Monday, 05 June 2006
ஜன்னல் கண்ணாடியை ஊடறுத்து உள் நுழையும் சூரிய ஒளி போல் உன் நினைவுகள் என்னுள் பரவுகிறது
யாரோ குறுக்கு மறுக்காக அந்த அறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்
உரியவன் வந்திருக்கிறேன் என்ற குரலுக்கு பதில் இன்றி கதவு மூடியே கிடக்கிறது
உள்ளே முருங்கை மரம் பட்டுப் போயிருக்கலாம் அல்லது காய்த்துக் குலுங்கலாம்
கிணத்தடியில் வாளியின் ஒலி கேட்கிறது நான் விட்டு வந்த மீன்கள் இன்னமும் எனக்காக காத்திருக்கலாம்
யாராவது கதவைத் திறவுங்கள் அறை மாடத்தில் கட்டப்பட்டிருந்த தூளியில் கொஞ்சம் நான் உறங்க வேண்டும்
என்னை கால்களில் வளர்த்தி எண்ணெய் தடவி மூக்கு நிமிர்த்தி குளிப்பாட்டிய அம்மம்மாவின் ஆத்மா அங்கு இன்னும் குடி கொண்டிருக்கலாம்
தயவு செய்து கதவைத் திறவுங்கள் வனவாசம் முடித்து வீடு திரும்பிய இந்தப் பைத்தியக்காரனிடம் இறுதியாக எஞ்சியிருப்பது இந்த வீடும் கொஞ்ச நம்பிக்கையும் தான்
இருத்தல் மீது நம்பிக்கையற்றுப் போகும் போது யார் யாரோ சொல்லுகிறார்கள் இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை என்று ! …
17-03-2006
|