அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அகதிகளாகச் சென்று பனியை, மொழியை..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -சி. அண்ணாமலை  
Friday, 06 May 2005

அகதிகளாகச் சென்று பனியை, மொழியை,  கலாசாரத்தை வென்று ஒரு மதிப்பான சமூகமாக  மாறியிருக்கும் ஈழத் தமிழர்கள்
எந்தப் பணியானாலும் தங்களின் அடையாளத்தை பதித்து முன்செல்லும் தமிழர்களை விரோதமாய் பார்ப்போரும்  இருக்கிறார்கள்.
ஆனால், பெரும்பான்மை நட்பாய் - உறவாய் -  நெருக்கமாகப் பார்க்கிறது

  • சி. அண்ணாமலை

தங்கள் நாட்டுப் பிரச்சினையால் உலகின் பல்வேறு  நாடுகளில் ஈழத் தமிழர்கள் சிதற நேர்ந்தது. அந்த  நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து, ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாடாக இருந்தாலும் பல வகையில் தனித்துப்  பார்க்க வேண்டிய நாடு இது. குளிரையும் இயற்கை  அழகையும் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தில் டொய்ச்,  பிரெஞ்ச், இத்தாலி மற்றும் ரொமானிஷ் ஆகிய  மொழிகள் பேசப்படுகின்றன.

அகதிகளாய் போன ஈழத் தமிழர்களுக்கு குளிர், பனி,  உணவு, மொழி, கலாசாரம் என்கிற ஒரு பட்டியல்  அன்னியமாய் பிரச்சினையாய் இருந்தது. அவற்றைக்  கடந்த இருபதாண்டு காலத்தில் பரிச்சயப்படுத்திக்  கொண்டு வென்று, இன்று அந்நாட்டின் குடிமக்களாகவும் மாறியுள்ளனர். சுவிஸ்காரர்கள் மதிக்கும் ஒரு  சமூகமாக, விரும்பிப் பழகும் ஒரு சமூகமாக தமிழ்ச்  சமூகம் இருப்பதை நேரில் காண முடிந்தது.

1985 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில் அகதியாய்ப் போன  நேரம், தாம் எதிர்கொண்டவற்றை நாடகக் கலைஞர்  அன்ரன் பொன்ராசா விவரிக்கும் போது, பல என்  கற்பனைக்கு எட்டவில்லை. அங்கும் போராட்டம்,  மாற்று ரூபங்களில் இன்னல்கள் சுற்றியிருந்தன.  ஆரம்பத்தில் இரவு மட்டுமே தூங்குமிடத்தில் தங்கும்  இடம். மீதி நேரங்களில் ரயில் நிலையங்களிலோ,  ஏதோ ஒரு பொதுவிடத்திலோ கழிக்க வேண்டும்.  பனித்திரையால் மூடியிருக்கும் அந்த நாட்டின் குளிரை  அனுபவம் மட்டுமே முழுமையாய் உணர்த்த முடியும்.  தேவையான உடைகள் இல்லாமல் தொடர்ந்து  வெளியிடங்களில் இருக்க நேர்ந்தது ஒரு சவாலாகி  விட்டது.

கூட்டம் கூட்டமாய் உரத்துப் பேசிக் கொள்வதை,  தமிழர்களது உடை, நிறம், முடி போன்றவற்றை  வினோதமாய்ப் பார்த்தார்கள் சுவிஸ் மக்கள்.  "கருப்பர்கள் தெரியும், வெள்ளையர்கள் தெரியும்,  இவர்கள் இரண்டிலும் அடங்கா புதிதாக உள்ளனரே."  என்றனராம்! அரசாங்கமும் உடனடியாகத் தமிழர்களை  வேலையில் சேர்த்துக் கொள்ள அனுமதி தரவில்லை.  ஒரு வகையில் தொந்தரவாக நினைத்த சுவிஸ்காரர்கள்,  அகதிகளைத் தாழ்வாகப் பார்த்தார்கள். தூரமாய் நின்று  வேடிக்கையில் ஈடுபட்டனர்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம், தமிழ் அகதிகளுக்கு வேலை அனுமதி கொடுத்த போது, உடனே பெரியதாய்  அழைப்புகள் வரவில்லை. முதல் மனப்பதிவின் எச்சம்  அய்யமாய் மாறி விட்டதோ? ஆனால், வேலையில்  சேர்ந்தவர்கள் முதலாளிகளின் மனங்களை மாற்றினர்.  கடும் உழைப்பாலும் விரைவில் ஒன்றைப் புரிந்து  கொள்ளும் திறத்தாலும் மற்றவர்களுக்கு வேலை  கிடைத்தது. பலருக்கு உடனடியாகப் பதவி உயர்வுகளும் கிடைத்தன. ஒரு தமிழர் பதவி உயர்வு பெற்றாலோ,  வேறு பணியின் காரணமாகவோ ஓரிடம் காலியாகும்  போது அவ்விடத்தை ஒரு தமிழரைக் கொண்டுதான் நிரப்ப விரும்பினர்.

ஒரு முறை சுவிஸ் அரசு, அகதிகளை ஈழத்துக்குத்  திருப்பியனுப்ப முயன்றபோது, ஒலித்த எதிர்க்குரல்களில் ஹோட்டல்காரர்களின் ஒன்றியக் குரல் வலிமையாய்  இருந்தது. தமிழர்களும் ஊர்வலம், போராட்டங்கள்  மூலம் சூழலை உணர்த்தினர். சுவிஸ் மக்களின்  கருத்தும் துணையாய் இருந்தது. அரசு திருப்பியனுப்பும்  எண்ணத்தை மாற்றியது.

சுவிஸ் மக்களின் திறந்த மனதும் மனிதநேயமிக்கப்  பார்வையும் நெகிழ்வானதாக இருக்கிறது. தொடர்ந்து  பல்லின மக்களோடு வாழும் வாழ்க்கையாலும் அந்நாட்டு  அரசும் தொண்டு நிறுவனங்களும் சக மனிதர்களிடம்  தோழமை காட்ட எடுத்து வரும் முயற்சிகளாலும் இது  சாத்தியமானதாகத் தெரிகிறது.

தூரமாய் நின்ற சுவிஸ் மக்கள், ஊடகம் வழியாகவும்  நேரடிப் பகிர்தல், நாடக நிகழ்வுகள் மூலமும் அகதிகள்  பற்றி அறிந்த போது தங்களை மாற்றிக் கொண்டார்கள்.  இளம் தலைமுறையினருக்கு பள்ளி, கல்லூரிகள் வழி  விடப்பட்டன. நேரடி சந்திப்பில் ஐயங்களை உயரமான  கேள்விகளாக்கினர். கலைக்கு குறிப்பாக நாடகத்துக்கு  உயரமான இடம் உள்ள அந்த நாட்டில், அகதிகளின்  பிரச்சினைகள் குறித்து டொய்ச் - தமிழ் கொண்ட  இருமொழி நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன.  நாடகக் காட்சிகளையும் நாடகக் கலைஞர்களின்  கருத்துகளையும் சேர்த்து விவரணப் படங்களாக்கி  தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

வேலை செய்து கொண்டே கலைக்காகவும்  மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் எடுத்த  முயற்சிகள்ää சிரமங்கள் தமிழர்களுக்கான  அடையாளத்தை வழங்கியுள்ளன. தங்கள் செயல்களால்  நடத்தைகளால் நம்பிக்கை பெற்ற இவர்கள், வீடு  வாடகைக்கு எடுப்பதிலோ, ஒரு வேலையில்  சேர்வதிலோ இப்போது பிரச்சினையில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

தமிழர்களுக்கு உதவ வந்தவர்களின் நட்பும் தோழமையும் இருபதாண்டுகளுக்குப் பின்னும் தொடர்வது  ஆரோக்கியமாக இருக்கிறது. சில முரண்பாடுகள்  இருந்தாலும் தமிழர்களோடு சேர்ந்து நாடகத்தில் ஈடுபட  ஆர்வமாய் இருக்கும் கலைஞர்களைப் பார்க்க முடிந்தது. "நெருங்கி நடிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் இடம்  தருவதில்லை." என்றார் ஊர்ஸ் அந்தர்ஸ் கிராவ் என்ற  இயக்குநர். இவர் தமிழர்களுடன் சேர்ந்து நாடகங்களை  மேடையேற்றுவதில் தீவிரமானவர். பல சமூகங்களை  நன்கறிந்த அல்பின் பியரி என்ற சமூக  மானுடவியலாளர்ää "சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் போல் பிற சமூக மக்கள் இந்த அளவு தங்களை  வெளிப்படுத்தவில்லை." என்றார்.

கலையில் மட்டுமல்லாது, நண்பர்களுடன் பழகுவதில்,  வீட்டில் இருப்பதில் கூட தாங்கள் கட்டுப்படுத்தப்  பட்டிருப்பதால் கலாசார ரீதியான பிரச்சினைகள் பல  குடும்பங்களில் உண்டு. பிரச்சினை முற்றும் நிலையில்  அரசே பிள்ளைகளை வளர்க்க முற்படுவதை அறிந்தேன். மொழி வகையிலும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்  படிக்கக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்களைக் கண்டேன்.  பல தமிழ் மன்றங்களை தமிழைச் சொல்லித் தர,  பாடத்திட்டங்கள் வகுத்துள்ளன. கடும் குளிரிலும்  பிள்ளைகள் தமிழ் வகுப்புகளுக்குப் போகிறார்கள்.  தமிழர்களின் விழாக்களின் போது பலரும் கூடிக்  கொண்டாடுகிறார்கள்.

எந்தப் பணியானாலும் தங்களின் அடையாளத்தைப்  பதித்து முன்செல்லும் தமிழர்களை விரோதமாய்  பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால்,  பெரும்பான்மை நட்பாய், உறவாய், நெருக்கமாய்  பார்க்கிறது. உதாரணத்திற்கு, சுவிஸ் நாட்டு அமைச்சர்  நிலையிலுள்ள ஓர் அதிகாரியைப் பார்க்கப் போனோம்.  வீட்டுக்கழைத்த அவர் வரும் வழியைத் தொடர்ந்து  செல்பேசியில் சொல்லித்தான் அடைய முடிந்தது.  அவரிடம் எதையும் கேட்கவும் நகைச்சுவையாய் பேசவும் முடிந்தது. உடன் வந்த நண்பர்கள் அவரது  குழந்தையிடம் 'டொய்ச்' மொழியில் பேசி  விளையாடினர். சமையலறைக்கு அழைத்துத் தேநீர்  தந்தார் அந்த அதிகாரி. தமிழர்களின் நாடக  ஈடுபாட்டையும் தான் சமீபத்தில் பார்த்த 'வில்லியம்  தெல்' நாடகம் பற்றியும் ஈடுபாட்டோடு பேசினார்.  பெருமையாய் இருந்தது.

தங்களின் இருபதாண்டு கால சுவிஸ் நட்பை, உழைப்பை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை சமீபத்திய  சுனாமிப் பேரழிவின்போது பலரும் அறிந்தனர். நிதி  தருவதிலும் உறவுகளை விசாரிப்பதிலும் தமிழ்  மன்றங்களில் குவிந்து உதவிகள் செய்வதிலும்  சாலைகளிலும் நின்று நிதி திரட்டுவதில் பெரும்  வியப்பையும் நெகிழ்வையும் அளித்துள்ளனர், சுவிஸ்  மக்கள். "இதை எங்கள் இருபதாண்டு கால சுவிஸ்  வாழ்வின் அறுவடையாகத் தான் பார்க்கிறோம்."  என்கிறார் அன்ரன் பொன்ராசா.

அகதிகளாகச் சென்று பனியை, மொழியை,  கலாசாரத்தை வென்று ஒரு மதிப்பான சமூகமாகியுள்ள  ஈழத் தமிழர்கள் இப்போது அகதிகள் அல்ல, சுவிஸ்  தமிழ்ச் சமூகத்தினர். சுவிட்சர்லாந்து நாட்டின்  குடிமக்கள்!

  • தினமணி

     இதுவரை:  24326736 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2003 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com