அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாடும் வாடா மலர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சிவலிங்கம் சிவபாலன்  
Tuesday, 03 May 2005

பாரிஸின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் விசாலமான சிறுவர் மருத்துவமனை.
நான் எனது இரண்டரை வயது மகனுக்கு மருந்து எடுத்துக்கொண்டு வருகின்றேன்.  பின் புறமிருந்து ஒரு இளையவள், இருபத்தைந்து வயதுக்கு மேற்படாதவள்  என்பதை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.  தோளில் ஒரு குழந்தை, அது அணியவேண்டிய குளிர்தாங்கும் உடை இல்லாமல் காணப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே
"அக்கா.. நீங்கள் பிரெஞ்சு கதைப்பியளே.." கேட்டாள்.
"ஓரளவுதான் கதைப்பன்... ஏன் .. என்ன செய்ய  வேணும்.."
புவனேஸ்வரி ஓடி வந்த இளைப்பில் மூச்சு வாங்க என்னைக் கேட்டாள்.
"மூண்டு நாளா பிள்ளைக்கு காய்சல்  சொல்லி விளங்கப்படுத்தேலாமல் கிடக்கு..." புவனேஸ்வரிக்கு கண்ணீர் வடிந்து,  கன்னங்கள் உப்புப் படிந்து, காய்ந்திருந்தது. மூக்கில் அடைப்பு ஏற்பட்டு, குரல் சரியாக வெளிவரவில்லை.  அவளது அவசரமும், கெஞ்சலும் எனக்கு புரியாததல்ல.
ஒரு கையில் பிடித்திருந்த, எனது மகனையும் தூக்கிக் கொண்டு புவனேஸ்வரியின் கையையும் பற்றிக்கொண்டு, மருத்துவமனை முகப்பை அடைந்து விட்டேன்.  அங்கு  இருந்த பெண் உத்தியோக்தரிடம், விபரத்தைச் சொன்னேன்.  எனக்கு முதல் அந்த உத்தியோகத்தரே தொடர்ந்தார்.
புவனேஸ்வரி பற்றியும், அவள் குழந்தை பற்றியும், அதி குறைந்தபட்ச, அதாவது பெயர்; பிறந்த திகதி, விலாசம், தொலைபேசி இலக்கம், மருத்துவ பாதுகாப்பு இலக்கங்கள்  விபரம் போன்றவற்றை, அரைமணி நேரமாகக் கேட்டும் எவ்வித பதிலும் எந்த மொழியிலும் தரவில்லையாம். இவை பற்றிய  எந்தவித விபரங்களையும் கணனியில் பொறிக்காமல் நோயாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதான விபரத்தையும் தெரிவித்திருந்தார்;.  அதுமட்டுமன்றி மருத்துவரை அணுகி,  முதலில் குழந்தையை பரிசோதிக்க வேண்டி அவரை அழைத்து வருவதற்கடையில் புவனேஸ்வரி தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு போய்விட்டாளாம்.
நான் பிள்ளையின் உடுப்பை விலக்கி  நெற்றியில் கை வைத்த போது காய்ச்சல் உச்சத்திலிருப்பதை உணர்ந்தேன்.  அதன் கண்கள் சிவந்து அரைகுறைத் தூக்கத்திலும்ää சளி இறுகியதால் சுவாசம் தடைப்பட்டுக் கொண்டதையும் உணர்ந்து முதலில், மேற்படி உத்தியோகத்தர் சொல்லியபடி நேரடியாக மருத்துவரிடமே சென்று என்னால் முடிந்த பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலுமாக விபரித்தேன், அவர்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்.
அதாவது எந்த மருத்துவ மனையிலும் பல மொழிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மருத்துவர்களும் தாதிகளுமே தொழில் புரிகிறார்கள்.  புவனேஸ்வரியின் தடுமாற்றம் என்னையும் தடுமாற வைத்தது, இருநதாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
குறைந்த பட்ச மொழியறிவு தன்னும் அவளிடம் இல்லாதது எனக்கு வியப்பைத் தந்தது.  யார் எதை எதை எழுதி என்ன, பேசி என்ன, இன்னும் சில பெண் மனங்கள் உறக்கத்தில்தான் இருக்கின்றன.  விழிப்புணர்வு, புரிதல்கள், தைரியம், மனத்துணிவு என்பவை இவர்கள் மனதில் உருவாக இன்னும் பலரும் சிரமப்பட்டு  உழைக்க வேண்டும் என்றே எண்ணிககொண்டேன்.
புவனேஸ்வரியை நான் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளேயே பல தடவைகள் கடிந்துகொண்டேன்.  கடந்த ஆறு வருடங்களாக ஜேர்மனியிலும் பிரான்சிலும் வசித்து வருபவளுக்கு தன்னுடைய பிறந்த ஆண்டு திகதி, பிள்ளை பிறந்த இடம், ஆண்டு, திகதி, விலாசம் போன்றவையும், இன்னும் சில, ஒரு தாயார் தெரிந்து வைத்திருக்க்ககூடிய, குறைந்த பட்ச விடயங்கள் கூடத் தெரியாத நிலையில் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மருத்துவருக்கு முன்னால் அவள் பட்டபாடுகள் எழுத்தில் வடிக்க முடியாதவை, நானே நொந்து கொண்டேன்.  "இது கூடத் தெரியாமல் எப்பிடி ... குடும்பம் நடத்துகிறீர் ..."  என்றேன், விக்கி விக்கி அழுதாள்... "நான் என்னக்கா செய்யிறது....நான் படுகிறபாடு ஆருக்குத் தெரியும்.. நரக வேதனை.."  இவைதான் அவளுடைய அதிக பதில்களாக நான் கேட்டிருக்கிறேன்.  மனத்தளவில் நன்கு நொந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து முதுகில் தட்டி ஆறுதற்படுத்தினேன்.
பெண் குழந்தை, கருகருவென்ற தலைமுடி அதேபோலவே அழகான கண்கள், மேனியும் அதே நிறம், அழகான முகவெட்டு, இதுவே குழந்தை இவளுடைய தாய் அதைவிடக் குழந்தை, காய்ச்சல் நாற்பது பாகையில் இருப்பதால் எந்தவித கேள்வி நியாயங்களுமின்றி குழந்தையை மருத்துவ மனையில் அனுமதித்து விட்டார்கள், எங்கள் அனுமதி அங்கு பெறப்படவில்லை.
எனக்கும் வீடுபோகவேண்டிய தேவை,  சமையல் பற்றிய சிந்தனை என்று ஏராளம், புவனேஸ்வரி என் கரம் விட்டகல மறுத்துவிட்டாள். அவளைப் பாரக்க எனக்கு பரிதாபமாகவும் இருந்தது. தேவையின் போதுதான் மனிதருக்கு உதவ வேண்டும் அதிலும் உதவி இல்லாதவர்களுக்குத தான் முதன் முதலில் உதவ வேண்டும் என்பதால் சகல தேவைகளையும்  தள்ளி வைத்து அவளுடனேயே மருத்துவமனையில் அமர்ந்து கொண்டேன்.  என் சற்புத்திரன் ஒரு பாட்டம் நல்ல நித்திரை கொண்டு எனக்கு ஓய்வு தந்து கொண்டான்.
புவனேஸ்வரிக்காக இல்லாவிட்டாலும், அவள் குழந்தைக்காக உதவவேண்டும் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி நின்றது.  மேலும் ஒரு மணியோ இரு மணியோ தாமதமாக இருந்திருந்தால், புவனேஸ்வரி தன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுவந்திருக்கத் தேவையில்லை என்று பிரதம வைத்தியர் எனக்குச் சொல்லிக்கொண்டார். 
மருத்துவ அத்தாட்சிக்கான இலக்கங்கள், புவனேஸ்வரியின் வதிவிட சம்பந்தமான அத்தாட்சிகள், என்று எதுவுமில்லை காரணம் கேட்டால் "அழுது கொள்ளுவாள்..." எனக்கும் அது தர்மசங்கடமான நிலையாயிருந்தது. 
குழந்தையைச சுற்றிலும் மருத்துவர்களும், பயங்கரமான மின்னியல் சாதனங்களும்   குழாய்களுமாக எனக்கும் மனம் பயத்தைக் கொடுத்தது. தங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள், ஏன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள், எதுவுமே புரியவில்லை, மருத்துவர் பயப்படத் தேவையில்லை என்று சொல்லிவிட்டிருந்ததால் ஓரளவு நிம்மதியாக இருந்தது.  அவசர பிரிவுக்கு வெளியே போடப்பட்டிருந்த, ஆசனங்களில் யாவரும் அமர்ந்திருக்கிறோம்.  சீறிச் சீறி அழுதபடி தன்னைப் பற்றியும் தந்நிலை பற்றியும் சொல்ல ஆரம்பித்தாள் புவனேஸ்வரி அவளுக்கு மனதில் பாரம்குறையும் என்றெண்ணி யாவற்றையும் செவிமடுத்தேன்.
ஜேர்மனியில் வதிக்கும் தன் அண்ணன் அண்ணியுடன் வசித்திருக்கிறாள் புவனேஸ்வரி, தாயகத்திலிருந்து தன் பதினைந்தாவது வயதில் அங்கு வந்திருக்கிறாள், தாயகத்தில் தன் ஊரையும் குறிப்பிட்டாள்.  மொழிபடிக்க அதிகம் ஆர்வம் இல்லாததால்,  கட்டாயத்துக்காகவே  பாடசாலைக்குப் போய் வந்திருக்கிறாள்.
ஒருநாள் தன் எண்ணப்படி, தான் யாருக்கும் சொல்லாமல் ஒரு வேற்றுமொழிப் படம்பார்க்க தனியே போயிருக்கிறாள், இதை இவளது அண்ணனின் நண்பன் ஒருவன் பார்த்திருக்கிறான்.  அவன் ஒவ்வொரு நாடுகளுக்கும் மோட்டார் வண்டியில் விசா இல்லாதவர்களைக் கொண்டுபோய்  விடுவதில் உழைப்புப் பெற்று வருபவன்.  பெயர்...... கண்ணன், அவன் இவளைக் கண்டதும் பின் தொடர்ந்து வீட்டுகே வந்துவிட்டானாம்.  வந்துவிட்டது மட்டுமின்றி, பார்வையாலும் தவிர இரட்டையர்த்த வார்த்தை வார்த்தையாலும் இவளை மிரட்டியிருக்கிறான், இந்த விடயம் இவளுடைய அண்ணணுக்குமட்டுமல்ல, அண்ணியாருக்குத் தெரிந்திருந்தாலே போதும், வீட்டில் இவள் இருக்க முடியாது, அப்படியான ஓர் கண்டிப்பான சூழல்ää இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இவள் பாடசாலைக்குப் போகும் வழியில், கண்ணன் தினமும் காலை வந்து நின்று, தேவையில்லாமல் பேச்சுக்கொடுப்பானாம், அன்றைய சூழல், யாவரது ஆதரவுமில்லாத அவளது பயமான தனிமை, கண்ணனின் மிரட்டலுக்கு அவளைக் பணியவைத்திருக்கிறது.
அவனது ஏமாற்ற பசப்பு வார்த்தைகளுக்கும் இவளை அடிபணிய வைத்திருக்கிறது.   ஒரு நல்ல அன்புக்காக ஏங்கியிருக்கிறாள் போலும்.  அது இவளை இந்த ரூபத்தில் அணுகியிருக்கிறது.  கிடைத்ததைப் பற்றும் பக்குவமில்லாத மனது, பற்றிக் கொண்டது, பலன் ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை தாயானது.
தொலை பேசி வழி வாய்த்தர்க்கம், மிரட்டல், பின் நேரடி அடிபாடு என்று ஆரம்பித்து, கருக்கலைப்பு ஏற்பாடு என்று தொடங்கி, நாளும் தேவையில்லாத பிரச்சினைகள்.  வாழ்க்கையில் தோல்வி போலவே இவளது தற்கொலை முயற்சியும் தோல்வி கண்டது.   கண்ணனைக் கண்ட துண்டமாக வெட்டிச்சாய்க்க அலுவலும் நடைபெற்றது.  முன்யோசனையில்லாததால் ஏற்பட்ட  விபரந்தானிது.
ஒரு  நாளிரவு எட்டு முப்பது மணியளவில் கண்ணன் காரைக் கொண்டு வந்து, வீட்டின் கீழே நின்று கொண்டு, இவளைத் தன்னுடனேயே வரும்படி அழைத்திருக்கிறான், இவளும் அவன் அழைப்பை ஏற்று வெளிக்கிட்டு வந்துவிட்டாள்.
எங்கே எதற்கு என்று கேட்டபோது எரிந்து எரிந்து விழுந்திருக்கிறான்.  "உன்னைப் பெற்றோல் ஊத்திக் கொளுத்தப் போறன்......." என்று இரைந்து, இரண்டு தடவைகள் இவளுக்கு அடித்தும் விட்டானாம். வரும் வழியில் ஒரு கோப்பியோ சாப்பாடோ வேண்டிக்கொடுக்காமல், கொலைக் களத்தக்கு கொண்டு பொவது போலவே கொண்டு போயிருக்கிறான். அன்றைய வேளையில் , அவன் தன்னைப் பெற்றோல் ஊத்திக் கொழுத்தியிருந்தாலும் பரவாயிலலைப் போலவிருந்தாகச் சொன்னாள்.
"அப்ப.... கலியாணம்.." என்று நான் இழுக்கவே..... மீண்டும் அழுதாள்,
"அவருக்கு கட்டிற வயசிலை ரெண்டு பொம்பிளைப் பிள்ளையளிருக்கு....." எனக்கு அவன் மீதிருந்த ஆத்திரத்திலும், இவள் மீதிருந்த வெறுப்பே அதிகம், கோபமே அதிகம்.  சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கத தேவையான கல்வியை பெறாதிருந்ததும், ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறைச செய்ய உடந்தையாக இருந்ததும், சரியோ தவறோ நடந்த சம்பவத்தை உரியவரகளிடம் சொல்லி அதற்கான மன்னிப்பைப் பெற்று, தான் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டியதுமான வழிவகைகளைக் கையாள முடியாமலிருப்பதும்தான், இவளது இந்த விபரீத்துக்குக் காரணமாகின்றது. 
இவ்வரிகளை நான் வரைவதற்குக் காரணம், ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி ஒவ்வொருவர், மற்றவர்மீது மிரட்டல் என்னும் ஆயுதத்தைப்பயன்படுத்தி, தத்தம் காரியங்களை இலகுவாகச் சாதிக்க முனைவதிலிருந்து யாவரும் பாதுகாப்பாக இருப்பதற்கும், ஒரு தவறுக்காக இன்னொரு தவறைச் செய்து, அதிலிருந்து மீளமுடியாமல், விபரீத முடிவுகளை எடுக்க மனதைத் தூண்டி விடுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்குமாகவே.
மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தை இரண்டு மூன்று நாட்கள் மருத்துவ மனையில் தங்கவைக்கப்பட வேண்டும். இதைக் கேள்வியுற்ற புவனேஸ்வரி, முடியாதென்றே அடம் பிடித்தாள், தான் வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்றே ஒற்றைக்காலில் நின்று கொண்டாள் .  புவனேஸ்வரிக்கு, வதிவிட அல்லது தற்காலிக வதிவிட அனுமதி எதுவும் இல்லை என்ற பயமே காரணம், இவளைக் கண்ணன் சட்டப்படி திருமணம் செய்யவும் முடியாது.  ஜேர்மனியிலேயே ஒரு மருத்துவ மனையில் பிள்ளைப் பேற்றை முடித்துக்கொண்டு, புவனேஸ்வரியை ஒரு வாரத்திலேயே பிரான்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் கண்ணன்.  ஒன்பது  மாதங்கள் வரை புவனேஸ்வரிக்கு விசா விண்ணப்பமோ அன்றி மருத்துவச் சான்றிதழ் மனுக்களோ இன்றி, ஒரு குடும்பத்தவரின் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள், ஒரு கடைதெரியாது, ஒரு மருந்தகம் தெரியாது.  "குடியிருக்கும் வீட்டாரின் வேண்டுதலோ கட்டளையோ, சமைப்பதாக   இருந்தால் காலை பதினொரு மணிக்கு முதல் சமையலறையை உபயோகப்படுத்த வேண்டும், தொலைபேசி தொடவேபடாதுää நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் அறையை விட்டு வெளியே வரப்படாது.
இந்த மருத்து மனையை மட்டும் அவள் எப்படிக் கண்டு பிடித்தாளோ தெரியாது, மாத்தில் இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ தான் பிரான்சுக்கு கண்ணன் வருவான்ää ஏதாவது செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுப் போவானாம் அவ்வளவுதான், விசா பற்றிக் கேட்டால் " கனடா போவம்...... அதுக்குத்தான் ஆயத்தப்படுத்திறன்...." என்றே சொல்லிக் கொள்ளுவானாம், ஆனால் அது முடியுமென்று தான் நினைக்கவில்லை என்றே சொன்னாள்.  இவ்வளவு நடந்தும் அவன் தன் மகளைத் தூக்கிவைத்து அன்பாகப் பேச்சுக்கொடுப்பதோ, அணைத்துக் கொள்ளுவதோ இல்லையாம்.
மருத்துவர்களிடம் விபரமெல்லாம் விசாரித்து, ஒரு வெற்றுத்தாளில் எல்லா விடயங்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டேன், அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை.  அவளிடம் ஒரு ஆவணமென்று எதுவுமே இல்லை அவளிடம் சில்லறைக் காசுதானும் இருந்திருக்கும் என்று நான் எண்ணவில்லை கடைக் கோப்பி நான் அருந்துவதில்லை என்பதால் எப்போதும் நான் தண்ணீர் கொண்டு செல்வேன் அதையே அவளுக்கும் கொடுத்தேன்.  கையில் பணம் வைத்திருக்கிறீரா என்று   கேட்காமல் வந்தது, எனக்கு மிகுந்த கவலையாகவே இருந்தது.  பெரியஅளவில் நான் கொண்டு போவதில்லையாயினும் ஏதாவது உதவியிருக்கலாமென்றே தோன்றிற்று. 
"இதுக்கு மேலேயும் நான் நிக்கேலாது....... நான் போறன்...... ஆராவது சொந்தக்காரர் இருந்தால் அவையோடை சேர்ந்திரும்....... கட்டாயம் படிக்கப்போம்......" என்றுவிட்டு நான் அகன்றது இன்றும் நினைவிலிருக்கிறது.  எனக்கும் அதிகரித்த கவலை கவலையுடன் அவள் கரங்களையும் நாடியையும் தடவி வெளியேறியபோதுதான் தெரிந்தது, அவள் அடுத்;த பிள்ளையையும் சுமக்கிறாள் என்று.
பத்து நாட்களின் பின் தொடர்பு கொண்டாள், தான் கடைக்கு வந்ததாகச் சொன்னாள், கண்ணன் வந்திருப்பதாகவும் அவனிடமே பிள்ளையை விட்டுவிட்டு வந்திருப்பதாகவும் சொன்னாள், பிள்ளைக்கு ஒரே இருமல் மருந்து வேண்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அன்று அல்லது அடுத்த நாள் தாங்கள் மீண்டும் ஜேர்மனிக்குப் போகப் போவதாகச் சொன்னாள்.  முதற் சொன்ன புத்திமதிகளையே சொன்னேன். கண்ணன் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை, கேட்கத் தோன்றவில்லை.
இவ்வளவு தூரம் ஒருத்திக்கு எவ்வளவு துன்பங்களையும், தொந்தரவுகளையும் கொடுத்து, அவளது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கும் ஒருவன் சுகமாக  இருந்தாலென்ன, சுகமில்லாமலிருந்தாலென்ன, இவளும்தான மதிகெட்டு அலைகிறாள்.
கடைசியில் அவள் சொல்லிய ஒரு வார்த்தை......
"அக்கா........ நான்  எங்கையெண்டாலும் நல்லா இருந்தால்தான் உங்களோடை தொடர்பு கொள்ளுவன்....." என்றாள் .  " நீர் உமக்காக இல்லாட்டியும், உம்முடைய பிள்ளையளுக்காக எண்டாலும் நல்லாக இருந்துதான் ஆகவேணும்" என்று சொல்லியிருந்தேன்.  இது நடந்து ஒரு வருடமாகிவிட்டது அவளிடமிருந்து இன்றுவரை எந்தவித தொலைபேசி அழைப்புகளுமில்லை, மனது தேவையில்லாமல் எதை எதையோவெல்லாம் எண்ணி நோகிறது, காரணம் அவளுக்குப் பிரச்சினையே இனிமேல்த்தான்.......
 

 


     இதுவரை:  26118227 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5949 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com