அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'புதிய பார்வை' - நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மணா  
Tuesday, 21 February 2006
பக்கம் 2 of 4

மணா:
'தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பைப் பிறகு ஆரம்பித்தீர்களா?

கி.பி.அ-ன்:
சிறையால் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 'தமிழ் இளைஞர் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன் தனி நடவடிக்கைகளாக உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தினோம். 1974ம் ஆண்டு நான்காவது தமிழாராச்சி மாநாடு நடக்கின்றது. அதையொட்டி படுகொலை நடக்கின்றது. இது ஐனவரியில். ஜுனில் சிவகுமாரன் இறக்கிறார். ஐனவரிக்கும் ஜுனிற்கும் இடையில் சிவகுமாரன் குழுவினராகிய நாங்கள் பல்வேறு வன்முறையை பாவித்தோம். அதில் தோல்விகள் கிடைத்தன.
ஆறேழு குற்றங்களுக்காக 1976ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 77 வரைக்கும் ஒரு வருடம் சிறையில் இருந்தேன். பிறகு பெயிலில் வெளி வருகிறேன். அதேவருட பிற்பகுதியில் வழக்குகள் வரத்தொடங்குகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் பெயில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளுக்குள் போக வேண்டும். வீட்டில் வசதியில்லை. பிரச்சனை. 1978-இல் பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. பொலீசுக்கு அதிகாரம் கூடி முதற்தடவையாக தெருவில் இரண்டு இளைஞர்களை சுட்டுப் போடுகிறார்கள். அதுதான் முதல் சம்பவம். தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்குகின்றன.

மணா:
அந்தக்காலகட்டத்தில உங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன?

கி.பி.அ-ன்:
ஈராஸ் அமைப்பில் இருந்தேன். 1978ஆம் ஆண்டு லெபனான் சென்றுவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு பத்திரிகை நடத்துவது, நண்பர்களை ஒருங்கிணைப்பது எனப் பல வேலைகள் செய்தேன். பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். அப்போது தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தை நாங்கள் கட்டி வளர்த்திருக்கிறோம். தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுத்தோம். சின்னச் சின்ன புத்தகங்கள் கொண்டு வந்தோம். லங்காராணி நாவலை வெளியிட்டோம். இப்படி பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

மணா:
நீங்கள் படைப்பு ரீதியாக எந்தக் காலகட்டத்தில இருந்து இயங்க ஆரம்பித்தீர்கள்?

கி.பி.அ-ன்:
1972ல் சிறைக்கு சென்று வந்தபிறகு, வாசிப்பு அனுபவம் இலக்கிய ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக ஒரு முக்கியமான நாடகத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு நாடகப்போடடியில் முதற்பரிசு கிடைத்தது. அந்த நாடகாசியரிடமிருந்துதான் எழுத்து கணையாழி தாமரை  இதுபோன்ற சிறு சஞ்சிகைகளைப் பார்கிறேன். அதில் ஒருவகையான ஈடுபாடு வருகின்றது. ஜெயகாந்தனை தீவிரமாக வாசித்திருக்கிறேன். எஸ்.பொ.வை படிக்கத் தொடங்குகிறேன்.
இரண்டு ஆண்டுகள் (1974ஜுன் தொடங்கம் 1976ஜுன் வரை) தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் நான் முதன் முறையாக எழுதத் தொடங்கினேன். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களில் கதை, கவிதைகள் என எழுதியிருந்தேன். நான் கைதானபோது தங்கியிருந்த வீட்டுக்காரர் அவற்றையெல்லாம் கொழுத்தி விட்டார். அதற்குப் பின் தலைமறைவு வாழக்கையில் எரிமலை என்று ஒரு அரசியல் பத்திரிகை நடத்தினோம். நான்கு இதழ்கள் மட்டும் கொண்டு வந்தோம். 'ஈராஸ்' அமைப்பிற்காக ஈழம், தர்க்கீகம், பொதுமை என்ற சில பத்திரிகைகள் வந்தன. நான் சென்னையில் இருந்தபோதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

மணா:
கவிதை எழுதத தொடங்கிய போது யாருடைய தாக்கம் உங்களிடம் இருந்தது?

கி.பி.அ-ன்:
அன்றைக்கு ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த இளம் முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டேன். எங்களை உந்தித் தள்ளியதில் இந்தக் கவிதைகளுக்கு பெரும் பங்குண்டு. சமகாலத்தில் சேரன், ஜெயபாலன் போன்றவர்கள் கவிதை எழுதுகிறவர்களாக இருந்தார்கள். நாங்கள் வாசிப்பவர்களாக இருந்தோம். அலை, மல்லிகை, சமர் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதைகளில் என்னைப் பாதித்தவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் எனக்கு தமிழ் இலக்கியப் பாடம் விருப்பமானதாக இருந்திருக்கின்றது. கவிதைகளில் அரசியல் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. புதுக்கவிதை எழுத இலகுவாக இருந்தது.
வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும் என்னைப் பாதித்திருக்கலாம். அப்போது புரட்சி வெல்லட்டும், கிழக்கு வெளுக்கின்றது என்பது போன்ற கவிக்குரல்கள் எழுந்தன. மு.மேத்தா, அக்னி புத்திரன், சிற்பி, புவியரசு போன்றவர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். அதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

மணா:
ஈழத்துப் படைப்பாளிகளின் நேரடியான போராட்டக் களத்தைப் பார்த்தவர்கள். அப்படியான ஒரு நிர்ப்பந்தமான சூழல் அனுபவம் இங்குள்ளவர்களுக்குக் கிடையாது இல்லையா?

கி.பி.அ-ன்:
1978ஆம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகளில் ஐந்து கூட தேறாது. நாங்கள் வெளியிட்ட பத்திரிகைகளின் அட்டையில் கவிதை எழுதுவேன். அந்த அளவில்தான் இருந்தேன். அதற்குமேல் கவிதை எழுதியதில்லை. உண்மையில் என்னுடைய நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கியது 90களில்தான்.

சென்னையில் இருந்தவரைக்கும் கூட பெரிதாக கவிதை எழுத முயற்சித்ததில்லை. 1988-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருகிறது. எல்லா இயக்கக்காரர்களும் விமானத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் ஒரு அகதியாக மண்டபம் முகாமுக்குச் சென்றுவிட்டேன். இராமேஸ்வரத்திலிருந்து அகதிக் கப்பலில் காங்கேசன்துறையில் போய் இறங்கிக் கொண்டேன். அகதியோடு அகதியாகப் போனேன். பிறகு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் நண்பர்கள் இயக்கத்திற்கு வாருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 1989-இல் இலங்கையில் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குப்பிறகு சென்னைக்கு துணைவியுடன் ஒருதடவை வந்தேன். 1990ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றேன்.




     இதுவரை:  24783505 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5445 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com