அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 30 September 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


துரோகத்தின் பரிசு.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 26 January 2006

பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது.

ஒரு தேசத்தின் விடுதலைப்போராளிகளை அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு அநேகமான அடக்குமுறையாளர்கள் அத்தேசத்தின் பிளவுகளைப்பயன்படுத்தி அத்தேசத்தின் இனத்தவர்கள் மத்தியிலுள்ள பலவீன உள்ளங்கொண்டவர்களையும், சுயநலத்திற்காக எதையும் செய்யத்தயங்காதவர்களையும் இனங்கண்டு அவர்களைத் தம்முடன் இணைத்து  தம்மவர்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுத்துவது வரலாறு கண்ட வழமை.

அல்ஜீரியர்களுக்கெதிராக அல்ஜீரியர்களையே ஆயுதம் தூக்க வைப்பதில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் சிறிது சிறிதாக வெற்றிகண்டது.
இவ்வகையில், அல்ஜீரியர்களில் பலவீனம் கொண்டவர்களை, அப்பாவிகளை, சுயநலத்திற்காகத் தேசமறுப்புச் செய்தவர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி அவர்களுக்கு பயிற்சி வழங்கி, ஆயுதங்களும் வழங்கி பிரஞ்சு இராணுவம் அவர்களை தனது உதவியாளர்களாக உருவாக்கிக் கொண்டது. தமது பிரஞ்சு எஜமானர்களின் கட்டளைகளை ஏற்று தம்மக்களுக்கெதிராகவே இந்த அல்ஜீரியர்கள்அறியாமையாலும் சுயநலத்தாலும் போராட்டத்தில் குதித்தார்கள். பிரஞ்சு இராணவத்தினரால் வெறியூட்டப்பட்ட இவர்கள் எண்ணுக்கணக்கற்ற தொகையில் அல்ஜீரியர்களையே கொன்றொழித்தார்கள். கிராமங்கள் சிலவற்றை முற்று முழுதாக அழித்த பெருமையும் இவர்களுக்குண்டு.

 "இயக்கம்" எனும் பெயரில் (அரபு மொழியில் ஹார்க்கா) இவ்வாறான ஒரு துணைப் படையை உருவாக்கி அல்ஜீரியர்களை இலகுவாக அடக்குவதற்குப் பிரஞ்சு இராணுவம் அவர்களைப் பயன்படுத்தி வந்தது. இவர்கள் மூன்று பிரிவுகளாக சேவையிலீடுபட்டிருந்தார்கள். தமது பிரஞ்சு எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக உழைத்தார்கள் இந்த "இயக்கக்காரர்கள்".  அரபு மொழியில் இன்றும் இவர்கள் "ஹார்க்கிகள்" என்றே அழைக்கப்படுகிறார்கள். தமது நாட்டவருக்கெதிராகப் போராடிய இவர்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் போர்காலத்தின்போதே இறந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள்.

1962 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரஞ்சுக் குடியரசின் அன்றைய ஜனாதிபதியான து கோள் அல்ஜீரியத் "தேசிய விடுதலை முன்னணியை" அனைத்து அல்ஜீரிய மக்களினதும் பிரதிநிதிகளாக ஏற்று அவர்களின் கையில் அல்ஜீரிய ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத் தீர்மானித்து அவசர அவசரமாக "எவியன் ஒப்பந்தம்" கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் பிரஞ்சுப்படைகளுக்கும் அல்ஜீரியத் தேசிய விடுதலை இராணுவத்திற்குமான போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பிரஞ்சு இராணும் அல்ஜீரியாவை விட்டுப்புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் அண்ணளவாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான "இயக்கக்காரர்கள்" (அல்லது ஹார்க்கிகள்) பிரஞ்சு இராணுவத்துடன் ஒத்துழைப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.

எவியன் ஒப்பந்தத்தின் இரண்டாவது அதிகாரம் எதிர்காலத்தில் அல்ஜீரியமக்களின் குடியுரிமைகள்பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தது. நூற்று முப்பத்தியிரண்டு வருட காலங்களாக காலணியாதிக்கத்தின்போது அல்ஜீரியாவில் குடியேறி அந்நாட்டிலேயே வேரூன்றி விட்ட  பிரஞ்சுப்பிரஜைகளின் எதிர்காலம் சம்பந்தமான தீர்மானங்களை இவ்வொப்பந்தங்கள் கொண்டிருந்தபோதும், பிரஞ்சுக்காரர்களுடன் ஒத்துழைத்து அல்ஜீரிய மக்களின் அடங்காத வெறுப்பைப் பெற்றிருந்த "ஹார்க்கிகளின்" சார்பில் எதுவித பிரத்தியேகப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.  அவர்களை முற்றுமுழுதாகப் பிரஞ்சு அரசு அலட்சியம் செய்தது. அவர்களைப் பொருட்டாகக் கூட பிரஞ்சு அரசாங்கம் மதிக்கவி;ல்லை. ஆயுதம் களைந்து அவர்கள் எவ்விதப்பாதுகாப்பும் இன்றிக் கைவிடப்பட்டார்கள்.

பிரஞ்சு அரசாங்கம் தமது ஒத்துழைப்புப் படைகளைச் சேர்ந்த அல்ஜீரியர்களை பிரான்சுக்கு அழைத்துவரவேண்டும் எனும் திட்டத்தை மறுத்தது.
சுயவிருப்பிலோ அல்லது சுயமுயற்சியிலோ இப்படையினர் எவரையும் பிரான்சுக்குள் அழைத்து வரக்கூடாதென அனைத்து பிரஞ்சுப்படை உயர்மட்டக் கட்டளை அதிகாரிகளுக்கும் இறுக்கமாகக் கட்டளையிட்டது.
இவ்வாறக தங்களுடன் ஒத்துழைத்த அல்ஜீரியத் துணைப்படைகளுக்கு ஆபத்து நிகழும் நிலையில் பிரஞ்சுப்படைகள் எக்காரணங்கொண்டும் அவர்களுக்கு உதவியளிக்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என பிரஞ்சு அரசாங்கம் ஆணையிட்டது.
தமது இராணுவ முகாம்களை விட்டு வெளியேறிய பிரஞ்சுக்காரர்களின் இராணுவ லொறிகளின் பின்னால் ஓடித்தாவி ஏறி எங்களையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள் என அலறிய ஹார்க்கிகளுக்ளின் கையில் துவக்குப்பிடியால் இடித்து அவர்களை கீழே விழுத்தி விட்டார்கள் தமது மேலதிகாரிகளின் உத்தரவுக்குப் பணிந்த பிரஞ்சுச் சிபபாய்கள்.

தமது நாட்டு மக்களின் தேசிய விடுதலைப் போராட்டதில் அந்நிய எதிரிகளுடன் கூட்டிணைந்து போராட்டத்தைப் பின்னடையவைத்து, தமது மக்கள் எதிரிகளினால் அடக்குமுறைக்கும் சித்திரவதைக்கும் உட்படுவதற்கு உடந்தையாயிருந்தவர்களை, தமது மக்களையே எவ்வித இரக்கமுமின்றிக் கொன்றொழித்தவர்களை அவர்களைப் பயன்படுத்தியவர்கள் கூட மதிக்கவில்லை. 

அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்து பிரஞ்சு அரசாங்கம் ஹார்க்கிகளைக் கைவிட்டுவிட்டது.  அல்ஜீரியாவில் வசித்த தமது ஐரோப்பியப் பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு வருவித்து அவர்களுக்குப் புனர் வாழ்வளிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்த பிரஞ்சு நிர்வாக உயர்பீடம் தமது முன்னைய ஒத்துழைப்பாளர்களுக்குப் பாதுகாப்பு எதுவும் இல்லையென்பதை நன்குணர்ந்திருந்தும் அவர்களை அடியோடு கைவி;ட்டுவிட்டது.

ஈடிணையற்ற உயிர்களைப் பலி கொடுத்து தமது தேச ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராகப் போராடி அவர்களைப் பின்வாங்கவைத்திருந்த அல்ஜீரியத் தேசிய முன்ணணியினதும் அவர்களது இராணுவமான அல்ஜீரியத் தேசிய விடுதலை இராணுவத்தினதும் நியாயமான சினத்தின் முன் கைவிடப்பபட்டார்கள் ஹார்க்கிகள்.

இது வரையும் காட்டிக்கொடுத்து, கொன்று, சித்திரவதைசெய்து எதிரிகளுடன் ஒத்துழைத்துத்  துரோகம் இழைத்தவர்கள் தமது துரோகங்களுக்குப் பரிசாக அல்ஜீரியர்களின் நியாயமாக கோபக்கனல்களின் முன் ஆயுதங்கள் களையப்பட்டுக் கைவிடப்பட்டார்கள்.
இதைத்தொடரந்து  1962ம் ஆண்டு முடிவடைவதற்குமுன்  அல்ஜீரிய மக்களும் அவர்களது இராணுவமும் கருணையிழந்து, பொறுமையிழந்து கடூரமான முறையில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஹார்க்கிகளையும், அவர்கள் குடும்பங்களையும் கொடூரமாகக் கொண்றொழித்தார்கள்.

பிரஞ்சு அரசின் காலணித்துவப் போக்கிற்கு எதிராகவும் அல்ஜீரிய விடுதலை முன்ணணின் சார்பாகவும் குரலெழுப்பிய  உலகறிந்த தத்துஞானியும் மாக்ஸிஸ்ட்டுமான சார்த்தர் கூட ஹார்க்கிகளின் படுகொலைக்கெதிராக எவ்விதக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.  மூன்றாவது மண்டல நாடுகளின் விடுதலையை முன்வைத்துப் போராடிய அல்ஜீரிய போராட்ட ஆதரவாளரான பிரான்ஸ் பனோன் கூட இவ்விடயம்பற்றி எதுமே கூறவில்லை.

பிரஞ்சு அரசின் மனப்பூர்வமற்ற இறுதிநேர அனுசரணையுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஹார்க்கிகள் பிரான்சுக்குள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக நிறுவபட்ட முகாம்களுள் இருத்தப்பட்டார்கள்.  மொத்தத்தில் அல்ஜீரியாவிலிருந்து 25 ஆயிரம் ஹார்க்கிகள் குடும்பங்கள் பிரான்சிற்கு அரைமனதுடன் காப்பாற்றிக் கொண்டுவரப்பட்டார்கள்.

பிரஞ்சுச் சமுகம் அவர்களை மதிக்கவில்லை என்பது மட்டுமல்லாது அவர்களை அவமதிக்கவும் செய்தது. அவர்களுக்கான முகாம்கள் குடிமனைகள் உள்ள இடங்களிலிருந்து தொலைவான இடங்களிலேயே அமைக்கப்பட்டன. ஒரு பகுதியினர் காடுகளுள்ளும் மறுபகுதியினர் நிலக்கரிச் சுரங்கங்களுள்ளும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.

"இந்த ஹார்க்கிகளிலிருந்து எம்மை விடுவிப்பதற்கு, நகரசபை என்ன திட்டத்தை வைத்திருக்கிறது ?" என எழுதியது ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை.  தமது நாட்டின் சுதந்திரப்போராட்டத்தை மறுத்தவர்களை பிரஞ்சு இடதுசாரிகள் கணக்கிலெடுக்கவில்லை என்பது மட்டுமல்லாது அவர்களுக்கெதிரான போக்கைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் என்பதும் உண்மையாகும்.

பிரஞ்சுக் கம்யூனிசக் கட்சி சார்பான பலம்மிக்க தொழிற்சங்கமான சி.ஜீ.ரி, தொழிற்சாலைகளில் ஹார்க்கிகளை வேலைக்குச் சேர்ப்பதற்கு நீண்டகாலமாக எதிர்ப்புத்தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று வரையும் அல்ஜீரியாவில் துரோகிகள் எனும் சொல்லால் அழைக்கப்படும் ஹார்க்கிகள் அந்நாட்டில் வேண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அல்ஜீரியாவிற்குப் பயணிக்கும் உரிமையுமற்றவர்கள். பிரான்ஸில் கூட இன்றுவரையும் அவர்களின் நிலை தற்காலிகமானதாகத்தான் உள்ளது. பிரான்ஸில் இன்று வாழும் ஹார்க்கிகளினதும் அவர்களினது வழித்தோன்றல்களினதும் எண்ணிக்கை அண்ணளவாக நான்கு இலட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவிற்கும், பிரான்சுக்குமான பொருளாதார ராஜதந்திர உறவுகள் சுமூகமானவை. இரண்டு சுதந்திர நாடுகளுக்கிடையில் இருக்கக்கூடிய பல ஒப்பந்தங்கள் இவ்விரண்டு நாடுகளுக்குமிடையில் இருக்கின்றன. பிரஞ்சுக்காரர்கள் அல்ஜீரியாவிற்குப் பயணிக்கமுடியும். அல்ஜீரியர்கள் பலர் பிரான்சுக்குப் பயணிக்கிறார்கள். ஆனால் ஹார்க்கிகள் தம் நாட்டில்காலடி எடுத்து வைக்கமுடியாத நிலையிலுள்ளார்கள். பிரான்ஸில் அவர்கள் அந்நியர்கள். தம் தேசத்திற்குத் துரோகம் விளைவித்துவிட்டுத் தப்பியோடிவந்தவர்கள். அல்ஜீரியாவில் அவர்கள் துரோகிகள். அந்த நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள்.

அண்மையில் தற்போதைய அல்ஜீரிய தேசத் தலைவர் உத்தியோக பூர்வமாக பிரான்சுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவரிடம் "ஹார்க்கிகளுக்கு" அல்ஜீரியாவிற்குப் மீண்டும் பயணிக்கும் உரிமை வழங்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதற்கு அவர் அதற்கான காலம் இன்னமும் வரவில்லை என்றும் இரண்டாவது உலகப்போரின் போது தமது தேசத்தை ஆக்கிரமித்திருந்த நாசிகளுடன் ஒத்துழைத்தவர்களைப் பற்றி பிரஞ்சுக்காரர்கள் என்ன கருதுகிறார்களோ அப்படியொரு கருத்தையே அல்ஜீரியர்களும் "ஹார்க்கிகள்" விடயத்தில் கொண்டுள்ளார்கள் என்றும் கூறிவைத்தார்.

ஹார்க்கிகளை அல்ஜீரியர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். சிலவேளை அவர்களின் வழித்தோன்றல்கள் மன்னிக்கப்படக்கூடும். ஆனால் ஹார்க்கிகள் தமது தேசத்திற்கு இழைத்த துரோகத்தை வரலாறும் அல்ஜீரிய மக்களும் எக்காரணம் கொண்டும் மறக்கமாட்டார்கள்.

(எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த இந்தக் கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


     இதுவரை:  24058742 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2385 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com