அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow எது பொருத்தமான விமர்சனம் ?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எது பொருத்தமான விமர்சனம் ?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.செ.துரை  
Sunday, 12 June 2005

இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் 'சமுதாயம்' தொடங்கி ஷர்மிளாவின் 'இதயராகம்'  வரை வளர்ந்து முடிவுரை எழுதியது. அதன் பின் அதற்கான முயற்சிகள் பாரீசில் ஆரம்பிக்கப்பட்டு அங்குள்ளவர்களாலேயே அதற்கு முடிவுரையும் எழுதப்பட்டது. இந்த இரு தொகுதி சினிமாக்களையும் தோல்விக் குழிக்குள் தள்ளி தானும் அத்தோடு படுகுழியில் விழுந்ததுதான் இலங்கை தமிழ் சினிமாவிற்கான விமர்சனங்கள் சந்தித்த வரலாறாகும்.

இலங்கைத் தமிழ் சினிமாக்களே இல்லாமல் இருந்த காரணத்தால் கடந்த காலங்களில் அதற்கான விமர்சனங்களும் இல்லாமல் போயின. சினிமா இருந்தால்தான் அதற்கான விமர்சனங்களும் இருக்கும் என்பது கூட தெரியாமல் எழுதப்பட்ட விமர்சனங்கள் அவை என்பதை இந்த இடைக்காலமே விளக்கி நிற்கிறது.

தொழில் ரீதியாக சினிமாவிற்கு விமர்சனம் எழுதுவதும், கலை ரீதியாக சினிமாவிற்கு விமர்சனம் எழுதுவதும் முற்றிலுமே வேறுபட்ட விடயங்கள். இரண்டையும் ஒன்றாகக் கருதி விமர்சனம் எழுதப் புறப்பட்டால் நமது விமர்சனங்களே நமது சினிமாக்களை அழிக்கும்
கோடாரிக்காம்பாக மாறும். இதைப் புரிந்து கொள்ளாமையே கடந்த கால விமர்சகர்கள் விட்ட தவறாகும். இதே ஆயுதங்களை மறுபடியும் மடியில் இருந்து உருவாமல் இருக்க வேண்டுமென்று அனைவர்க்கும் நட்புடன் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுவதாக இருந்தால் அது சொல்லும் கதை, அதனுடைய பின்னணிகள் பற்றிய பூரண அறிவு இல்லாமல் நாம் விமர்சனம் எழுத முற்படக் கூடாது. இதுபோலத்தான் சினிமா விமர்சனமும். இன்றைய கணப் பொழுதுகளோடு போராடும் வாழ்வில் புலம் பெயர் தமிழ் மக்களில் யாரோ ஒரு சினிமாப் படத்தை எடுக்கிறாராக இருந்தால் அது மிகமிக கடினமான பணி. அந்தப் பணியை செய்யும் நமது கலைஞர்களுடன் நேரடியாகப் பேசி விமர்சகர்தமது கருத்தை உரைத்து வாதாடி, அதன் பின் பொது மக்கள் மன்றுக்கு அந்தக் கருத்தைக் கொண்டுவர வேண்டும். தாம் நினைத்த மாத்திரத்தில் வாளால் வீசி சிறு குழந்தையைக் கொல்லும் வேலையைச் செய்யக் கூடாது.

திரைப்படங்களை தமிழகத்தில் செய்வதற்கும் புலம் பெயர் நாடுகளில் உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தில் சினிமா என்பது தொழிற்சாலை உற்பத்திப் பொருளாக மாறிவிட்டது. முதலீட்டில் இருந்து ஆரம்பித்து முடிவுவரை மிகப்பெரிய வலையாக்கத்தை உலகளாவிய ரீதியில் அவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். அவ்வளவுடன் அவர்கள் நிற்கவில்லை, தமிழ் பேசும் ஒரு படத்தை தமிழகத்தில் இல்லாத ஒருவர் தமிழகத்திற்கு வெளியே எடுத்தால் அதை தமிழகத்தில் காண்பிக்க முடியாது என்றும் சட்டம் போட்டு நூறாண்டுச் சினிமாவிற்கே பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். அவர்களுடைய இன்றைய வளர்ச்சியையும், நூறு ஆண்டுகளாக அவர்களால் வளர்க்கப்பட்ட சினிமா உளவியலையும் தாண்டித்தான் புலம் பெயர் தமிழ் சினிமா நிலைபேறு பெற வேண்டியிருக்கிறது. இது மட்டுமா தமிழகத்தில் இருந்து வரும் படங்களை வகை தொகையின்றிநாமே இறக்குகிறோம். இந்தப் பெரும் போட்டிக்குள்தான் புலம் பெயர் தமிழ் சினிமா என்ற குழந்தை தவழ ஆரம்பித்திருக்கிறது. ஆகவேதான் இதற்கான விமர்சனங்களை எழுதுவோர் மிகப்பெரிய பொறுப்பு தமக்கு இருப்பதை உணர வேண்டும்.

விமர்சனம் எழுத முற்படுபவர் வெறும் கலை இலக்கியவாதியாக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு ஒரு சினிமாவின் பின்னால் இருக்கும் மலைபோன்ற பாரங்களை சுமந்த நுட்பமான வலிகள் தெரிய வேண்டும். வெற்றிபெற்ற எந்தச் சினிமா பிதாமகரும் தானறிந்த தொழில்நுட்ப இரகசியங்களை நமக்குக் காட்டித்தரப் போவதில்லை. நாமேதான் கற்று அறியவேண்டிய நிலை உள்ளது. நூறு ஆண்டுகால தமிழக சினிமா இலங்கைத் தமிழ் சினிமாவிற்கு எந்தவொரு தொழில் நுட்ப இரகசியத்தையும் கற்றுத்தரவில்லை. இப்போது நமது புலம்
பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் அதைக் கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதை புரிந்து விமர்சகர்கள் தமது பேனைகளை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு தமிழக இயக்குநர் கூறிய ஆலோசனைகள் இப்படி இருந்தன. ஈழத் தமிழருக்கு ஒரு சினிமா அவசியமில்லை. கதை, இயக்கம், முக்கிய கதாபாத்திரம்,இசையமைப்பு, தொழில்நுட்பம் போன்ற பணிகளை நாமே பார்த்துக் கொள்வோம். வழமைபோல முதலீடு, விற்பனை ஆகிய பணிகளை நீங்கள் பார்த்தாலே போதும் என்றார். தமது நாட்டு பிரபல நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் வந்து உங்கள் நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் உங்கள் மக்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் இதுதான் நிதர்சனம் என்றார். ஒரு தேசிய இனத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அந்த இனத்திற்கான திரை நட்சத்திரங்களாகும். உங்கள்
இனத்திற்கான திரை நட்சத்திரங்கள் யார் என்றும் வினவினார். இவரின் புகழைத்தான் புலம் பெயர் நாடுகளில் இப்போது பல விமர்சகர்கள் வானளாவப் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் புலம் பெயர் தமிழ் இளைஞர் புத்தகங்களை வாசித்து, மேலை நாட்டு தொழில் நுட்பவியலாளருடன் தொடர்ந்து பேசி நமக்கான சினிமாவைக் கொண்டுவர நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த இரவு பகலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கனடா முதல் இங்கிலாந்து, பாரீஸ், டென்மார்க்வரை நமது இளைஞர்கள் ஊண் உறக்கமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிமிர்ந்து நடக்க
அவகாசம் வேண்டும். அதை நமது விமர்சன உலகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பழைய
களிம்பேறிய விமர்சன லோட்டாக்களால் வளரும் சினிமாவின் தலையில் அடித்து வேடிக்கை
பார்க்கக்கூடாது.
இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் சினிமாவிற்காக விமர்சனம் எழுதப் புறப்பட்டவர்களின் கடமை என்ன ? திரைப்படம் எடுக்கும் இளைஞர்களை சந்தித்து, சினிமாத் தயாரிப்பில் உள்ள பரீட்சார்த்தமான நெருக்கடிகளை, அவர்கள் சந்திக்கும் இடர்களை, தொழில் நுட்பச் சவால்களை கலந்துபேசி முதலில் விமர்சகர்கள் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அந்தச் சினிமாவைப் பார்க்க வேண்டும். அந்தச் சினிமா வந்திருக்கிற நமது சமுதாயத்தின் விமர்சனம் பற்றிய புரிதலைப் பார்க்க வேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டு விமர்சனத்தை எழுத வேண்டும்.

அக்காலத்தில் தமிழக சினிமாவிற்காக பேசும்படம் என்ற இதழ் ஒன்று நடாத்தப்பட்டது. வெளிவர இருக்கும் திரைப்படங்களின் சிறப்புக்கள் பற்றி நல்ல விடயங்களை எல்லாம் அது மக்கள் முன்னால் கொண்டு வந்தது. தீய விடயங்களை முன்னுக்கு எடுத்து எல்லோரையும்
மட்டந்தட்டாமல் நல்லவைகளை எடுத்துப் போற்றியது. சினிமா தயாரிப்பாளர் அந்தப் புத்தகத்தில் நல்லதென்று சொல்லப்பட்ட விடயங்களை முன்னெடுத்து செயற்பட்டனர், வெற்றி பெற்றனர். ஒரு காலத்து திரைப்படங்களின் வெற்றிக்கு பெருந்துணையாக அமைந்தது பேசும்படத்தின் நல்லதைப் பேசும் விமர்சனம்தான்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் வெளியான சினிமா செய்திகளையும், விமர்சனங்களையும் ஒரு நாள் விடாமல் தொடர்ச்சியாக அவதானித்து, குறிப்பெடுத்து ஆய்வு செய்தனர் நமது இளைஞர்கள். அதுதான் அலைகள் இணையப்பத்திரிகையில் கடந்த
ஐந்தாண்டுகளாக சினிமா செய்திகளாக வாராவாரம் வந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் தயாராகும்போது எப்படி எழுதுகிறார்கள், வெளிவரும் போது எப்படி உற்சாகம் கொடுக்கிறார்கள், முதல் மூன்று வாரங்களுக்கு திரைப்படத்தின் கதையைக்கூட அம்பலப்படுத்தாமல் நிதானம் கடைப்பிடிக்கிறார்கள். தமது நாட்டின் வர்த்தக சினிமாவை அவர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்டார்கள். அதன் பின்புதான் சினிமாவிற்கு வந்துள்ளார்கள் இங்குள்ள பல இளைஞர்கள்.

மற்றவரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது விமர்சனமல்ல, ஆழ்ந்து, அகன்று, நுனித்த சமுதாயவியல் கல்வியின் முதிர்ந்த கனியாக அது மலரும்போதே அது பயனுடையதாக அமையும். முதலில் நல்ல விடயங்களை பாராட்டி எழுதுவோம். ஒரு கலை இலக்கிய விமர்சகருடன் பேசும் போது கவலையாக சொன்னார், விமர்சனங்களை முதலில் ஏற்கப் பழகுகிறார்கள் இல்லையே என்றார். சரியான விமர்சனங்களை மற்றவர் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்வது ஒரு கலை. அதை நீங்கள் சரியாகக் கற்றுவிட்டீர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள் என்றேன். உங்களுக்கு சினிமாவின் பின்புலங்களில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள்பற்றி எந்த அளவுக்கு தெரியும் என்று வினவினேன். அவர் தனக்கு அதுபற்றி எதுவுமே தெரியாது என்றார். விமர்சகர் ஒருவர் நம்பகத் தன்மையுடையவர், சகல பக்கங்களையும் சரியாக அறிந்து எழுதுகிறார் என்றால் அவரை அடையாளம்காண படைப்பை உருவாக்கிய படைப்பாளியால் முடியும். சகல விடயங்களையும் துல்லியமாக அறிந்து எழுதுங்கள் படைப்பாளிகள் நிச்சயம் ஏற்பார்கள் என்றேன். அன்றைய அறியாமை மிக்க சமுதாயம் மனுநீதி சாத்திரத்தையும், சனாதன கொள்கைகளையும் ஏற்று சூத்திரராகப் போனது பழைய கதை. அதே போல உங்கள் விமர்சனத்தை யாராவது ஏற்க மறுத்தால் அதில் விமர்சன சனாதனம் இருக்கிறதா என்று மறு பரிசீலனை செய்யுங்கள் என்றும் அவரிடம் கூறினேன். இலங்கை விமர்சனங்களின் மீதான உளவறிக்கைகள் ஏற்கெனவே பல வந்துவிட்டமை தெரிந்ததே. இனி நிறைவுப் பகுதிக்கு வருவோம்.

புலம் பெயர் சினிமா பற்றிய காட்டமான விமர்சனத்தை நடாத்த முன்னர் அது குறித்து படைப்பாளிகள் மட்டத்தில் பேசுங்கள். உண்மைகளை சரியாக அறியுங்கள், அதன் பின்னர் மக்கள் மன்றுக்கு கொண்டு வாருங்கள். தோட்டக்காரி படத்தைத் தயாரித்த தங்கவேல்
தனது உடமைகளை எல்லாம் விற்று அப்படத்தின் நிறைவுக் காட்சிகளை எடுத்தபோது சிறுவனாக நின்று அவருடன் பேசியிருக்கிறேன். பின்னர் நிர்மலா படத்தை எடுத்து எல்லாவற்றையும் இழந்து அகதியாகி, தனது எழுபதாவது வயதில் இன்றும் ஈழத்து சினிமா வரவேண்டுமென பாரீஸ் வீதியில் இரவு பகலாக ஓடியோடி உழைக்கும் ரகுநாதனையும் பார்த்திருக்கிறேன். எல்லோருமே கடந்த காலங்களில் நம் நாட்டு விமர்சகர்கள் செய்த செயல் மீது தாங்கொணா வேதனை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

யார் உள்ளே வந்தாலும் வெட்டு என்று காவல் குரங்கிடம் வாளைக் கொடுத்துவிட்டு உறங்கினான் ராசா. உள்ளே வந்த இலையான் ராசாவின் கழுத்தில் இருக்க இலையானை வெட்டுவதாக எண்ணி ராசாவின் கழுத்தையே துண்டு போட்டது குரங்கு. குரங்கின் கையில் இருந்த வாளைப் போன்றதுதான் விமர்சனமும். அத்தகைய விமர்சனம் என்னும் வாளை மற்றவர் கையில் கொடுத்துவிட்டு விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோமென்று உறங்கிக் கிடந்ததால்தான் பழைய இலங்கைச் சினிமா தலை துண்டாடப்பட்டு அழிந்தது. அதுபோல இன்றைய புலம் பெயர் சினிமாவும் பழைய கழுத்தறுந்த ராசா போல தவறான விமர்சனங்களை நம்பி அழிந்துவிடக் கூடாது. தவறான விமர்சனங்களை உடனுக்குடன் சந்தித்தே ஆக வேண்டும். விமர்சன வாள் நமது சினிமாவின் உண்மைக் காவலர்களிடம் இருக்கிறதா என்பதை நாம் ஒவ்வொரு கணமும் இனி அவதானிக்க வேண்டும்.

ஒளி படைத்த கண்ணினாய் வாராய் ! உறுதி கொண்ட நெஞ்சினாய் வாராய் ! என்று வரவேற்க வேண்டிய பிரகாசமான காலத்தில் புலம் பெயர் சினிமா கால் பதித்துவிட்டது. பூனை கண்ணை மூடுவதால் உலகம் இருண்டுவிடாது என்பதை விமர்சகர்கள் ஏற்று சரியான விமர்சனம் தரவேண்டும். விமர்சகரும், படைப்பாளியும் கைகோர்த்து சரியான பாதையில் நடப்பதே
நல்ல விமர்சனமாகும். அதை வருங்காலங்கள் தரட்டும்.

11.06.2005

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(5 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 01 May 2024 13:15
TamilNet
HASH(0x56263933c530)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 01 May 2024 13:15


புதினம்
Wed, 01 May 2024 13:15
















     இதுவரை:  24850918 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3859 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com