அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 04 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow பத்து குறுந்திரைப்படங்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பத்து குறுந்திரைப்படங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -யதீந்திரா –  
Wednesday, 11 January 2006

புலம்பெயர் தமிழ் சினிமா முயற்சிகள்
பத்து குறுந்திரைப்படங்கள்!

-சில அவதானங்கள்

(15-12-2005, 17-12-2005,18-12-2005 ஆகிய திகதிகளில் திருக்கோணமலையில் காண்பிக்கப்பட்ட à®ªà¯à®²à®®à¯à®ªà¯†à®¯à®°à¯à®¨à¯à®¤à¯‡à®¾à®°à®¿à®©à¯ படைப்புகள் பற்றிய குறிப்புகள்)
1.
அண்மையில் புலம்பெயர் சூழலிலிருந்து வெளியான பத்துக் குறும்படங்களை ஒரே தடைவையில் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.  சமீப காலமாக புலம்பெயர் சூழலில் சிலர் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக அறிந்திருக்கிறேன். ஆனால் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது. பொதுவாக ஈழத்துச் சூழலில் நல்ல சினிமாக்களை பார்ப்பதற்கும் அது குறித்து விவாதிப்பதற்குமான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். நல்ல சினிமா குறித்து அறிவதற்கும் விவாதிப்பதற்குமான ஊடகச் சூழலும் நம்மிடமில்லை. சிங்கள சினிமா மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அங்கும் நல்ல சினிமாக்களை பரவலாகப் பார்ப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றும் சிங்களச் சூழலில் ஒரு திரைப்படக் கல்லூரியோ, திரைப்பட ஆவணக்காப்பகமோ கிடையாது.  இன்றுவரை குறிப்பிட்ட நாடுகளின் தூதரகங்களின் மூலமாகத்தான் நல்ல படங்களைப் பெறுகின்றனர். இதுவும் கொழும்பில் சில குழுவினருடன் மட்டுபட்டுவிடுகிறது. குறிப்பாக காத்திரமான சிங்களப்படங்கள் கூட மக்களின் பரவலான பார்வைக்கு ஏற்றவகையில் இறுவட்டு வடிவில் இல்லை. எனவே பொதுவாக நமது சினிமா குறித்த புரிதல் பெரும்பாலும் ஒரு வகையான வாசிப்புடன் கூடிய அனுபவமாகிவிடுகிறது. அல்லது ஒரு கருத்தியல் தளத்துடன் நம்மை நிறுத்தி விடுகிறது. குறிப்பாக விடுதலைப் போராட்டச் சூழலிலிருந்து வெளிவரும் திரை வெளிப்பாடுகள் முற்றிலும் புதிய தன்மைகளைப் பிரதிபலிக்குமென்றும் வடிவங்களில் உடைவுகளைக் கொண்டதாக இருக்குமென்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக இலத்தீனமெரிக்க தலைமறைவுச் சினிமா (Underground Cinema), ஆபிரிக்காவின் விடுதலைச் சினிமா (African liberation films), ஆனந்த பட்டவர்த்தனின் அவசர நிலைக் காலச் சினிமா (Cinema at Emergency) போன்றவைகள் எல்லாம் புதியவகை உடைவுகளைக் கொண்ட சினிமாக்களாகச் சிலாகிக்கப்படுகின்றன. இவைகளெல்லாம் எனது வாசிப்புக்குட்பட்டவையே தவிர பார்த்து இரசித்தவையல்ல. இத்தகையதொரு பின்புலத்திலேயே எனது அவதானத்திற்குட்பட்ட பத்து குறும்படங்கள் குறித்தும் சில அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 
மனுசி: – சுமதி ரூபனின் நெறியாள்கையிலான 10 நிமிடங்களைக் கொண்ட இக் குறும்படம் மௌன மொழியிலானது. குடும்ப நிலையில் ஆண் பெண் என்ற இருவேறுபட்ட பாரபட்சமான புரிதலை தத்ரூபமாகச் சித்தரிக்கிறது மனுசி. குடும்பநிலையில் மனைவி என்னும் இடத்தில் இருக்கும்  பெண்கள் தொடர்பான ஆண்களின் மரபியல் புரிதலையே பத்து நிமிடங்களில் சுமதி ரூபன் சொல்ல முயன்றிருக்கிறார்.

மனமுள்: - 5 நிமிடங்களைக் கொண்ட இக் குறும்படம் பாலியல் தொடர்பான தமிழ்மனச் சிக்கலொன்றின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. இதனையும் சுமதி ரூபனே இயக்கியிருக்கிறார். பாலியல்சார் மதிப்பீடுகள் ஒவ்வொரு சமூகத்தினதும் பண்பாட்டு அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்றுவரை பாலியல் ஒரு வெளிப்படையான பேசுபொருளல்ல. எனவே நம்மிடம் பாலியல் சார்ந்து ஒரு வரன்முறையான மனவோட்டம் இருக்கிறது. அதற்கேற்பவே நமது பாலியல் குறித்த அவதானமும் நிகழ்கிறது. அவ்வாறானதொரு பாலியல்சார் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான் மனமுள்.  புலம்பெயர்ந்து அன்னியக் கலாச்சாரச் சூழலில் வாழும்போதும்  வரன்முறையான பாலியல் குறித்த மரபுப் பார்வை மூத்த தலைமுறைத் தமிழர்கள் மத்தியில்; எவ்வாறு ஆழ்ந்து கிடக்கிறது என்பது சிறப்பாகவே சித்தரிக்கப்படுகிறது. இது எனது பார்வை. வேறுவகையான பார்வைகளுக்கும் இடமிருக்கலாம்.

விலாசம்: - (17 நிமிடம்) ஜ.வதனின் இயக்கத்திலான இக்குறும்படம் புலம்பெயர்ந்து வாழும் நம் இளைய தலைமுறையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகளை சித்தரிக்க முயல்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் A.K.கண்ணன் குழுவினரும் வல்வெட்டித்துறைக் குழுவினரும் கோஸ்டி மோதலில் ஈடுபட்டு பொலிசாரால் கைது செய்யப்படதான செய்திகள் வெளியானது. விலாசத்தைப் பார்க்கும்போது அந்தச் செய்தியே நினைவுக்கு வந்தது. ஆனாலும் தென்னிந்திய சினிமாப் பாணியை ஞாபக மூட்டுவதுதான் ஒரு குறைபாடாகும். குறிப்பாக இரு இளைஞர் குழுவினரும் வன்முறையில் ஈடுபடும்போது ஒரு வகையான கதாநாயகத்தனமான(Hero) தமிழ்ச் சினிமாவின் பாதிப்பை அவதானிக்க முடிந்தது. சிலோ மோசனிலான காட்சிப்படுத்தலை தவிர்த்திருக்கலாம். கனவுகள்: - பல கனவுகளுடன் மணப்பெண்ணாக வெளிநாடு செல்லும் ஒரு பெண்ணின் கனவுகள் சிதைந்து போவது தொடர்பானதொரு வெளிப்பாடு. ஒரு இளம்பெண்னை திருமணத்திற்காக வெளிநாடு அழைக்ப்படுகின்றாள். ஆனால் 45 வயதைக்கடந்த ஒருவரையே தான் திருமணம் செய்யவிருப்பதாக அறிந்தபோது அவளது கனவுகள் சிதிலமாகின்றன. 25வயதில் எடுக்கப்பட்ட படமே அவளுக்கு காண்பிக்கப்பட்டது. உண்மையில் இன்று தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் வெளிநாட்டில் திருமணம் செய்தல் என்பது மிகவும் உயர்ந்த விடயமாகப் பார்க்கப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்னர் டொக்டர் மாப்பிள்ளை இஞ்சினியர் மாப்பிள்ளை என்பதெல்லாம் எவ்வாறு கௌரவத்திற்குரிய மணமகன் தெரிவுகளாகப் பார்க்கப்பட்டதோ அதே போன்றே இன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சொல்லுவதும் கௌரவத்திற்குரிய தெரிவாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று வயது கூடினாலும் பரவாயில்லை தன்னுடைய மகள் வெளிநாட்டிற்கு போனால் சரி என்னும் மனோபாவம் ஈழத்தின் மத்தியதர வர்கத்தினர் மத்தியில் நிலவுகிறது. எனவே இவ்வாறான விடயங்களை கையாளும்போது விடயத்தின் புறநிலை பற்றிய மதிப்பீடுகளும் நமக்குத் தேவை என்றே கருதுகின்றேன். கலைக்கண் பாலராஜாவின் நெறியாள்கையிலான 40 நிமிடங்களைக் கொண்ட இக்குறும்படம் சொல்லும் விடயத்தில் கனதியைக் கொண்டிருக்கும் அதே வேளை வெளிப்படுத்தலில் மிகவும் பலவீனமானதொரு முயற்சி என்பதே எனது அபிப்பிராயம். படம் முழுவதும் நாடகத் தன்மையிலானதொரு வெளிப்பாடே மேலோங்கியிருக்கிறது.

நிழல் யுத்தம்: - கணவன் மனைவிக்கு இடையிலான சாதாரணமான உணர்வுநிலைகளை சித்தரிக்கிறது. 14 நிமிடங்களைக் கொண்ட அஜீவனின் இயக்கத்திலான இப் படம் கருத்திலும் சரி வெளிப்பாட்டிலும் சரி கனதியைக் கொண்டிருப்பதாக நான் கருதவில்லை. பெருமளவுக்கு தென்னிந்திய நாடகப்பாங்கே மேலோங்கியிருக்கிறது.

தாகம்: - ஒரு சுருட்டுக் குடிப்பதற்கு ஒரு வயதானவர் படும் பாட்டை சித்தரிக்கிறது. சற்று மிகைப்படுத்தலான உணர்வைத் தந்தாலும் இதுவும் ஒரு குறும்பட முயற்சி என்ற வகையில் பார்க்கக் கூடியதே.

அழியாத கவிதை: – 21நிமிடங்களைக் கொண்ட அஜீவனின் இக்குறும்படத்தில் முதிர்ந்த வயதில் ஒருவர் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியிலான உணர்வுகளைச் சித்தரிக்கிறது. உறவுகள் அனைத்தும் பல தேசங்களிலும் சிதறிக்கிடக்கும் நிலையில் ஒரு தகப்பனின் மன உணர்வுகளே இங்கு பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் முதியவர் முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு அன்னியச் சூழலில் சாதரணமாகத் திரிவதான காட்சி பார்ப்பதற்கு சற்றுச் சங்கடமாகவே இருந்தது.

நதி: - பல குடும்பப் பொறுப்புக்களை சுமந்து கொண்டு பாரிஸ் செல்லும் ஒரு இளைஞர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் அதே வேளை தமிழ்ச் சமூகச் சூழலில் நிலவும் குளறுபடிகளை அப்படியே அந்நிய தேசங்களிலும் பிரதிபலிக்கும் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் செயற்பாடுகளையும் ஒருங்கே சித்தரிக்கிறது.

அடிட்: - 15 நிமிடங்களைக் கொண்ட இக்குறும்படத்தை எம்.சுதன் இயக்கியிருக்கிறார். இது புலம்பெர் சூழலில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடக்கும் ஒரு இளைஞன் பற்றியதாக அமைந்திருக்கிறது. தன்னுடைய தாயாரின் பணத்தையே பறித்துச் செல்லும் செயலால் மனம்நொந்து திருந்துவதாக முடிகிறது. தீவிர போதைப்பழக்கத்திற்கு ஆட்பட்டுக்கிடக்கும் ஒரு இளைஞன் திடிரென நிகழும் ஒரு சந்தர்ப்பத்தால் மனம்மாறுவது போன்ற முடிவு யதார்தத்திற்கு புறம்பான உணர்வைத்தான் தருகிறது.

பேரன் பேத்தி: - பராவின் நெறிப்படுத்தலிலான இக்குறும்படம் புலம்பெயர் சூழலில் வாழும் புதிய தலைமுறையினர் தாய்மொழியிலிருந்து விலகிவருவது குறித்துப் பேசுகிறது. தமிழ்ச் சூழலிலிருந்து செல்லும் மூத்தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்கும் முற்றிலும் தமிழ்ச் சூழலிலிருந்து அந்நியப்பட்டிருக்கும் அவரது பேரக் குழந்தைகளுக்குமான இடைவெளியில் மையங் கொண்டிருக்கிறது இப்படத்தின் கதை. இப்படம் ஒரு வகையில் புலம்பெயர் சூழலில் தாய் மொழிமீதான அக்கறையையும் அபிமானத்தையும் தூண்டும் வகையிலான பிரச்சார நோக்கிலான படமாகும். ஆனாலும் இவ்வாறான திரை வெளிப்பாடுகளும் நமக்குத் தேவைதான். இப்படத்தின் முடிவை மிகவும் உணர்வு பூர்வமாக நெறியாளர் சித்தரித்திருக்கிறார்.

2.
நான் அவதானித்த பத்துக் குறும்படங்களும் அரம்பநிலை முயற்சிகள் என்பதை மனதில் இருத்தியே சில அபிப்பிராயங்களைச் சொல்லியிருக்கிறேன். ஆரம்ப முயற்சிகளில் குறைபாடுகள் தெரிவது பெரிய பிரச்சனைக்குரியதல்ல. இப்படங்களை ஒரு பொதுத்தளத்தில் நின்று  பார்க்கும்போது தென்னிந்திய சினிமாவின் தாக்கங்கள் ஆங்காங்கே தெரியத்தான் செய்கிறது. முடிந்தவரை அவற்றிலிருந்து நாம் விலகவேண்டியிருக்கிறது. எங்களுக்கானதொரு தனித்துவமான சினிமாவிற்கான அடித்தளமே அந்த விலகல்தான்.
இனி இப்படங்களை முன்நிறுத்தி பொதுவாக சில குறிப்புக்கள். இப்படங்களைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்வி இப்படங்கள் ‘புலம்பெயர் தமிழ்ச் சினிமா’ (Diaspora tamil films) என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கின்றனவா? தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் பக்கவிழைவுகளில் ஒன்றே புலப்பெயர்வு. இவ்வாறு புலம்பெயர்ந்தர்கள் மத்தியிலிருந்து தோன்றிய கலை இலக்கிய வெளிப்பாடுகளை நாம் புலம்பெயர் இலக்கியம் என்கிறோம். ஆரம்பத்தில் இவ்வாறான இலக்கிய வெளிப்பாடுகள் பெரும்பாலும் ஈழத்து நினைவுகளையும் அனுபவங்களையும் புலம்பெயர் சூழலில் இரைமீட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு வகையில் அவ்வாறான எழுத்துக்கள் வேற்றுச் சூழலில் தோன்றியதாக இருப்பினும் புலம்பெயர் சூழலில் வெளிவந்த ஈழத்து இலக்கியமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக 90கள் வரை இந்நிலைமை இருந்ததாகக் கணிக்கலாம். 90களுக்கு பிற்பாடே புலம்பெயர் வாழ்வியல் அனுபவங்கள் படைப்புக்களில் பேசுபொருளாகின. ஆரம்பத்தில் ஈழத்து நினைவுகளின் நீட்சியாக இருந்த புலம்பெயர் எழுத்துக்கள் புலம்பெயர் வாழ்வைப் பேசுதல் என்னும் புதிய தளத்திற்கு நகர்ந்தது. இத்தகையதொரு புரிதலூடாக இக் குறும்படங்களை பார்ப்போமானால் இக் குறும்படங்கள் பேசும் தளமானது பெரும்பாலும் ஈழத்து வாழ் முறைகளின் நீட்சியாகத்தான் தெரிகின்றன. புலம் பெயர் சூழலில் வாழ நேர்ந்தவர்களை தமக்குள் என்னவகையான முரண்பாடுகளைக் கொண்டிருக்கினர் என்பதைத்தான் இப்படங்களில் பெரும்பாலானவை பேச முயல்கின்றன. சுருங்கச் சொல்வதானால் இக்குறும்படங்களின் பேசுபொருளானது ஈழத்தின் வாழ்முறைகள் புலம்பெயர் சூழலிலும் தொடர்வதன் வெளிப்பாடுகளாகும்.  ஆனால் மேற்கின் சமூக அமைப்புடன் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன வகையான முரண்பாடுகளை எதிர்கொள்கிறது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் புதியதலைமுறையினர் (அங்கேயே பிறந்து அந்நிய கல்விப் பின்னணியில் சிந்திப்பவர்கள்)  எதிர்கொள்ளும் கலாசாரரீதியான முரணப்பாடுகள் எத்தகையது. புதிய சூழலில் முன்கூட்டிய மதிப்பீடுகளுடன் வாழும் நமது மூத்த தலைமுறையினருக்கும் புதிய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி ஆகியன குறித்த அவதானத்தை இப்படங்கள் எதுவுமே கொண்டிருக்கவில்லை. உண்மையில் சரியான ஆய்வுகளுடன் இவ்வாறான விடயங்களை பேசு பொருளாக்கும் நிலையை நோக்கி இத்தகைய சினிமா முயற்சிகள் நகர வேண்டும். அவ்வாறான விடயங்கள் பேசு பொருளாகும் போதுதான் புலம்பெயர் தமிழ்ச் சினிமா என்ற அடையாளம் முழுமையுறும் என நான் நினைக்கிறேன். அத்தகையதொரு நிலையை நோக்கி சினிமா முயற்சிகள் நகருமென்றே நினைக்கிறேன். பிறிதொரு கருத்தையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. புலம்பெயர் சூழலில் பல தேசங்களின் நல்ல சினிமாக்களை பார்ப்பதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே சாதாரணமான விடயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து காத்திரமான விடயங்களில்; கவனம் செலுத்துவதே நல்லது. ஏற்கனவே எங்களுக்கானதொரு சினிமா என்ற செயற்பாட்டை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சிங்கள தேசத்தில் இன்றுவரை தேசிய திரைப்படக் கல்லூரி உருவாக்கப்படவில்லை என மேலே குறிப்பிட்டேன். ஆனால் இன்று தமிழர் தேசம் ஒரு திரைப்படக் கல்லூரியைக் கொண்டிருக்கிறது ( ஆதவன் திரைப்படக் கல்லூரி). புலம் பெயர் சூழலில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் எங்களுக்கானதொரு சினிமா என்ற கருத்தை முன்னகர்த்துவதில் காத்திரமான பங்காற்ற இடமுண்டு. இன்று உலகில் அதிக சிறந்த திரைப்படங்களை வெளியிடும் தேசமாக ஈரான் விளங்குகிறது. ஈரானின் முதல் பேசும் படமான The lor girl  ஈரானிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்ந்த அப்தோல் - ஹொஸீன் என்பவராலேயே எடுக்கப்பட்டது. இவர் ஈரானுக்கான படங்களை இந்தியாவிலிருந்து எடுத்தார்.  இறுதியாக ஒரு எண்ணத்தை பதிவு செய்வதுடன் நிறைவு செய்கின்றேன். ஈரானிய சினிமாத் துறையை வளர்ப்பதற்காக பராபி சினிமா பவுண்டேசன் (FCF)  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்னரே மிகவும் மந்தமாக நகர்ந்து கொண்டிருந்த ஈரானிய சினிமா முயற்சிகள் துடிப்புற்று எழுந்தன. மேற்பார்வை, வழிகாட்டுதல், ஆதரவு, முதலீட்டைக் கவர்தல் ஆகியவையே அதன் குறிக்கோளாக இருந்தன. நாமும் எங்களுக்கானதொரு சினிமா என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசிய சினிமா பவுண்டேசன் ஒன்றை நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது. இதனை உருப்பெறச் செய்வதற்கான அதிக சாதகத் தன்மையை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 04 May 2024 08:34
TamilNet
HASH(0x55f8707f8940)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 04 May 2024 08:34


புதினம்
Sat, 04 May 2024 08:34
















     இதுவரை:  24856451 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1596 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com