அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 06
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 06   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 21 February 2006

06.

இக்கரையிலிருந்த ஆட்காட்டிப் பறவைகள் சேனாதியின் வரவுகண்டு கலைந்து எழுந்து அவனுக்கு மேலாக வட்டமிட்டுப் பறந்தன. அவை எழுப்பிய குரல் அவனுக்கு அன்று ஏனோ மிகவும் சோகமானதாக இருந்தது. வழமையாக, அவற்றையும் அவற்றின் குச்சிபோன்ற மெல்லிய கால்களையும் காண்கையில் அவனுக்குச் சிரிப்பு வருவதுண்டு. ஏனெனில், அவை நித்திரைக்குச் செல்கையில் தரையில் முதுகை வைத்துப் படுத்து மேலே வானை நோக்கிக் கால்களை வைத்துக் கொள்ளுமாம். ஏனெனில் தற்செயலாக வானம் இடிந்து வீழ்ந்தால் தாங்கிக் கொள்ளலாமே என்றுதானாம்!

ஆனால் இன்று அவனுக்கு அந்தக் கதை நினைவுக்கு வரவுமில்லை, அவன் மனதுக்குள் சிரிக்கவுமில்லை. மாறாக, அவை எழுப்பிய குரல் அவனுக்குச் சோகம் தோய்ந்ததாகத் தோன்றியது. அவன் இதயத்தில் நந்தாவின் பிம்பம் பதிந்த இடத்திலிருந்து ஊமைக் கீதமாக ~நந்தா நீ என் நிலா!.. நிலா!| என்ற பாடலே சோகத்தில் தோய்ந்து ஒலித்தது.

அவன் நடந்து பரவைக் கடலைக் கடந்து குமுளமுனையை அடைந்தபோது, அங்கு கரையோர மேட்டில் அமைந்திருந்த கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கோவில் முன்றலில், அவனுடைய கல்லூரியில் அடவான்ஸ் லெவல் படிக்கும் காந்தி, கையில் ஏதோ புத்தகம் ஒன்றுடன் அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு விலகிப் போய்விட சேனாதி எண்ணியபோது, காந்தி அவனைக் கண்டுகொண்டு தன்னிடம் அழைத்தான்.

'வாடாப்பா சேனாதி!.. பஸ் இப்பதான் செம்மலைக்குப் போகுது. அது திரும்பிவர இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்குது.. வா!.. நடந்த களையாற இதிலை இரு!.." என்று கூப்பிட்டான்.

காந்தி, ஆசிரியர் கே. பானுதேவனின் பிரியத்துக்கு உகந்த மாணவன். சிவந்த மெல்லிய உடல், எப்போதும் ஒளிரும் தீட்சண்யமிக்க விழிகள். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். அல்லது சிந்தித்துக் கொண்டிருப்பான்.. பேசினால், இன்றைய நாட்டுப் பிரச்சனைகள், சமுதாய முன்னேற்றம் என்றெல்லாம் பேசுவான். அவனோடு கூட இருக்கவே சேனாதிக்குச் சங்கடமாக இருக்கும். காந்தி சொல்வதில் இவனுக்கு அக்கறையுமில்லை, அவன் சொல்பவை இவனுக்குப் புரிவதுமில்லை. எனவே, இவனிடமிருந்து எப்படிக் கழற்றிக் கொள்வது என்று சங்கடப் பட்டுக்கொண்டே அவனருகில் உட்கார்ந்தான் சேனாதி.

'என்ன சேனாதி?.. சனி ஞாயிறிலை பாடப் புத்தகங்கள் படிக்கிறியோ?.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு!.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு!.. சே!.. இந்தக் காலத்துப் பொட்டையளும் பொடியங்களும் நாள் முழுக்க சினிமாப் பாட்டுக் கேக்கிறதுதான் வேலை!.. உனக்குத் தெரியுமேர்?  நீரோ எண்ட ராசா தனது ரோமாபுரி பத்தி எரியேக்கை அதைப் பாத்துக்கொண்டு வயலின் வாசிச்சானாம்!.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்!.." காந்தி படபடவெனப் பேசினான்.

சேனாதியின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போன்று காந்தி இப்போது சற்றுத் தணிந்து பேசினான்.

'எங்களுக்கு கே.பி போல ஒரு வாத்தியார் வந்தது நாங்கள் செய்த பெரிய புண்ணியம் சேனாதி!.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே!.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா!.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே? அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும்!" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி! செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும்!... நான் வாறன்" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை! இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது!" என மனமின்றி விடை கொடுத்தான் காந்தி.

அவன் குமுளமுனைச் சந்திக்கு அருகாமையில் இருந்த செல்வன் ஓவசியரின் குவாட்டர்சுக்கு வந்தபோது அங்கு கணுக்கேணி லோயர் சங்கரலிங்கம், தண்ணிமுறிப்பால் வந்த களையாறச் சைக்கிளைப் பிடித்தவண்ணமே செல்வன் ஓவசியருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரை லோயர் என்றுதான் சிநேகிதர்கள் அன்புடன் அழைப்பர். விவாதம் என்று வந்தால் விட்டுக் கழரவே மாட்டார் மனுஷன்.

'நல்லது லோயர் சங்கரலிங்கம்!.. அருமையான கேள்வி! ஏன் இன்னமும் எமது கிராமத்து மக்கள் முன்னேறவில்லை என்பதுதானே உமது வினா?.. நல்லது! சொல்கிறேன் கேளும்!.. காரணம் வேறு என்ன! குடிதான் காரணம் லோயர்!.. நம்மூர் பெருங்குடிமக்கள் முன்னேற்றமடையாததற்குக் காரணம் குடியேதான்!...

... நன்றாகக் கவனியும்... நம்முடைய மக்கள் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் குடிப்பார்கள். பிள்ளை செத்துப் போனால் துக்கத்தில் குடிப்பார்கள்... வயல் நன்றாக விளைந்தால் மகிழ்ச்சியில் குடிப்பார்கள்!... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள்! சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும்!... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்!" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை! உண்மை! நூற்றுக்கு நூறு உண்மை!" என ஏதோ சொல்வதற்கு முனைந்தார் லோயர்.

ஆனால் ஓவசியர் செல்வனா விடுபவர்! 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும்!... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள்! என்ன? நான் சொல்வது சரிதானே!" தன்னைத் தானே மெச்சிக் கொண்ட செல்வன் ஓவசியர், ஏதோ சொல்ல வாயெடுத்த லோயரைப் பேசவிடாது தடுத்து, 'இன்னுமொன்று லோயர்!... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்!... நான் சொல்கின்றேன் லோயர்! நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள்!" என ஆர்ப்பாட்டமாகக் கூறிவிட்டு கண்ணில் நீர் வரும்வரை அட்டகாசமாகச் சிரித்தார் செல்வன் ஓவசியர். லோயர் சங்கரலிங்கத்தின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று.

இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற சேனாதியை அப்போதுதான் செல்வன் ஓவசியர் கண்டார். 'என்ன மருமகப் பயலே! எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா?" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை! அருமை! இங்கிதமான பொருள்! இன்றிரவே ஒரு அரைப்போத்தல் அருந்திவிட்டு இங்கிதமாக அம்பாளிப்போம்! நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர்?" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது! நான் வாறன்!" எனச் சொல்லிவிட்டு, லோயர் சங்கரலிங்கம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

சேனாதியும் செல்வன் ஓவசியரை நினைத்துச் சிரித்துக் கொண்டே பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.

(வளரும்)

 


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 07:51
TamilNet
HASH(0x55b312a64298)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 07:52


புதினம்
Sat, 20 Apr 2024 07:52
















     இதுவரை:  24784750 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2552 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com