அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow நீலக்கடல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நீலக்கடல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -பிரபஞ்சன்  
Friday, 27 January 2006
உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் - நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' 
நீலக்கடல் - நாகரெத்தினம் கிருஷ்ணாநீலக்கடல் - நாகரெத்தினம் கிருஷ்ணா 
    
நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய 'நீலக்கடல்' எனும் நாவலைப் படித்தபோது, நாவல் படிப்பதுபோல இருந்தது. ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால், வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைரமுடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டைபோடுவது ஒன்றையே மூச்சாகவும் தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறு வேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை ஆனாலும் இது வரலாற்று நாவல்தான், ஒரு வகையில்.
 
பிரஞ்சு ஏகாதிபத்யம், ஆங்கில, போர்ச்சுகீசிய, ஆலந்து ஏகாதிபத்யம் போல, கிழக்கு ஆசிய நாடுகளைச் சுரண்ட தம் கப்பல் சக்திகளை திரட்டிக்கொண்டிருந்த நேரம். இந்திய மிளகை கருப்புத் தங்கம் என்று கண்டுபிடித்தார்கள் அவர்கள். இந்திய முத்துகள், உணவுக்கான மூலப்பொருட்கள் மற்றும் தமிழக நெசவுகளின் நேர்த்தி, தங்கள் தேசத்து கறுப்பு அடிமைகளுக்கு உகக்கும் என்று அவர்கள் கருதிய நீலத் துணிகள் எல்லாம் சேர்ந்து, ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் கிழக்கை நோக்கி நகர்ந்த காலம், பதினேழாம் நூற்றாண்டு. வியாபாரிகளாக வந்த அவர்கள், அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் ஆள்வோர்கள் ஆயினர். இன்றைய ஆளுனர் என்ற சொல், அவர்கள் உருவாக்கிய கருத்தாக்கந்தான். பதினேழாம் நூற்றாண்டு போர்ச்சாதனம் கப்பல்களாகவே இருந்தது. எந்த நாடு கப்பல்படை அதிகமாகக் கொண்டதோ, அந்த நாடே வல்லரசு எனவாயிற்று.
 
பிரெஞ்சு தேசத்தின் படைபலம், கப்பல்களைத்தான் நம்பி இருந்தது. வரலாற்று நெடுகிலும் புகழ்பெற்ற கப்பல்படை வீரர்கள், பிரஞ்சு அரசியலில் காணப்படுகிறார்கள். அந்த வரிசையில் வருபவர் இந் நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான லா போர்தொனே. பிரான்சு தேசத்தின் கடற்கரைப் பட்டணமான சேன் மாலோ, கப்பல் தளபதிகளை, வீரர்களை, வியாபாரிகளை உருவாக்குவதில் மிகவும் புகழ்பெற்றது. அந்தப்  பகுதியில் பிறந்தவன் லா போர்தொனே. கப்பல் கட்டுதல், என்பதே அவன் படித்த படிப்பு. பத்தொன்பது வயதில் மொரீஷியஸ் தீவுக்கருகில்  தன் உடைந்த கப்பலை, ஓர் இரவு முழுக்கத் தனியாக இருந்து கட்டியவன். தன் அனுபவத்தைப் புத்தகமாக, தன் இருபது வயதில் வெளியிட்டு பணமும் புகழும் அடைந்தவன். கேரளாவில் இருந்த மாஹே எனும் ஊரைப் பிரஞ்சியர்க்குப் போரிட்டுப் பெற்று தந்தவன் இவன். இவனது வாழ்நாள் சாதனை என்பது, தமிழகத் தலைநகர் சென்னையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றிப் பிரஞ்சியருக்குத் தந்ததுதான்.
 
இது அவனது மேலோட்டமான குணாம்ச சித்தரிப்புதான். அடிப்படையில், மிகுந்த புகழ் விரும்பியும், தலைமைக்குக் கட்டுபடாத தன்மையும் கொண்டவனாக அவன் இருந்திருக்கிறான். புதுச்சேரி குவர்னர் துயப்பிளக்சுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட, யார் பெரியவர் என்ற அக நெருக்கடி தொடங்கியதன் விளைவாக, கைப்பற்றிய  சென்னையை ஆங்கிலேயரிடம் விற்று, பிரஞ்சு வரலாற்றில் பெரும் இழிவை ஏற்படுத்தியவன்.
*
 
இன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகிய தமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்த தேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்று பலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும் ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற 'சொர்க்கத்தில்' தம் உயிரை பலி கொடுத்தார்கள்.
 
நாகரெத்தினம் கிருஷ்ணாஇந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும் வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.
 
நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும் மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக, உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
 
மனித மனத்தின் வன்மங்கள், ஆசைகள், கோபங்கள் என்று நீடிக்கிற சகல அடிப்படைக் குணங்களிலும் எழுத்துப் பயணம் செய்யவேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான அம்சம், உன்னதங்களைச் சித்தரிப்பது மட்டுமல்ல. மனித குலம் இதுகாறும் ஏற்றுப் போற்றிவந்த சகல கயமைகளையும், சகல போலிமைகளையும் எந்தச் சார்பும் அற்று விசாரணை செய்யவேண்டிய பொறுப்பும் இலக்கியத்துக்கு உள்ளது.
 
நாகரத்தினம் கிருஷ்ணா அந்தப் பொறுப்பைக் குறைவற நிறைவேற்றி இருக்கிறார்.
 
(நீலக்கடல் - நாவல், நாகரத்தினம் கிருஷ்ணா, சந்தியா பதிப்பகம், ·ப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 -53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083 தொலைபேசி 24896979,55855704 விலை,ரூ250)

மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 14:06
TamilNet
HASH(0x55d51e8f5ab0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 14:06


புதினம்
Thu, 28 Mar 2024 14:06
















     இதுவரை:  24712524 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5573 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com