அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow நூல்நயம் arrow அந்தக் கரையில்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அந்தக் கரையில்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: விக்கி நவரெட்ணம்.  
Sunday, 03 July 2005

அந்தக்கரையில்-ஏ.ஜோய்பிறந்தது முதல் இறப்புவரை மனிதன்  எதையாவது  தேடிக்கொண்டே இருப்பான். இந்தக் கவிஞனின் ஆரம்பமே  தேடல்தான். “இச்சைகளும் எச்சிகளும் மிச்சமாக,  பொருளீட்டலுக்கான தேடலில், மானிடம் மரிக்கிறது… வாய்க்கும்  வயிற்றுக்குமான போராட்டத்தில், வாழ்தலின் ஜீவன்  கருக்கப்படுகிறது… இருந்தும் இதுவரை தேடிக் கிடைக்காத  மனிதம், இன்றோ நாளையோ என்றோ கிடைக்கும் வரை, என்  தேடல் நீளும்”   கவிதை வரிகளின் ஆரம்பமே இதயத்தை  இங்கிதமாக வருடிச் செல்கிறது.
தேடலில் சிக்கிகொண்டிருந்த கவிஞனின் மனமோ புயல்  காற்றிலே சிக்கிய காவோலையாக தத்தளிக்கிறது. சமகால  நினைவுகளை அலைகளோடு அளவளாவியே  கவிதையாகிப்போன வார்த்தை வீச்சுக்கள் கூறுகின்றன. “கால்  தெறிக்க ஓடி ஒழிந்து கொண்ட பதுங்கு குழி, வழிந்து  வற்றிப்போன என் கண்ணீர்த்துளி, புகைந்து புகைந்து  குறுகிப்போன என் பெருங்குடல், புரியவில்லை எனக்கு எதுவும்  புரியவில்லை, எனக்குள் நானே தொலைந்து தொலைந்து உயிர்  காவும் வெற்றுடலாய் நான்”. அந்த அர்த்தமற்ற வாழ்வை அழிக்க  நினைத்து, எம்மை, எம் நினைவுகளை ஒரு கணம் தன்னோடு  தமிழீழ மண்ணில் இழுத்து நிறுத்தி யார் வருவார் என்னுடன்  கரம்பற்றி வழிகாட்ட என்று கேட்கிறார். உண்மையைக் கூறப்  போனால் அந்தக் கவிதை நாற்காலியை இழுத்து அதில்  கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் இந்தக் கவிஞன் என்றுதான்  சொல்ல வேண்டும்.
காதல் என்ற இரு உயிர்களின் உணர்வுகளை சங்ககாலம்  தொட்டு சேர்தல், பிரிதல் ஊடல் என்பது காதலர்க்கே உரியது  என்பது எல்லொருக்குமே தெரியும். சிந்து பாடிவரும் தென்றல்  அந்த நிஜ முகங்களை ஒருமுறை உரசிச் செல்லும்போது காதல்  அங்கே மலர்ந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய  அவசியமில்லை. பிரிதல் என்பதை அவர் அற்புதமாக  விபரித்திருக்கிறார். “குருதியிலே குளிப்பாட்டி செவ்வாயில்  தலைகாட்ட, அவள் பட்ட துன்பமெல்லாம் தென்றலாய் பிரவகிக்க  வார்த்தையாலே சொல்லிமாளா…. நீளும் கொலைக்கரங்கள்  உறவைத் துண்டிக்க நீண்டது எங்கள் தூரம். எனக்கான அவளின்  காத்திருப்பு எனக்குப் புரிகிறது. அவளுக்கான என் முகம்  எனக்குள் இருக்கிறதா?” இந்த நிஜ முகம் உண்மையில் தன்  காதலை தொட்டிலில் இட்டுத் தாலாட்டிப் பார்த்திருக்கிறது  என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழீழ மண்ணின் வரலாற்றில் புதிய புறநாநூறு. காற்றாலும்,  மழையாலும், ஏன், காலத்தாலும் அழிக்கமுடியாத  வீரகாவியத்தை, மார்பிலே புண்பட்டு மரணிக்கும் மண்ணின்  மைந்தர்களின் எழுச்சியிலே உலக அரங்கை துயில் எழுப்பி  சமாதானத்தை கோர்வையாக்கிப் பார்க்கத் துடிக்கும்  நிகழ்காலத்தை சுட்டிக்காட்ட “நம்பிக்கை வேர்கள் துளி  விடுகிறது என்ற நம்பிக்கையில் நகர்கிறது பேச்சுவார்த்தை,  இழப்புகள் தந்த வலிகளில் மயிலிறகாய் மருந்து தடவும்  சமாதானச் செய்திகள்… நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்பட்டால்  சமாதானம் நிச்சயம், உரிமைகள் மறுக்கப்பட்டால் மீண்டும்  போர்வாள் தரிக்கப்படும்” என்றே போர்வாளாக நிமிர்ந்து நிற்கும்  பேனா கொட்டியது நீல நிறமா? அல்லது குருதியா?  போர்முனைக்கு புதிய பாய்ச்சலுக்காய் தயாராகுங்கள் என்றே  முரசு கொட்டிப் பார்த்திருக்கிறார் இங்கே.
மெய்யுரைப்பதுவும் பொய்யுரைப்பதுவும், மனிதவியலில் தவிர்க்க  முடியாத ஒன்று. ஏதாவது ஒரு காரணத்திற்காவது பொய்யுரைக்க  வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கவிஞனின் அகதி வாழ்வில்  பொய்யும் மெய்யும் கலந்து கவிநயம் பேசுகின்றது. அகதிகளின்  கூடாரத்தில் கவிஞன் மெய்யுரைக்கிறான் “அகதிகளின்  கூடாரத்தில் மெய்யுரைத்தபோது, அவர்கள் சிரித்ததும், நான்  அழுததும், பொய்யுரைத்தபோது அவ்ர்கள் அழுததும் நான்  சிரித்ததும், அப்பொழுதெல்லாம் நான் நானாக இல்லை, என்று  அம்மாவுக்கு ஓர் கடிதம் எழுதுகிறான் வெளிநாடு என்றவுடன்  ஏக்கமுடன் பார்த்து நின்றேன் இங்கு வந்தபின்  தான்  தெரியுதம்மா நம்நாட்டின் பெருமையை என்று இந்தக்கரையில்  நின்று அந்தக்கரையை சிந்தித்துப் பார்க்கும் பொழுதிலே குருதி  தோய்ந்த நம் தேச வீதியெல்லாம் துள்ளித்திரிந்த காலமம்மா,  அன்றிருந்த சந்தோசம் இன்று எனக்கில்லையம்மா, சொந்த  மண்ணை மறந்து ஓடிவந்தவன் நானம்மா, இந்நிலை எனக்கு  வேண்டுமம்மா” என்று இந்தக் கரையிலிருந்து அந்தக்கரை  ஞாபகங்களை ஒவ்வொரு கணமும் நம் கண்முன்னே கொண்டு  வந்து ஞாபகம் வருகிறதா? ஞாபகம் வருகிறதா? என்றே  நிறுத்திவைத்துப் பார்த்திருக்கிறார்.
“புதையும் மணலும் ஊரியுமான பாலை நிலத்தில் நான் தனித்தே  பயணித்திருந்தேன். எங்கெல்லாம் தொண்டை வறண்டு தாகம்  எடுத்ததோ அங்கெல்லாம் மண் பானை நிரம்பிய குடிநீரைக்  கண்டேன்”. அந்தக் காலத்தில் குடிநீர் தேடி நாம் எங்கும் போக  வேண்டியதில்லை அந்த வாசல்களில் தெரியும் மண் பானையின்  சுகந்த நீர் வறண்ட தொண்டையை நனைப்பதுதான் எனக்கான  உலகம் என்று சூரிய வெப்பத்தை தணிக்க வைத்துவிட்டு,  கனவுகளில் சஞ்சரித்து விடுகிறார். நிஜமான வாழ்வு ஒருமுறை  என்ன பல முறை ரசித்துப் பார்க்கும் வாழ்வு. மனசுகளைத்  தொட்டு சிறகடித்துப் பறந்த வாழ்வு பாடசாலை வாழ்வு.  “பூப்பெய்திய பூவையெல்லாம் விழிகளில் நாணேற்றும்… அரும்பு  மீசைக்காரரெல்லாம் பள்ளி வழிபார்த்து விழியசைப்பர்…  முழுமையான விடியல் ஒன்று முரசு கொட்டி அரங்கேறும்..”   வயதானாலும் மீண்டும் எனக்குள் வாலிபம் குதிரை வேகத்தில்  துள்ளி ஓடுகிறது. அந்த வேம்படி, சுண்டிக்குளி கன்னியர் மடத்து  கன்னியர் அணிவகுத்துச் சென்ற நினைவலைகள் கடலலை  நுரைப் பூக்களாக என் மனதை நனைத்துச் செல்கிறதென்றால்  இளைஞன் இவன் கனவுகள் நிஜமாகும் வரை மனத்துள் பூத்துக்  குலுங்கும் கவிப் பூஞ்சோலைக்கு நீர் வார்த்துக் கொண்டே  இருக்க வேண்டும்.
கவிஞர் எ.ஜோய்கனவுகளில் மிதந்தாலும் மனதில் மிதமிஞ்சிய ஏக்கங்கள்  ஒவ்வொருவருக்கும் நிறைந்திருக்கும். ஆனால் இங்கே கவிஞர்  சொல்ல வந்த ஏக்கம் என்னவென்றால், வெளிநாட்டு ஏக்கம்  அக்கரைக்கு இக்கரை பச்சை, இக்கரைக்கு அக்கரை பச்சை.  இன்றைய அன்றைய நிகழ்வுகளை சமூகம் இன்னும் ஏன் புரிந்து  கொள்ளவில்லை என்பதை தம்பி எப்படி கூறுகிறார் என்றால் “  வசதியான வாழ்வுக்காய் இருப்புக்களைத் தொலைத்து, பயண  முகவர் வாசலில் நாயாய் இன்னும்… வீட்டை விற்று கல்வியை  இழந்து உறவுகளைப் பிரிந்து மண்ணை மறந்து இழப்புகள்  இன்னும் தொடர்கிறது எல்லாவற்றையும் தொலைத்தாலும்  வெளிநாட்டு மோகம் யாருக்கு?, அங்கே இருப்புக்களைத்  தொலைக்கும் உள்நாட்டுத் தம்பிக்கு…” அந்தக்க்ரையினிலே  இன்றைய ஜதார்த்தமும் இதுதான், தாய் நாட்டு ஏக்கம்  தேடியதைக் கரைக்கும் மேல்நாட்டு அண்ணனுக்கு. எனவே  ஏக்கங்கள் தொடரும் இழப்புகளும் தொடரும். இருந்ததலும்  ஜாக்கிரதை என்கிறார் மிகப் பவ்வியமாக.
ஏன்? என்று கேட்டால்! “அலையடிக்கும் ஓசையதில்  அடங்கிவிட்ட எம் வாழ்வு, புயலடித்துப் போனதால் புலம்  பெயர்ந்தோம் இம் மண்ணில்… குருநகரரம் திருநகரின்  கரையோரம் கால் பதித்து அலையோடு கவிதை பேசி காற்றோடு  போர் செய்து படகேறித் தினம் சென்று மீனோடு மீண்டும் வந்து  பானையோடு சோறுண்டு மகிழ்வோடு வாழ்ந்து வந்த  இனிமையான நாட்கள் எங்கே… வந்த மண் என்றும் சொந்த மண்  இல்லை சொந்த மண் மகிழ்வு வந்த மண்ணில் இல்லை எந்த  மண் சென்றாலும் எங்கள் மண் மறவாது சிவந்த மண் விடியும்  நாள் சில கால தூரமில்லை” என்ற மண்ணின் விடுதலை,  விடுதலை, எண்ணமெல்லாம் விடுதலைக்காக வேண்டி கவி மலர்  தூவிப் பார்த்திருக்கிறார்.
விடியாத இரவாக இருந்தாலும், மழைக்கால இரவாக இருந்தால்!  புறப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. சில்லென்ற குளிரோடு கந்த்த  இதயம் ஒன்று கதை சொல்கிறது இங்கே. “ காற்று  வெளியெங்கும்  கரைந்து, காணாமல் போகும் என் கடைசி  ஓலம்… அந்நிய மண்ணில் நான், என் துண்டாடப்பட்ட  சிறகுகளுடன், எல்லாம் இழந்த பின்னும் என் உயிர் துடிப்பது  ஏன்” மண்ணின் பாதம் தொட துண்டாட முடியாத தன்  நினைவுகளுடன் கவிஞன் விடியாத இரவொன்றில்  போராடுகிறான். ஏன்? என்றால்! அந்த ஆனி பத்து எண்பத்தாறு  மண்டை தீவுக்கடலில் சமாதானம் சாகடிக்கப்பட்ட நாளை  அவனால் மறக்க முடியவில்லை “அதிகாலை விடியுமுன்னே,  படகேறிச் சென்றவரை விடியாத இரவொன்று விழுங்கிய கதை  கேளும் துடியாகத் துடித்தனராம், பாவிகள் இரங்காது குதறியே  கொன்றனராம் ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தொரு பேர்கள்  ஐயா…! மலர் தூவ வாருங்கள் எம் மைந்தரைப் போற்றுங்கள்”  என்று உணர்ச்சிக் கோபுரமாக உயர்ந்து நிற்கும்  ஜோய் அங்கு  ஏதும் இல்லை என்று அழுகிறான். எங்கே என்று கேட்க மனம்  துடித்த போது பாக்களால் என்னை அழவைத்துப்  பார்த்துவிட்டான். “என் சுவாசம் விரும்பிய காற்றுக்கூட  அங்கில்லை கந்தகக் காற்றில் என் மூச்சு மணிக்கு முப்பது  தடவை மூர்ச்சையானது. செல்பட்டு மடிந்த தாயின் மார்புக்  காயங்களை கவ்விப் பிடித்து பாலருந்தியதாம் ஒரு பிள்ளை”.  உணர்வுகள் பீறிட்டுப் பாய்கின்றன மயிர்களோ சிலிர்த்தெழுந்து  நிற்கின்றன. கோரத் தண்டவமாடிய இராணுவ வெறியர்களால்  சின்னாபின்னமாக்கப்பட்ட நினைவுகளால் எங்கள் மனத்திரையை  கூரிய கத்தியால் கிழித்துப் பார்க்கிறார். பழைய நினைவுகளைத்  தவிர அங்கு ஏதுமில்லை.
மரணிக்காதவர்களை மெல்ல மெல்ல கொல்லும் விசமாய்  புலப்பெயர்வு. அரண்டு புரண்டு உறக்கம் தேடித் தோற்றுப்  போகும் நிகழ்காலத்தை சிந்திக்க வைத்துவிட்டு இந்தக்  கரையிலிருந்தபடியே கையுலிருந்த கடிவாளத்தை அப்படியே  லாவகமாகத் திருப்புகிறார். “விமான ஓட்டியே விமானத்தைத்  திருப்பு… எனது பாதை எனது தேடல் எதுவுமே இங்கில்லை என்  சிந்த்னையைக் கட்டவிழ்க்கும் கவிதைகளும் உயிரோடு உறவாடி  உணர்வுகளுக்குள் சில்மிசம் செய்யும் காதலியும் அந்தக்  கரையினிலே தானே” என்று எலும்பு தாங்கும் தசைத்  தொகுதிக்குள் தொங்கும் இதயத் துடிப்பின் அனுபவத்தைக்  கூறிவிட்டு மீண்டும் வா என்கிறார்!
நெஞ்சைத் தொட்டு விட்டாரா? இல்லை! மனிதரைவிட,  மலர்களைவிட, தான் வடித்த கவிதைகளைவிட, தன்னைவிட,  தன்மனைவியைவிட நேசித்த முதல் பிள்ளையாக இவன்  வளர்த்த அந்த நன்றியுள்ள பிராணியை “ என்னை மொளனத்தின்  படுகுழியில் தள்ளிவிட்டு நீ மட்டும் ஏன்? மரணத்தின் பாதளத்தில்  இறங்கிவிட்டாய்?” தான் வளர்த்த செல்லப் பிராணியை நினைத்து  அழுதுவிட்ட இக்குழந்தையை தாய்மையின் தாலாட்டு இங்கே  இதழ்விரிக்கிறது. இது எங்கள் மண்ணுகேயுரிய வாசம் “என்  கருவறையில் பூத்துவந்த விடிகாலைச் சூரியனே சொளக்கியமா?  சிறகு ஒடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும்  உறவுகளிடத்தில் கையேந்தி பிச்சை கேட்டு சிறை உடைத்து  உன்னை சுதந்திரப் பறவையாய் வெளிநாடு பறக்க விட்டேன்.  மகனே! மண்ணையும் தாயையும் நேசிக்க மறந்தவன் தன்னையே  இழந்தவன்” என்று கார்த்திகைப் பூ மணக்கும் தாய் மண்ணின்  வாசமதை தாய் எப்படி உணர்த்துகிறாள் என்பதை தம்பி தன்  கவிதை வரிகளால் ஊசி முனையில் உணர்வுகளால் நிற்க  வைத்து விட்டு தாய்க்குப் பின் தாரம் தான் என்ற அந்த  அன்பிற்காக ஏங்கும்போது நாளையாவது கிடைக்குமா? எது அந்த  அன்பு! என்ற ஏக்கத்தின் விளிம்பில் நின்றுகொண்டே  “தொடுகையும் புணர்தலும் அன்பும் அரவணைப்பும்  அன்னைப்போல் அவனைப்போல் எனக்கும் நாளையாவது  கிடைக்குமா? இல்லை நீடிக்குமா வாலிபத்திற்கும்  வயோதிபத்திற்கும் இடையில் என் வயது கணிக்கப்பட  பெருமூச்சின் வெப்பத்தில் சாம்பலாகிப் போகும் என் திருமணம்  என்ற பந்தம் கிடைக்கும் வரை ஏங்கும்”. இளைஞர்களுகே உரிய  கவிதை வரிகள். இவை! அந்த அரவணைப்பு கிடைக்கும்வரை  யாரிடம் போவார் இவர். அது வரைக்கும் ந்ண்பனிடம்  முறையிடுகிறார்.
இரத்தம் சொட்டச் சொட்ட வந்து நிற்கிறார். பூமிக்குள்  கல்லுக்கும் கல்லுக்கும் நடந்த போராட்டம் நீரும் காற்றும்  கரையுடன் மோதி ஜீவத் துடிப்புடன் நடத்திய போராட்டம். சுனாமி  என்ற பேரலை எல்லோர் கண்களிலும் கண்ணீரை பிறப்பெடுக்க  வைத்த போது இந்தக் கவிஞனால் மட்டும் எப்படி இந்தக்  கவிவரிகளை எழுத முடிந்தது “உன் புகழ்பாடிய என் கவிதைகள்  கண்ணீர் வடிக்கவும் முடியாமல், காறி உமிழவும் முடியாமல்,  கலங்கியே விழிக்கிறது காரணம் கண்ணீரிலும் நீர் உண்டு”.  கவிஞனே உன் கவிக்குள் கொஞ்சம் புகுந்து நீ கூறிய  வார்த்தைகளை எடுத்து நான் கூறுகிறேன் நீ வார்த்தைகள் அற்ற  சூனியத்துள் தூக்கி வீசப்பட்டாலும் உன் கவிதைகள்  ஒவ்வொன்றும் இனி எங்களுக்கானது. நீண்டநெடிய  காத்திருப்புடன் காத்திருந்தாலும் இந்த நாள் நீ எதிர்பார்த்திருந்த  அந்த நாள்.
நிறையைக் கூறிவிட்டேன்
குறையையும் கூறவேண்டியவனாகி விட்டேன்.
நூலின் அளவு
தாளின் தன்மை
நூலின் விலை இங்கு குறிப்பிடப்படவில்லை.

வெளியீடு:சிறி பாரதி பதிப்பகம் - பிரான்ஸ்

நூல் பெற விரும்போர்: kappiya@hotmail.com


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 14:09
TamilNet
HASH(0x5555590de470)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 14:09


புதினம்
Mon, 15 Jul 2024 14:09
     இதுவரை:  25361684 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2744 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com