அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow திருமலையில் 'பாரிஸ் கதைகள்'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


திருமலையில் 'பாரிஸ் கதைகள்'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இராவணன்  
Thursday, 28 July 2005

திருமலையில் பாரிஸ் கதைகள் சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்

கடந்த 24.07.2005 அன்று அப்பால் தமிழின் வெளியீடான ‘பாரிஸ் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு திருக்கோணமலை முகாமைத்துவ நூல்நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு சமீபத்தில் உயிர்நீத்த புலம்பெயர் எழுத்தாளர் க.கலைச்செல்வன், ஈழத்து படைப்பாளிகளான செம்பியன் செல்வன், பேராசிரியர் நந்தி, சொக்கன் ஆகியோருக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்தது. அப்பால் தமிழ் குழுமத்தைச் சேர்ந்த வை.ஜெயமுருகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர்களான யதீந்திரா, நந்தினிசேவியர், கவிஞர் சு.வில்வரெத்தினம் இலக்கியச் செயற்பாட்டாளர் திரு.சி.கிருஸ்னானந்தன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். ஜெயமுருகன் அப்பால் தமிழ் இணையத்தளம் பற்றியும் அப்பால் தமிழின் வெளியீட்டு முயற்சிகள் பற்றியும்; தலைமையுரையில் குறிபிட்டார்.

புலம்பெயர் இலக்கிய முயற்சிகள்  மிகவும் சுருங்கிப்போய்க் கொண்டிருக்கும் சூழலில்தான் இத்தொகுப்பு வெளிவருகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர் இலக்கியச் செயற்பாடுகள் அதிகமாக இருந்தன. குறிப்பாக 83 களுக்கு பின்னர் தீவிரமடைந்த யுத்தச் சூழல் இயக்க முரண்பாடுகள் போன்றவற்றால் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்தனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் பலர் ஆரம்பத்தில் தமது ஈழத்து நினைவுகளை பதிவுகளாக்கினர். அரசியல் காரணங்களால் புலம்பெயர்ந்தவர்கள் தங்களது அரசியல் நிலைப்பட்டு படைப்புக்களை வெளியிட்டனர். அவை அதிகம் விடுதலைப்புலிகளை விமர்சிக்கும், திட்டித்தீர்க்கும் படைப்புக்களாகவே இருந்தன. எனினும் 90 களுக்கு பின்னர் இந்நிலைமைகள் அற்றுப்போய் தமது வாழ்விடங்களான புலம்பெயர் சூழலில் அன்றாடம், தாம் எதிநோக்கும் வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்யத்தலைப்பட்டனர். ஆரம்பத்தில் எதிர்நிலைப்பட்டு சிந்தித்த பலர் தமிழ்த்தேசிய அரசியலுடன் தங்களை இணைத்துக் கொண்டதும் 90 களுக்கு பின்னரே அதிகம் நிகழ்ந்தது. அத்தகையதொரு இலக்கியப்போக்கின் நீட்சிதான இந்த பாரிஸ்கதைகளுமாகும். இதிலுள்ள கதைகள் நம்மவர்களின் பாரிஸ்வாழ் அனுபவங்களின் பதிவாகும். இவ்வாறு தனது அறிமுக உரையில் யதீந்திரா அவர்கள் குறிபிட்டார்


தொடர்ந்து கருத்துரையில் நந்தினிசேவியர் அவர்கள் பாரிஸ் கதைகள் என்னும் இத்தொகுப்பானது சிறந்த கதைகளைத் தொகுத்தல் என்னும் நோக்கத்தில் செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை திரு.கி.பி. அரவிந்தன் அவர்கள் தனது முன்னுரையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் இதனைக் கருத்தில் கொண்டுதான் நாம் இதிலுள்ள கதைகளைப் பார்க்க வேண்டும். அதேவேளை அவர் தரமான கதைகளை தொகுக்கும் ஆர்வத்தில் பலருடன் தொடர்பு கொண்டிருக்கின்றார் ஆனால் அவர்களது ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அதற்கும் அவரது முன்னுரையே சான்றாக இருக்கிறது. இன்று புலம்பெயர் சூழலின் குறிப்பிடத்தகு எழுத்தாளர்கள் பாரிஸில் இருப்பதாகவே நாம் அறிகிறோம். அதே வேளை புலி எதிர்ப்பு எழுத்தாளர்களும் பாரிஸில்தான் இருக்கிறார்கள். அரசியல்காரணங்களால் அவ்வாறானவர்கள் இத்தொகுப்பிலிருந்து விலகியிருக்கக் கூடும்.
உண்மையில் இக்கதைகள் பாரிஸில் வாழும் நம்மவர்களின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றன. ஆனால் பல கதைகள் சிறுகதைக்குரிய குணாம்ச, தொழில்நுட்ப ரீதியில் தோல்வியடைந்திருக்கின்றன என்றுதான் நான் பார்க்கிறேன். குறிப்பாக கலாமோகன் கி.பி.அரவிந்தன் கலைச்செல்வன் ஆகியோரின் கதைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் சி.புஸ்பராஜனின் கதையொன்றும் இடம்பெற்றுள்ளது. ஓவ்வொருவரும் தங்களது வாழ்வியல் அனுபவங்களையும் நெருக்கடிகளையும் சொல்ல புஸ்பராஜன் தண்ணியடிப்பதற்கு கோழி இறைச்சி சாப்பிடுவது குறித்து எழுதியிருக்கிறார். ஒருவேளை அவரது பாரிஸ்வாழ் அனுபவம் அத்தகையதாக இருக்கலாம். இப்பாழுது சிலர் பின்நவீனத்துவம் குறித்து பேசுகின்றனர். இது அப்படியொரு பின்னநவீனத்துவக் கதையாகக்கூட இருக்கலாம். மொத்ததில் இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் ஒரு நாவலுக்குரிய  விடயப்பரப்பை கொண்டிருக்கிறது. என்று குறிப்பிட்ட நந்தினிசேவியர் இன்னும் பல கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து  திரு.சு.வில்வரெத்தினம் அவர்கள் பேசும்போது …
இத்தொகுப்பானது பாரிஸ் வாழ்வியல் அனுபவங்களை சித்திரிக்கிறது ஆனால் பாரிஸ் வாழ்வனுபவங்கள் என்பது பாரிசுக்கு மட்டும் உரியதல்ல அது முழு புலம்பெர் சூழலுக்கும் உரியதாகும். ஆரம்பத்தில் தாயக நினைவுகளை வெளிப்படுத்திய புலம்பெயர் படைப்பாளர்கள் பின்னர் தாங்கள் வாழநேர்ந்த அந்தந்த சூழுல் குறித்து சித்தரிக்கும் படைப்புக்களை வெளிக்கொணர்ந்தனர். அவற்றின் நீட்சிதான் இந்த பாரிஸ் கதைகள் என்னும் தொகுப்பாகும். ஆனால் புலம்பெயர்வு என்பது இன்னொரு தேசம் குறித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அது சொந்த நாட்டிற்குள்ளும் நிகழலாம். அதன்காரணமாகத்தான் இப்பொழுது புலம்பெர் இலக்கியம் என்னும் சொற்பதம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறான எழுத்துக்கள் புகலிட இலக்கியங்கள் எற்று குறிப்பிடுவதுதான் சரியானது என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் சிறந்தது என்று சொல்ல முடியாது நண்பர் நந்தினிசேவியர் குறிபிட்டது போன்று சிறுகதைக்குரிய சில குணாம்சங்கள் வழி பார்த்தோமானால் இக்கதைகளை இன்னும் செழுமைப்படுத்துவதற்கு இடமுண்டு. அதேவேளை கி.பி அரவிந்தன் அவர்கள் எழுதியிருக்கும் முன்னுரை மிகவும் முக்கியமானது. அதனைப்பார்க்கும்போது பாரிஸ் வாழ் தமிழர்கள் குறித்து, ஓர் ஆய்வைச் செய்யவேண்டுமென்ற ஆர்வம் அவருக்குள் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே ஒருவேளை இத்தொகுப்பிற்கான அடித்தளத்தை இட்டிருக்கக் கூடும். இந்த முன்னுரை புலப்பெயர்வுக்குள்ளான தமிழர்கள் குறித்து ஆய்வுகளைச் செய்வோருக்குக் கூட ஒரு அடித்தளத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பேன்.

திரு.சி.கிருஸ்ணானந்தன் அவர்கள் பேசும்போது இதிலுள்ள கதைகள் நமக்குச் சொல்லும் உண்மை என்னவென்றால் பணத்திற்காக அன்னிய தேசத்தில் தொழில் செய்யும்போதும்  சுயகௌரவத் தேவையும் இருக்கிறது என்பதுதான். இதிலுள்ள அனேகமான கதைகள் அதைத்தான் சித்தரிக்கின்றன. சிலகதைகளில் பிரச்சாரத்தொனி மேலோங்கியிருக்கிறதுதான். என்னளவில் இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியம் என பிரிப்பது குறித்து சில கேள்விகள் இருக்கின்றன.

இந்நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வு கலந்துரையாடலுடன் நிறைவுபெற்றது.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 12:05
TamilNet
HASH(0x55cbad059168)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 12:05


புதினம்
Thu, 28 Mar 2024 12:05
















     இதுவரை:  24712282 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5572 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com