Monday, 05 June 2006
01.
மழை இரவு ஒரு கார்த்திகை இரவு மழை பெய்து கொண்டிருக்கிறது இடியும் மின்னலுமாக ஓட்டின் வழி வரும் துவானம் வெற்று மேனியில் விழ சில்லென்றதொரு உணர்வு என்னுள்
ஒரு நூல் வாசிக்கவும் கவிதை எழுதவும் நல்ல வேளை நிச்சயமாக சொல்வேன், இப்படியொரு வேளையில் அரைக்குள் கைகளை செருகியவாறு போர்த்திக் கொண்டு கிடப்பர் மானிடரில் பெரும்பாலார் சிலர் பெண்னின் வெதுவெதுப்பில் தன்னிலை மறந்து கிடப்பர் போர்வையும் வீடும் இருப்பவர் மட்டும்
மழை வேளையில் நூல் வாசிப்பதில் உள்ள சுகம் சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது - என் முன்னே ‘சேகுவராவின் வாழ்வும் மரணமும்’ நான் பொலிவிய மலையடிவாரத்தில் அருகே சேகுவராவின் புதைகுழி சேருவராவைப் கொன்றவர்கள் இரவில்தான் புதைத்திருப்பர் செம்மணியும் இரவில்தான் உருவாகியிருக்கும் கிருசாந்தியும் இரவில்தான் குதறப்பட்டிருப்பாள் கோனேஸ்வரியின் சிதறிய உடலமும் இரவில்தான் சேர்த்தள்ளி எரிக்கபட்டிருக்கும்.
இரகசியங்களை விழுங்கிக் கொள்வதில் இரவுக்குத்தான் எத்தனை ஆற்றல் இரவுதான் பயங்கரங்களின் ஒரே சாட்சி ஆனாலும் நானொரு இரவு விரும்பிதான் - லூசுனைப் போல் நீண்ட நேரம் விளக்கு எரிந்ததால் அம்மாவின் முணுமுணுப்புக்கள் என் எல்லாச் செய்லகளுமே அம்மாவின் முணுமுணுப்புக்குரியவைதான்
மழை இன்னும் ஓயவில்லை பொலிவிய மலையடிவாரத்தைக் காணவில்லை சேகுவராவின் புதைகுழியையும் காணவில்லை செம்மணி இருக்கிறது, கிருசாந்தியின் கதறல் கேட்கிறது உருவம் அறியாக் கோனேஸ்வரியின் ஏதோவொரு உருவம் தோன்றி மறைகிறது. ’’’’’’’’’’’’
02.
மீளவும் அசைவுறும் 83
மீளவும் அந்த பயங்கரம் நிகழ்ந்து முடிந்தது வீதியெல்லாம் 83 இன் ஆவிகள். அநாகரிகத்தின் ஆவிகளை கொன்றொழிக்க முடியாத மனது அவர்களது. தமிழர்களை கொல் எரி வெட்டு மறுநாள் அந்த வீதியைப் பார்த்தேன், மனிதஉரிமை வாதம் ஜனநாயகம் மானுடம் எல்லாமும் தோற்றுப்போனதன் சாட்சியாகக் கிடந்தது அந்த வீதி. நான் ஆச்சரியப்படவில்லை, ஒடுக்குமுறையே நமது வாழ்வாகிப் போனபின் ஆச்சரியங்கள் எப்படித் தோற்றக்கூடும். சிங்ளவர்களிடம் இரக்கத்தை அன்பை எதிர்பார்க்குமளவிற்கு நானொன்றும் முட்டாளல்ல. மற்றவர்களைப் பற்றி நானொன்றுமறியேன். ஆனாலும் ஒரு செய்தி, எங்கள் சகோதரர்களை, சகோதரிகளை, தாய் தந்தையர்களை இளசுகளை எல்லோரையும் வெட்டி வீசுங்கள் சிங்களமே நீவீர் வெட்டி வீசிய ஒவ்வொரு வித்துடல்களும் உங்கள் வரலாற்றின் முடிவை எழுதும் காலம் வராமலா போகும். அதுவரை உங்கள் ஆவிகளை உலவவிடுங்கள் ‘’’’’’’
(இந்த உணர்வின் வரிகள் கடந்த 2006-ஏப்ரல்-12ஆம் திகதி 3.30 மணிக்கு சிங்கள காடையர்களால் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்பட இன அழித்தொழிப்பு தொர்பானது. இதன்போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சொத்துக்களும் அழிக்கபட்டன.)
|