்தரணியின் வாதமும்  சட்டத்தரணிக்கு அவன் கொடுத்த பணமும் எங்களை கிட்டத்தட்ட ஆறு மணிநேர சிறை வாசத்தோடு வீடுதிரும்ப வைத்தது.  காந்தன் அந்த இரண்டு நாட்களும் எங்களோடுதான் இருந்தான் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.  நாங்கள் சொன்னால் அது எடுபடாது.  இன்னொரு நாட்டவனான ஒல்காஸ் சாட்சி சொன்னான் என்பதாலேதான் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.   சில நாட்களின் பின் வெரோனிக்கா தனது காதலனுடன் விடுமுறையை முடித்தக்கொண்டு திரும்பியதால் தான் எம்மீது சுமத்தப்பட்ட குற்றம் விடுவிக்கப்பட்டது. என்னோடு ஏற்பட்ட மெலிதான நட்பாலும்,  இளவயதிலேயே கண்டம் விட்டுக் கண்டம் உறவுகளை விட்டுப் பிரிந்து வந்து தடுமாறுகிறோமே என்ற இரக்கத்தாலும் தான் வந்ததாகவும், எங்களைக் கைது செய்து சென்றதை கண்டபோதே இப்படி ஏதாவது பிரச்சனையாகத்தான் இருக்குமென தான் ஊகித்ததாகவும் பின்னர் என்ககுச் சொன்னான். இதெல்லாம் நடந்து எவ்வளவோ காலத்திற்குப் பிறகு இன்றுதான் சந்திக்கிறோம். நண்பர்கள்கூட கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து எனப் பிரிந்துவிட்டோம். அவர்களும்கூட இன்று எங்காவது மூலையிலிருந்து எதையாவது எழுதிக் கொண்டிருக்கக்கூடும். அல்லது இதை படிக்கலாம்
பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த என்னை ஒல்காஸின் கரகரப்பான குரல்தான் இந்த உலகிற்கு கொண்டுவந்தது. கொண்டு வந்த பொட்டலங்களில் ஒன்றை என்னிடம்  நீட்டினான்.  பழைய நினைவுகளும் சேர்ந்துகொண்டதில் நான் சொன்ன நன்றி அவனுக்கு வித்தியாசமாகப் பட்டிருக்க வேண்டும்.  அவனும் கண்ணைச் சிமிட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்.
என் மனைவி பிள்ளைகளை அறிமுகப் படுத்துவதற்காக அவனை அழைத்துச் சென்றேன்.  தூரத்தில் என்னைக் கண்டதும் என் மகள் உற்சாகமாக ஓடிவருவது தெரிந்தது.
 

 


     இதுவரை:  24776458 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2577 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com