அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலைஞர் சந்திரன் சந்திரமதியுடனான சந்திப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நங்கூரன்  
Monday, 01 August 2005

குள்ளமான இந்த மனித உருவத்தில் குவிந்து கிடக்கும் கவியூற்று

(மட்டக்களப்பு ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த இந்த  ஆக்கம் படித்தபோது என்னை நெகிழ்த்தியதால் உஙகள் பார்வைக்காக  à®¨à®©à¯à®±à®¿à®¯à¯à®Ÿà®©à¯ இங்கு மீள்பிரசுரமாகின்றது)


கலைஞர்களும், கலை கலாசார பண்பாட்டியல் கோலங்களும் ஒரு நாட்டின் கண்களாகின்றன. கலைகளின் கதாநாயகர்களாக விளங்கும் கலைஞர்கள் எப்போதும் போற்றப்படவும், ஆக்கவூக்கங்கள் கொடுத்து வளர்க்கப்படவும், வாழ்விக்கப்படவும் வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகின்றார்கள்.

பொதுவாகக் கலைஞர்களைப் பொறுத்தமட்டில் வறுமைக் கோட்டின் மத்தியிலும், பல்வேறுபட்ட பிரச்சினைகள், சவால்கள், எதிர்ப்புக்களுக்கு இடையிலும் தான் தங்களது கலைப் பயணத்தினை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். பல கலைஞர்கள் ஆக்கபூர்வமான, அருமையான திறமைகள் பல இருந்தும் இலைமறை காய்களாகவே தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான எழுத்தாளர்களை, கலைஞர்களை ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வளர்ப்பதிலும், வாழ்விப்பதிலும் ஈழநாதம் (மட்டக்களப்பு) பத்திரிகையானது முன்னின்று உழைப்பது யாவருமே அறிந்த உண்மையாகும்.

இதன் ஒரு கட்டமாகவே வளர்ந்து வரும் எழுத்தாளர்களின், கலைஞர்களின் கவிதை, கதை, கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இப்பத்திரிகையானது அவர்களது ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கமும், உத்வேகமும் கொடுத்து வருவதுடன் சிறந்த கவிதை, சிறுகதை, கட்டுரைகளுக்கான பணப்பரிசுத் திட்டத்தினையும் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன்படி ஈழநாதம் (மட்டு) வாரமலரில் பங்குனி - வைகாசி மாதம் வரையிலான காலப் பகுதியில் பிரசுரமான பரிசுக்குரிய கவிதைகளின் தரப்படுத்தல் வரிசையில் முதலாவது பரிசான தலா 2500 ரூபா பணப்பரிசினை ஆயித்தியமலை பிரதேச மகிழவட்டவானைச் சேர்ந்த செல்வி சந்திரன் சந்திரமதி அவர்கள் தனதாக்கிக் கொண்டார்.

செல்வி சந்திரன் சந்திரமதி (தந்தையார் சந்திரனின் கையில்)இப்பரிசினைப் பெறுவதற்காக செல்வி சந்திரன் சந்திரமதி அவர்கள் 2005.07.17 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தந்தையுடன் கொக்கட்டிச்சோலை ஈழநாதம் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார். உருவத்திலே மிகவும் குறுகிய தோற்றத்தினை உடைய இவர் உயரிய கலைத்திறன்களையும், கல்வி ஞானத்தினையும், கற்பித்தல் செயற்பாடுகளினையும், சமூகவிழிப்பூட்டல் சிந்தனைகளையும் தம் கண்ணே கொண்டிருந்தார்.

எனவே தான் அவருடனான சந்திப்பின் மூலம் கிடைத்த உன்னத சிந்தனைகளையும், உயரிய கற்பித்தல், கலைச் செயற்பாடுகளினையும், உணர்வு பூர்வமான அவரது சமூகத்தின் மீதான அக்கறைகளினையும் சிறந்த படிப்பினைகளாக வாசகர்களுக்காகத் தரப்படுகிறது.  

உண்மையிலேயே சீரிய கூரிய சிந்தனைத் திறனும், ஆற்றல்களும், சமூக விழிப்பூட்டல் நல்லெண்ணங்களும், ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் ஒருவரது உடல் வளர்ச்சியால் மட்டும் உருவாவதல்ல. முக்கியமாக இவைகளினது வளர்ச்சி உள்ளத்தின் வளர்ச்சியிலேயே தான் தங்கி இருக்கிறது என்பதற்குக் கலைஞர் சந்திரமதி அவர்களது குறுகிய உருவமும், அந்த உருவம் உள்ளடக்கி இருக்கின்ற உயரிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சான்றாதாரங்களாகும்.

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்கிறது சினிமாப் பாடல். அதன்படி ஆள் வளர்ந்தால் மட்டும் போதாது. அறிவு வளர்வதே முக்கியமான வளர்ச்சியாகின்றது. இங்கே சந்திரமதி அவர்கள் ஆள் வளரவில்லை. மாறாக அறிவு வளர்ந்திருக்கின்றது. குள்ளமான அந்த மனித உருவத்தில் நல்ல பல அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றது.

இந்த வளர்ச்சிகள்தான் அவரை இன்று சமூகத்திலே உயர்ந்த ஒருவராக வளர்த்துக் கொண்டும் வாழவைத்துக் கொண்டும் இருக்கின்றது.

இது அதிசயமா? அல்லது அற்புதமா, வாசகர்கள் அறிவதில் ஆர்வமுறுவீர்கள். இனி அவரது ஏக்கங்களையும், எத்தனையோ இடர்பாடுகள், சவால்களுக்கு மத்தியிலும் தனது கலை, கற்பித்தல் செயற்பாடுகளை தரமாகவும், திறமாகவும் மேற்கொண்டு வரும் திறன்களையும், சிறந்த ஆளுமைச் செயற்பாடுகளையும் அவரது கூற்றாகவே படித்துப் பாருங்கள்.
கேள்வி:- வணக்கம் சந்திரமதி அவர்களே......! முதலில் உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்?

கவிஞர் சந்திரன் சந்தரமதிபதில்:- எனது பெயர் சந்திரமதி. என்னு டைய தந்தை பெயர் சந்திரன். தாய் பெயர் விஜயலெட்சுமி. 1981.09.30இல் பிறந்தேன். இன்று எனக்கு 24 வயதாகின்றது. பிறப்பு வளர்ப்பு ஆயித்தியமலையில் உள்ள மகிழவட்டவான் என்னும் கிராமமாகும்.

எனது கல்வியை மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தேன். எனினும் க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேல் என்னால் கல்வியைத் தொடர முடிய வில்லை. இதற்குக் காரணம் முக்கியமாக வறுமையும், என் உடல், உள நிலமை யுமாகும்.  மேலும் சொல்லப் போனால் எனது அப்பா ஒரு விவசாயி. குடும் பத்தில் நான்தான் மூத்தபிள்ளை. இரண்டாவதாகச் சந்திரகுமார் (22). அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தன்னை இணைத்துக் கொண்டு ஏழு வருடங்களாகின்றன.

மூன்றாவதாக சந்திரகாந்தன் (21) அவர் இல்லறபந்தத்திலே இணைந்துவிட்டார். அம்மாவும் எங்களுடனேயே இருக்கிறார். ஓலையால் வேயப்பட்ட சிறியதொரு மண்குடிசை ஒன்றிலேதான் எங்களது உயிர்வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. வறுமையின் கோரப்பிடியின் மத்தியிலே எனது கலை, கற்பித்தல் செயற்பாடுகளை முன் கொண்டு சென்று கொண்டி ருக்கின்றேன்.
கேள்வி:- உங்களது கலையையும், உடல் உளநிலையையும் பற்றி விரிவாகக் கூறுங்கள்?

பதில்:- இளமையில் இருந்தே இயல்பாகவே எனக்கு எழுத்தாற்றல் உள்ளிட்ட கலைத்திறன்கள் வந்தது. இருந்தும் அவற்றை வெளிக்கொணர்வதற்கான வசதிவாய்ப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. 2004 டிசம்பரில் இருந்துதான் எத்தனையோ இடர்பாடுகள், ஏக்கங்கள் மத்தியில் பத்திரிகைகளுக்கு கவிதைகளை எழுதுகின்ற பணியினை ஆரம்பித்து இருக்கின்றேன்.

அதிலும் குறிப்பாக ஈழநாதம் (மட்டு) பதிப்பிற்கே எழுதிக் கொண்டு வருகின்றேன். நல்ல உதவிகள், ஒத்தாசைகள் பல மட்டங்களிலும் இருந்து கிடைக்கும் பட்சத்தில் எனது எழுத்துலக கலைச் செயற்பாட்டை மேலும் பன்முகப்படுத்துவேன். பிரதேச தேசிய பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் பல படைப்புக்களை அனுப்புவேன். இவற்றைவிட நாடகங்களை எழுதியும் கலைத் தொண்டாற்றி வருகின்றேன்.

உடல் உளநிலையெனும் போது எனது ஒன்றரை வயதுப் பராயத்திலே எனக்கு வாதம் சம்பந்தமான வருத்தம் வந்தது. அது என்னை மிகவும் பாதித்தது. அதனால் இற்றை வரை நடக்க இயலாத நிலைக்கு உள்ளாகியிருக்கின்றேன்.

தவிர எனது உடல்வளர்ச்சி மிகவும் இந்தளவிற்கு குன்றியிருப்பதற்கான காரணம் பிறப்புடனேயே வந்தது. என்ன பாவத்தின் விளைவோ இதுவென்று எனக்குத் தெரியாது. இதனால் ஒரு சிறு குழந்தையைத் தூக்கிச் சுமந்து வளர்த்து வருவதைப் போல் என் பெற்றோரும், உடன் பிறப்புக்களும், உறவினர்களும் என்னைத் தூக்கிச் சுமந்தே வளர்த்தும், வாழ்வித்தும் வருகின்றார்கள்.

முக்கியமான கலை நிகழ்வுகளுக்கும், ஆலய உற்சவங்களுக்கும் செல்வதற்கு தனியாக வாகனம் தேவைப்படுகின்றது. இதனைப் பெறுவதற்கான வசதி வாய்ப்புக்களுக்கு நாங்கள் எங்கே போவோம்?

கேள்வி:- நாடகத்துறைக்கும் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டீர்கள். அந்த வகையில் எவ்வாறான நாடகங்களை எழுதிக்கொண்டு வருகின்றீர்கள்?

பதில்:- சமூக, சமய, தமிழர் விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்திய நாடகங்களை எழுதி ஊர்கலைஞர்களிடம் அவற்றை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்துறைக்குப் பங்காற்றி வருகின்றேன்.

அந்த வகையில் சமூதாயச் சீர்கேடுகளைத் தடுத்து மக்களுக்குச் சிறந்த விழிப்பூட்டல்களை ஏற்படுத்தும் நல்நோக்கத்துடன் மக்களை ஒன்று திரட்டி மகிழவட்டவான் மைதானத்திலே "எகெட்" நிறுவனம் வைத்த கலைநிகழ்விலே "இளவயதில் திருமணம்" என்ற எனது நாடகமும் முதன்மை பெற்றது. தவிர "நலமளிக்கும் திருக்குமர திருலீலை" என்னும் சமய (பக்தி) நாடகத்தினை எழுதி ஊர்க் கலைஞர்களிடம் கொடுத்து மகிழவட்டவான் மாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ (இவ்வருடம்) கலையரங்கிலே நடிக்கச் செய்தேன்.

மேலும் "தமிழீழ மக்கள் புலியென எழுந்த சரிதம்" மற்றும் "வாழ்வியல் கோலங்கள்" ஆகிய நாடகங்களையும் ஊர்க்கலைஞர்களிடம் எழுதிக் கொடுத்துள்ளேன். இவை இரண்டும் இன்னும் நடிக்கப்படவில்லை. இன்னும்பல நாடகங்களையும் எழுதவுள்ளேன்.

இதற்கும் நல்ல வசதி வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தால் ஏராளமான நாடகங்களை என்னால் எழுத முடியும். இதிலும் ஒரு குறை எனக்கு. ஏனையவர்களைப் போன்று நடக்க, நிற்கக் கூடிய வல்லமை இருந்திருந்தால் நாடகம் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாது நாடகம் நடித்தும், கூத்தாடியும், மேலும் இக்கலைகளின் வளர்ச்சிக்கு உதவுவேன்.

கேள்வி:- ஒரு கலைஞராக மட்டுமன்றி காலடிக்கு வருகின்ற மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்கின்ற ஒரு குருவாகவும் நீங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறதே. அது பற்றி ........?

பதில்:- நிச்சயமாக எனது உடல் வளர்ச்சியோ இவ்வளவுதான். கல்வி வளர்ச்சியோ ழுஃடு வரைதான். ஆனாலும் இறைவன் நல்ல கலை வளத்தினையும், மூளை வளத்தினையும் தந்திருக்கிறார். இதற்காக நான் என்றென்றும் இறைவனுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளவளாக இருக்கின்றேன்.

நான் கற்றதோ கடுகளவாயினும் அவற்றைக் கொண்டு என்னை நோக்கி வருகின்ற மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றேன். கற்பித்தலூடாகவும், கலைப்பணியின் மூலமாகவும் இயலுமானவரை நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது உயரிய இலட்சியமாகும்.

கேள்வி:- 'கற்பித்தல்' என்னும் போது அதில் என்னென்ன பிரச்சினைகளை எதிர் நோக்குகிறீர்கள்?

பதில்:- என்னிடம் 1-11 ஆம் தரம் வரையிலான மாணவர்கள் கற்க வருகிறார்கள். வீட்டு வளவில் மர நிழலில் பொலித்தீனால் வேயப்பட்ட சிறு கொட்டிலின் கீழே இம்மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றேன். 20 பிள்ளைகள் வரை என்னிடம் வருகிறார்கள். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையினால் இருந்தபடி இருந்தே இவர்களுக்குக் கற்பித்து வருகிறேன்.

இதற்கான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தால் அதிக பிள்ளைகளை ஒன்று சேர்த்து பெரிதாகக் கொட்டில் அமைத்து எனது கற்பித்தல் செயற்பாடுகளை விரியலாக்க முடியும். இதற்குரிய உதவிகள், சலுகைகள், ஆதரவுகள் என்பவை இல்லாமையும், இடவசதி இல்லாமையும் பாரிய பிரச்சினையாக உள்ளது.

எனவே இத்தகைய கலைஞர் ச.சந்திரமதி அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளுக்கான பெரிய கொட்டில் வசதிகளையும், கலைத் தொண்டுகளுக்கான வசதி வாய்ப்புக்களையும் ஆர்வலர்களும், நலன் விரும்பிகளும் அரச, அரச சார்பற்ற நிறுவன ங்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஈழநாதம் (மட்டு) பதிப்பானது சம்பந்தப்பட்ட அனைவரையும் அன்புடன் கேட்டு நிற்கிறது.


கேள்வி:- இந்தச் சந்திப்பின் மூலம் உங்களது மனோ நிலையில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

பதில்:- மிகவும் சந்தோசத்திற்கு உள்ளானேன். என்னைப் போன்று எத்தனை சந்திரமதிகள், சந்திரவான்கள் நம் மத்தியிலே இலை, மறை காய்களாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதையே நான் பெரிதும் விரும்புகிறேன். தவிர இச்சந்திப்பானது எனது கலை, கற்றல் படிநிலைகளையும் மேலும் வளர்த்துச் செல்லும் என நினைக்கிறேன். சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

கேள்வி:- இறுதியாக வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது.......?

பதில்:- எந்தவொரு விடயத்தைப் பற்றியும் முதலில் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். தெளிந்த சிந்தனை தரும் தீர்வின் அடிப்படையிலேயே செயலில் இறங்க வேண்டும். எந்தத் தடைகள், எதிர்ப்புகள் ஏற்படும் போதும் மனம் தளராமல் துணிந்த நெஞ்சுடனும், தூர நோக்குடனும் கலைத் தொண்டுகளை முன் கொண்டு செல்லவேண்டும்.

தொடர்ந்தும் இலைமறை காய்களாகவும், பார்வையாளர்களாகவும் இருக்காமல் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அறிவும், அனுபவமும், ஆற்றல்களும், கலை வளமும் உடல்வளர்சிலியில் இல்லை. உள்ளத்தின் வளர்ச்சியிலேயே தங்கியிருக்கிறது. இதனை உணர்ந்து கலைஞர்கள் செயற்பட வேண்டும்.
 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(6 posts)

 


     இதுவரை:  25811588 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6495 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com