அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என்நினைவுகளில் முல்லையூரான்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொன்.புத்திசிகாமணி  
Monday, 01 May 2006

அமரர் சிவராசா(முல்லையூரான்)  முல்லைத்தீவில் வற்றாப்பளை என்னும் அழகிய கிராமத்தில் திரு,திருமதி முருகேசு தம்பதிகளின் மகனாகப்பிறந்தார். வற்றறாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையில் ஆரம்ப கல்வியைமேற்கொண்ட இவர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி, றிபேக்
கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாகி  வெளியேறினார். பல்கலைக்கழகத்தில்; படிக்கின்றகாலத்திலேயே 'அக்கினிக்குஞ்சுகள்' என்ற சஞ்சிகையை, வெளியீடு செய்தார். கல்வி கற்கின்ற வேளையிலேயே புதிய இலக்கியங்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்டினார். பாரதி மீதும் அவர் கவிதைகள் மீதும் தீராத காதல்கொண்டார். சமுதாயப்பிரச்சனைகளை புதியபார்வையோடு கவிதைகளில் கொண்டுவந்தார். பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில்
முற்போக்கு கவிஞர்களுடன் கவியரங்குகளை, யாழ்   மாவட்டத்தின் பலபாகங்களில் நடாத்தி புகழ்பெற்றார். கவிஞர் புதுவை இரத்தினதுரை, காவலூர் ஜெகநாதன், டோமினிக் ஜீவா இன்னும்பல இலக்கிய நண்பர்களின் அன்புக்குரியவராகத்திகழ்ந்தார்.'மல்லிகை' சஞ்சிகையில் அவரின் பலகவிதைகள் வெளிவந்தன. முல்லைநகரில் மல்லிகையின் சிறப்பு மலர் வெளிவருவதற்கு முன்னின்று உழைத்தவர். தான் பிறந்த கிராமத்தின் அழகையும்,அவலத்தையும், தனது படைப்புகளில் கொண்டு வந்தார். வறியமக்களுக்காகவும்,அவர்தம் வாழ்க்கையின் பரிதாபநிலைக்காகவும்,மனம் வருந்திஅவரது பேனா பலதடவைகள் அழுதிருக்கின்றது.  தென்னைமரங்களின் சரசரப்பும், நந்திக்கடலின் நயமும், வயல்வெளியின் வனப்பும், நாளாந்தம் வயிற்றுக்காகப்போராடும் மாந்தர்களின், நட்பும் அவர்ஆக்கங்களில் நிறைந்து காணப்படும்.
'போர்க்காற்று'  இதுவே இவரின் முதலாவது கவிதைத்தொகுப்பு இது ஒரு நர்மதா வெளியீடு. இதன் வெளியீடு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு காலம்சென்ற எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன் தலைமையுரை வழங்கினார். கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின்  தலைமையில் கவியரங்கு நடைபெற்றது. நானும் கவிதை வாசிக்கவேண்டுமென்று 'முல்லையூரான்' விரும்பினார். நானும்வாசித்தேன். எல்லாம் இப்போதென்பதுபோல் இருக்கின்றது.
'சமன்' என்ற சஞ்சிகையை கையெழுத்துப்பிரதியாக மாதம் ஒரு முறை வெளியீடு செய்தார். 83ம் ஆண்டு கலவரத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களைப் பிரதிபலிப்பதாக ஆக்கங்கள் அமைந்திருந்தன. கொக்கிளாய் பிரதேசங்களில் இருந்து மக்கள் வற்றாப்பளை சொந்தங்களின் வீடுகளில் வந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகள் கூட்டாஞ்சோறு காய்ச்சி விளையாடும்போது நடந்த சம்பவத்தை கவிஞர் அற்புதமாகச் சித்தரித்திருந்தார். 'கெதியாச்சமை கலவரம் தொடங்கப்போகிது சாப்பிட்டு விட்டு காட்டுக்கிள்ள ஓடுவம்' அந்தச் சின்னப்பிள்ளைகளின் சம்பாசனையில் கலவரத்தின்  கொடுமை எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை சஞ்சிகையில் பதிவு செய்திருந்தார். இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. எந்தச்சின்ன சம்பவங்களையும் அக்கறையோடு உற்று நோக்கி நல்ல தொரு இலக்கியமாகப் படைத்தளித்த பெருமைக்குரியவர்,
முல்லையூரான். முதல்நாள் மாலை மலரப்போகும் மொட்டுஒன்றை நூலினால் கட்டி மறுநாள் காலை பார்த்தபோது மொட்டு மலர்ந்திருந்ததைக்கண்டு மகிழ்ந்து எந்தக்கட்டுக்களாலும் மலர்வதைத் தடுக்கமுடியாது என்ற கருத்துப்பட ஆக்கமொன்றை எழுதினார். எங்களிடம் இச்சம்பவத்தைச்சொல்லி பெருமைப்பட்டதை நான் இன்னும் மறந்து விடவில்லை.'முல்லை கலைஞர் ஒன்றியத்தில்' செயலாளராக இருந்து கலையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றினார்.  உதவி அரசாங்க அதிபர் அமரர் சிங்காரவேலு அவர்கள் முல்லைத்தீவில் கடமையாற்றிய காலத்தில் இச்சம்பவங்கள் நடந்தன. வன்னித்தமிழாராச்சி மாநாடு முல்லைத்தீவில் நடைபெற்றபோது அக்குழுவில் நிர்வாக சபைஉறுப்பபினராக இருந்து சிறந்த முறையில் செயல் பட்டவர். 'ஒரு வெண் சங்கு குருதியில் நனைகிறது' என்ற அவர் எழுதிய சிறு கதை பலராலும் பாராட்டுப்பெற்றது.
பல்கலைக்கழகத்தில் படித்த வேளையில் நாகேஸ்வரியைக் காதலித்து 83ம் ஆண்டு திருமதியாக்கினார். அந்நாளில் முல்லை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பொது முகாமையாளராகப் பதவியேற்றார்.அவர் இருந்தகாலத்தில் சங்கத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் எழுந்தது. அங்கும் சிறந்த முறையில் வாணிவிழாவை நடாத்தி கலையின் வளர்ச்சிக்குதவினார். இந்த நிகழ்வில் 'இன்னல் களைந்திடுவாய்' என்ற கவியரங்கம் இவரே தலைமை ஏற்றார். ஆடிக்கலவரத்தைப்பற்றியதாகவே
கவிதைகள் அமைந்திருந்தன. அவர்பாடிய கவிதை வரியை இப்போதும் ஞாபகம் வைத்திருக்கிறேன். 'தொப்பென்று பனங்காய் விழுந்தால் கூட  அத்தனை நரம்புகளும் புடைத்து மீழும்'. என்றார்அவருடன் நானும், தம்பி முல்லை சிறியும்  கவிதை வாசித்தோம். என்தாயின் சாப்பாட்டை ஒருமுறை சாப்பிட்டுப்பாருங்கள் என்று வற்றாப்பளைக்கு அழைத்து விருந்து  தந்தார். இலக்கியத்தால் இணைந்த நாங்கள் நல்ல நண்பரானோம். இருக்கை அறையில் புத்தக அலுமாரிக்குப் பதிலாக புத்தகமரமொன்றை நட்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. பெரிய மரமொன்றைக்கொண்டுவந்து அதன் கிளைகளில் புத்தகங்கள் காய்த்திருப்பதுபோல், அடுக்கி அழகாக வைத்திருந்தார் அன்று எனக்கு 'பாரதியார் பாடல்' ஒன்றை அன்பளிப்புச்செய்தார். காலத்தின்  கோலத்தால் நான் திடீரென நாட்டைவிட்டு வெளியேறி யேர்மனிக்கு வந்தேன். கடிதப்பரிமாற்றம்  எங்களுக்குள் இருந்தது. பின்னாளில் ஆசிரிய நியமனம் கிடைத்து மலைநாட்டிற்கு மாறிவிட்டதாக அறிந்தேன். 1984ன்பிற்பகுதியில் அவர் இந்தியாவுக்குப் போயிருப்பதாகவும், செய்தி கிடைத்தது. 'தினத்தூது' பத்திரிகையில் செய்தி ஆசிரியராக கடமையாற்றியதாகவும், அப்போது அவர் எழுதிய 'ஈழம் எழுந்து வருகிறது'  என்றநாவல், 'புதிய அலைகள்' என்ற சிறுகதைத்தொகுப்பு வெளிவந்ததாகவும்,அறிந்தேன். மிகவும் சந்தோசம் அடைந்தேன். 'ஈழம் எழுந்து வருகிறது' பிரதியொன்று எனக்கு அனுப்பி வைத்தார். இடையில் எங்கள் தொடர்பு விடுபட்டுப்போனது. 18 வருடங்கள்  நாங்கள் சந்திக்கவில்லை. இலக்கிய ஆர்வலர்கள் டென்மார்க்கில் இருந்து வரும் நேரங்களில் நண்பரைப்பற்றி விசாரிப்பதுண்டு. அவருக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று, இடையில் ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கிடைத்த தகவல்கள்.  'காகம்' என்ற சஞ்சிகையொன்றை வெளியிட்டு வருவதையும் அறிந்து மகிழ்ந்தேன். 2002ல் நோர்வே நாட்டிற்கு உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு போனபோது இடையில் டென்மார்க்கில் நண்பர் முல்லையூரான் வீட்டிற்குப் போய் நீண்டநாள் பிரிவை, பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்ததுடன் தீர்த்துக் கொண்டோம். சந்தித்த அன்றைய நாளை உண்மையில் மறக்கமுடியவில்லை. மறுநாள் நோர்வேக்கு வெளிக்கிட்டவேளை, ஒலிவட்டொன்றை என்னிடம் தந்தார். அதைக் கேட்டு உண்மையில் அழுதோம். அது அவர் எழுதி நோர்வே தேன் தமிழோசை சிறப்போடு நெறிப்படுத்தி ஒலிபரப்பிய 'நாவற் பழங்கள்' நாடகம். பலதடவைகள் போட்டுக்கேட்டோம். அற்புதமான படைப்பு. இதில் நடித்தவர்களையும் மனதாரப் பாராட்டினோம். நாங்கள் அவர் வீட்டிற்குப் போயிருந்தபோது அவரது மனைவி இலங்கைக்குப் போயிருந்தார். தான் எழுதிய 'சேலை' என்கின்ற புத்தகத்தை தான் பிறந்த ஊரில் வெளியிடவேண்டுமென்கின்ற ஆசை  அதற்காக அனுப்பியிருக்கிறேன் என்றார். நல்லமுறையில் புத்தக வெளியீடு நடந்ததாம் என்றார் முல்லையூரான். நீங்கள் திரும்பி வரும்போது அவ வந்திடுவா என்றார். நாங்கள் நோர்வாயால் திரும்பி வந்தபோது அவவும் வந்திருந்தா புத்தகவெளியீடு பற்றிய பேச்சுக்கள்,இலக்கிய உரையாடல்கள், சாப்பாடு என்று மிகவும் சந்தோசமாக இருந்தோம். மறுநாள் காலை நாங்கள் புறப்படுவதாக இருந்தோம்.எங்களுடன் எனது மைத்துனர் குடும்பமும் வந்திருந்தது. அதிகாலை அனைவரையும் எழுப்பி தான் எழுதிய இலக்கியப்படைப்புகளை கேட்கும் படி போட்டுக்காட்டினார். 'குங்குமம் பூசாத கோழிக்குஞ்சு' அவர் எழுதிய கதையை, நோர்வே 'தேன் தமிழோசை' வானொலி நிலையத்தார், ஒலி இசைவழங்கி அற்புதமாக வாசித்திருந்தார்கள்.
.அவர் எழுதிய 'சேலை' புத்தகத்தில் 'என்பிரியமுள்ள புத்திக்கு' இது என்று எழுதி என்னிடம் தந்தார்.  என்னால் எழுதி வெளியிட்ட 'சொர்ணம்மா' என்ற சிறுகதைத்தொகுப்பை அவரிடம் கொடுத்தேன்.சரி போ!இதற்கு என்னுடைய விமர்சனத்தை எழுதுகிறேன் என்றார். இரவுமுழுவதும் கொண்டாட்டம். மறுநாள்காலை வெளியில் வந்து விடைபெற்றபோது தேம்பித் தேம்பி அழுது விடைதந்த காட்சி  இப்போதும் என்மனதில் பிசைகின்றது. நான் வந்து இரண்டு கிழமைக்குப்பிறகு அந்த அதிர்ச்சி செய்தி கேட்டு அதிர்ந்தேன். வன்னியில் தோன்றிய நல்ல எழுத்தாளர்கள் பட்டியலில் முல்லையூரானுக்கு என்றும் தனியிடமுண்டு. மரணம் அவர் உடலை அழிக்கலாம்.அவர்  உருவாக்கிய இலக்கியங்கள் என்றும் அவரை வாழவைக்கும். அவரது இழப்பிற்காக முல்லையின் இயற்கையும் அழும்  நந்திக்கடல், நல் வயல் அழும்,  கதைமாந்தர் கூட கதறி அழுவார்கள்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


 


     இதுவரை:  24326817 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2018 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com