Wednesday, 12 July 2006
உப்புமிழ்ந்து கடல் சூழும் எம்மண்ணில் உவர்ப்புக்கோ பஞ்சமில்லை. கனிமங்கள் கரைந்தோடி நிலநீரும் அவையாகும் மண்ணெமது.
அந் நிலமிடையே முகையெடுத்து வேரோடி மரமான மரமொன்று பூக்காது காய்க்காது முடமாச்சு.
அதன் இலை கருகிக் காய்ந்திருக்கும் கிளை சூம்பி விரல் மடிக்க குருவிச்சை படர்ந்ததனில் மதம்பிடிக்க அதனிடையே குருவியொன்றின் கூடிருக்க சிலகுஞ்சு அதனுள்ளே தலைநீட்டும்... அப்போதும் அந்தமரம் முகையெடுக்கும்..!
என்றாலும் அந்தமரம் பூமலர்த்திக் காய்கண்டு பழமுதிர்த்தி விதை பரப்பி இனம் தனைப் பெருக்கிடத்தான் முயற்சிமேல் முயற்சிக்கும்..!
ஆனாலும்... ஆனாலும்... நிலநீரில், மண்முழுதாய் கலந்திருக்கும் கனிமங்கள் அந்தமர மரபணுவில் கலந்திருந்து மரமதனை பூமலர்த்த மறுத்துரைக்கும்..!?
இச் சூட்சுமங்கள் புரியாத - மனமெனது மரமதனைத் தறித்தெறிய ஏதேதோ தேடிச்செல்லும்.
என்னத்தைத் தேடுகின்றேன்...? அரிவாளை - கோடரியை... எதற்காக அது எனக்கு...? அறுக்கவேண்டும்... தறிக்கவேண்டும்... என்ன..? காலத்தே காய்க்காத - தன் கோலத்தை மாற்றாத தேவை எந்தன் புரியாத மரமதனை...!? அறுக்கவேண்டும்... தறிக்கவேண்டும்..!
ஐயையோ.. ஐயகோ.. மரமது காய்க்காதோ..!! நிலையெது அறிவாயோ மடைப்பயலே..?
ஆழ்நீரும் - மண்வகையும் புலம்மீது உப்புவர்ந்து கிடக்கையிலே மரமதனின் குறையறிந்து உழுத்தமண் உவர் போக்க உரியவை சேர்த்தாங்கே உள்வள மாற்றஞ்செய்... அதற்கான தேடலினை நிலமெலாம் தேடிச்செல்...
அதுவரைக்கும்.. அதுவரைக்கும்.. அறுக்காதே அறுக்காதே மரமதனைத் தறிக்காதே.
18.06.2006
|