அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புரட்சிகர ஆயுதமாக எழுத்து   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Friday, 13 May 2005

சிவராம் - சில நினைவுகள் சில குறிப்புகள்

1.

திரு.சிவராம் அவர்களுடனான முகம் பார்த்த முதல் அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது. 2003ம் ஆண்டு நானும் எனது சில நண்பர்களும் இணைந்து கருத்தரங்கொன்றை நடாத்தினோம். அது புரிந்துனர்வு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை தமிழ் நிலை நின்று பரிசீலிக்கும் நோக்கிலான கருத்தரங்கு. இதில் பிரதான பேச்சாளராக சிவராம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். ஒரு தடைவைக்கு பலதடைவை தொடர்பு கொண்டுதான் அவர் சம்மதத்தைப் பெற்றேன். அன்றிலிருந்து அவர் படுகொலை செய்யப்படும்வரை அந்த முதல் அறிமுகமும் தொடர்பும் நட்பாக நீடித்தது எனலாம்.

நிகழ்வில் அவர் பேசத் தொடங்கியதும் முதலில் நான் எரிச்சலடைந்தேன். ஏனென்றால் நாம் அவருக்கு பேசக் கொடுத்த தலைப்பு வேறு அவர் பேசிய தலைப்பு வேறு. “தமிழ் தேசிய அரசியலில் ஜனநாயகவழித் தலைமைகளின் பங்கு” என்பதுதான் நாங்கள் கொடுத்த தலைப்பு. அந்த நேரத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவாகியிருந்ததும் அது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததுமே அந்த தலைப்பை நாம் தெரியக் காரணம். இதில் சுவையான விடயமென்னவென்றால் தனது பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் எங்களுடைய தலைப்பை அவர் உச்சரித்தார்.
“இது எல்லோரும் ஓரணியில் நிற்கவேண்டிய காலம் இந்த நேரத்தில் ஜனநாயகவழித் தலைமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை”
பின்னர் அவரது எழுத்துக்களோடு எனது பரிச்சயத்தை அதிகரித்துக்கொண்ட போதுதான் அவர் ஜனநாயவழித் தலைமைகள் என்ற அரசியல் அர்த்தப்படுத்ததலை ஏன் நிராகரிக்கிறார் என்பதும் அதன் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது அவர் ஜனநாயகம் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை. ஜனநாயகவழித் தலைமைகள் என்ற அரசியல் அர்த்தப்படுத்தலையே நிராகரிக்கிறார். பின்னர் இதுபற்றி சிறிது பார்க்கலாம்.

சிவராம் அவர்களுடன் நான் நான்கு அல்லது ஐந்து தடவைதான்தான் நேரில் பேசியிருப்பேன் மற்றும்படி அவ்வப்போதான சில தொலைபேசி உரையாடல்கள். அவருடன் பழகியதிலிருந்தும் அவருடைய எழுத்துக்களோடு பரிச்சயப்பட்திலிருந்தும் அவர் தொடர்பான என்னுடைய புரிதல் சிவராம் மிகவும் தெளிவான  நெகிழ்வற்ற சில அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர். சிங்கள பெருந்தேசியவாதம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருப்பது போல் தெரிகிறது. சிங்கள அரசு ஒருபோதும் ஒரு நிலைமாற்றத்தை அடையப்போவதில்லை என்பதில் அவர் மிக இறுக்கமான பார்வையை வரித்திருந்தார். அவரது இந்தப்பார்வை சிவராம் ஒரு யுத்த விரும்பி என்றவாறான விமர்சனத்தை சிலர் முன்வைக்கவும் காரணமாகியது. ஆனால் எந்த விமர்சனமும் அவரது பார்வையின் இறுக்கத்தை தளர்த்தியதாக குறிப்பில்லை. எந்த அரசியல் நெகிழ்வற்றதென அவர் இறுதிவரை கூறிவந்தாரோ, எந்த அரசியிலிடம் தமிழ் மக்கள் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது என இறுதிவரை கூறிவந்தாரோ அந்த அரசியலே அவரைக் கொன்றது. எந்த அரசியல் பலமாக இருக்கவேண்டுமென இறுதிவரை கூறிவந்தாரோ அந்த அரசியலே எதிரிகள் அவரை குறிவைக்கக் காரணமாகியது. சிவராமை கொன்றதனூடாகவும் சிங்களம், தமிழ் தேசத்திற்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லித்தான் இருக்கிறது.

2.

எனது அறிதலுக்குட்பட்டவகையில் தமிழ்ச் சூழலில் தனது எழுத்துக்களை ஒரு புரட்சிகர ஆயுதமாக பயன்படுத்திய ஒருவரை குறிப்பிடுவதானால் முதலில் நினைவுக்குவரக் கூடியவர் சிவராம்தான். அந்த அடிப்படையில்தான் நான் இந்த நினைவுக் குறிப்பிற்கு “புரட்சிகர ஆயுதமாக எழுத்து” என தலைப்பட்டிருக்கிறேன். தத்துவம் பற்றி கூறும் ஆபிரிக்க மார்க்சியர் அமில்கப்ரால் தத்துவம் ஒரு புரட்சிகர ஆயுதம் என்பார். அதனையே சற்று மாற்றியிருக்கிறேன். அமில்கப்ரால் 1973இல் காலணியாதிக்க கூலிப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பதும் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

உண்மையில் சிவராமை நினைவு கொள்ளுதல் என்பது வெறுமனே ஒரு ஊடகவியலாளரை நினைவு கொள்ளுதல் என்ற அர்த்தமுடையதல்ல. அது ஒரு சடங்காச்சாரமான நினைவு கூறலுமல்ல. தமிழ் தேசியம் பலமாக இருக்க வேண்டுமென உறுதியாக கூறிவந்த ஒரு அரசியல் கருத்தியலாளரைத்தான் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்கிறோம். தமிழ் தேசியம் உயிர்ப்பாக இருப்பது மட்டுமே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியுமென உறுதிபடக் கூறிவந்த ஒரு போரியல் ஆய்வாளரை நினைவு கொள்கிறோம். எங்களுக்குத் தெரியும் விடுதலைப்புலிகளையும் தமிழ்தேசிய அரசியலையும் ஏற்றுக்கொள்ளாத எவருக்கும் சிவராமின் இழப்பு ஒரு பொருட்டல்ல. ஆனால் தமிழ் தேசியம் குறித்தும் அதனை பலப்படுத்த வேண்டிய வரலாற்று கடப்பாடு குறித்தும் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இது பேரிழப்பு. தமிழ் தேசியத்தில் வாழும் பல அறிவார்த்தமான கருத்தாளர்கள் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக உணர்வதையும் நானறிவேன்.

சிவராமின் கொலையால் துயருறும் நாம் அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என்ன? சிவராம் தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலில் ஏற்படுத்திய புதிய முறையியல்சார்ந்த பார்வையை, புதிய வீச்சை, மரபார்ந்த ஊடக தரிசன உடைவை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதுதான். ஏனென்றால் நாம் விடுதலைக்காகவும் தேசியத்திற்காகவும் வாழ்பவர்களால் மட்டுமல்ல அதற்காக தம்மை அர்ப்பணித்து மடிந்து போனவர்களாலும் பலமபெறும் ஒரு சமூகமாக உருப்பெற்றுள்ளோம். இது எமக்கு மட்டுமல்ல, விடுதலை வேண்டி நிற்கும் எல்லா தேசிய சமூகங்களுக்கும் பொருந்தும். தவிர இது தேசியத்தின் குணாம்சமும் கூட.

 

3.

இனி அவருடைய எழுத்துக்கள் குறிந்து எனது சில அவதானங்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரையில் பொதுநிலையில் நின்று பார்க்கும்போது சிவராமின் சிந்தனை ஒரு 25 வருடங்கள் முன்னோக்கி இருப்பது போன்ற தோற்றத்தை காட்டுகிறது. திருகோணமலையில் அவரது நினைவு கூட்டத்தில் பேசும்போதும் நான் இதனைக் குறிப்பிட்டுச் சொன்னேன். ஆனால் சற்று ஆழமாக பார்த்தால் அவர் முன்னோக்கி சிந்திக்கவில்லை. அவர் விடுதலைப்போராட்டத்தின் நகர்வுக்கு சமாந்தரமாக சிந்தித்தார் என்பதுதான் சரியானது. இதுவே அவர் முன்னோக்கி சிந்திப்பது போன்ற  தோற்றத்தை காட்டியது. இதற்கான காரணத்தை நமது சமூகநிலையில் நின்றும் பார்க்கவேண்டி இருக்கின்றது. ஒரு விடுதலை அரசியலால் வழிநடத்தப்படுகின்ற சமூகத்திற்கேயுரித்தான அறிவுத்தேடல், புலமைத்துவ உழைப்பு எமது சமூகத்தை பொறுத்தவரையில் திருப்தி கொள்ளக் கூடியநிலையில் இல்லை. விடுதலைப்போராட்டம் வளர்ந்த அளவுக்கு எமது சமூகம் வளரவில்லை. நமது கடந்த இரு தசாப்த கால தமிழ் ஆய்வுச்சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை விபரம் அறிந்தோர் அறிவர். சிவராம் விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சிக்கும் அதன் திசைவழி நகர்வுகளுக்கும் ஏற்ப சமாந்தரமாக தனது சிந்தனையை நகர்த்திச் சென்றார். இது அவர் முன்னோக்கி சிந்திப்பது போன்ற தோற்றத்தை காட்டியது. உண்மை, பலரால் போராட்டத்தின் நகர்வுக்கு ஈடுகொடுத்து சிந்திக்க முடியவில்லை என்பதுதான். இதற்கு சிவராமின் பரந்த அறிவுகாரணமாக இருக்கக்கூடும். முக்கியமாக அவருக்கு இருந்த மார்க்சிய முறையியல் சார்ந்த அறிவு, போரியல் அறிவு, சமூகவியல் சார்ந்த அறிவு போன்றவற்றின் ஊடாக உருப்பெற்ற ஆளுமையை அவர் கொண்டிருந்ததும்  அவருடைய சிந்தனை முறைக்கு காரணமாக இருக்கலாம். சிவராம் ஒரு மார்க்சிய அடித்தளத்தில் இருந்து வந்தவர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. அவரது நுணுகிய அரசியல் ஆய்வறிவிற்கு அவரது மார்க்சிய முறையியல் சார்ந்த அறிவுதான் காரணமாக இருக்குமோ எனவும் நான் நினைக்கிறேன்.

சிவராமின் கருத்துக்களில் நான் அவதானித்த பிறிதொரு விடயம் அவரது பார்வையில் சமரசம் என்பதற்கான இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது, இல்லை என்று கூடச் சொல்லலாம். அவர் எங்களுடைய கருத்தரங்கில் பேசியது இப்பொழுதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த வேளையில் ஐக்கியதேசியக் கட்சி ஏதோ பெரிதாக தரப்போகின்றது என்ற மாயை நமது ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் புரிந்துனர்வு ஒப்பந்தம் பற்றிய அவரது பார்வை முற்றிலும் மாறுபட்டிருந்தது.

“யுத்தத்தினூடாக தோற்கடிக்க முடியாத விடுதலை இயக்கங்களை ஆதிக்க அரசும் அந்த ஆதிக்க அரசுக்கு முண்டுகொடுக்கும் ஏகாதிபத்திய சக்திகளும் இவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாக தோற்கடிக்க முயல்கின்றன. பலம் பொருந்திய விடுதலை இயக்கமான கொலம்பிய விடுதலை இயக்கம் (FARC)  இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த காலநீட்சியை கொண்டு அமெரிக்க உதவியுடன் பலவீனப்படுத்தப்பட்டது. நாகா இயக்கத்திற்கும் இதுதான் நடந்தது”
பின்னர் அவர் சார்ல்ஸ் அன்ரனி படையனியின் “நெருப்பாற்று நீச்சலில் பத்து ஆண்டுகள்” என்னும் நூல் வெளியீட்டில்  உரையாற்றும் போதும் இந்தக்கருத்தையே வலியுறுத்தியிருந்தார். அதேவேளை இத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு இவ்வாறான போராட்ட வரலாறுகள் மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தார் (இக்குறிப்பு வெளிச்சம் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது)

நான் நினைக்கிறேன் கடந்த மூன்றுவருடங்களுக்கும் மேலாக நீடித்திருக்கும் இந்த ஒப்பந்தச் சூழலில் அவரது மேற்படி பார்வை மாற்றமடைந்திருப்பதற்கு சான்றில்லை. அவர் இறுதியாக எழுதிய “எரிக்சொல்கேயிமின் வருகையும் தமிழ் தேசியத்தின் நெருக்கடியும்” என்ற கட்டுரை வரை அதே பார்வைதான். அவர் இவற்றை தமிழ் தேசியம் பலமாக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில்தான் முன்வைத்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவரது எழுத்துக்களுள் என்னை ஈர்த்த பிறிதொரு விடயம் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்த ஆய்வு. ஆதிக்க சக்திகள் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அவற்றை நிரந்தரமாக்கி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முடக்குவதற்கு இடையறாது முயன்று வருகின்றன. இந்த அடிப்படையில் மிதவாதி – தீவிரவாதி என்ற அரசியல் பிரிவுநிலைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்குகிறார்.. அதன் முக்கியத்துவம் கருதி ஆய்வின் ஒரு சிறு பகுதியை இணைக்கிறேன்.

“மிதவாதி – தீவிரவாதி என்பது நவீன பிரித்தாளும் உத்திகளின் அடித்தளமாக விளங்கும் ஒரு கருத்தியல் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கும் ஒடுக்கும் அரசுகள் ஏகாதிபத்தியங்கள் என்பவற்றை அண்டிப்பிழைக்கும் சந்தர்ப்ப வாதிகளுக்கு அறிவியல் - சமூக – அரசியல் உயர் அந்தஸ்தை வழங்கிவிடவும் வல்லரசுகள் ஏகாதிபத்தியங்கள் என்பவற்றின் ஒடுக்குமுறை அதிகாரத்தின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்குபவர்களை, எதிர்ப்பாளர்களை நாகரீகத்திற்கும், மனித விழுமியங்களுக்கும், பகுத்தறிவுக்கும் எதிரான கும்பல் என சித்தரிப்பதற்கும் மேற்படி மிதவாதி – தீவிரவாதி அல்லது பயங்கர வாதி என்ற முரண்சோடி மிக நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.

எதிர் கொரில்லா போரியலின் முக்கிய அம்சங்களான அமைதிப்படுத்தல் (Pacification) மற்றும் ஒரு வரையறைக்குள் முடக்கிவைத்தல் (Containment)என்பவற்றிற்கு இந்த மிதவாதி – தீவிரவாதி (பயங்கரவாதி) என்னும் முரண்சோடி மிக அடிப்படையானதாகும். நீதியும் நீயாயமுமுள்ள போராட்டங்களை குருட்டுத்தனமானதாக காட்டி அவற்றை நியாயத்தன்மை அற்றவையாக்க (delegitimize ) மிதவாதி – தீவிரவாதி என்ற பிளவை ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் தேசத்தில் அல்லது வர்க்கத்தில் உண்டாக்கி அதை நுட்பமாக பேணி வளர்த்து அந்தச் சமூகத்தின் போராடும் உளவலுவை சிதைப்பதை நவீன ஏகாதிபத்தியங்கள் ஒரு பெரும் அறிவுத்துறையாகக் கொண்டுள்ளன…

என்னை பொறுத்த வரையில் புலிகள் களத்தில் பெற்ற பல பெரு வெற்றிகளின் பலாபலன்களை கனப்பொழுதில் இல்லாதொழிக்கக்கூடிய வல்லமை இந்த மிதவாதம் பயங்கரவாதம் என்ற உத்திக்குண்டு.”

அவரது இந்த ஆய்வுகளை படித்தபோதுதான் எங்களுடைய தலைப்பை அவர் நிராகரித்ததையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்றும் இந்த பிரித்தாளும் தந்திரம் பலவழிகளிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. தென்பகுதி இனவாத புத்திஜீவிகளும், அரசியலாளர்களும் கூட்டணியை (TULF) சேர்ந்தவர்களை பெரிய அறிவாளிகள் என்றும் பண்பாளர்கள் என்றும் அழுத்திச் சொல்லும்போதெல்லாம் நாம் சிவராமை நினைத்துக்கொள்வோம். ஒரு பிரபலமான தமிழ் பெண் புத்திஜீவி “விடுதலைப்புலிகளுக்கு ஆங்கிலம் தெரியாததன் காரணத்தால்தான்; அவர்கள் வன்முறை நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள்” என எழுதியிருப்பதையும் நான் இந்த இடத்தில் நினைவு கொள்கிறேன. அரசியல் அரங்கில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் இந்த பிரித்தாளும் தந்திரம் பலவாறான நிலைகளிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

சிவராமின் ஒட்டுமொத்த எழுத்துக்களை திரட்டிப்பார்க்கும் போது சிலவேளை நமக்கு முரண்புள்ளிகளும் தென்படக்கூடும். அவ்வாறு முரண்புள்ளிகள் தென்பட்டாலும் அது ஆச்சரிய படுவதற்குரிய ஓன்றுமல்ல. முரண்படுவதற்கு முன் சிவராமின் ஆற்றலையும் பணியையும் அங்கீகரித்து விட்டு முரண்படுங்கள். அதுவே ஒரு புத்திஜீவியை அணுகும் நாகரிகமும் கூட.  முரண்பாடு சிவராமுக்கு பிடிக்காத ஒன்றுமல்ல.

 

4.

முடிவாக
சிவராம் பற்றி மேலும் சில வரிகள்.
இன்று சிவராம் ஒரு இடைவெளியை விட்டு சென்றிருக்கிறார். இது ஒரு கொலையால் உருவாகிய இடைவெளி. எப்பொழுதும் அதிகாரத்துவங்களை கேள்விக்குள்ளாக்குபவர்களை ஆதிக்க சக்திகள் அச்சத்துடனேயே பார்க்கின்றன. இறுதியில் அழித்தும் விடுகின்றன. ஒரு சிந்தனையாளனின் கருத்துக்கள் ஒரு மனிதனின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. பல நம்பிக்கைகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமையின் விளைவுதான் இது. இது மூன்றாம் உலகு முழுவதும் விரவிக்கிடக்கும் ஒரு துர்பாக்கியம். தமிழ் தேசியம் என்பது சிவராமின் நம்பிக்கை.

தமிழ் தேசியம் பலமாய் இருக்க வேண்டுமென ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒலித்துவந்த ஒரு குரல் இன்று நின்று விட்டது. அதன் அதிர்வுகள் நின்று விடப்போவதில்லை. சிவராமின் இழப்பால் தமிழ் அரசியல் ஆய்வுச்சூழலில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பது என்பதில் கருத்து பேதத்திற்கு இடமிருக்க முடியாது. ஆனால் அது ஒரு நிரந்தமான இடை வெளியாக இருக்கும் என நான் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறினால்  அது சிவராம் நம்பிய மார்க்சிய இயங்கியலுக்கே முரணானதாகும். இந்த இடைவெளி நிரம்பும் காலம் வரவே செய்யும்.

நாட்டிற்கும் சமூகத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை “வரலாற்று நிலத்தை உழுபவர்கள்” “அந்த நிலத்திற்கு உரமாக அமைபவர்கள்” என்று இரண்டுவகையில் பாகுபடுத்துகிறார் கிராம்ஷி. இந்த இரண்டு வகைப்படுத்தலுக்குள்ளும் சிவராம் அடங்கிப் போகின்றார்.
நாட்டிற்கும் சமூகத்திற்குமாக வாழ்பவர்களை கொல்லமுடியும் ஆனால் அவர்களின் கனவுகளை…

(படங்கள்: தமிழ்நெற், பிபிசி) 

   


     இதுவரை:  25361035 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2176 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com