அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழும் பெளத்தமும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் பீட்டர் சல்க்  
Monday, 22 May 2006

சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும்Pr. Peter schalk
சுவீடன் பேராசிரியர் பீட்டர் சல்க்

தமிழ்நாட்டின் வரலாறு என்பதில் ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்கமுடியாது. அப்படிப்பட்ட ரகசியங்களில் ஒன்றை நமக்கு இப்போது சொல்ல வருபவர், ஸ்வீடன் நாட்டு உப்சலா பல்கலைக்கழகத்தில் மதங்களின் வரலாறு பற்றிய துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் பீட்டர் ஷல்க் அவர்கள். சிங்கள - பௌத்த இனவாதக் குழுக்களின் கருத்துருவம் பற்றி இவர் எழுதியிருந்த கட்டுரையைச் சிங்கள-பௌத்த இனவெறி தீவிரவாதம் என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘பொன்னி’ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
பீட்டர் ஷல்க் சிங்களம்-பாலி மொழிகளைப் பயின்றுள்ள அறிஞர். தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு நசுக்குவதை அறிவுரீதியாக எதிர்த்ததால் இவர் இலங்கைக்குள் நுழைவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. இப்படிக் கொழும்பிலிருந்து சென்னைக்கு நாடுகடத்தப்பட்ட அனுபவமும் இவருக்கு உண்டு. ஏப்ரலில் பாலத்திற்காக எடுக்கப்பட்டது
- நாகார்ஜூனன்

கேள்வி: சிங்கள-பௌத்தம் பற்றிய தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளையும் தங்களுடைய தற்போதைய ஆராய்ச்சியின் திசை பற்றியும் கூற முடியுமா?

பதில்: 1970ஆம் ஆண்டில் சிங்கள - பௌத்தம் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். சுமார் பத்து வருடங்கள் படித்திருந்தபோது, 1981ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. குறிப்பாக, யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டது என்னைக் கடுமையாக தாக்கிவிட்டது. இதன்பிறகு தமிழ்மொழியையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் படிக்கத் தலைப்பட்டேன்.
அப்போது எனக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது; இலங்கையில் பௌத்தம் பற்றிய பிரச்சினையானது நான் எதிர்பார்த்ததைவிட சிக்கலானது என்பதுதான் அது. மேலும் தமிழ் பௌத்தம் என்ற ஒன்று இலங்கையில் இருந்தது என்பதையும் நான் அறிய நேரிட்டது.
10-12ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கள் இலங்கையின்மீது படையெடுத்து வந்தபோது இவ்விதமான தமிழ்-பௌத்த மரபு அங்கே இருந்திருந்தது. இந்தத் தமிழ் - பௌத்தமானது குறிப்பிட்ட சில அம்சங்களைக் கொண்டிருந்தது எனலாம். அதாவது, இந்துசமய அடிப்படைகளைக் கொண்டும், புத்த பகவானை ஏற்றுக்கொண்டும் இது செயல்பட்டது. இறுதியில் சிங்கள-பௌத்தத்துள் இது கலந்துவிடுவதால், இம்மரபை “இடைக்கால” தமிழ்-பௌத்தம் என்றும் அழைக்கலாம்.
இன்றைய திரிகோணமலையை அடுத்த கல்வெட்டுகளில் இந்த தமிழ்-பௌத்த மரபு பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவை இந்துக் கடவுளர்க்குப் பதிலாக, புத்த பகவானைக் கொண்டு துவங்குகின்றன. புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் அங்கே காணமுடியும்.
ஆக, இந்தத் தமிழ்-பௌத்த மரபினர், இந்து அடிப்படைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் புத்தபகவானை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக சோழ அரசர்களையே அண்டியிருந்தனர். எடுத்துக்காட்டாக, இவர்களுடைய பௌத்த-விகாரையின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி. ராஜராஜசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை அக்காலத்தில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.
இத் தமிழ்-பௌத்த மரபினை, தற்காலத்திய தமிழ்பேசும் முஸ்லிம் மக்களைப் போலப் பார்க்கலாம். அதாவது, தமக்கே உரித்தான கலாச்சாரத்துடனும் மதமொழியுடனும் இவர்கள் வாழ்ந்துவந்தனர் எனலாம். இப்படிப்பட்ட மரபினர், இலங்கையில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் இருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, இவை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் நான் ஈடுபட்டு வருகிறேன். இதற்காகத் தஞ்சாவூரில் தங்கி, கல்வெட்டுகள், சிற்பங்கள் பற்றிய தகவல் விபரங்களைச் சேகரித்தேன். கல்வெட்டுகள் எதிலும் எனக்குத் தேவையான தகவல்கள் காணப்படாத போதிலும், அக்காலத்தைச் சார்ந்த புத்தர் சிலைகளைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள மூன்று ஜீணீஸீமீறீகளில் காணப்படும் புத்தர் சிலைகளைக் கூறுவேன்.
இந்த பௌத்த-மரபு சோழர் காலம்வரை எப்படி நீடித்து வந்தது என்பதும் அதற்குப் பின்பு எப்படி மறைந்து போயிற்று என்பதும் புதிராகவே உள்ளன! ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் அதாவது தஞ்சைச் சோழர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் - தமிழ்நாட்டில் பௌத்தம் பரவியிருந்தது என்பது நாமறிந்த ஒன்றுதான். அதற்குப் பின்பு, சைவர்கள் பௌத்தத்துக்கு எதிரான பெரும்போராட்டம் ஒன்றைத் துவக்கிவிட்டனர். இதில் சைவர்கள் வென்றதும் தெரிந்ததுதான். இருப்பினும் இதையும் தாண்டி சில பௌத்தமரபினர் சோழர் காலம்வரை தாக்குப்பிடித்துள்ளனர் என்பதும் தமது எச்சங்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இம்மரபினர் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இம்மரபின் அம்சங்களை மீண்டும் கட்டமைத்துப் பார்ப்பதை எனது செயலாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
எனது ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருந்த அறிஞர்கள் பலர், முக்கியமாக, தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நூலக இயக்குநர் டி.பத்மநாபன், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியன் ஆகியோரின் உதவி அளவிடற்கரியது. கல்வெட்டுக்களைப் படிப்பதில் எனக்கிருந்த பிரச்சினைகளை இவ்விருவரும் தீர்த்து வைத்தனர்.
இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது; தமிழ்நாட்டின் கலாச்சாரம் இனியும் “இந்துக்” கலாச்சாரமாக மட்டும் கருதப்படமுடியாததாகும். இங்கே பலமுகங்கள் கொண்ட சமுதாயம் இருந்திருப்பது தெரிகிறது. இந்து சமயத்தின் கை ஓங்கியிருந்த சோழர்காலத்தின் போதுகூட பௌத்தம் அழித்தொழிக்கப்பட முடியாததாக இருந்திருக்கிறது.
இருந்தாலும் ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகிய மன்னர்கள் பௌத்தம்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் எனக்குப் புதிராகவே உள்ளன. அவர்கள் பௌத்தத்துக்கு அளித்த மானியத்துக்கான காரண-அடிப்படைகள் யாவை? பௌத்தத்தை இந்துமதத்துள் கொண்டுவருவதற்கு இந்த மானியங்கள் பயன்பட்டனவா? இதுபற்றி எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை.


கேள்வி: சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், நாலடியார் போன்ற அறவியல் நூல்களும், சிற்பங்கள் குகைக் கோயில்களும்தான் பெரும்பாலும் தமிழ்நாட்டின் சமண-பௌத்த காலகட்டத்தின் எச்சங்களாக இருக்கின்றன என்று கூறமுடியும். இது சோழர்களுக்கு முந்தைய காலகட்டம். சோழர்காலத்தில் பரவியிருந்ததான தமிழ்-பௌத்தத்தை அறிவதற்கான தங்களது ஆதாரங்கள் பற்றி விளக்க முடியுமா?

பதில்: நாகப்பட்டினம் பௌத்த விகாரைக்கு ராஜராஜ சோழன் அளித்துவந்த மானியம் பற்றிய கல்வெட்டுகளில் அங்கேயிருந்த பௌத்தம் பற்றிய சில விவரங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் திருகோணமலைக்கு அருகேயுள்ள பெரியங்குளம் என்ற இடத்திலுள்ள வெல்கோம் விகாரையை அடுத்த இடத்தில் நான் கண்ட கல்வெட்டுக்களையும் இங்கே எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் இன்னும் நிறைய கல்வெட்டுகளைப் பார்த்துவிட முடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அது கைகூடவில்லை. எனினும் தமிழ்நாட்டில் காணப்படும் கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி கல்வெட்டுகள் மைசூரிலுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தில் பிரசுரிக்கப்பட்டு விட்டன. அங்கே எனக்குத் தேவையான வாசகங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கல்வெட்டுகளில் பௌத்தம் பற்றிய நேரடியான வெளிப்பாட்டு வாசகங்களைக் காண முடிகிறது. ஆனால் இலக்கிய மரபுகளில் இவை மிகைப்படுத்தப்பட்டும், பாண்டித்தியமாக மாற்றப்பட்டும் ஆகிவிடுகின்றன. எனவே கல்வெட்டு வாசகங்கள், மொழிரீதியாகவும் சரி, கருத்துரீதியாகவும் சரி, மக்களுக்கு மிக அருகே வந்துவிடுகின்றன எனலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை, இந்தத் தமிழ்-பௌத்தர்கள் சிங்கள பௌத்தத்தால் உள்வாங்கப் பட்டிருக்கலாம் என்றே நினைக்கிறேன். இவர்களிடமிருந்த பல இந்துசமய அடிப்படைகள் சிங்கள-பௌத்தத்திலும் ஏற்றப்பட்டிருப்பதைக் காணும்போது, இது சரி என்றே கூறமுடியும். சிங்கள-பௌத்தத்தில் காணப்படுகிற இந்து-சமய அடிப்படைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்-பௌத்தம் அதன் உள்வாங்கப்பட்டிருக்கும் போக்கு சுவாரசியமிக்கதாகத் தெரிகிறது.

கேள்வி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சைவர்களுக்கும் சமண-பௌத்தர்களுக்கும் இடையில் நடந்த பெரும் போராட்டம் பற்றிச் சில விஷயங்கள் தெரிய வருகின்றன. இப்போராட்டம் ஜாதியரீதியானது என்றும், இது வன்முறைமிக்கதாக இருந்தது என்றும் நிச்சயமாகக் கூறமுடியும். தங்கள் ஆராய்ச்சிகளிலிருந்து இதுபற்றி ஏதும் கூறமுடியுமா? சமணமும் பௌத்தமும் சைவத்தால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தால், சோழர்காலம் வரை பௌத்தம் என்பது எஞ்சியிருந்திருக்குமா? இதுபற்றி தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றை இலங்கையில் பார்க்க முடியும். இதில் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள அமராவதி பௌத்த விகாரையைப் புதுப்பித்துத் திரும்பக் கட்ட சில பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட விவரத்தைப் படிக்க முடிகிறது. இதன்மூலம் தெரிவது என்ன? 13ஆம் நூற்றாண்டு வரையில் பௌத்தம் இங்கே தென்னிந்தியாவில் தாக்குப்பிடிக்க முடிந்தது; மேலும் இலங்கைக்கும் ஆந்திரத்துக்கும் உறவுகள் தொடர்ந்திருந்தது என்பதுதான் அது.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு பார்த்தால், தென்னிந்தியாவில் அப்போதிருந்த பௌத்தர்களுக்குக் கடல்கடந்த நாடுகள், பிரதேசங்களிலிருந்து ஆதரவு இருந்தது என்று வைத்துக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட நாடுகளில் இலங்கை தலையாயதாக இருந்திருக்கவும் கூடும். ஆதரவு இல்லாவிட்டால் பௌத்தர்கள் தொடர்ந்து இங்கே இருந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
ஆதரவு என்பது, அரசர்கள் வழங்கிய மானியங்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்பதற்கு ராஜராஜ சோழனால் ஆதரிக்கப்பட்ட நாகப்பட்டினம் விகாரையே ஆதாரம் என்றும் கூறமுடியும்.

கேள்வி: ஜாதி என்கிற அளவில் பார்க்கும்போது, பௌத்தத்துக்கு இருந்த ஆதரவு, சமுதாயத்தின் கைவினைஞர்களுடைய சங்கங்களால் அமைந்தது என்று பேராசிரியர் ரொமிலாதொப்பர் போன்ற வரலாற்றியலாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கைவினைஞர்கள் அமைத்துக்கொண்ட சங்கங்கள்தான் பௌத்தத்துக்கு ஆதரவு நல்கிவந்தன என்பது உண்மையா? உங்கள் ஆராய்ச்சியிலிருந்து தெரியவருவதென்ன? தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் காணப்பட்ட நிலை எப்படிப்பட்டது?

பதில்: கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து பௌத்த யாத்திரிகர்கள், வாணிகர்கள் ஆகியோர் பற்றிய கதையாடல்கள் (narratives) இருந்து வந்துள்ளன. நீங்கள் கூறும் கைவினைஞர்களின் சங்கங்கள் பற்றிய செய்திகளும் இக்கதைப்பாடல்களில் காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்குப் போன யாத்திரிகர்கள் பற்றிய செய்திகளையும் இவற்றில் காணலாம்.
நீங்கள் கூறும் சங்கங்களில் பௌத்தர்கள் மட்டுமின்றி இந்துக்களும் இருந்தனர் என்பதே உண்மை. இவற்றில் சீனர்கள் போன்றவரும் இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, கைவினைஞர்களின் சங்கங்கள் பௌத்தமத ரீதியானவை மட்டுமே என்று கூறிவிடமுடியாது.
அதே சமயத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும்; வெளிநாடுகளின் சந்தைகளுக்கான போட்டியில் பௌத்த வணிகர்கள் ஈடுபட்டார்கள் என்பதே அது, இந்த இடத்தில்தான் பௌத்தர்களை “வேண்டத்தகாதவர்கள்” என்றுகூறி வகைப்படுத்தும் போராட்டம் வருகிறது. பௌத்தர்கள் பொருளாதாரரீதியாக மேலாண்மை பெறுவதை விரும்பாதவர்கள் பௌத்தத்துக்கு எதிரான மதரீதியான விவாதத்தை முன்வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதுபற்றி இதற்குமேல் ஆதாரங்கள் இல்லாமல் எதுவும் சொல்ல முடியவில்லை.

கேள்வி: தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவின் இதர பிரதேசங்களிலும் சமண பௌத்தர்கள் வன்முறை ரீதியாக ஒடுக்கப்பட்டதற்குக் காரணம் இந்த வாணிகப் போட்டி என்று கூறமுடியுமா?

பதில்: அதுவும் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். பெருகிவரும் வெளிநாட்டுச் சந்தைகளை யார் கைப்பற்றுவது என்கிற பிரச்சினையோடு இணைந்ததாக இதைப் பார்க்கவேண்டும்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஒன்று தெரிகிறது; அரபு-சீன வாணிபப் பாதைகளைக் கைப்பற்றியதன் மூலம் சோழர்கள் தமது பேரரசை நிறுவினார்கள். வாணிபப் பாதைகளைக் கைப்பற்றுவதற்காகத்தான் சோழர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர் என்றே கூறமுடியும். ஆக பௌத்த வணிகர்களைவிடவும் இந்துசமயம் சார்ந்த வணிகர்களையே சோழர்கள் ஊக்குவித்தனர் என்று கொள்ள முடியுமா?
ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. சோழர்களைப் பொறுத்தவரை, தமது பேரரசு என்பதைக் கட்டமைப்பதற்கான லாப நோக்குடன்தான் வாணிபத் துறையைக் கையாண்டனர் என்றே கூறலாம். இந்த விதத்தில் அவர்கள் காரியக்காரர்கள் (rational) என்றே கூறவேண்டும். நாகப்பட்டினம் போன்ற ஊர்கள் சீனவணிகர்கள் பெரும்செல்வாக்குடன் விளங்கியதையும், அங்கே பௌத்த விகாரைக்கு மானியம் வழங்கப்பட்டதையும் பார்த்தால் இது புரியும். ஆக லாபம் எங்கிருந்து யார் மூலமாக வருகிறது என்பதைப் பற்றி சோழர்கள் பெரிதாய்க் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை.
இலங்கையை எடுத்துக்கொண்டால், அங்கேயுள்ள தமிழ்ப்பகுதிகளில் பௌத்தம் நெடுங்காலமாய் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பொன்னம்பலம் ரகுபதியின் சமீபத்திய Early Settlements in Jattna An Archaeological Survey நூல், யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள கந்தரோடையில் ஆறாம் நூற்றாண்டுக் காலகட்டம் தொட்டே, பௌத்தம் செல்வாக்குடன் இருந்துவந்துள்ளதைக் காட்டுகிறது. பௌத்த வணிகர்கள் அங்கே இருந்து வந்துள்ளனர். பின்பு, கடற்பாதைகளில் மாற்றம் ஏற்படும்போது கந்தரோடை அழிகிறது, மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு கந்தரோடையுடன் இணைத்துப் பேசப்படுகிறது. மணிமேகலை இதைக் கூறவில்லை என்றாலும் அக்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் இத்தகவலைக் காண முடியும். ஆனால் இதையெல்லாம் பற்றி ஆதாரபூர்வமாக எதுவும் பேசமுடிவதில்லை.
கந்தரோடை ஸ்தூபிகளைப் பார்க்கும்போது இலங்கையின் வடக்குப் பாகத்தில் பௌத்தம் நீண்டநெடுங்காலமாய் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. சோழர் காலத்து தமிழ்-பௌத்த மரபோ, இதிலிருந்து பெரிதும் வேறுபட்டது என்கிறேன், சோழர் காலத்து தமிழ்-பௌத்த மரபுக்குப் பலமான இந்துசமய அடிப்படைகள் இருக்கின்றன என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.
ஆக, தமிழ்-பௌத்தம் என்பதும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பல தமிழ் பௌத்தம் இருந்திருக்கின்றன எனலாம். ஆனால் தமிழ் பௌத்தம் பற்றி இலங்கையில் இன்று யாருமே பேசுவதில்லை; பேசினால் கேட்பதுமில்லை. இலங்கையின் பௌத்தம் என்பது சிங்கள-பௌத்தம்தான்; சிங்கள மொழியின் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டுவரும் ஒன்றுதான் என்றே அங்கு நினைக்கிறார்கள்.

கேள்வி: பொன்னம்பலம் ரகுபதியின் ஆராய்ச்சியை சிங்கள அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? தமிழ் அறிவுஜீவிகள் மட்டத்தில் இந்த ஆராய்ச்சிக்கான எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

பதில்: நீங்கள் கூறவிரும்புவது எனக்குப் புரிகிறது. தமிழ்-பௌத்த மரபுகள் பற்றி யாரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை என்கிறீர்கள்! உண்மைதான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமணம் பற்றிய ஒரு துறை (Chair) இருக்கிறது. இந்தியாவின் சமணர்கள் இதற்கான ஆதரவுத் தொகையை நல்கியுள்ளனர். ஆனால் பௌத்தம் பற்றிய Chair எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது எனக்குத் திகைப்பையே ஏற்படுத்தியது.
சென்னை எழும்பூர் மியூசியத்தை எடுத்துக்கொண்டால், நாகப்பட்டினம் பௌத்த வெண்கலச் சிற்பங்கள் பற்றிய அரிய நூல் ஒன்று அங்கே உள்ளது. பல ஆண்டுகளாக இது மறுபதிப்பு செய்யப்படவில்லை. வேறெங்கும் இப்பிரதி கிடைப்பதில்லை. இதுதான் நிலைமை.
ஆந்திரத்திலுள்ள அமராவதியில் பௌத்தம் பற்றிய மிகப் பிரம்மாண்டமான ஆராய்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமணம் பற்றிய நிலைமை பரவாயில்லை என்று கூறினீர்கள். பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீவகசிந்தாமணி ஒரு சமண நூல்தான்.
நேற்றுதான் தமிழ்நாட்டிலுள்ள சமணக் கல்வெட்டுகள் பற்றிய ஒரு தொகுப்பு நூலை நான் வாங்கினேன். பௌத்தம் பற்றிய நூல் எதுவும் இப்படி வெளியிடப்பட்டதில்லை.

கேள்வி: அமராவதியில் சிலவாரங்கள் தங்கினீர்கள் அல்லவா? அங்கே நடக்கிற ஆராய்ச்சிப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சுமார் 49 இடங்களில் கிடைத்த சிற்பங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிட்டன. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வேலை நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் பௌத்த சிற்பங்கள் இருக்கின்றன. ஸ்வீடனிலிருந்து கிளம்புமுன் இத்தனை சிற்பங்களைப் பார்ப்போம் என்று நான் நினைக்கவே இல்லை! இத்தனை அடர்த்தியான அளவில் பௌத்தச் சிற்பக்கலையானது இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. நாகார்ஜூனகொண்டா, கன்டசாலா மற்றும் இதர இடங்களில் காணப்படுகிற பௌத்தச் சிற்பங்கள் படைப்பாற்றலில் மிகவும் பிரத்தியேகமானவை என்று கூறலாம். It is very original, sensual kind of Buddhist art.

இலங்கையின் பௌத்தச் சிற்பங்களுடன் இவற்றை ஒப்பிட்டால்?
அமராவதி கலைதான் இலங்கையின் பௌத்த சிற்பங்களைப் பாதிப்பதாக அமைகிறது. இதுதான் உண்மை. ஆனால் சிங்கள பௌத்தர்கள் இதற்கு நேர்மாறாக சொல்கிறார்கள். உண்மையில் தென்கிழக்காசியாவின் மொத்த பௌத்தச் சிற்பங்களுக்குமே அமராவதி ஒரு முன்னோடி எனலாம்.

கேள்வி: தமிழ்-பௌத்தம் பற்றிய உங்களது ஆராய்ச்சி முயற்சிகளுக்கு சிங்கள-பௌத்தர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இவ்வளவு காலமாக சிங்கள-பௌத்தம் பற்றிப் படித்ததில் எனக்கு ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது: “தமிழ்-பௌத்தம்” என்கிற வார்த்தையைக் கூட நான் கேட்டதில்லை அங்கே. உதாரணமாக, தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போன புத்தகோஷர், தர்மபாலர் போன்ற பௌத்த உரையாசிரியர்களை எடுத்துக்கொள்வோம். சிங்கள-பௌத்த நூல்கள் இவர்களை பௌத்தர்களாக, சிங்கள-பௌத்தத்தை வளர்ப்பவர்களாகத்தான் காட்டுகின்றன. இவர்களை தமிழர்களாகவோ, வேறு யாராகவோ இந்நூல்கள் பார்க்கவில்லை. இவர்கள் அனுராதபுரத்திலுள்ள மகாவிகாரையில் பணிபுரிந்துவந்தனர். புத்தகோஷர் தமது வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் தென்னிந்தியாவுக்குத் திரும்புகிறார். இதைப்பற்றிய விவரம் சிங்கள-பௌத்த நூல்களில் காணப்பட்டாலும் இதிலிருந்து புத்தகோஷர் யார் என்கிற கணிப்பு எதுவும் செய்யப்படுவதில்லை. இப்படியாக, பௌத்தத்தின் தென்னிந்தியச் சூழல் இந்நூல்களில் விலக்கப்பட்டே வந்துள்ளது. அமராவதி கலையைக் கூட சிங்கள-பௌத்தத்தின் வழித்தோன்றலாகத்தான் பார்க்கின்றன இந்நூல்கள்.

கேள்வி: தஞ்சாவூரில் நீங்கள் கண்ட புத்தர் சிலைகளுக்கும் அமராவதி கலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: சோழர்கால புத்தர் சிலைகள் 11 அல்லது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கூறினேன். இவை, சில பௌத்த நூல்-மரபுகளின் (tமீஜ்tuணீறீ tக்ஷீணீபீவீtவீஷீஸீs) அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன. உதாரணமாக, இங்கே புத்தரின் ஐந்து கைவிரல்களின் நீளமும் ஒரே அளவுதான். கால்விரல்களும் அப்படித்தான். வடிவமைத்த சிற்பிகள் பௌத்த சிற்பமரபின்படி செல்லாமல் நூல்-மரபுகளின்படி சென்றுள்ளனர் என்பேன். சிற்பக்கலை என்பது வழக்கமாக இப்படி இருப்பதில்லை. மிt வீs ஸீஷீt tமீஜ்tuணீறீ தீut sமீறீயீ-க்ஷீமீயீமீக்ஷீமீஸீtவீணீறீ. இருந்தாலும், சோழர்கால புத்தர் சிலைகள் குறிப்பிடத்தக்கவிதத்தில் அமைந்துள்ளன என்று கூறியாக வேண்டும். இதுபற்றிய ஆராய்ச்சியை நிச்சயம் தொடரப்போகிறேன்.
அமராவதியை எடுத்துக்கொண்டால், அங்குள்ள சிற்பங்களுக்கும் நூல்-மரபு இருக்கத்தான் செய்கிறது; இருந்தாலும் அச்சிற்பங்கள் நூல்-மரபுகளை முழுமையாகப் பின்பற்றுவதில்லை; பல இடங்களில் முரண்பட்டும் செல்கின்றன. நாட்டுப்புற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அங்குள்ள ஸ்தூபிகளில் முழுமார்புகளையும், பெண்குறியையும் நேரடியாகக் காட்டும் சிற்பங்களைக் காணலாம். பௌத்த நூல்-மரபுகளில் இவை இருப்பதில்லை.

கேள்வி: தஞ்சை புத்தர் சிலைகளை இதர சோழர்கால சிற்பங்களுடன் இணைத்துப் பார்க்க முடியுமா?

பதில்: பௌத்த வாசகங்களை இப்படி இதர மத வாசகங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது உண்மைதான். இங்கே தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலுள்ள எனது நண்பர் தயாளன், தமிழ்ச் சைவ நூல் ஒன்றில் புத்தரின் கதை இருப்பதைத்தான் இச்சிற்பங்கள் கூறுகின்றன என்றும் சொல்கிறார். இதுபற்றிய ஆராய்ச்சியும் தொடரத்தான் வேண்டும்.


பேட்டி எடுத்தவர் : நாகார்ஜூனன்.
1990 அக்டோபர் மாத பாலம் இதழில் வெளியான பேட்டி.

(தமிழகத்தில் இருந்து சாளரம் என்னும் இணையத்தளம் www.saalaram.com à®µà¯†à®³à®¿à®µà®°à¯à®•à®¿à®©à¯à®±à®¤à¯. அதனை அறிமுகப்படுத்தும் வகையில் அதில் வெளிவந்த ஆக்கம் இங்கு மீள் பிரசுரமாகின்றது.)


     இதுவரை:  26118116 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5979 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com