Saturday, 18 February 2006
18-02-2006 உதயன். பயங்கரவாதம் பற்றி வேதம் ஓதும் அமெரிக்காவின் தகைமை சர்வதேசப் பொலீஸ்காரனாகத் தன்னைக் கருதி, உலக நாடுகளில் எல்லாம் அளவுக்கு மீறித் தலையிட்டு, மனித உரிமைகள் குறித்து அதிகம் பேசிவந்த அமெரிக்காவின் உண்மைச் சொரூபம் வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. கியூபா எல்லையில் தனது நாட்டிலிருந்து தொலைவில் குவாண்டனமோ குடாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் அதிகமானோரைத் தடுத்து வைத்திருந்து, நியாயமான விசாரணைகளுக்கு இடமளிக்காமல், அவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கி வரும் அமெரிக்க அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு. சர்வதேச விதிமுறைகள், ஒழுங்குகள், வழக்காறுகள் என்று எவற்றையுமே கவனத்தில் கொள்ளாமல் இந்தக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் முறையற்ற விதத்தில் நடத்தப்படுகிறார்கள் என்றும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு தனது பிந்திய அறிக்கையில் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது. "உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை' என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் தனது செயற்பாடுகள் மூலம் தான் கைது செய்தோரை பெரும்பாலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை இப்படித் தடுத்து வைத்து, அநீதி புரிகிறது அமெரிக்கா என்பதே குற்றச்சாட்டு. "உலக அமைதிக்கு எதிரான ஆபத்தான பேர்வழிகள்' என்று அமெரிக்கா விமர்சிக்கும் இந்தக் கைதிகளுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது கண் துடைப்புக்கு சில நீதிபதிகளை இவ்விடயம் குறித்து விசாரிக்க நியமித்தது அமெரிக்கா. நான்கு வருடங்களுக்கு அதிகமாக ஐநூறு பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்க, ஆக ஒன்பதே ஒன்பது கைதிகள் குறித்து மட்டுமே இதுவரை விசாரணைகள் முடிவடைந்திருக்கின்றன என்று தகவல் வெளியிடுகின்றன மனித உரிமைகள் அமைப்புகள். ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டுமல்ல, "ஹியூமன் ரைட்ஸ் வோச்', சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற பல மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவின் இந்த மனித உரிமை மீறல்களைப் பல தடவைகள் சுட்டிக்காட்டிய பின்னும் அமெரிக்கா திருந்துவதாக இல்லை. "ஊருக்கடி உபதேசம்; உனக்கில்லையடி' என்பது போல, "உலகப் பயங்கரவாதம்' என்ற விவகாரம் குறித்து அதிகம் தத்துவம் பேசி உலக நாடுகளுக்கெல்லாம் உபதேசம் செய்யும் அமெரிக்கா, தனது கொல்லைப்புறத்தில் தான் புரியும் பயங்கரவாதம் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பது விநோதமானது. மனித குலத்துக்கு பேரழிவு தரும் ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றது என்று ஒரு தலைப்பட்சமாகக் குற்றம் சுமத்தி, உலக நாடுகள் பலவற்றினதும் எதிர்ப்புகளை யெல்லாம் மீறி, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியைக் கூடப் பெறாமல், ஈராக்கை ஆக்கிரமித்தன அமெரிக்கா தலை மையிலான நேச அணிகள். இன்று அங்கு என்ன நிலைமை? பேரழிவு தரும் ஆயுதம் ஏதும் அங்கு இல்லவே இல்லை என்பது உறுதியாகி விட்டது. ஆக்கிரமிப்புக்குத் தான் காட்டிய காரணம் வெறும் "கப்ஸா' என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொள்ளும் நிலைமை. அது மாத்திரமல்ல, உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான தனது நடவடிக்கை என்ற பெயரில் தான் முன்னெடுத்த இந்த ஆக்கிரமிப்பால் ஈராக் இன்று, பயங் கரவாதம் விளையும் வயலாக, அழிவுகளுக்கான உறைவிட மாக, மரணங்கள் மலிந்த பூமியாக மாறியிருக்கும் அவலத் தைப் பார்த்து அமெரிக்காவே திகைத்துப் போய் நிற்கின்றது. "உலகப் பயங்கரவாதத்துக்கு' எதிராகப் போர் புரிகின்றவர்களாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டோர், ஈராக்கின் அபுகிறைப் சிறையில் புரிந்த பயங்கரவாதம் இன்று உலகெங்கும் வீடியோக்களில் வெளியாகி அமெரிக்காவின் "பெருமையை' பறைசாற்றி நிற்கின்றன. "இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதிகள்' என்றும், "பயங்கரவாதிகள்' என்றும் தான் கருதிய நபர்களை மேற்கு நாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளின் சட்ட, ஒழுங்கு விதிகளுக்குப் போக்குக்காட்டி விட்டு, பாதுகாப்பு ஏற்பாட்டாளர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அமெரிக்கக் கூலிப்படைகள் அவ்வப்போது கடத்திச் சென்றமை குறித்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த அத்துமீறல்கள், அட்டூழியங்கள் பற்றிய குற்றச் சாட்டுகள் குறித்து அமெரிக்கத் தரப்பு என்ன சாக்குப் போக்கு விளக்கம் கூறினாலும் உலகம் அதை ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை. ஐ.நா.சபையின் அனுமதியின்றி ஈராக்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த அமெரிக்கா, இப்போது அதன் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் காரணமாக சர்வதேசத்தின் முன்னால் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அரச பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமது விடுதலை வேண்டியும், உரிமைகளுக்காக, நீதி தேடியும், தத்தமது தாயகங்களில் சுதந்திரப் போராட்டம் நடத்தும் விடுதலை அமைப்புகளை "பயங்கரவாதம்' புரியும் இயக்கங்களாக ஒரு தலைப்பட்சமாக சித்திரித்து வரும் அமெரிக்கா, இப்போது அடுத்த நாடுகளுக்குள் புகுந்து அது புரியும் அட்டகாசங்களை "பயங்கரவாதமாக' உலகம் சித்திரிக்கும் நிலையை எதிர்கொள்கிறது. எனவே, இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தானே பயங்கரவாதம் புரிந்து கொண்டு "உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை' என்று அமெரிக்கா தத்துவம் பேசுவது "சாத்தான் வேதம் ஓதுவது' போன்றதாகும்.
|