அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow குயிஸ்தாவ் ப்ளோபேர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குயிஸ்தாவ் ப்ளோபேர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Wednesday, 06 July 2005

Each dream finds at last its form; there is a drink for every thirst, and love for every heart. And there is no better way to spend your life than in the unceasing preoccupation of an idea—of an ideal.
Gustave Flaubert (1821 - 1880)


Gustave Flaubertஒன்பது வயதிலேயே எழுத ஆரம்பிக்கும் குயிஸ்தாவ் ப்ளோபேர், தனது இளமைக் காலத்திலேயே பல ஆக்கங்களின் படைப்பாளியானார். சுயசரிதப் போக்கிலான பல படைப்புகள் அவரின் பிற்காலத்தைய எழுத்துக்களைப் புடம் போடும் அடியெடுப்புகளாக அமைந்தன. பதின்முன்று வயதில் தனது நண்பர் ஒருவருடன் இணைந்து சிறுகதைகளையும் நாடகக் குறிப்புகளையும் கொண்ட "கலையும் முன்னேற்றமும்" என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் உருவாக்கினார். துரதிஸ்ரவசமாக இவ்விதழ் இரண்டாவது வெளியீட்டுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தனது பதினைந்தாவது வயதில், தாய் தந்தையருடன் விடுமுறையை கழிக்கும் நாட்களில், ப்ளோபேர் திருமதி. எலிஸா ஷ்லெசிஞ்சர் எனும் பெண்ணின் மீது காதல் கொள்கிறார். இக்காதலே இவரின் நாவல்களின் மூலஉற்றுக்கண்ணாகப் பரிணமித்தது. இச்சந்திப்புப் பற்றி ப்ளோபேர் பல இடங்களில், குறிப்பாக "ஒரு பைத்தியக்காரனின் நினைவுகள்" எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பதினெட்டு வயதாகும்போது தத்துவக் கல்வி பயில இணையும் ப்ளோபேர் இரண்டே மாதங்களில் அதிலிருந்து 'ஒழுக்கமின்மை' க்காக விலக்கி அனுப்பப்படுகிறார். இறுதியில், தந்தையாரின் கட்டாயத்தின் பேரில் (அவரது நொர்மாந்திப் பிரதேசத்திலிருந்து) பரிசுக்கு சட்டப்படிப்புப் படிக்க அனுப்பப்பட்டபோதும், ப்ளோபேருக்கு அதில் உண்மையான ஈடுபாடிருக்கவில்லை. இலக்கியமே அவரின் இலக்காக இருந்தது. இரண்டாவது வருடமும் தனது சட்டப்பரீட்சையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நரம்பு வியாதியால் படிப்பை நிறுத்தி விட்டு ப்ளோபேர் ஒய்வெடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறார்.

"education sentimentale" (1845) என்ற நாவலின் முதலாவது வடிவத்தை எழுதி முடிக்கும் தறுவாயில் ப்ளோபேருக்கு 24 வயது மட்டுமே. இந்நாவல் பிற்காலத்தில் (1869) இவரால் மீள எழுதப்பட்டு இரண்டாவது வடிவம் பெறுகிறது.

ஹென்றியும் யூய்ல் ம் இரு ஆடவப்பருவ நாட்டுப்புறத்தவர்கள். அனேகமானவர்கள் செய்வதுபோல், வாழ்வில் முன்னேறி வெற்றிபெற தலைநகரான பரிசுக்குச் செல்லும் ஹென்றி, அங்கு ஏற்கெனவே திருமணமாகி வாழ்வில் சலிப்படைந்திருக்கும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், இருவருமாக அமெரிக்கா செல்கிறார்கள். விரைவிலேயே மீண்டும் நாடு திரும்பும் இவர்களிடையே பிரிவு வர, ஹென்றி வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்துகிறான். யூய்ல் எங்கும் போகாமல் நாட்டிலேயே இருக்கும் போது நடிகை ஒருவருடன் உறவு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் காண்கிறான். அந்த ஏமாற்றத்திலிருந்து தன்னை விடுவிக்க கலையீடுபாட்டில் தன்னை மறக்க முயற்சி செய்கின்றான்.

இங்கு யூய்ல் ன் வாழ்க்கைப் பயணம் ப்ளோபேரின் வாழ்க்கைப்பயணத்தின் சாயலைக் கொண்டுள்ளது. நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்ட பின் (1844) அவரும் இதே போன்ற போக்கில் தன்னை வழிநடத்துகிறார். "education sentimentale"  ல் முன்வைக்கப்படும் "தோற்றவர் வெல்கிறார்" என்னும் பாடத்தை நாவலாசிரியர் தன் வாழ்க்கையிலேயே நடைமுறைப்படுத்துகிறார். சுயத்தை மறந்து கலையுலகுக்குள் முற்றுமுழுதாகத் தன்னை அர்ப்பணித்துவிடுவது. ஏமாற்றத்தைச் சுமந்து வரும் யதார்த்தத்தின் முன்னால் ஏற்படக்கூடிய தோல்விகளை, கலையுலகின் புனைவுவெளிகளில் போருக்கழைத்து வெற்றிகண்டுகொள்வது என்பவையே யூய்ல் ன் (அல்லது ப்ளோபேரின்) வாழ்முறையாகிறது. எழுதுதல் என்பது அனைத்தினதும் மீதான அடங்காத பெருவிருப்பு என வரையறை செய்யப்படுகிறது. "இயற்கை வழங்கிய பேரன்பை ஓருயிரிலோ அன்றில் ஓர்பொருளிலோ அல்லாது, அவன் அதைத் தன்னைச் சுற்றிவர எங்கும் விரவினான்" என யூய்ல் ஐ வர்ணிக்கும் ப்ளோபேர் இங்கு சுயத்திற்கும், சுற்றியுள்ள பிரபஞ்சத்திற்குமான இடைவெளியை இல்லாமலாக்குவது பற்றிக் கூறுகின்றார்.

"அகன்று செல்கிறது கடல். நீண்டு செல்லும் அடிவானம் மேகங்களுடன் கலந்து எல்லையிழக்கிறது. நோக்கு, செவிகொடுத்துக்கேள், உற்றுநோக்கி à®‰à®³à¯à®³à¯à®° ரசி, ஓ! பயணிப்பவனே ! ஓ சிந்தனையாளனே ! உன் தாகம் தணிக்கப்படும். உன் வாழ்வு முழுவதும் ஒரு கனவாகக் கழியும். ஏனெனில், உனது ஆத்மா ஒளியைநோக்கியும், அந்தமின்மையை நோக்கியும் பறப்பதை உன்னால் உணரமுடியும்." யூய்ல் ன் இம்மனோநிலையே ப்ளோபேரின் மனோநிலையுமாகும். பிற்காலத்தில் கொங்கூர் எனும் தனது நண்பரான ஒரு எழுத்தாளருக்கு " என்னிலிருக்கும் 'நானை' எப்போதுக்குமாக என்னிலிருந்து வேரறுத்து விடவேண்டும்" என்று கூறியதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
"education sentimentale"  முழுமைபெற்ற இன்னொரு வடிவத்தில் 1869 ல் வெளியாகியது.

ப்ளோபேரை உலகுக்கறிய வைத்த நாவல்களில் மிக முக்கியமானதும், ப்ளோபேரின் பெயருடன் இறுக்கமாக ஒட்டியிருப்பதுமான நாவல் "Madame Bovary" ஆகும். பெண்ணுளவியலின் நுணுக்கங்களையும், 19 ம் நூற்றாண்டுச் சூழ்நிலையில் தோற்றுவிக்கப்பட்ட சமூகவிதிகள் பெண்ணை எவ்வாறு கட்டிப்போட்டு அவளின் சுயத்தை அழித்து, அவளின் வாழ்வை எப்படிச் சூறையாடுகிறன்றன என்பதையும் இந்நாவல் வெளிக்கொணர்கிறது. கணவனானவன் மனைவியின் கனவுகளுக்குத் தீனி போட இயலாத நிலையில் அவன் எவ்வாறு தன் மனைவியை துன்பங்களின் கரங்களில் ஒப்படைத்துவிடுகிறான் என்பதையும் இந்நாவல் வெளிச்சம் போடுகிறது. செப்டம்பர் 1851 லிருந்து மே 1856 வரைக்குமான காலத்தில் எழுதப்பட்ட இந்நாவல் முழுக்க முழுக்க யதார்த்த உலகைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பாகவே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ப்ளோபேர் திட்டவட்டமாக ரோமான்ரிசப் போக்கிலிருந்து விடுபட்டு யாதார்த்வாதப் பாணியில் தன் பாதையைத் திருப்பியிருப்பதை இந்நாவல் தெளிவாகப் புரியவைக்கிறது.

1856 ல் இந்த யதார்த்தப் போக்கு நாவல் 'பரிஸ் றிவியூ' ல் தொடராகப் பிரசுரமாக்கப்பட்டபோது, இதன் பல பகுதிகள் வெட்டப்பட்டன. சமுக ஒழுக்க விதிகளுக்கு முரண்பட்டது இந்நாவலெனக் குற்றம் சாட்டப்பட்டு ப்ளோபேர் மீதும் வெளியீட்டாளர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் குற்றத்தை நிராகரித்தது. இவ்வழக்கு நாவலுக்கான மிக உயர்ந்த விளம்பரமாகவும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் தேடிக்கொடுத்ததாகவும் , எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணிக்கையில் அதிகமான விமர்சனங்களைத் தோற்றுவித்ததாகவும் இருந்தது.

சுயத்தில் வாழ்ந்து உணர்ந்து எழுவது ப்ளோபேரின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இன்னொரு உயிராகத் தன்னைப் பாவித்து, அவ்வுயிரின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது இவ்வெழுத்தாளரின் வெற்றியின் ரகசியமாகவிருந்தது. "திருமதி போவாறி நானேதான்" என்று ப்ளோபேர் கூறியது சுட்டிக்காட்டப்படவேண்டியது. 3600 பக்கங்கள் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, வெட்டிக்கொத்தி, விளைவாக வந்த நாவல்தான் "மடம் போவாறி.". இப்பெண் நஞ்சருந்தித் துன்புறும் காட்சியை எழுதிய காலத்தில் தான் பலதடவை வாந்தியெடுத்ததாகவும், உணவருந்த முடியாமல் துன்பப்ட்டதாகவும் ப்ளோபேர் தன் கடிதத் தொடர்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
"சலாம்போ" நாவலும் இவரது நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
அல்பிரட் து மியூசே
மடம் போவாறி (Madame Bovary)
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 14:19
TamilNet
HASH(0x555d1b99e7e8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 14:22


புதினம்
Thu, 18 Apr 2024 14:22
















     இதுவரை:  24777248 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2755 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com