அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 19 arrow அம்மா நல்லாப் பொய் சொல்லுவா.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அம்மா நல்லாப் பொய் சொல்லுவா.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சித்திரா சுதாகரன்.  
Thursday, 28 July 2005

பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
தொட்டிலுமோ பொன்னாலே
தொடுகயிறோ முத்தாலே...

அம்மா எனக்குச் சொன்ன முதற் பொய் இதாத்தான் இருக்க  வேணும். தாய் என்பவள் அன்பே உருவானவள். பூமிக்கு இறங்கி  வந்த தெய்வம். உணமையின் உறைவிடம் என்றெல்லாம் நீங்கள்  சொல்லலாம் ஆனால் அம்மா நல்லாப் பொய் சொல்லுவா.  தொட்டிலப் பொன்னில செய்து முத்தால செய்த தொடுகயிறில  கட்டினால் வெட்டின பச்சை இலுப்பை எங்க? வடிஞ்ச பால்  எங்க? அம்மா சொன்ன பொய்யக் கேட்டு நான் நித்திரை  கொண்டுதான் இருக்கிறன்.
நான் ஆசைப்பட்டுக் கேட்டதெண்டு அம்மா ஒரு தங்கச்சி பெத்துத்  தந்தா. சந்தோசம்தான் ஆனால் இப்ப நான் அம்மாவுக்குப்  பக்கத்தில படுக்க ஏலாது. இரவில அக்காவோடதான் படுக்க  வேணும். அம்மாவோடதான் படுப்பன் எண்டு ராராவா அழுவன்.  'டேய் அழாமப்படடா இல்லாட்டி கொக்கோ வந்து உன்னப்  பிடிச்சுக் கொண்டு போகும்.' அம்மா சொல்லுறதக் கேக்காமல்  அழுதுகொண்டிருக்கிற என்னத் தேடி சாக்கு நிறத்தில ஒரு  உருவம் வரும். அம்மா சொன்னது உண்மைதான் எண்டு  கொக்கோவுக்குப் பயத்தில விழுந்து படுத்திருவன். ஆனால்  தங்கச்சி ஆசப்பட்டதெண்டு அம்மா ஒரு தம்பி பெறஇ இரவில  அழுத தங்கச்சிய வெருட்ட சாக்கப் போத்துக் கொண்டு குட்டி  மாமா பதுங்கிப் பதுங்கி வர, அம்மாவிட 'கொக்கோ'ப் பொய்  விளங்கிச்சுது.
சின்னனில நான் சரியான குழப்படி.உடைச்ச கண்ணாடி,  கிணத்துக்க போட்ட சில்வர் பேணி, கிழிச்ச புத்தகம்  எல்லாத்துக்கும் அம்மாட்டப் பூசை வாங்கியிருக்கிறன்.ஆனால்  அப்பா கேட்டால் கோழி தட்டி விட்டது காகம் கொண்டு போய்ப்  போட்டது எண்டு பொய்தான் சொல்லுவா. அடிக்கிறதையும்  அடிச்சுப் போட்டு அப்பாக்கு ஏன் பொய் சொல்லுறா எண்டு  எனக்குக் கோவம்தான் வரும்.
ஒழுங்கா அரிவரிக்குப்போனா ஒவ்வருநாளும் சோடா  வாங்கித்தருவன் எண்டு சொல்லி வடிவான புது சிவப்புக்கலர் றிங்  போட்டிலுக்குள்ள நெக்ரோ சோடா விட்டுத் தந்து அரிவரியில  சேத்து விட்டா. நானும் அந்த றிங் போட்டில தோளில  கொழுவிக்கொண்டு அரிவரிக்குப் போனன்.அம்மாவ விட்டிட்டு  அரிவரியில இருக்க விருப்பமில்லாட்டியும் அடிக்கடி  றிங்போட்டிலத் திறந்து சோடா குடிக்கிறதில சமாதானமாகி,  படிப்படியா றமேஸ்,பிரபு,விஜயன் எண்டு நண்பர்கள் சேர அரிவரி  பிடிச்சுக்கொண்டுது. ஆனா அம்மா இப்ப சோடாவுக்குப் பதிலா  பச்சத்தண்ணிதான் றிங்போட்டிலில விட்டுத்தாறா. பொய்! அம்மா  பொய்தான் சொன்னவ.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பாவும் அம்மாவும் வடிவாய்  வெளிக்கிட்டுக் கொண்டு எங்களுக்கு காவலாய் அம்மாச்சியை  வைச்சிற்று, யாழ்ப்பாணம் போக வெளிக்கிட நானும்  வருவப்போறன் எண்டு அழுதன். அம்மா சொன்னா தனக்குக்  காச்சலாம் டொக்டரிட்டப் போகினமாம். தொட்டுப் பாத்தன்  சுடயில்ல. வழமைபோல பொய்யோ? கையள் காலையெல்லாம்  உதைச்சுதைச்சு அழுதன். அம்மா திரும்பத் திரும்ப தனக்கு  வருத்தம் எண்டு சொல்லிற்று அப்பாவோட யாழ்ப்பாணம் போனா.  அடுத்தநாள் பின்னேரம் வேலிக்கு மேலால பக்கத்த வீட்டு  ராணியக்காவுக்கு அம்மா கண் கலங்கிக்கலங்கி கதை சொன்னா.  ராணியக்காவும் மூக்குறிஞ்சி உறிஞ்சி கதை கேட்டா. சுஜாதா  தமயனப் பிடிச்சு வெளியில விட்டதாம், தமயன் குத்துவிளக்கால  ஆரையோ குத்தினதாம், கடவுள் அமைத்து வைத்த மேடை எண்டு  கமலகாசன் பாடினதாம். அம்மா காச்சல் எண்டு பொய்  சொல்லிற்று அப்பாவோட 'அவள் ஒரு தொடர்கதை' படம்பாக்கப்  போனது கன நாளுக்குப் பிறகுதான் எனக்கு விளங்கிச்சுது.
அப்ப நான் அஞ்சாம் வகுப்புப் படிச்சுக்கொண்டிருக்கிறன்.அம்மா  காலச்சாப்பாட்டுக்கு எப்பவும் புட்டுத்தான் அவிப்பா.அவிச்ச புட்டு  எல்லாத்தையும் எங்கள் நாலு பேருக்கும் பகிர்ந்து தருவா.  மற்றவையள் சத்தம் போடாமல் சாப்பிட எனக்குத்தான் சந்தேகம்  வந்தது. அப்ப அம்மா என்ன சாப்பிடுறவ?
'சத்தம் போடாமல் சாப்பிட்டிட்டுப் போடா' அம்மா திட்டத் திட்ட  எனக்குக் கோவம் வந்தது.
'எங்கள பள்ளிக்கு அனுப்பியிற்று என்னத்த ஒளிச்சு  வைச்சுச்சாப்பிடுறியள்'.
'நான் இந்திரன் கடையில பாண் வாங்கிச் சாப்பிடுறனான்'.
அடுத்த நாள் அடம்பிடிச்சன் 'இண்டைக்கு எனக்குப் பாண்  வேணும். நீங்க புட்டச்சாப்பிடுங்க'. 
அம்மா அகப்பக் காம்ப எடுத்து உறுக்கி வெருட்டினாலும் என்ர  ஆய்க்கினை தாங்கேலாமல் அர்றாத்தல் பாணுக்கு காசு தந்தா.  இந்திரன் அண்ணை கேட்டார் 'என்ன இண்டைக்கு கொம்மா  சமைக்கையில்லையா?'
'எங்களுக்குப் புட்டவிச்சவ நான்தான் ஒவ்வருநாளும் அவ பாண்  சாப்பிடுறா எண்டிட்டு இண்டைக்கு எனக்கெண்டு கேட்டனான்'.    'அம்மா ஒவ்வருநாளும் பாண் வாங்கிறவவா? எங்க வாங்கிறவ?'  'உங்களிட்டத்தானே வாங்கிறவவாம்' 
'கொம்மா ஒரு நாளும் பாண் வாங்கிறதில்லையடா' இந்திரன்  அண்ணையின்ர பதிலில இருந்து அம்மா எனக்குப் பொய்  சொன்னது தெளிவாச்சுது. அம்மா ஏன் பாண் வாங்கிறதெண்ட  பொய் சொன்னவ? அப்ப காலையில என்ன சாப்பிடுறவ? எண்ட  கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போச்சுது. (அப்பர் எடுக்கிற  போஸ்ற் பியோன் சம்பளத்தில நாலு பிள்ளையளையும் வளத்து  எப்பிடி ஆளாக்கனவ எண்டது இன்னமும் ஆச்சரியந்தான்.)
ஓயெல் சோதினை மூட்டம் நானும் ரவியும் இயக்கத்துக்கு  ஓடினம். அம்மா என்னத் தேடித்திரிஞ்சு வேலணைக் காம்புக்கு  வந்து பொறுப்பாளரிட்ட எனக்கு தொய்வு, இருதய பெலகினம்  றெயினிங்குக்கு விட்டால் உயிருக்கு ஆபத்து எண்டு  பொறுப்பாளருக்கும் விளங்காத வருத்தமெல்லாம் சொல்லி  அம்மாட இந்தப் பச்சைப் பொய்ய 'உண்மையா இருக்குமோ?'  எண்டு பொறுப்பாளரே குளம்பிற அளவுக்கு அடிச்சு விட்டா.ஆனா  அம்மாவ வெல்ல விடயில்ல. நான் திரும்பிப் போகயில்ல.
இந்திய ஒப்பந்தம் வந்தது ராணுவம் வந்தது.இயக்கத்தில இருந்து  நான் ஊருக்கு வந்தன்.விட்ட ஓயெல் சோதினைய மார்கழியில  பிடிப்பமெண்டு டேக்கிளாசுக்குப் போகத் தொடங்கினன். ஆனால்  யுத்தம் மூண்டு பயங்கரவாதிகள் களையெடுப் பெண்டு ஊர்  ஊராய் உழுதுகொண்டு வந்த நேரத்தில, ஒரு மைம்மல்  பொழுதுக்க குமட்டி மாமா ஓடி வந்து அம்மாட காதுக்க  குசுகுசுக்க, அம்மாச்சி என்ன இழுத்துக்கொண்டுபோய் அடிவளவுப்  போயிலக்குடிலுக்க விட்டிட்டு குட்டிமாமாவக் காவல் வைக்க  'ஐயோ நான் பெத்த செல்வமே இப்பிடி ஆமிக்காரன் சுட்டுக்  கொல்லவோ பாலூட்டி வளத்தன்'. முத்தத்தில நிண்டு அம்மா  வச்ச ஒப்பாரியக்கேட்டு பாஞ்சோட வெளிக்கிட்ட என்னை,   'சத்தம் போடாதையடா' எணடு குட்டிமாமா புடிச்சமத்தினார்.  வேலியப் பாஞ்சும் பொட்டுக்குள்ளால பூந்தும் சனம் எங்கிட வீட்ட  வாறது கேட்டது. அம்மா அழுதழுது பொய் பொய்யாச் சொல்லுறா  'சந்திரன ஆரியகுளச் சந்தியில சுட்டுப் போட்டுக் கிடக்காம்'  கேட்டவையும் சேந்து ஒப்பாரிவைக்க நான் உயிரோட  இருக்கேக்கையே என்ர செத்த வீடு நடந்தது. பெரிய மாமாதான்  வந்து 'உண்மைதானோவெண்டு வடிவாய் விசாரியாமல் செத்தவீடு  கொண்டாடாதை' யெண்டு அம்மாவ அடக்கினேர். அந்த மாலைப்  பொழுதில் நான் செத்துப் போனதாய் ஊர் முழுக்க செய்தி  பரவியதை நான் கேட்டேன். அம்மா ஏன் பொய்ச் செத்தவீடு  கொண்டாடிறா எண்டு கேக்கக்கூட குட்டி மாமா விடயில்ல. இரவு  முழுக்க நாய்களின் சத்தமும் சாமத்தில வெடிச்சத்தமும் கேக்க  தூரத்தில குளறியும் கேட்டது. விடிய வெள்ளண பெரியமாமா  சைக்கிளில முன்னால போக சின்ன மாமா என்னை  ஏத்திக்கொண்டு மண்டைதீவுப்பக்கம் சைக்கிள் மிதிச்சார். எனக்கு  எல்லாம் கனவு மாதிரி இருக்கேக்கையே கள்ளத்தோணியில  ஏத்தி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டன். கடைசியா குட்டி மாமா  சொன்னார். 'ராத்திரி ஆமிக்காரரும் பெடியளும் வந்து ரவியைச்  சுட்டுப்போட்டாங்கள் நீ தப்பினது அருந்தப்பு'.
விருப்பமில்லாமல் இந்தியாபோய் விருப்பமில்லாமையே பரிசுக்கு  வந்தன். விரக்தியாய் பரிசெல்லாம் சுத்தினன். வேலைக்குப்  போகவோ உழைக்கவோகூட மனம் வரையில்ல. ஆனா அம்மாட  கடிதங்கள் கண்ணீரில நனைஞ்சு வரும். எப்பவும் கஸ்ரத்தச்  சொல்லி காசனுப்பு காசனுப்பு எண்டுதான் கேட்டிருக்கும்.  தொல்லை தாங்காமத்தான் வேலைக்குப் போனன்  தேவையில்லாத சினேகிதங்களக் குறச்சன். வாழ்க்கையில ஒரு  பிடிப்பு வர பிறெஞ்ச் படிச்சு முன்னேறத் தொடங்கினன்.  ஜேர்மனியிலிருந்த குட்டிமாமா பரிசுக்கு என்னட்ட வர
'வீட்டில என்ன பிரச்சினை?' எண்டு கேட்டு அம்மா எழுதின  கடிதஙகளைக் காட்டினன். குட்டி மாமா பாத்திற்று சிரிச்சார்.  'கொம்மாக்கு ஒரு குறையும் இல்ல இதெல்லாம் பொய்யடா'  அம்மா இன்னும் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறா.
பரிசில எனக்கு நட்பான தனம் அன்ரி குடும்பம் ஊருக்குப் போக,  எங்கிட வீட்டையும் போகச்சொன்னன். அன்ரி எங்கிட  அம்மாவோட கதைச்சு எனக்குக் கலயாணம்  முற்றாக்கியிற்றுத்தான் வருவன் எண்டு போனா. திரும்பி வந்த  உடன அன்ரிகேட்ட
'என்ன சந்திரன் அம்மாவுக்குக் கண் பழுதோ? சந்திரன்  கறுப்பெண்டாலும் நல்ல வடிவு எண்டு நான்சொல்ல, என்ன  விசர்க்கதை கதைக்கிறியள் அவன் எவ்வளவு வடிவான வெள்ளப்  பிள்ள. எண்டு சொல்லுறா'. அன்ரி சொன்னதக் கேட்டு அம்மா ஏன்  இன்னும் பொய் சொல்லுறா எண்டு யோசிக்க 'காக்கைக்கும் தன்  குஞ்சு' எண்ட பழமொழி தானா ஞாபகம் வந்தது. நான்  கறுப்பெண்டது எனக்கே நல்லாத் தெரியும் அம்மாட இந்தப்  பொய்க்குக் கோவம் வரயில்ல.
எனக்குக் கல்யாணம் ஆச்சுது. அழகான பெடியன் ஒருத்தன்  பிறந்தான். குழப்படியெணடால் சொல்லி வேலையில்ல.  என்னைவிட மோசம். அவன்ர குழப்படி தாங்க ஏலாமல் என்ர  மனுசி கோவப்படுவா சத்தம்போடுவா ஏலாக்கட்டத்துக்கு  அழுவா.ஆனால் நான் அமைதியாய் ரசிப்பது அவவுக்கு  ஆச்சரியம். மகன் என்னைப்போலவே குழப்படி செய்யிறதும்  சின்னனில நான் பாவிச்ச உத்திகளையே பாவிக்கிறதும்தான்  என்னை ரசிக்க வைப்பதைச் சொன்னன்.
பதினெட்டு வருசத்துக்கப் பிறகு ஊரையும் உறவுகளையும்  பாக்கக் குடும்பமாய்ப் போனன். ஊர் எவ்வளவோ மாறியிருந்தது.  என்னைக் கண்டதும்இ என்னைப்போலவே இருந்த என்ர  மகனைக்கண்டதும் அம்மாவுக்கு இரட்டிப்புச் சந்தோசத்தைக்  குடுத்தது. எல்லாருக்கும் என்ர மகனக் காட்டி சந்திரன் சின்னனில  இருந்தமாதிரியே இருக்கிறான் எண்டு சொன்னா. இதக்கேட்ட  என்ர மனுசி சும்மா இருக்கேலாம வாயக் குடுத்தா ' சந்திரன  மாதிரி மட்டுமில்ல அவர் சின்னனில இருந்த மாதிரி சரியான  குழப்படி அநியாயம் தாங்கேலாது. என்னெண்டு சந்திரன நீங்கள்  கட்டி அவிட்டியளோ தெரியாது' எணடா. அம்மாவுக்கு முகம்  மாறிச்சுது. 'ஆரு சொன்னது சந்திரன் குழப்படியெண்டு ஐயோ  அவன் எவ்வளவு அமைதியான பிள்ள நான்  பெத்ததுகளுக்குள்ளேயே அவன்தானே அருமையான பிள்ள'  எண்டா. இப்ப புன்சிரிப்போட மனுசியப் பாத்தன் மனுசி  முறைச்சுப் பாத்தது.  எத்தனையோதரம் இந்த வீட்டிலேயே  நான்தான் களுசறையெண்டு திட்டின அம்மா இப்பவும் பொய்  சொல்லுறா. முழுப் பூசனிக்காய சோத்துக்க மறைக்கேலாது.  ஆனால அம்மாமாற்ற பாசத்தால புள்டோசறையே மறைக்கலாம்.  அம்மா சொன்ன பொய்களையெல்லாம் மீட்டுப் பாத்தேன். ஆம்  அம்மா நல்ல(ாப்) பொய் சொல்லுவா.
14.05.05

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 12:05
TamilNet
HASH(0x55cbad059168)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 12:05


புதினம்
Thu, 28 Mar 2024 12:05
















     இதுவரை:  24712346 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5617 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com