அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 21 September 2019

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 27 arrow நம்பிக்கைகளுக்கு அப்பால்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நம்பிக்கைகளுக்கு அப்பால்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்.  
Tuesday, 27 June 2006

டாவின்சி குறியீடு (The  Da Vinci Code) நாவல் பற்றிய சில குறிப்புகள்.
மேரி மக்டலின் மீது எப்போதும் ஒரு அனுதாபமும் மதிப்பும் பாடசாலை  நாட்களிலிருந்தே என்னிடம் உருவாகியிருந்தது. அவளது வாழ்வின் அவலம்  மரணத்தைத் தன் கண்னெதிரே சந்தித்துக் கொண்ட கணங்கள், அக்கணத்தில்  ஒருவிரல் வரைந்த எழுத்து அவள் வாழ்க்கையினை மாற்றிய விந்தை,  யேசுவைப் பின் தொடர்ந்த வாழ்க்கை,அச்சத்துடன் பலர் விலகிய போதிலும்  சிலுவையடியில் அசையாது நின்ற துணிவு, உயிர்ப்பின் பின் வெறுமையான  கல்லறையிலிருந்து  துயரத்துடன் அழுதமை என்பன அவ்வாறான  உணர்வுகளை என்னுள் உருவாக்கியிருந்தன.
லேய்ன் பிக்நெற்றின் ‘மேரி மக்டலின்( Mary Magdalene  By Lynn  Picknette )  வாசித்த பொழுதுதான் டாவின்சியின் தூரிகையில் மறைந்திருந்த  மர்மங்களை அறிய நேர்ந்தது. ஆயினும் உடனடியாக நம்ப முடியவில்லை  காரணம் பைபிளின் முக்கிய பாத்திரங்கள் பற்றிய எதிர்மறையான பல  கருத்துக்களை நான் நிறைய வாசித்திருந்தேன். குறிப்பாக தேவமாதாவிற்கு  எதிரான பல கருத்துக்கள் கொண்ட நூல்களையும் சில தொலைக்காட்சிச்  செய்திப் படங்களையும் பார்த்திருந்தேன். சிறு வயதுமுதல் தேவமாதா மீது  அதிக பக்தி கொள்ளக் கூடிய சூழ்நிலையில் வளர்ந்ததனால் அவற்றை  நம்பமுடியாமல் போனது மட்டுமல்ல அவற்றை அவதூறு என்றும்  கருதியிருந்தேன். காரணம் என் நம்பிக்கைகளுக்கு அப்பால் அவை எந்த  ஆவணங்களையும் ஆதாரமாக முன்வைக்கவில்லை. மாறாக பிக்நெற்றின்  நூலில் அனேக ஆதார நூல்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனவே அந்நூலில் குறிப்பிடப்பட்டிருந்த உண்மைகள் பற்றிய மேலதிக ஆதாரங்களை மனம்  நாடிநின்றது.
வழமைபோல் புத்தக நிலையமொன்றில் நூல்களை நோட்டமிட்டுக்  கொண்டிருக்கையில்; Secrets of the Code – The unauthorised guide to the  mysteries behind the Da Vinci Code    என்ற நூல் என் கவனத்தை அதிகம்  ஈர்த்தது. அதன்மூலமே Dan Brown  னின் The Da Vinci Code   என்ற நாவலை  அறிய முடிந்தது. நூலின் அறிமுகத்தில் Dan Bursten   இவ்வாறு கூறுகிறார்.  'கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலம் தொட்டு முக்கிய பாத்திரம் வதித்த பெண்கள் பற்றிய அதிர்ச்சியான மாறுபட்ட பார்வையை அளிக்கிறது. இதன் கருத்துக்கள்  Harvard’s Divinity School மற்றும் ஏனைய புத்திஜீவி மையங்களின் முக்கிய  கருப்பொருளாக மாறியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். டான் பிறவுனும்  தனது நாவலில் வரும்  எல்லாக் கலைப்படைப்புக்கள், கட்டிட அமைப்பு  ஆவணங்கள் இரகசியச் சமய வழிபாட்டு முறைகள் பற்றிய  விபரிப்புகளும்  உண்மையானவை  எனக் குறிப்பிட்டார்.
நாவலை வாசித்து முடித்தபின்னர் நாவல் பற்றிக் கூறப்பட்டவைகள் உயர்  புனைவுத் தன்மை கொண்டவை என்பதை உணர முடிந்தது. சீரிய இலக்கிய  நாவல் என்பதை விட  ஒரு மூன்றாந்தரத் தன்மைகள் கொண்ட ஒரு மர்ம  நாவல்தான் அது.
பரீசிலுள்ள Louvre   மியூசியத்திலுள்ள மேற்பார்வையாளரின் கொலையுடன்  ஆரம்பமாகும் நாவல் அவர் இறப்பதற்கு முன்னர் தன் இரத்தத்தினாலும் தன் உடலினாலும் ஏற்படுத்திக் கொண்ட டாவின்சியின் Penthcle ஓவிய  அமைப்பினாலும் அவரிடம் இருந்த கடிதத்துடனும் ஆரம்பமாகின்றது. இந்  நாவல் முழுவதிலும் புதையல்கள்போல் ஆங்காங்கே மெல்ல வெளிப்படும்  ஆதிகாலச் சமயக் கருத்துக்களும் அதன் விளக்கங்களும் பல புதிர்களும்  விளக்கங்களும் பாத்திரங்களால் பாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டாலும்  மர்ம நாவல்களுக்குரிய விதத்தில் வாசக மன ஆர்வத்தைச் சற்றும் கீழிறக்க  விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை நாவலாசிரியர் நாவல்  முழுவதும் பேணுகிறார். நாவலின் பல புதிர்கள் மெல்ல மெல்ல  அவிழ்க்கப்படுகையில் அதனுள் வெளிவரும் தோற்றம் அல்லது  விளக்கப்படும் செய்திகளில் நாம் ஆச்சரியத்தால் வாயடைத்துத்தான்  போகிறோம். சில வேளைகளில் சில புதிர்களின் இறுதி நிலையை நாம்  முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகையில் பின்விளக்கங்கள் மிகவும்  பலவீனமாகிப் போகிறது. இது எல்லா மர்ம நாவல்களுக்கும் இயல்பாக  வாய்க்கும் ஒரு நிலைதான். ஆனாலும் நன்கு கவனமாக பின்முடிவுகளுக்காக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட மர்மங்களும் அவை அவிழ்க்கப்படும்  விதங்கள் என்பவைகளில் வெளிவரும் ஆசிரியரின் கெட்டித்தனத்தில் நாம்  வியப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது.
படைப்பின் முழுமையின் முதன்மையைவிட தான் நம்பும் கருத்துக்களை  வெளிக் கொணரும் வகையில் பாத்திர இயல்புகள், சூழலின் யதார்த்தம்  ஆகியவைகளைப் பின்னொதுக்கிய விதம் சில இடங்களில் விளக்கக்  கட்டுரையின் தன்மையைக் கொண்டுள்ளது. இதுவும் கொள்கை விளக்க  நாவல்களுக்குரிய நிலைதான்.
இந் நாவலை அதன் இலக்கியத் தகுதி கொண்டு ஒதுக்கினாலும்  அறிவுசார்  ஆராய்ச்சிக்கும் புதைக்கப்பட்ட உண்மைகள், உருமாற்றப்பட்ட கருத்துக்கள்  இவைகளை வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படும் கலைப்படைப்புக்கள்  என்பவைகள் ஒதுக்கப்படமுடியாத கருத்துக்களாக நாவலுக்கு வெளியிலும்  நிலைநிறுக்திக் கொள்ளக்கூடியவையே.
அவற்றுள் முக்கியமானவற்றை இவ்வகையாகச் சுருக்கிக் கொள்ளலாம்.
இன்று பாவனையிலுள்ள பைபிள் (Canonical Bible) இன் புதிய ஏற்றாட்டில்  அடங்கியுள்ளவைகள் தூய ஆவியின் வழிகாட்டலில் எழுதப்பட்டவையல்ல.  பல உள்நோக்கங்களுக்காகத் திருத்தி எழுதப்பட்டவை, தவிரவும் அவைகள்  நான்கு பேர்களால் மட்டுமல்ல அநேகம் பேர்களினால் எழுதப்பட்டவை.
திருத்தி எழுதப்பட்டவற்றில் மேரி மக்டலின் பாத்திரம் உருமாற்றப்  பட்டுள்ளது. கூறப்படுவதுபோல் அவள் விபச்சாரி அல்ல, யேசுவிற்கு அடுத்த  அல்லது சமமான தரத்தில் இருந்தவர். இருவருக்குமிடையிலான உறவில்  ஒரு பெண் குழந்தையும் உண்டு.
யேசுவின் காலத்திலேயே பீற்றருக்கும் மேரி மக்டலினுக்கும்  அதிகாரத்திற்கான போட்டி இருந்துள்ளது. யேசுவின் மரணத்தின்பின் பீற்றரின் அதிகாரம் மேலோங்க மேரி மக்டலினும் அவரது குழந்தையும் பிரான்சுக்கு  நாடு கடத்தப்பட்டார்கள்.
மேரி மக்டலினுடன் அநேக பெண்கள் யேசுவின் சீடர்களாய் இருந்துள்ளனர்.  மேரி மக்டலினை தலைமையாகக் கொண்டவர்களே PAGAN  எனப்படுபவர்கள். இவர்களது வழிபாட்டு முறைகளையே கத்தோலிக்கம்  தனக்கானதாகச் சுவீகரித்துக் கொண்டது.
The priory of Sion  இயக்கம் இரகசியமாக 1099ல் உருவாக்கப்பட்டது.
இச்சபையின் தலைவர்களாக  அறிவியல், கலை இலக்கியம் சார்ந்த பல  முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் Sir Isaac Newton, Botticelli,  Victor Hugo, Leonardo Da Vinci ஆகியோர் முக்கியமானவர்களாகும்.
டாவின்சியின் பல ஒவியங்களில் இச் சபையின் கருத்துக்கள் குறியீட்டு  வடிவங்களாக வரையப்பட்டுள்ளது. குறிப்பாக Last Supper, The Virgin of rock,   Mona Lisa, Vitruvius என்பவைகள அவ்வாறானவை.
பைபிளின் புதிய ஏற்பாட்டின் செய்திகள் தூய ஆவியின் வழிநடத்தலில்  எழுதப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும் அநேகர் எழுத முற்பட்டுள்ளனர் என லூக்காவின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.'மகா  கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற  சங்கதிகளை ஆரம்பம்முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள்  எங்களுக்கு ஒப்பிவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத  அனேகம்போர் ஏற்பட்டபடியால்' (லூக்கர் 1 1-2) மனித சக்திக்கு அப்பாற்பட்ட  ஒரு சக்தியினால் அல்லது வழிநடத்தலினால் எழுதப்படுதல் பல  மதநூல்களின் பொதுக்கருத்தாகவே இருந்துவந்துள்ளது. குர்ஆன், மகா பாரதம் அதன் உப பிரிவாகிய பகவத்கீதை. என்பன அவ்வகையானவையே. லூக்கா  அநேகம் பேர் எனக் குறிப்பிட்டபோதிலும் கிட்டத்தட்ட 80வகையான  நற்செய்திகள் இருந்ததாக டான் பிறவுன் குறிப்படுகிறார்.
1945ல் எகிப்திலுள்ள Nag Hamadi  யில் நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த  மிகப் பெரிய சாடியுள் கி.பி350ம் ஆண்டுக் காலம் எனக் கணிக்கப்படக்கூடிய நொஸ்ரிக் நற்செய்திகள்; (Gnostic Gosples) கிட்டக்தட்ட 55 பிரதிகள்  கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் தோமஸ், பிலிப் ஆகியவைகளும்  உள்ளடங்கியவை. மேரி மக்டலினின் நற் செய்தி 1896ல் கண்டுபிடிக்கப்பட்டு  பேர்லின் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டது. இப்போது யூதாஸ்  ஸ்காரியோத்தின் நற்செய்தியும் கண்டுபிடிக்கப்பட்டதாகச்  சொல்லப்பட்டு  அது நூல் வடிவிலும் வெளிவந்துள்ளது.
ரோமைப் பேரரசின் சக்கரவத்தியான கொன்ஸ்ரன்ரைனின் காலத்தில்  கிறிஸ்தவமே முழு ரோமுக்குமாக அறிவிக்கப்பட்டவுடன் எவ்வகைப்  பிரதிகள் அதிகாரபூர்வமானது எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று  பாவனையிலுள்ள கனோனிகல் நற்செய்திகளைத் தவிர ஏனயவை  தடைசெய்யப்பட்டதுடன் அவைகள் எரிக்கப்பட்டன. அத்துடன் அவற்றை  மறைவாக வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்  மரண தண்டனை,  நாடு கடத்தல் போன்றவைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  ஆயினும் எவ்வகையான அடக்கு முறைக்குள்ளும் உயிர் வாழும்  தன்மையை அடக்கப்பட்டவைகள் தம்முள் தக்க வைத்துக் கொள்கிறது  என்பதையே சரித்திரம் நிருபித்துள்ளது.
யேசுவைப் பின்பற்றியவர்களுள் அநேகர் பெண்களாய் இருந்தார்கள் என்பது  அங்கீகரிக்கப்பட்ட கனோனிகல் பைபிளிலேயே கண்டுகொள்ளக் கூடியது.  “அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கி குணமான சில  ஸ்திரிகளும் ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் எனப்பட்ட மரியாளும்,  ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும்,  சூசன்னாளும் தங்கள் ஆஸ்திகளினால் அவருக்கு ஊழியஞ் செய்துவந்த  மற்றும் அநேகம் ஸ்திரிகளும் இருந்தார்கள் (லூக்கா.8;2-3). இதுபோன்று  மத்தேயு 27.55-56லும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மறைக்கப்பட்டவை  என இவற்றைக் கொள்வதற்கில்லை.
மேரி மக்டலின் விபச்சாரத்துடன் அடையாளப்படுத்தப்பட்டது போப் முதலாம் கிறகரி கி.பி.591 லேயே. ஆயினும் கத்தோலிக்க திருச்சபையினால் அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது தவறு என 1969ல் ஒப்புக்கொள்ளப்பட்டது.  ஆயினும் தூரதிஸ்ரவசமாக பலர் மனங்களிலிருந்து முன்னைய படிவம்  அகலவேயில்லை. எப்படியிருந்த போதிலும் பின்னர் கிடைக்கப்பெற்ற  நற்செய்திகளின்படி யேசுவின் சீடருக்குள் மேரி மக்டலினுக்குள்ள  முக்கியத்துவம் மறுக்கப்படமுடியாதவையே. தவிரவும் சீடருள்
அதிக அறிவு நிரம்பியவளும் யேசுவின் ஞானஉரையின் குறியீகள் பற்றிய  விளக்கங்களைஅறிந்தவளாகவும் அவற்றை சீடர்களுக்கு விளக்குபவளாகவும் அவளே இருந்திருக்கிறாள்.
தனது தரிசனம் பற்றி யேசுவுடன் அவள் நடத்தும் உரையாடல் மிக  முக்கியத்துவம் வாய்ந்ததே. சீடர்கள் மனச்சோர்வு அடைந்தபொழுது  அவர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டுபவளாகவும் இறுதியில் அவளது  தலைமைத்துவம் ஏற்கப்பட்டிருந்தது என்பதற்கு அவளது
நற்செய்தியை வாசிப்பவர்கள் வந்தடைவார்கள். யேசுவிற்கும் அவளுக்கும்  உள்ள உறவு மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.  ஆராச்சியாளர்கள் ஆம், இல்லை, அறுதியாகக் கூறமுடியாது என்ற  கோணங்களிலிருந்து தர்க்கிக்கின்றார்கள். ஆயினும் யூத மரபு, அதன்  ஆகமவிதிகள், சமுக வழக்குகள், கலையின் குறியீடுகள், மொழி வழக்குகள்
ஆகியன பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவர்களாலேயே ஆசைகள்  நம்பிக்கைகளுக்கு அப்பால் இந்த இருண்ட பகுதிகளுக்குள் ஒளியேற்ற  முடியும்.
யேசுவின் காலத்திலேயே பீற்றருக்கும் மேரி மக்டலினுக்கும் முரண்பாடுகள்  இருந்திருக்கின்றன என்பதை மீட்கப்பட்ட நற்செய்திகள்  வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே பீற்றர் சபையினுள் பெண்களின்  முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளாதவராகவே காணப்படு
கிறார். தோமாசின் நற்செய்தியின்படி ‘ மேரி எம்மிடமிருந்து விலகவேண்டும்  பெண்கள் வாழ்விற்கு பெறுமதியற்றவர்கள்.”(பக்; 222) மேரி தனது தரிசனம்  பற்றி யேசுவுடன் உரையாடியபின் பீற்றரும் அந்ரேயும் கதைத்துக்  கொள்கிறார்கள் ‘எம்மைத் தவிர்த்து ஒரு பெண்ணுடன் நமது குரு எவ்வாறு  இந்த விடயங்களைப் பேசுதல் சாத்தியம். எமது முறைகளை நாம் கட்டாயம்  மாற்றியாக வேண்டும். உண்மையில் இவள் எங்களுக்கு மேலால்  தேர்ந்தெடுக்கப்பட்டவள்தானா?’ (மேரி மக்டலின் நற்செய்தி பக் 157)
பின்னர் லேவியின் கூற்றாக ‘ பீற்றர் நீ எப்போதும் கோபக்காரனாகவே  இருக்கிறாய்.-- -- ----குரு அவளைப் பெறுமதியானவள் என  ஏற்றுக்கொண்டால் அதை நிராகரிக்க நீ யார்? (மே.ம.ந.செ. பக்.165) அத்தோடு பீற்றர் யேசுவிடம் ‘நாங்கள் எமக்கான கேள்விகளைக் கேட்கும்படி இந்தப்  பெண்கள் அநேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதை நிறுத்த  மாட்டீரா?’((Pistis Sophia 377  14-17  மேற்கோள் மே.ம.ந.செ பக் 158) இதே  நூலில் மேரி மக்டலின் கூற்று இவ்வாறு வருகிறது. 'பீற்றரை நினைத்து  எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் என்னைப் பயமுறுத்துகிறார். பெண் இனத்தை வெறுக்கிறார்'.
இவைகள் இருவருக்குமிடையில் பகை உருவாகி வந்துள்ளது என்பதற்குரிய  சான்றுகள்தான் ஆனால் இவை வளர்ந்து நாடுகடத்தப்படும் அளவிற்கு  அல்லது பீற்றருக்கு பயந்து தப்பிச் சொல்லும் அளவிற்கு  இட்டுச்சென்றதற்கான உறுதிப்படுத்தக்கூடிய தரவுகள் முன்வைக்கப்பட்டதாக  அறிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் யேசுவின் மரணத்திற்குப் பின்  மேரி மக்டலினும் சாரா என அழைக்கப்பட்ட கருப்பு பணிப்பெண்,  அரிமத்தியா யோசேப் ஆகியோர்கள் உட்பட அநேகர்  ஒழுக்கு ஏற்பட்ட  படகில் பாய்மரமும் துடுப்பும் இல்லாமல் பிரான்ஸ் நாட்டின் கரையில்  வந்திறங்கியதாக ஒரு வாய்மொழிக் கதை உண்டு. இங்கு மேரி மக்டலின்  திருநாள் ஜுலை 22ல் கொண்டாடப்படுகிறது.

ஓவியங்களைப் பொறுத்த வகையில் ‘இறுதி விருந்து’ ஒவியமே  விவாதத்தின் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. இவ் ஓவியத்தில்  யேசுவின் வலது பக்கத்தில் இருப்பவர் இதுவரை ஒப்புக்கொள்ளப்பட்டது  போல் யோண் அல்ல. மாறாக மேரி மக்டலின் என்பதே அது.  இருவருக்குமான புறவரைவு (Outspreak) ‘M’ என்ற வடிவில் இருக்கிறது.  இருவருக்குமான ஆடைகளின் நிறங்கள் ஒரே நிறங்கொண்டவையாகவும்  அது வெவ்வேறு ஆடைகளுக்கு வரையப்பட்டுள்ளன. இது இருவருக்குமான  சமத்துவத்தின் குறியீடு. இராயப்பரின் கை கத்தி வடிவில் மேரி மக்டலினின்  கழுத்துக்கு நேராக இருக்கிறது.மேலும் “மொனாலிசா’ ஒவியம் சரிபாதியாக  இரு பகுதிகள் கொண்டவை. அவை ஆண்,பெண் இருபாலாரின்  சமத்துவத்தைக் குறிப்பது. என்பவை பற்றி.
‘இறுதி விருந்து’ ஓவியத்தில் யேசுவின் வலது பக்கத்தில் இருப்பவர் ஒரு  பெண்தான் என்பதை அவ்வோவியத்தை உற்று நோக்குபவர்கள் இலகுவாக  ஒப்புக்கொள்வார்கள்.ஆயினும் நீண்ட தலைமுடியுடனும் தாடியற்று  மெலிந்தவராக யோண் ஓவியங்களில் வரையப்படுவது இதற்கு எதிரான  விவாதமாக முன்வைக்கப் பட்டாலும் அது ஒரு வலுவான காரணமாக  அமையவில்லை. அவளை மக்டலின் என ஏற்றுக்கொண்டாலும் யேசுவிற்கும் மக்டலனுக்குமான புறவரைவை ‘எம்’என ஏற்றுக் கொள்வதில் சிறிது  தயக்கம் இருக்கிறது. அதை அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்கு மக்டலினுக்கும் பீற்றருக்கும் இடையில் சிறு வெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்  யேசுவின் இடப்பக்கத்தில் இருப்பதைப்போல். மேலும் இந்த ‘எம்’ வடிவம்  மேரியைக் குறிக்கிறதா அல்லது மணவாழ்க்கையை (Matrimony) குறிக்கிறதா என்பதே சர்ச்சையாக இருக்கிறது. இதைவிட டாவின்சி இத்தகைய  குறியீட்டிற்கு தனது சொந்த மொழியின் எழுத்தையே கையாண்டிருத்தல்  இயல்பு அவர் இந்த ஆங்கில எழுத்தை பாவித்திருப்பாரா?  அக்காலத்தில்  ஆங்கிலத்தில் எழுதக்கூடிய ஆற்றலை. அல்லது வழக்கத்தை அவர்  கொண்டிருந்தாரா என்பதான பல கேள்விகள் உண்டு. இவ்வோவியத்தில்  இராயப்பரின் கரம் கத்திபோல் இருப்பதும் முழு ஓவியத்திலும் எதனுடனும்  ஒத்துப்போகாமல் தனித்துத் தெரியும் கத்தி பற்றிய விளக்கங்களெல்லாம்  அவரவர் மனச்சார்பு கொண்ட விளக்கங்களாகவே கருதப்படவேண்டும்.  ‘மொனாலிசா’ விற்கு நாவலாசிரியர் கூறும் விளக்கங்களும் இவ்வாறே.  மோனாலிசா ஓவியம் பற்றியும்  அதன் மர்மப் புன்னகை பற்றியும் சிக்மன்  பிராய்ட் உட்பட எத்தனை பேர் விளக்கங்கள் கூறியுள்ளனர். இவ்விடத்தில்  ஒரு கேள்வி டாவின்சியைப் போலவே Botticel யும்;  Priory of Sion  சபையில்  Grand Master ராக இருந்தவர்தான் அவரது ஓவியங்களில் இவ்வகைக்  குறியீடுகள் எதுவும் இல்லாமல் போனது ஏன்? அல்லது இன்னமும்  கண்டுபிடிக்கப்படவில்லையா?
இறுதியில் நாவலின் தன்மைகளுக்கு வெளியே வரலாறு சார்ந்த, ஓவியங்கள்  சார்ந்த விவாதங்கள்தான் இந்த நாவலை ஒரு கொதிநிலையில்  வைத்துக்கொண்டிருக்கிறது.


பின்குறிப்பு-
மிக விரிவாக ஆதாரங்களுடன் எழுதப்படவிருந்த இக்கட்டுரை  மிக சுருக்க வடிவில்  இங்கு தரப்பட்டுள்ளது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 21 Sep 2019 12:42
TamilNet
Tamil villagers from Kachchatkodi-Swami-malai village, which is located 18 km southwest of Batticaloa, complain that the SL Police and the Sinhala Special Task Force (STF) commandos discriminate them from worshipping their village deity of Murukan represented at the hill-top in the form of a ‘divine javelin’(Saiva Veal). The occupying Sinhala police and commandos are also blocking them from conducting rituals for Naaka-thampiraan deity at the foothills. The STF is providing security to the Sinhala monks who have established a Theravada Buddhist temple. The hill-top with ancient Buddhist remains from the times of Tamil Nagas have been Sinhalicised and projected as Sinhala heritage in the island, the Tamil residents complain.
Sri Lanka: SL Police, STF refuse Tamil devotees accessing Kachchatkodi hill-top for worship


BBC: உலகச் செய்திகள்
Sat, 21 Sep 2019 12:51


புதினம்
Sat, 21 Sep 2019 12:52
     இதுவரை:  17632877 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10834 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com