அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அமெரிக்க நாட்குறிப்புகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சூரிய தீபன்  
Wednesday, 07 June 2006

பா.ஜெயப்பிரகாசம்தமிழ் நாட்டு படைப்பாளிகளில் ஒருவாரான பா.செயப்பிரகாசம் அவர்கள் சூரியதீபன் என்ற பெயரிலும் தமிழில் அறிமுகமானவர். இந்நாட்குறிப்புத் தொடரை சூரியதீபன் என்ற பெயரிலேயே எழுதுகின்றார். தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 1971 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இணை இயக்குநராக பணி ஓய்வுபெற்றவர். 'மனஓசை" என்னும் கலை இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராக 1981 முதல் 1991 வரை பங்காற்றியவர். சிறுகதை, கட்டுரை, விமர்சனம் எனப் பலதுறைகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். இதுவரை சிறுகதைத் தொகுதிகள் பத்தும், இரு கவிதைத் தொகுதிகளும், நான்கு கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளுன. தற்போது தற்காலிகமாக அமெரிக்காவில் தனது மகளுடன் தற்காலிகமாக தங்கியிருக்கின்றார். 

01.
சனவரி 26. 2006
விமான நிலையத்தில் இருந்து சியாட்டல் நகரின் உள்ளே போய்க்கொண்டிருந்தது கார். மனசின் ஓட்டம் வேறொரு திசையில் போனது. மகளிடம் கேட்டேன் 'இங்கே நீக்ரோக்கள் அதிகம் இருக்கிறார்களா?'  மகள் எச்சரிக்கை செய்தாள். 'அப்பா நீக்ரோக்கள் என்று சொல்ல வேண்டாம். Black என்றும் சொல்லக் கூடாது. நமக்குள் தமிழில் கறுப்பர்கள் என்று சொல்லலாம்.'
ஆபிரிக்க அமெரிக்கர்கள் (African Americans) என்று தாங்கள் அழைக்கப்படுவதையே அவர்கள விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்தில் உரிமைவேடடல் இருக்கின்றது. வெள்ளை அமெரிக்கர் அப்படி அழைக்க மறுக்கிறார்கள். Black  என்றே குறிப்பிடுகிறார்கள்.
இன்னொரு கேள்வி எழுந்தது. 'இங்கே பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா?'
' இருக்கிறார்கள். நம்மூர் பிச்சைக்காரர்கள் போலத்தான். ஆனால் பிச்சைக்காரர்கள் என்று சொல்லக்கூடாது. Homeless (வீடற்றவர்கள்) என்று சொல்ல வேண்டும்'.
பிறகு எப்போதும் எங்களுக்குள் பேசுகிறவேளைகளில் கறுப்பர்கள் என்று தமிழிலிலேயே சொன்னோம். நீக்ரோ என்றோ பிளாக் என்றோ வீதியில் போகிற அவர்கள் காதில் படுவது நல்லதல்ல.  'நீ கூட கறுப்பன்தான்' என்று திருப்பி விடுகிறார்கள்.
எங்களுக்கு தெரிந்த மொழி இன்னொருவருக்கு தெரியாமலிருப்பதில் ஒரு வசதி இருந்தது. ஒளிந்திருக்கும் அர்த்தம் அடுத்தவருக்கு கிடைப்பதில்லை.
மொழி ஒரு வெளிப்பாட்டு கருவி என்று இலக்கணம் சொல்கிறது. மொழி ஒரு பாதுகாப்பு கேடயம் எனறும் நடைமுறை உணர்த்தியது.
அமெரிக்க நாட்டின் உருவாக்கம் இருநூறு முந்நூறு ஆண்டுகள் என்று விரல்விட்டு சொல்லிவிடலாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியென்று நெடிய வரலாறு அதற்கு இல்லை. அமெரிக்காவில் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியர்கள். வாழ்ந்த இனத்தை விரட்டிவிட்டு வந்த வெள்ளையினம் ஆக்கிரமித்துக்கொண்டது.
வரலாற்றுணர்வாளர்கள் அவர்களை செவ்விந்தியர் என்று கொலம்பஸ் பாணியில் அழைக்க தயாராயில்லை. அமெரிக்க பூர்வீக குடியினரென்றே குறிப்பிடுகின்றார்கள். Native Indians என்று உணர்வுள்ளவர்கள் கூப்பிடுகின்றார்கள். அவர்களை காணவேண்டும் என்று கேட்டேன். 'அவர்கள் எங்கிருக்கிறார்களென்று தெரியாது.' இந்தியாவில் இருந்து அமெரி்க்காவுக்குள் இறங்கிய யாருக்கும் அவர்கள் எங்கு வாழ்கிறார்களென்று தெரியாது. இந்தியாவில் இருந்து வந்தவர்களின் நோக்கம் அமெரிக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள அல்ல.

02.
உலகம் தெரிகின்றது.
01.02.06
சியாட்டில் சென்ட்டர் எனப்படுகிறது எட்டு ஏக்கர் பரப்பளவு வட்டாரம்.
சென்னையில் 1967-ல் உலக வர்த்தக பொருட்காட்சி நடந்த இடம் ஒரு கட்டாந்தரை. ஈரப்பதம்காணாத, செடி, கொடிகளும் உயிர்தரிக்காத வெப்ப பூமி. இன்று அது அண்ணாநகராக உருவெடுத்துவிட்டது. உலக வர்த்தக பொருட்காட்சியை நினைவுபடுத்தும பூங்கா, நுழைவாயில் அண்ணா கோபுரம்.
அதுபோலவே, 1962-ல் உலக வர்த்தக பொருட்காட்சி நடைபெற்ற இடம் சியாட்டில் சென்ட்டர். 21-ம் நூற்றாண்டின் வெளிப்பாடு எனப்படும் இந்த மையம் - பசுபிக் அறிவியல் மையம், உலக நீரூற்று (International Fountain), கீ அறீனா (Key Arena), மைய அரங்கம், கருத்தரங்க கூடம் என - எட்டு ஏக்கர் பரப்பை தனக்குள் அடக்கியுள்ளது. நகரின் பூங்கா மட்டுமல்ல அது பண்பாட்டு மையமாக (Cultural Zone) கவும் மெருகு கொண்டு விட்டது.
அதன் நடுவில் உலக வர்த்த பொருட்காட்சிக்காக 605அடி உயர ஊசிக்கோபுரம்.
கோபுரத்தில் ஏறுவதற்கு வசதியாக அடியிலிருந்து உச்சிவரை மின்தூக்கி செல்கின்றது. கோபுர உச்சியில் வட்டவடிவ மேடை. அங்கிருந்து பார்த்தால் முக்காடில்லாத சியாட்டில் தெரிகின்றது. வாசிங்டன் பல்கலைக்கழகம், லேக்யூனியன் எனப்படும் நகரின் இன்னொருபகுதி  டவுண்டவுண் (Down Town) என அழைக்கப்படும் நகரின் நெஞ்சகம், புஹட் சவுண்ட் ஒலிம்பிக், கோல்கேட் மலைகள் காட்சியாகின்றன. மேகமில்லாத சூரியன் எறிக்கின்ற ஏப், மே, ஜுன், ஜுலை மாதங்களில் புளிபோட்டு விளக்கிய பித்தளைக் குடம்போல துலக்கமாக தெரிகின்றது.
ஊசிக் கோபுரத்தில் உச்சியிலிருந்து பார்த்த உல்லாசபயணிகள் அதிசயத்துக் கேட்டது 'உலகமே தெரிகின்றது (I can see the whole world)'.
எனக்குள் இருந்து பெருஞ்சிரிப்பு எழுந்தது. பிறகு குறுஞ்சிரிப்பாக இதழ்களில் உட்கார்ந்து கொண்டது.
'அமெரிக்காவில் இருந்து பார்க்கையில் எனக்கு உலகமே தெரிகின்றது'


03.
பெட்ரோல் யுத்தம்
05.02.06
புரட்சிகர நூல்கள் (Revolution Books) என்றொரு புத்தக நிலையமிருக்கின்றது. பேர்த்தியின் பெயர் நிலா. பேர்த்தியை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஒரு பூங்காவுக்கு போனபோதுதான், அதன் இன்னொரு மூலையில் வீதியின் தொடக்கத்தில் இருந்த அந்த புத்தக கடையை காணநேர்ந்தது. நிலாவைக் கையில் பிடித்துக்கொண்டு செஞ்சூரியனுக்குள் நுழைவதுபோல் கடைக்குள் நுழைந்தேன். புத்தக விற்பனை செய்கிற இடமாக மட்டுமல்லாமல், முக்கிய பிரச்சனைகள் பற்றிய விவாத அரங்கமாகவும் ஒவ்வொரு சனிக்கி்ழமையும் நடந்தது. வெள்ளிக்கிழமைகளில் தேவையுள்ள கருத்துள்ள திரைப்படங்களை வீடியோவில் திரையிட்டார்கள்.
பிறகு அடிக்கடி அங்கு போய்க்கொண்டிருந்தேன். என் மகளும் மருமகனும் என்னை காரில் இறக்கி விட்டுவிட்டு செல்கையில், இத்தனை மணி சுமாருக்கு திரும்புவேன் என்று சொல்லியிருப்பேன். அவர்கள் திரும்பவந்த என்னை அழைத்துப் போவார்கள்.
பேருந்து ரயில் போக்குவரத்தை காட்டிவிட்டால் நானாக போய்வருவேன் என்றேன். பேருந்து ரயில் பயணங்கள் ஒரு கனவு என்று சொல்லி  என் மகள் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தாள். 'இங்கே நகர ரயில் வண்டி (Metro Trains) இல்லை. வெளியூருக்கு ஓடுகின்றன ரயில்கள். அந்தப் பயணம் சொகுசானது. பணக்காரங்க மட்டுமே பயணிக்க முடியும்'. நகர் முழுவதும் பேருந்துகள் ஓடுகின்றன. அதில் பயணிக்கலாம். ' குறைந்த கட்டணம் மூன்று டாலர். (நம்மூர் மதிப்பில் 150 ரூபாய்) அந்த மூன்ற டாலருக்கு நானே காரில் கொண்டுபோய் விட்டு வந்துவிடுவேன்.' என்றாள் மகள்.
மக்கள் கூட்டம் பயணிக்கும் பேருந்து ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
கார் அடிப்படைத்தேவையாய் ஆக்கப்பட்டுவிட்டது. ஏதொன்றும் வாங்க எந்த இடமும் போக காரில்தான் பயணிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் தலைக்கு ஒரு கார் இருக்கின்றது. விரிந்த அகலமான வழவழப்பான சாலைகள், தெளிவான போக்குவரத்து விதிகள், நிறுத்தக் குறிகள்(Signals), பாலங்கள், எங்கு பார்த்தாலும் கார்கள் செங்குத்தாய் அடுக்கப்பட்ட தீப்பெட்டி அடுக்குகள் போல் வீடுகள் கட்டிடங்களெனில், படுக்கை வசத்தில் வரும் தீப்பெட்டி வரிசைபோல் கார்கள்.
அமெரிக்கா மொத்தமும் காரில் இயங்குகின்றது. கார்களுக்கு எரிபொருள் (பெட்ரோல்) தேவை. அதை கேஸ் (Gas) நிரப்பி வருகிறேன் என்கிறார்கள்.
அமெரிக்க கார்கள் அத்தனையும் வளைகுடா நாடுகளின் தலையில் ஓடுகின்றது. (ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா, பொஹரைன்) கார் இயங்க பெட்ரோல் தேவை. எனவே வளைகுடாப் போர் அவசியம் தேவை.
மற்ற நாடுகளின் உயிராயுதங்களை அபகரித்து தனது சொகுசை உறுதி செய்து கொள்கின்றது.
பெட்ரோல் யுத்தம் தேவைப்படுகின்றது. சந்தேகம் இல்லை.

04.
பைக் பிளேஸ் கடைத்தெரு.
10.02.06
பல மாடிகள் கொண்ட அடுக்ககம் (Apartmenrs) நாங்கள் குடியிருந்த வீடு -  இரு அறைகள் கொண்ட பகுதி அது. வாடகை அதிகம். நகரத்தின் நெஞ்சாம்பட்டை நடுவில் இருந்தது. இடம் அப்படி.
புறநகர்ப் பகுதியில் அமைதி தவழும் சூழலில் தனிவீடு எடுத்திருந்தால் பாதி வாடகை மிச்சமாகி இருக்கும். அலுவலகத்திற்க பக்கம் என்பதால் மகளும் மருகனும் இதனை எடுத்திருந்தார்கள்.
புறநகருக்குப் போயிருந்தால் அமைதி கிடைத்திருக்கும். அமெரிக்கா கிடைத்திருக்காது. நெரிசல் உள்ள குடியிருப்பு, வணிகப் பகுதியிலிருந்து நீங்கி நகருக்கு வெளியே வந்திருந்தால் நிம்மதி வந்திருக்கும். அமெரிக்க சமுதாய நேரடி தரிசனம் வாய்திருக்காது.
வீட்டிலிருந்து பிரதான சாலை பைக் பிளேஸ் மார்க்கெட் (Pike Place Market) வரை செல்கின்றது. கடிகாரம் பார்த்தபடியே நடந்தேன். பைக் பிளேஸ் கடைத்தெரு சென்றடைய சரியாக ஒன்பது நிமிடங்கள்.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையே நேரடித் தொடர்பை உண்டாக்க வேண்டுமென்று நூறு ஆண்டுகளுக்க முன்பு தாமஸ் ரிவேல் என்ற புண்ணியவாளர் நினைத்திருக்கின்றார்.  அவருடைய ஆசையின் உருவாக்கம்தான் பைக் பிளேஸ் கடைத்தெரு (Pike Place Market) என 1907-ல் உருவெடுத்தது. அடுத்த ஆண்டு நூற்றாண்டு கொண்டாடப் போகின்றது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சலாக்கிய பொருட்களை நேரடியாக நூற்றாண்டுகளாய் இந்த கடைத்தெருவுக்கு கொண்டு வருகிறார்கள். நம்மூர் உழவர் சந்தையின் சாயல் பளிச்சிடுகின்றது. உழவர் சந்தை மட்டுமல்ல கைவினைஞகள் உருவாக்கிய வேலைப்பாடுகளின் விற்பனைச் சந்தையாகவும் இருக்கின்றது.
ஒரே ஒரு வித்தியாசம் பேருந்துகளில், மிதிவண்டியில், டி.வி.எஸ்-50  வாகனங்களில் நம்மூர் விவசாயிகள் சுமைகளை எடுத்து வருவார்கள். இங்கு உழவர்கள், கைவினைஞகள் அவரவர் சொந்தக் கார்களில், வேனில், டிரக்குகளில் எடுத்து வந்து கடைகளில் இறக்கி விற்பனை செய்கிறார்கள். 287 உழவர்கள், 190 கைவினைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்கிறார்கள். இடைத்தரகர் இல்லை, இல்லவே இல்லை. நம்மூர் விவசாயிகள் வயிற்றிலடிப்பது இந்த இடைத்தரகர்கள்தாம். இடையில் ஆட்டம் போடும் வியாபாரிகள், இடைத்தரகர் உழவர்களை வாழவைத்த சரித்திரம் கிடையாது.
கடற்கரையை ஒட்டி ஐநூறு அடிக்கு அப்பாலிருக்கிறது பைக்பிளேஸ் கடைத்தெரு. மூன்ற அடுக்குகள் கொண்டது. மேலிருந்து கீழாக சுரங்கப் பாதைகள் போல் செலகின்றன. மேலே நடைபாதையில் கட்டப்பட்ட கூடாரத்தில் உள்ள கடைகள் High Stalls, கீழே மூன்று அடுக்குகளில் உள்ள கடைகள் Low Stalls எனப்படுகின்றன. அமைப்பு முறை தனித்துவமானது.
நம்மூர் நகரங்களில் நடைபாதைக்கு மேலிருந்து அடுக்குமாடிகள் அமையும். இங்கே கடற்கரைக்கும் நடைபாதைக்குமுள்ள இடைவெளி உயரத்தில் மூன்று அடுக்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். குதிரைலாயம்போல், மாட்டுவண்டிப்பாதைபோல் இருக்கின்றது என்ற காரணம் காட்டி கடைகளை அழிக்க பலமுறை முயற்சி நடந்திருக்கின்றது. இந்த இடத்தை உண்டுபண்ணிய ரீவெல்லும், விக்டர் ஸ்டெயின் புரூக் என்பவரும் பெருமுயற்சி செய்து காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
மக்களின் ஒரு பகுதியினர் உற்பத்தி செய்த பொருட்களை இன்னொரு பகுதியினர் பயன்படுத்துவதுதான் கூட்டுச் சமுதாய அமைப்பு. யார் உற்பத்தி செய்தார்களோ அவர்களே ஒத்தையாய் நின்று உபயோகித்து தீர்க்க முடியாது. இரண்டாவது அவை மட்டுமே போதுமானதிலலை. மற்ற மக்கள் கூட்டம் உண்டாக்கிய பொருட்களும் தேவையாகின்றன. பயன்படுத்துவோரும் பயன்பெறுவோருக்கும்மென கூட்டுக் கலப்பான சமுதாயம் அப்போது இயங்கும்.
மக்கள் பயனாளிகள் என கருதிப் பார்க்காத ஒரு இனம் இடையில் வருகின்றது. வணிக இனம், முதலாளித்துவ இனம் மக்களைப் பயனாளிகளாக மட்டுமே பார்ப்பதில்லை. பயன்படுத்தப்படுவோராக மட்டுமே மக்களைக் கையாள்கின்றது. சுரண்டப்படுவோராக மட்டுமே பார்கின்றது என்று தெளிவான வரிகளில் அதை அர்த்தப்படுத்தலாம்.
இடைக்கலப்பில்லாத நேரடிச் சமுதாய இணைவை உருவாக்கம் நன்னோக்கமே பைக்பிளேஸ் கடைத்தெரு.
ரோசெஸ்டர் வாஷ் வட்டாரத்தில் தார்ன்பீல்ட் பண்ணையின் உரிமையாளர்கள் ஜென்சர் குடும்பத்தினர். Thorn Field Farm என்பதற்கான நேரடி அர்த்தம் தமிழில் வியப்பு தரும் 'முள்வயல் பண்ணை'. (இங்கே முள் என்பது நாற்று புற்களின் குறியீடு ஆகின்றது.) இவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம். விளைபொருட்களை ஜாம், ஜெல்லீஸ், வினீகர், ஊறுகாய், ஸாஸ்,  தேநீர் என விற்பனைப் பண்டங்களாக ஆக்கும் வேளாண்மைத் தொழிற்சாலையையும் (Agriculturall Business) அந்த நிலத்திலேயே வைத்திருக்கிறார்கள். இவ்வாறான நூற்றுக்கணக்கான விவசாயிகளின் கூட்டம்தான் பைக் பிளேஸ் கடைத்தெரு.
திருமதி ஜென்சர் கூறுகின்றார் "எங்களுடையது குடும்பப் பண்ணை. குடும்பம் முழுசும் உழைக்கின்றது. பயிரினங்கள் காய்கறிச் செடிகள் பூவகைகள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்வது, வளர்ப்பது, புதுப்புது பொருட்களை உருவாக்குவது என இருமகள்கள் உட்பட எல்லோரும் செய்கிறோம். மகள்கள் இத்துறையில் தனிக்கல்வி, தனிப்பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சத்துக்கொடுக்கும், சுவைதரும் 27வகை உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறோம்."
விற்பனையை நேரடியாக கண்காணிக்கிறார்கள். வி்ற்பனை ஆட்கள் வைத்திருக்கிறார்கள்.  
மாலை ஆறு மணிக்கு கடைகளை மூடிவிடுகிறார்கள். கொண்டு வந்த பொருட்கள் பெஞ்சு, பலகை, டேபிள் என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஏற்றிய வேன், டிரக்குகள் பைக்பிளேஸ் கடைத்தெருவை காலியாக்கிவிட்டு நீங்குகின்றன.
நாங்கள் கடைத்தெரு குழந்தைகள் (பாடல்)
(1907-ல் தொடங்கப்பெற்ற பைக்பிளேஸ் கடைத்தெரு தனது நூற்றாண்டை கொண்டாடவிருக்கின்றது.
நிலங்களில் உற்பத்தி செய்யும் உழவர்களே விற்பனையாளர்கள். விற்பனைக்குப் பணியாட்களும் வைத்திருக்கின்றர். இருவகையினரும் இணைந்து தங்களை நினைவுகளை நூற்றாண்டில் புதுப்பித்துக் கொள்ளப் போகின்றார்கள். இளம் பருவத்திற்கும் அவர்களின் குழந்தைகள் சந்தித்த அவலம் - ரணம் - புன்னகை - பெருஞ்சிரிப்பு அனைத்தையும் தொகுத்துப் பாடவிருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு மூன்று நிகழ்வுகளில் இந்த பாடலை அரங்கேற்றி இருக்கிறார்கள். பணியாளர் டோனரே டேவிட்சன் பன்முக ஆற்றலுடையவர். இசையமைத்து குறுந்தகடாகவும் கொண்டு வந்துள்ளார்.
அந்த குழந்தைகள் பாடவிருக்கும் கடைத்தெரு தேசிய கீதம் இது.:)

அன்னையர் ரசீது எழுதிக்கொண்டிருந்தார்கள்
நாங்கள் வீதியின் நெஞ்சங்களில்
பாலருந்தினோம்.
வாழைப்பழப் பெட்டிகளின் அட்டை
எங்கள் இடைமறைப்புக்கும்
'அரைமூடி' ஆனது.
எம் நெஞ்சு வேக
எத்தனை ஓட்டை எங்கள் வாழ்வில்.

அந்நியர் முகம் கண்டு
அஞ்சினோமில்லை.
மூன்று வயதில் முகப்பழக்கம் கொண்டோம்.
ஐந்து வயதாகுமுன்பே
வாழ்வியல் கண்டோம்.

எங்களைப் பார்த்தவர் வேதனை கொண்டனர்.
ஒவ்வொருவரும்
எம் விழிநீர் துடைத்தனர்.
ஒவ்வொருவரும் அணைத்தனர்.
ஒவ்வொருவரும்
வளரும் மனதின் பயங்களை
சுண்டியெறிந்தார்கள்.
தலைவாரி விட்டார்கள்
உடை அணிவித்தார்கள்.
மூக்கில் முத்தமிட்டார்கள்.
பின்புறத்தில் ஒரு 'தட்டு' விட்டார்கள்
எல்லா அன்பும் எங்களை வளர்த்தது.

நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்
நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்

சுற்றுலா வருகின்றீர்கள்
பறவைகளுக்கு இரைவீசி
பசியாற்றுகிறீர்கள்.
புல்தரையில் மல்லாக்க
சூரியனை உறுஞ்சுகிறீர்கள்.
சிறுநீர் கழித்து பின்
உங்கள் வழி போகின்றீர்கள்
உங்களுக்காக காத்திருக்கின்றது,
இன்னொரு நாள்
நாங்கள் பிழைத்திருக்கிறோம்
உயிர்வாழுதல் காரணமாய்
மகிழ்சியாயும் இருககிறோம்.

ஒவ்வொருவரும் விசிலடித்து
சீண்டினீர்கள்.
ஒவ்வொருவரும் இல்லையென்று
கைவிரித்தீர்கள்.
ஒவ்வொருவரும் எம்மை
கடைத்தெரு விளைச்சலல்களென
பகடி செய்தீர்கள்
சிரித்துக் கொண்டோம்

நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்
நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்

ஒவ்வொருவரும்
தலைவாரி விட்டீர்கள்
உடை அணிவித்தீர்கள்.
மூக்கில் முத்தமிட்டீர்கள்.
பின்புறத்தில் ஒரு 'தட்டு' விட்டீர்கள்
எல்லோர் அன்பும்
எங்களை விதையாக்கியது

நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்
நாங்கள் கடைத்தெரு குழந்தைகள்

நாட்குறிப்பு தொடரும்...

 


 


     இதுவரை:  24713596 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6435 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com