அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow அத்தியாயம் - 40 - 41
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அத்தியாயம் - 40 - 41   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 26 October 2005

40.

மாதமொன்று கழிந்தது. புயலின் அழிவுச் சின்னங்கள் இன்றும்  மொட்டை மரங்களாக நின்றன. குசினிக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி  சுற்றாடலை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் இதற்குமுன்  ஒருபோதும் இப்படிச் சோம்பியிருந்தது கிடையாது. இப்பொழுதெல்லாம் குதூகலமும் உற்சாகமும் அவளைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டன.  உல்லாசமாகப் பறக்கும் நிலக்கிளிகளைப் போன்று முன்னர் தன்  சின்னக் குடிசையையும் கதிராமனையும் சுற்றிவந்த அவள்,  தன்னுடைய அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகி  வெளியே வெகுதூரம் பறந்தபோது, கொடியதொரு புயலில் சிக்கி  இறகொடிந்தவளாய் விழுந்து போனாள்.

அவ்வளவு தூரம் அவள் மனம் குன்றிப்போனதன் காரணத்தைக்  கதிராமன் புரிந்து கொள்ளவில்லை. பதஞ்சலிக்கு மட்டும் அது  நன்றாகவே தெரிந்திருந்தது. அவள் எண்ணம் முழுவதையும் அது  ஆக்கிரமித்தது. அவளுடைய நினவுகள் சதா அந்த விஷயத்தையே  சுற்றிவந்தன. பசுக்கன்றுகளையும், நாய்க்குட்டிகளையும் நாளெல்லாம்  கட்டியணைத்துக் கொஞ்சுபவள், இன்று தன் வயிற்றிலே உருவாகும்  அந்த உயிரை நினைக்கையிலே கலங்கிப்போனாள். ஒரு இரவில்  தன்னை மறந்திருந்த வேளையில், தன்னைத் தீண்டிய அந்தத் தீ,  தன்னசை; சுட்டுக்கொண்ட அந்த நெருப்பு, ஏன் நிரந்தரமாக வயிற்றில்  தங்கிவிட வேண்டும்? மாதங்கள் பத்தும் நான் அந்த நெருப்பைச்  சுமக்கத்தான் வேண்டுமா? பத்து மாதங்கள் மட்டுமன்று, என்னுடைய  வாழ்நாள் முழுவதுமல்லவா அந்த நெருப்பு என்னைச் சுட்டுக்  கொண்டேயிருக்கப் போகின்றது!, என்று மனதுக்குள் பொருமியழுதாள்  பதஞ்சலி.

பதஞ்சலி தங்களின் வளவை ஒருமுறை சுற்றிக் கவனித்தாள்.  சரிந்துவிட்ட மாலை மீண்டும் கதிராமன் சீர் பண்ணியிருந்தான்.  சிதைந்துவிட்ட தோட்டத்தை ஒருவாறு திருத்தி அமைத்திருந்தான்.  ஆனால் அவன் எவ்வளவுதான் முயன்றபோதும், பதஞ்சலியின் பழைய  குதூகலத்தையும், குறும்பையும் அவனால் மீண்டும் கொண்டுவர  முடியவில்லை.

அவளுடைய மனதின் மாற்றத்தைக் கண்டு கதிராமன் அதிகம் தன்  மனதை அலட்டிக் கொள்ளவில்லை. எந்தவித மாற்றமுமின்றி  அவள்மேல் அன்பைச் சொரிந்தான். தொடர்ந்து பல மாதங்களாக  மழையில்லாமல் தண்ணிமுறிப்புப் பிரதேசமே தன் இயற்கை  வனப்பையெல்லாம் இழந்துவிட்டபோதும் கதிராமன் மாறவேயில்லை.  அமைதியான சுபாவம், எதற்குமே கலங்காத நெஞ்சுறுதி என்பவை  அவனைவிட்ட விலகவில்லை.

இந்நாட்களில் பதஞ்சலியின் உடலில் தாய்மையின் கோலம்  வெளிப்படையாகத் தெரிந்தது. கதிராமன் களிப்பில் துள்ளிக் குதித்தான்.  'இவ்வளவு நாளும் எனக்கேன் சொல்லேல்லை நீ?" என்று ஆசையுடன்  அவளைக் கடிந்துகொண்டான். நாளொரு வண்ணமும் பொழுதொரு  மேனியுமாக அவளுடைய உடலிலே ஏற்பட்ட மாற்ங்களைக் கண்டு  மகிழ்ந்தான். இரவின் தனிமையில் குடிசையினுள் பதஞ்சலியுடன்  இருக்கும்போது அவளுடைய வயிற்றை ஆசையுடன் தடவிப்  பார்ப்பான். வயிற்றிலிருக்கும் குழந்தை அங்குமிங்கும் புரள்வது  தெரிகையில், 'எனக்குப் பிறக்கப்போறது பொடியன்தான் பதஞ்சலி!  இப்பவே பாரன் அவன்ரை துடியாட்டத்தை!" என்று கதிராமன்  குதூகலித்துக் கொள்ளும் ஒவ்வொரு சமயமும் பதஞ்சலி தலையைக்  குனிந்து கொள்வாள். 'தெய்வமே! இப்படியும் ஓரு வேதனையா? என்  வயிற்றிலிருப்பது இவருடைய குழந்தையல்லவே, இன்னொருவன்  கொடுத்த நெருப்பல்லவா இது!" என்று அமைதியாக இரத்தக் கண்ணீர்  வடிப்பாள் பதஞ்சலி. அந்தக் குழந்தை அசையும் போதெல்லாம்  அவளுக்குத் தன் வயிற்றில் தணலைக் கட்டிக் கொண்டிருப்பதுபோல்  தகிக்கும். தான் படித்த கதையொன்றில், பிரசவத்தின்போது இறந்துவிட்ட பெண்ணொருத்தியைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அப்படித் தனக்கும் நிகழ்ந்துவிடக் கூடாதா? இந்த நெருப்பைப் பிறப்பித்து,  அதனுடைய தகிப்பைத் தன் வாழ்நாளெல்லாம் அனுபவித்து  வேதனைப்படுவதைவிட, அது இந்தப் பூமியில் விழும்போதே  தன்னையும் ஒரேயடியாகச் சுட்டெரித்து விடக்கூடாதா என்றெல்லாம்  ஏங்கினாள் பதஞ்சலி. பேறுகாலம் நெருங்கிவர இன்னுமின்னும் மனங்  குன்றியவளாய் பதஞ்சலி ஒடுங்கிப் போனாள்.

கதிராமனோ அவளுடைய பிரசவத்திற்குத் தேவையான  பொருட்களையெல்லாம் தானே ஆர்வத்தோடு சேகரித்து  வைத்துக்கொண்டான். தேனுக்காகக் காடெல்லாம் அலைந்தான். கடந்த  ஏழெட்டு மாதங்களாகவே அவனுடைய கண்ணில் ஒரு தேன்குடியாவது தட்டுப்படவில்லை. புயலின் பின்னர் தேனீக்களெல்லாம் அந்தப்  பிரதேசத்தைவிட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டன. காட்டிலே  தேனுக்கென்று சென்று திரும்பும் கதிராமன், ' ஒரு தேன்குடியும்  காட்டிலை இல்லை பதஞ்சலி! பூக்கள் உள்ள இடத்திலைதான்  தேன்பூச்சி இருக்கும். இப்ப ஒரேயடியாய் அதுகள் இல்லாமல்  போனபடியால் இனிமேல் இந்தக் காடுகளிலை பூக்கள் இருக்காது.  மழை பெய்தால்தானே காட்டுமரங்கள் பூக்கும்!" என்று விரக்தியுடன்  பேசிக்கொள்வான்.


41.

பதஞ்சலிக்கு இப்போ ஆறுமாதம்! வைகாசி மாதத்துச் சோளகக்  காற்று நீர்நிலைகளையும், பயிர்பச்சைகளையும் வறட்டி எடுத்திருந்தது.  சென்ற வருடமே மழை அதிகம் பெய்யவில்லை. கடந்த கார்த்திகையில்  சூறாவளியோடு வந்த சிறுமழை எந்த மூலைக்குப் போதும்? அதன்  பின்னர் அந்தப் பிரதேசத்தில் ஒரு துளி மழைகூடப் பெய்யவில்லை.

மரங்களிலெல்லாம் இலைகளில்லை. பட்டுப்போன கிளைகள்  வானத்தைச் சுட்டிக்காட்டி நின்றன. தொடர்ந்து எறித்த உக்கிரமான  வெய்யிலின் கானல், பசுமையை உறிஞ்சிக் குடித்துவிட்டுத் தாகம்  அடங்காமல் பிசாசுபோல் அந்தப் பிரதேசமெங்கும் அலைந்தது.  குளத்தில் நீர் வற்றி அது பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தது. நீருக்கு ஆசைப்பட்டுக் காட்டு விலங்குகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு  ஓடிவந்தன. காட்டு மடுக்களையெல்லாம் உறிஞ்சி இழுத்தும் விடாய்  அடங்காத யானைகள் குளத்தருகுக் காட்டிலேயே நிரந்தரமாகத்  தங்கிவிட்டன. காய்ந்து சருகான இலைகளினூடாகக் காற்று இரவில்  ஊளையிடும்போது யானைகள் கோடையின் வெம்மை தாங்hது  பிளிறின. மான்களும் மரைகளும் பஞ்சடைந்த விழிகளுடனும்,  பயிர்பச்சையைக் காணாத பசியுடனும் வந்து, குளத்தின் நடுவே  எஞ்சியிருக்கும் நீருடன் சேற்றையும் உறிஞ்சிக் குடித்தன. குரங்குகள்  தம் குட்டிகளை அணைத்தவாறு ஏக்கத்தோடு குளக்கட்டில் ஆங்காங்கு  குந்திக்கொண்டிருந்தன.

திரும்பிய திசையெல்hம் ஒரே வரட்சி! ஏன்தான் பருவமழை ஒரு  வருடத்திற்கு மேலாகியும் பெய்யவில்லை? இனிமேல் மழையே  பெய்யாதா? கருகிப்போய்க் கிடக்கும் இந்தப் புற்களும், கொடிகளும்  மீண்டும் பசுமையைப் பெறமுடியாதா? இலைகளை உதிர்த்து நிற்கும்  மரங்களும், செடிகளும் மீண்டும் துளிர்க்காதா? என்ற  கேள்விகளெல்லாம் பதஞ்சலியின் நெஞ்சில் எழுந்தபோது, அவள்  எண்ணத்தில் என்றோ ஒருநாள் படித்த ஒருசில வாசகங்கள் மின்னல்  கீற்றுக்கள்போல் பளிச்சென்று தோன்றி மறைந்தன.

'மங்கையர் தம் கற்பை இழந்தால் மழை பொய்க்கும், வளம் குன்றும்"

இந்த வசனங்களை அவள் மீண்டும் நினைத்துப் பார்க்கையில், அவள்  மனம் என்னும் பொய்கையில் சிறியதொரு கல்லாக விழுந்து மெல்லிய சலனங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவளுடைய மனதின்  அந்தரங்கங்களிலே தங்கிவிட்ட அந்தக் 'கற்பு" என்ற சொல், இப்போது  அவளின் நெஞ்சிலே முள்போல் தைத்து உறுத்தியது. அன்று மனதின்  ஆழத்திலே தங்கிவிட்ட அந்தச் சிறிய கல்லின்மேல், புத்தகங்கள்  மூலமாக அறிந்திருந்த உலகத்துக் குப்பைகளும், அழுக்கும் சுற்றிப்  படர்ந்துகொண்டதால் அது அவளின் நெஞ்சை நிறைத்துக் குமட்டியது!  அந்த வேதனையிலும், அருவருப்பிலும், 'இனிமேல் மழையே  பெய்யாது! மரங்கள் துளிர்க்காது..... பாவத்தின் பாரத்தைச் சுமந்து  நிற்கும் நானொருத்தி இந்த உலகில் இருக்குமட்டும் வறட்சி நீங்காது!  கோடை முடியாது!" என்றெண்ணிக் கண்ணீர் பெருக்கிக் கொண்டாள்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 12:03
TamilNet
HASH(0x55b2cb031178)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 12:03


புதினம்
Fri, 26 Apr 2024 12:03
















     இதுவரை:  24814196 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9217 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com