அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow 'புதிய பார்வை' - நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'புதிய பார்வை' - நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மணா  
Tuesday, 21 February 2006
பக்கம் 3 of 4

மணா:
ஏன் பிரான்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

கி.பி. அ-ன்:

பிரான்சுக்குப் போக வேண்டுமென்று நான் வரவில்லை. 90ஆம் ஆண்டு கடுமையான காலகட்டம். எங்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறெங்கேயோ சென்றுதான் தஞ்சம் புகுந்தோம். அந்த நேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அதனால் தங்கையை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பில் விடவேண்டும். பயணம் செய்வது பெரும் கஷ்டம். தனியாக அனுப்ப இயலாது. நான்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். கொழும்புக்கு வந்த பிறகு என் தம்பி, "நீ தங்கையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்துவிடு. நான் டிக்கெட் தருகிறேன். சிங்கப்பூரையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்று சொன்னான். சிங்கப்பூருக்குச் சென்றேன். "ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அங்கு போய் என்ன செய்யப்போகிறாரய்" என்று தம்பி கேட்டான். அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் புத்தகம், பேப்பர், பத்திரிகை இதுதான் எனக்குத் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது.

தொழிலும் தெரியாது. அங்கு போய் பத்திரிகையும் நடத்த முடியாது. என்ன செய்யப்போகிறேன் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் மனைவி டீச்சராக இருக்கிறாள். ஒருவரின் வருமானத்தை வைத்து பிழைக்கவும் முடியாது. "நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று மனைவி சொல்லிவிட்டாள்.

"நீ தனியாக இருக்கிறாய். பாதுகாப்பில்லாத நிலைமை. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இலங்கை செல்ல வேண்டாம்" என்று சொன்னான் தம்பி. இரண்டாம் நாள் விமானத்தில் ஏற்றி விட்டான்.  சீனா போய் சுற்றிவந்து இறுதியில் ஜேர்மனியில் இறங்கினேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அங்குள்ள அகதி முகாமில் கொண்டு போய்விட்டார்கள்.

மணா:
அங்கு மொழிச் சிக்கல் இருக்குமே?

கி.பி. அ-ன்:
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வருவார். இல்லையென்றால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைக்கலாம். பெரும்பாலும் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார்கள். யு.என்.ஓ. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். எனக்கு முகாமில் இருக்கப் பிடிக்கவில்லை. உடனே ஜேர்மனியில் இருந்த தம்பியிடம் "என்னை அழைத்துக் கொண்டு போய்விடு" என்று போன் பண்ணி சொன்னேன். நான்கு நாட்கள் முகாமில் இருந்தேன். அகதிகள் முகாமிலிருந்து வெள்யேறுவது மிகப்பெரிய கஷ்டம். கட்டுப்பாடுகள் அதிகம். ஏதோ முயற்சிகள் செய்து என்னை சில நண்பர்கள் காரில் அழைத்துக் கொண்டு சென்று இன்னொரு ஊரில் தங்க வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ¤க்குச் செல்வது களவுதான். கார் மூலம் பிரான்ஸ் சென்றேன். பிரான்சில் இறங்கியதும் ரொம்பக் கஷ்டம். என்ன வேலை செய்வது? ஒன்றும் விளங்கவில்லை. அங்குள்ள வாழ்க்கையும் போன இரண்டு நாட்களிலேயே புரிந்துகொண்டேன்.

மணா:
அந்த மக்களின் கலாசாரத்தோடு பொருந்திப் போக முடிந்ததா? அது உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதா?

கி.பி. அ-ன்:
அந்த மண்ணில் இறங்கிய ஒரு நாளிலேயே உங்கள் பிரமிப்பெல்லாம் கொட்டிப் போகும். அப்போதே உணரத் தொடங்கி விடுவீர்கள். நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? எனது இடம் எது? நான் யார்? நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் காட்டில் நிற்பதுபோல் தான் தோன்றும். வெளியே போக இயலாது. மற்றவர்களிடம் போய் கதைக்க இயலாது. சாமான்கள் வாங்க முடியாது. எனக்கு மொழி தெரியாது. மொழி தெரிந்த ஆளாகத் தேடித் திரிய வேண்டும். இதெல்லாம் புதிது புதிதான சிக்கல்களாகத்தான் தோற்றம் தரும்.

என் தங்கை வீட்டில் தங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது.  87-லேயே அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் தெரியும். என் தங்கை குடும்பத்தினரும் நான்கு இளைஞர்களும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அப்படித்தான் அங்கு இருக்க முடியும். அதில் நானும் ஓர் ஆளாகப் போய் சேர்கிறேன். இதை விட மோசமான வாழ்க்கையும் அங்கு உண்டு. ஒரே அறையில் பதினைந்து பேர் தங்கியிருப்பார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். 'டேர்ன்' வைத்துப் படுப்பார்கள். அப்படியான வாழ்க்கையெல்லாம் உண்டு. அதுவொரு பெரிய நெருக்கடி. அதை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. பாரீஸ் ஒரு நெருக்கடியான நகரம். இங்குள்ள சிற்றூழியர்களின் பணியைத்தான் நாங்கள் பிரான்ஸில் செய்கிறோம். கூட்டுவது, துடைப்பத் இப்படிப்பட்ட வேலைகள்தான் கிடைக்கும்.

'க்ளீனிங்' என்பது அங்கே பெரிய இண்டஸ்ட்ரி. அடுத்ததாக உணவகங்களில் வேலை. குசினிக்குள் கழுவுகிற வேலை. மற்றது ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பர தாள்களை கொண்டு சேர்ப்பது. இந்தப் பணியை ஒரு கம்பனி ஏற்றிருக்கும். ஒரு ஏரியாவில் ஆயிரம் வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏழு மாடி, எட்டு மாடி ஏறி இறங்க வேண்டும். அடுத்ததாக கண்காட்சி மண்டபங்களில் வேலை. அங்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை, இயந்திரங்களை, துணிகளை மாற்றி அமைத்துத் தரவேண்டும். தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் எவ்வகையான வேலைகள் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ அவ்வகையான வேலைகளைத்தான் செய்தோம். இது பிரான்ஸின் நிலைமை. தொடக்கக் காலத்தைவிட நிலைமை இப்போது கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரான்சிற்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது.

மணா:
நீங்கள் ஆரம்ப காலத்தில் என்ன வேலை செய்தீர்கள்?

கி.பி. அ-ன்:
கிளினீங் வேலைதான் செய்தேன். கார்பெட் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் கழுவ வேண்டும். மேசை துடைப்பது, சிகரெட் ஆஸ்ட்ரே துடைக்க வேண்டும்.

காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அங்கு போய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்கு பின்பு இரவு ஏழு மணியிலிருந்து 10 மணி வரை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும். வீட்டுக்கு கிட்ட வேலை இருக்குமென்று சொல்ல இயலாது. குளிர்காலமென்றால் பனி கொட்டிக் கிடக்கும். ஒவ்வொர் நிறுவனத்திற்கும் நேரம் மாறுபடும். இந்த வகையான வேலையைத்தான் செய்தேன்.

இது ஒரு வகையான மனிதப் போர். எதார்த்த நிலைமையை நான் சொல்கிறேன். இதுதான் உண்மை. இதை மறைக்கத் தேவையில்லை. இன்றைக்கு அதை யாரும் சொல்லவும் மாட்டார்கள். நிறைய நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கு எங்களுடைய பெரும்பாலான பெண்கள் க்ளினீங் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்த வேலைகளை எப்போதும் மறைத்து வாழ்வதுதான் புலம்பெயர் வாழ்வின் அவலம் என்று சொல்லலாம்.

மணா:
இந்த வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைக்குமா?

கி.பி. அ-ன்:

அடிப்படைச் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோ. எட்டு மணி நேரம் வேலை செய்தால் 56யூரோ. அதை இந்தியப் பணத்தில் பெருக்கினீர்கள் என்ரால் இங்கே ஐம்பது ரூபாய் வாங்குவது மாதிரிதான். அதற்குள்தான் வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், உடை மற்ரும் பயணச் செலவுகள் எல்லாமும். இரண்டு வேலை செய்தால்தான் வசதியாக வாழலாம். இது ஒரு வகை வாழ்க்கை நிலை.

எங்களுடைய சமூகம் போரால் பாதிக்கப்பட்ட சமூகம். ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சுமந்து ஆகவேண்டும். எங்களுடைய உழைப்பில் மிச்சம் பிடித்து பொருளாதாரம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு நாங்கள் பணம் அனுப்பியாக வேண்டும். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் போராட்டத்திற்கும் பங்களிப்புச் செய்பவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படியான வாழ்க்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையர்களை இங்கே பார்க்கும்போது உங்களுக்கு பகட்டுத்தான் தெரியும். மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் மூன்று வருடங்கள் உழைப்பேன். பகல் இரவென்று உழைத்துவிட்டு இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் வாங்கி இந்தியாவிற்கு வருவேன். அந்த இரண்டு மாதங்களில் இங்கே வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்க்கை.

ஆயிரம் இரண்டாயிரம் யூரோக்களை கொண்டு வந்து பெருக்கினால் ரூபாய் பல கட்டுகளாக இருக்கும். மீனைக் கொண்டு வா, தங்கத்தைக் கொண்டு வா, ஸாரியைக் கொண்டு வா, நண்பா வா, குடி எல்லாம் நடக்கும். இரண்டு மாதம் முடிந்ததும் கடன் கட்டவேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பகட்டுதான். இங்கு வந்து நிற்கிற இரண்டு மாதம்தான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் கொள்கிறான்.

மணா:
இதுபோன்ற நெருக்கடியான வாழ்நிலையில் கவிதை எழுதுவதற்கான மனநிலை எப்படிக் கூடி வந்தது?


கி.பி. அ-ன்:
இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலம்பெயர்வு நிகழ்ந்ததற்குப் பின்னால், ஒரு சமூகத்திற்கு தனது தாயகம், இழப்புகள் பற்றிய ஏக்கம் தானாகவே வந்து சேரும். அதிலும் பல அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போது நான் யார்? என்ற முதலாவது கேள்வி எழும்.

ஒரு துருக்கி நிற்கிறான். ஒரு கறுப்பர், அராபியன், தென் அமெரிக்கன், வெள்ளையில் குறைந்த வெள்ளை, கூடிய வெள்ளை, மஞ்சள் வெள்ளை, சிவப்பு வெள்ளை எல்லாம் நிற்கிறார்கள். இப்போது நான் யார்? என்ற கேள்வி இயல்பிலேயே எழும். நீங்கள் நடமாடத் தொடங்கினால் உங்கள் நாடு என்ன? மொழி என்ன? உங்களுடைய பெரிய ஆட்களைச் சொல்லு? கேட்பார்கள். எனக்குத் தெரிந்திருக்காது.

இந்தச் சூழல் என்னைப்பற்றி அறிய நிர்பந்திக்கும் வாசிக்காதவன்கூட ஏதாவது வாசித்தாக வேண்டும். ஊரில் இருக்கும்போது வாசித்ததைவிட வெளியெ வந்த பிறகு வாசித்தது அதிகம். வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகம்.

மணா:
நம்முடைய சார்புத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிகழ்ந்து விடுகிறதா?

கி.பி.அ-ன்
ஆமாம். கட்டாய நிலைமை வருகிறது. கவிதை எழுதாதவன் கவிதை எழுதுகிறான். கதை எழுதுகிறான். 1990-இல் ஜெர்மனியில் 32 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு 'கேம்ப்'பிலும் ஒரு பத்திரிகை ஏதாவது செய்ய வேண்டும். அறைக்குள் அகப்பட்டுக் கிடக்க முடியாது.

புதிதாக வருகிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஈழத்துக் கவிதையை நான்தான் படைக்கிறேன் என்கிறார்கள். ஏனெனில் இதற்கு முன்பு நிகழ்ந்தவை பற்றி அவர்களுக்குத் தெரியாது. புலம்பெயர்வில் பெரும்பாலான இலக்கியவாதிகள் வரவில்லை. ஊரில்தான் இருக்கிறார்கள்.

இதனால் வெளியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே முடிசூட்டிக் கொள்கிறார்கள். இங்கு நான் வரும்போது என்னிடம் இருந்தது வெறும் இயக்க அரசியல்தான். இரண்டாவது சமூகம் பற்றியதான அனுபவம். மூன்றாவது தமிழ்நாடு எனக்குக் கற்றுத்தந்த சில பாடங்கள். சென்னையில் செய்த பணி காரணமாக எனக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் கவிஞர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் இருந்தார்கள். நிறைய விவாதங்கள் நடக்கும். 1978-ஆம் ஆண்டு கொந்தளிப்பான நேரம். ஒரு பிரஸ், ஒரு பத்திரிகை. இந்த அனுபவங்கள் எனக்குத் தெரியும். இன்றைக்கு இருக்கிற புகழ்பெற்ற ஆட்களோடு பழகிய அனுபவம் எனக்குண்டு.

நான் பாரீஸ் சென்றபோது 'ஓசை' என்றொரு காலாண்டிதழ் வந்துகொண்டிருந்தது. ஓசையின் பாணி பிடித்ததால் அதில் பங்களிப்பு செய்யத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்த விஷயங்களை அதில் புகுத்தினேன். நல்ல வரவேற்பு. பின்னர் மெளனம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டேன். பிரான்ஸ¤க்கு வருவதற்கு முன்பு 1989-90களில் இடம்பெயர்ந்த என் அனுபவத்தை வைத்துச் சில கவிதைகள் எழுதினேன். அதுதான் உண்மையாக நான் எழுதிய கவிதை. போர்க்கால அனுபவத்தை 'இனியொரு வைகறை' என்ற தலைப்பில் கவிதையாக எழுதினேன்.

மணா:
வாழ்க்கையில் கனத்த அனுபவங்களிலிருந்து ஒருவகையான விடுபடுதல் உணர்வு படைப்பு மூலம் கிடைக்கிறதா?

கி.பி. அ-ன்:

'இனியொரு வைகறை' தொகுப்பு முழுக்கமுழுக்க ஈழத்து போர் அனுபவங்கள்தான். 'முகம் கொள்' தொகுப்பு பாதி ஈழத்து அனுபவங்களும் கலந்தது. மூன்றாவது தொகுப்பு 'கனவின் மீதி'யைப் பார்த்தால் முழுவதும் புலம்பெயர் அனுபவங்கள். 'ஓசை' மற்றும் அங்கு வருகிற பத்திரிகளில் தொடர்ந்து கவிதைகள் வெளிவரத் தொடங்குகின்றன. போராட்டத்தில் நீண்டகால அனுபவம் இருந்தபடியால் நண்பர்களை அணுகி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அங்கு போகும்போது என்னுடைய வாசிப்பு அதிகம் இருந்தது என்பதை புரிந்து கொண்டேன். ஏற்கனவே எனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவம், தமிழில் நவீன எழுத்தின் பரிச்சயம், பழைய எழுத்தாளர்கள் அறிமுகம் இப்படி மேலதிகமான தகுதியாக மாறுகிறது.

அடுத்தது இயக்கத்தில் பொறுப்பாளனாக இருந்தபடியால் அதற்குரிய முதிர்ச்சி நிலை பார்க்கிற முறையில், பிரச்சினையைச் சொல்கிற முறையில் தெரிந்தது. அரசியல் ரீதியில் ஏற்பட்ட அனுபவத்தை இலக்கியத்தில் பயன்படுத்தினேன். சமூகம் பற்றிய பார்வையும் தொடர்ச்சியாக இருந்துகொண்டு இருந்தது. மற்றது இடது பற்றியதான கருத்தோட்டங்கள்.

மணா:
'அங்கே என்ன நடக்கிறது' என்று தொடர்ச்சியாக ஈழம் பற்றிய கவனம் இருந்துகொண்டே இருந்ததா?

கி.பி. அ-ன்:
அந்த கவனத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. இந்த அறைக்கு வந்துவிட்டேன் என்றால் அதன் பின்னணி விவரங்களை சூழலை கவனிக்கத் தொடங்கிவிடுகிறேன். இந்த மனநிலைக்கு இயக்க அரசியலும் காரணமாக இருக்கிறது. அது பாதுகாப்பு உணர்வாக இல்லை. சூழலை பற்றிய அறிவு. எப்போதும் அந்த கவனம் என்னிடம் உண்டு.

பாரீசில் வாழ்கிறவர்களைவிட பாரீஸ் பற்றிய அறிவை கூடுதலாக வைத்திருந்தேன். அந்தச் சமூகம், எவ்வகையான சிக்கலுக்குரியதாக அரசியல் இருக்கிறது? பிரெஞ்சு நண்பர்களிடம் இன்றைய செய்தி என்ன? அரசியல் செய்திகள் என்னாவதென்று பேசி தெரிந்துகொள்வேன். சமகால அரசியல் போக்குகள் பற்றிக் கேட்பேன். எப்போதும் எனக்கு சமகாலத்தோடு இணைந்திருப்பதில் விருப்பம் உண்டு.




மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 15:24
TamilNet
HASH(0x55a5f4e28fc8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 15:24


புதினம்
Fri, 29 Mar 2024 15:24
















     இதுவரை:  24716699 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4134 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com