அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow நூல்நயம் arrow வேர்முகங்களோடு ஓர் உரையாடல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வேர்முகங்களோடு ஓர் உரையாடல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் வீ.அரசு  
Thursday, 13 July 2006

(பொ. ஐங்கரநேசன் தினக்குரல் பத்திரிகைக்காகவும், தமிழகத்து  சஞ்சிகைகளுக்காகவும் மேற்கொண்ட பல்வேறு ஆளுமைகளினதும்  நேர்காணல்களை  வேர்முகங்கள் என்னும் தொகுப்பாக சென்னையில்  சாளரம் வெளியிட்டுள்ளது. மாமனிதர் ஞானரதன் நினைவாக வெளிவந்துள்ள அந்நூல் பற்றிய ஒரு விமர்சனம்.)


பேராசிரியர் வீ. அரசு
(தமிழ் இலக்கியத் துறை சென்னைப் பல்கலைக்கழகம்)


ஐங்கரநேசன் தொகுத்துள்ள 'வேர் முகங்கள்'  என்னும் பத்தொன்பது பேரின் உரையாடல்களை வாசித்து முடித்தவுடன், மிக விரிந்த தளத்தில் பயணம்  செய்து முடித்த மன ஆசுவாசம் கிடைத்தது. சமூகத்தில் இயங்கும் பல்துறை  சார்ந்த பெரியவர்களிடம் உரையாடுவதற்கு, உரையாடுபவருக்கும் பல்துறை  சார்ந்த அநுபவம் இருப்பது அவசியம். நண்பர் ஐங்கரநேசனின் பல்துறை  சார்ந்த வளமான அநுபவத்தைப் புரிந்துகொள்ள இத்தொகுப்பு நல்ல  ஆவணம். பல்வேறு செய்திகளையும் வாசித்து முடித்த மனநிலையில்,  இதனை எப்படி மதிப்பீடு செய்து, பகிர்ந்து கொள்வது என்பதும்  மலைப்பாகவே இருக்கின்றது. இத்தொகுப்பில் பேசப்பட்டிருக்கும் ஒவ்வொரு  துறைசார்ந்த வரலாறு, அதன் தற்போதைய நிலை, குறிப்பிட்ட நபர் அத்துறை  சார்ந்து செயல்பட்டிருப்பதன் மூலம் செய்த பங்களிப்பு ஆகிய பிற  செய்திகளை விரிவாகப் பேசுவதற்கு இச்செவ்விகள் இடமளிக்கின்றன.  உரையாடியுள்ள பத்தொன்பது பேரில் அறுவர் தவிர்த்த மற்றவர்கள்  அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் குறித்தப்  புரிதலும் எனக்கு இருக்கிறது. எனது புரிதலோடு, ஐங்கரநேசன் உரையாடி  வெளிக்கொண்டுவந்துள்ள பல செய்திகள் பெரிதும் ஒத்துப் போவதை  உணர்கிறேன். யாரிடம் எதை எப்படிப் பேச வேண்டுமோ, அதை அப்படிப்  பேசியுள்ளார். இதனால் உரையாடல் என்பது, எந்திர கதியில் அமையாது  உயிர்ப்போடு இருக்கின்றது. எனது நூலகத்தில் அடிக்கடி எடுத்துப்பார்க்கும்  ஒரு நூலாக இது அமைந்துவிட்டது. குறிப்பிட்ட, நபர், குறிப்பிட்ட துறை  தொடர்பாக உரையாடியுள்ள செய்திகள், என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு  உடனடித் தரவாக (Ready Reference) அமைகிறது. ஒவ்வொரு மனிதரின்  ஆளுமை குறித்துப் புரிதலுக்கு இத்தொகுப்பு பெரிதும் உதவும். முன்னரே  அந்த மனிதரை அறிந்தவர்களுக்கு மேலும் புதிய புரிதலை  உருவாக்குவதாகவும் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட  மனிதர்களை நேரடியாக அறியாதவர்கள் அந்த மனிதர்களைச் சந்தித்து  உரையாடிய மனநிலையைப் பெறுவதற்கும் இத்தொகுப்பு உதவக்கூடும்.  இத்தொகுப்பு பற்றிய மதிப்பீடு என்பது, தொகுப்பில் உரையாடியுள்ளவர்களின்  துறைசார்ந்த விவாதமாகவே அமைய வேண்டும்.
முதலில், இத்தொகுப்பில் எனக்கு நேரடியாகப் பரிச்சயம் இல்லாத  ஆறுபேர்களின் உரையாடல்கள் குறித்த உரையாடலை மேற்கொள்ளலாம்.  இதில் முதன்மையாக எனது கவனிப்பில் வருபவர் இ. பத்மநாப ஐயர். நான்  நம்புகிறேன்; பத்மநாப ஐயர் குறித்த விரிவான தகவல்கள் முதன்முதல்  இப்போதுதான் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உணர்கிறேன். இது தவறாகக்கூட இருக்கலாம். இவருடன் ஐங்கரநேசன் நிகழ்த்திய  உரையாடலை வாசித்து  முடித்த மனநிலையை எனது வசதிக்காகக் கீழ்காணும் வகையில் பதிவு  செய்கிறேன்.
ஒரு தனிமனிதர் தான் பெற்ற வாசிப்பு, அநுபவத்தை தம் சகமனிதர்களிடம்  எப்படி எப்படியெல்லாம் எடுத்துச் சென்று செயல்பட்டிருக்கிறார் என்பதைப்  புரிந்துகொள்ள முடிகிறது. இச்செயல் சாதாரணமன்று. இவரது இவ்வகைச்   செயல்பாட்டின் மூலம் விரிந்த தளத்தில், கலை இலக்கியப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ள முறையைப் புரிந்து கொண்டவன் என்ற வகையில், இவரது  செயல்பாடு குறித்த உயரிய மரியாதை மனதில் பதிகிறது. போர்ச்சூழலில்  கலை, இலக்கியம் மற்றும் சமூக ஆய்வு குறித்த அக்கறையை இவர்  எப்படியெல்லாம் உள்வாங்கிச் செயல்பட்டிருக்கிறார் என்பதின்  பரிமாணத்தைப் புரிந்துகொள்ளும்போது, தனிமனிதர்கள் எப்படியெல்லாம்  செயல்பட முடியும் என்ற புரிதலையும் பெற முடிகிறது.
தாம் பிறந்த மண்ணில் நடக்கும் இனப்போராட்டம் குறித்தப் புரிதலும், அவர்  செயல்படும் பரந்த வெளியும் தம்முள் முரணாக அமைந்திருக்கிறதோ என்ற  அய்யத்தைத் தமிழகத்தில் அவர் கொண்டிருந்த, கொண்டிருக்கும் தொடர்புகள் வழி நம் உள்ளத்தில் உருவாக்குகின்றது. ஆனால் அவ்விதப் பதிவு, புரிதல்  அற்ற ஒரு நிலைப்பாடு என்பதை அவரது உரையாடல் தெளிவுபடுத்துகிறது.  பத்மநாப ஐயர் நிபந்தனையற்ற நிலையில் மனித உறவுகளைப் பேணும்  முறை வியப்பளிப்பதாக இருக்கிறது. இவரது இவ்வித மனித உறவுப்  பேணுதலை, தந்திரம் மிக்க சுயநலச் சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன  என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனை விளங்கிக் கொள்ள, இவரது  இவ்வுரையாடலைத் தமிழக வணிகப் பக்திரிகைகள் எப்படியெல்லாம்  வெளியிட்டன என்பதே சான்று. இவ்வகையில் இத்தொகுப்பில், பத்மநாப ஐயர் குறித்தப் பதிவை மிக முக்கியமான ஆவணமாகக் கருதுகிறேன்.
இத்தொகுப்பில் பதிவாகியுள்ள ஞானரதன் அவர்களின் உரையாடல், காட்சி  ஊடகம் குறிப்பாக, சினிமா தொடர்பான அசாதாரணப் புரிதலை உருவாக்கும்  வகையில் அமைந்திருக்கிறது. சினிமா ஊடகம் தொடர்பான தொழில் நுட்பம்,  கலைத்திறன் மற்றும் ஊடக அரசியல் ஆகியவற்றின் இணைவு எவ்வகையில் சாத்தியப்படும் என்பதை இவ்வுரையாடல் கொண்டுள்ளது. தமிழக, ஈழ  சினிமாக்களின் உருவாக்கம் தம்முள் வேறுபட்டிருப்பதற்கான அடிப்படைகள்  குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றத்தை இவ்வுரையாடல் மூலம்  அறியமுடிகிறது. தமிழகத்தின் பிரபலமான இயக்குநரான பாரதிராஜாவின்  உரையாடலையும் ஞானரதன் அவர்களின் உரையாடலையும் ஒப்புமை  செய்து பார்க்கும் போது, அவ்வூடகம் பயன்படுத்துபவர்களின் கையில்  எவ்விதம் செயல்படமுடியும் என்பதை அறியலாம். பாரதிராஜாவின்  அதிமேதாவியான அணுகுமுறை, ஞானரதன் அவர்களின் சாதாரண  மனிதர்கள் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் வேறுபாட்டைக்  காணமுடிகிறது. பாரதிராஜா மக்கள் மீது சொல்லும் குறைபாடுகளை  ஞானரதன் சொல்லவில்லை. இவ்வகையான, சினிமா தொடர்பான அடிப்படைப் புரிதல்களை இவ்விரு உரையாடல்களையும் இணைத்து வாசிக்கும் போது  பெறமுடியும்.
புனைகதை எழுத்தாளர்களும் கவிஞர்களும் அதிக அளவில் இத்தொகுப்பில்  இடம்பெற்றிருக்கிறார்கள். சுஜாதா, ஜெயகாந்தன், செங்கை ஆழியான்,  சா.  கந்தசாமி,  திலிப்குமார் ஆகிய புனைகதையாளர்களின்  உரையாடல்கள்  ஒவ்வொன்றும் ஒரு கோணத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இதில்  சுஜாதா, ஜெயகாந்தன் பேச்சுக்களில் புதிதாக ஒன்றுமில்லை. இவர்கள் யார்  கேட்டாலும் இப்படியான பதில்களைச் சொல்லுபவர்கள். எழுத்தாளர் சா.  கந்தசாமியின் உரையாடல் அவரது முகத்தைப் பார்க்க உதவியுள்ளது. அவரது அணுகுமுறைகள் அனைத்தும், தன்முனைப்பு சார்ந்ததும், எவ்விதமான  வரலாற்றுப் போக்குகள் குறித்த அறிதல் அற்றதும் ஆகும். தமிழ்நாட்டு  வரலாற்றைத் தான் அறிந்த அளவில் கட்டமைக்க முயலுபவர். ஏதார்த்த  நிலைமைகள் எதனையும் கணக்கில் கொள்பவராக அவரைக் கருதமுடியாது.  'சாயாவனம்'  என்ற நாவல், மேலும் சில சிறுகதைகள் மூலம்  தமிழ்ச்சமூகத்தில் மதிக்கப்படும் அவர், சமகாலம் பற்றியும் புதுமைப்பித்தன்  பற்றியும் திராவிட இயக்கங்கள் பற்றியும் உதிர்க்கும் கருத்துக்களுக்கு  எவ்விதமான அடிப்படைகளும் இல்லை. மிகச் சிரத்தையாகப் பேசுவது போல  உள்ள இவரது அணுகுமுறை, தமிழக வரலாறு தெரியாதவர்களை ஏமாற்றும். இத்தன்மை இவ்வுரையாடலில் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது.
செங்கை ஆழியான், தமிழக வணிக முறைமையில் அமைந்த எழுத்து  முறைமைகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டவராகவே கருத முடியும். ஈழத்தைச்  சேர்ந்த யோகநாதன், செங்கை ஆழியான் ஆகியோர் தமிழகத்தின் கல்கி,  அகிலன், நா. பார்த்தசாரதி போன்றவர்களின் அணுகுமுறைகளோடு  ஏற்புடையவர்களாகக் கருதக் கூடும். புனைகதையின் பரிமாணம்  புதுமைப்பித்தன் காலத்திலேயே இத்தன்மையை மீறி செயல்பட்டுள்ளது.  அதற்குப் பின்பும் இவர்கள் முன்னெடுக்கும் புனைவுவாத கற்பனைகள்  (Romanticism) சார்ந்த எழுத்து, ஒரு வகையில் அச்சு ஊடகத் தேவை  கருதியவை. செங்கை ஆழியான் குறிப்பிடும் தமிழக ஈழ எழுத்து உறவுகள்  தொடர்பான செய்திகள் சுவையானவை.
ஐங்கரநேசன் திலீப்குமாரைப் பேட்டி கண்டது, உண்மையில்  மகிழ்ச்சியளிக்கும் செயல். ஓரத்தில் இருப்பவர்களை எப்போதும்  ஊடகக்காரர்கள் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். அவ்வகையில்  திலீப்குமாரின் பதிவு, தமிழ் இலக்கியப் பரிமாணங்களின் ஒரு பகுதியைப்  புரிந்துகொள்ள உதவுகிறது. திலீப்குமார் போன்று தமிழில் உருவான  எழுத்தாளர்கள் மிகுதி. எழுத்து, வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லது  வாழ்க்கை நெருக்கடியை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் செயலாக  இவர்களுக்கு அமைகிறது. வெகுசன ஊடக அலட்டல்கள்;  பம்மாத்துகள்  ஆகியவற்றிலிருந்து தனித்திருக்கும் இக்குரல், எழுத்து உருவாக்கத்தின்  சாதாரண இயல்பைச் சொல்கிறது.
இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் ஐந்து கவிஞர்களின் உரையாடல்கள், பதிவு செய்யப்பட்டிருக்கும் ஐந்து புனைகதையாளர்களைப் போன்று, ஒவ்வொன்றும்  வேறுபட்டதாக இல்லை. புனைகதையாளர்கள் செயல்படும் மனநிலையும்  கவிஞர்கள் செயல்படும் மனநிலையும் எவ்வகையில் வேறுபடுகின்றன  என்பதற்கான புரிதலை இவ்வுரையாடல்கள் முன்னெடுக்கின்றன. கவிஞர்கள்  அனைவரும் அடிப்படையில் பெரிதும் முரண்படவில்லை. இவர்கள்  அனைவரும் மனிதநேயம், தேசிய இனப்போராட்டம், தமிழக - ஈழ அரசியல்  போக்குகள் ஆகியவற்றில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களின் நேர்மை, சத்திய ஆவேசம், மொழித்திறன் ஆகியவை  இயல்பாகவே, இவர்களது உரையாடல்கள் மூலம் வெளிப்படுகின்றன. தமிழக  ஈழ உறவுகள் குறித்தப் பல செய்திகள் இவர்களது உரையாடல்களில்  விவாதத்திற்கு வந்துள்ளன. புதுவையும் இன்குலாபும் வில்வரத்தினமும்  வெளிப்படுத்தும் கவிதைமொழி, போராட்டத்திற்கும் கவிதைக்குமான உறவு.  ஈழப்போராட்டத்தில் கவிதையின் இடம் ஆகிய பல செய்திகள் கவனத்தில்  கொள்ளத்தக்கவை. கவிஞர்களாகவும் போராளிகளாகவும் வாழ்பவர்களையும்  வெறும் கவிஞர்களாக வாழ்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள  இவ்வுரையாடல்களில் தெளிவான செய்திகள் பதிவாகியுள்ளன. ஆரவாரம்  இல்லாமலும், தற்சார்போடும், அரசியல் புரிதலோடும் கவிஞர்கள்  செயல்படுவது எவ்வகையில் சாத்தியம் என்பதைக் காண இக்கவிஞர்களின்  உரையாடல்கள் வழி வகுக்கின்றன. ஐங்கரநேசன் இவ்வகையான  கவிஞர்களிலிருந்து வேறுபட்ட ஒருவரை, புனைகதையில் செய்திருப்பதைப்  போல் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், வேறுவகையான  கவிஞர்கள் பற்றியப் புரிதலும் கிடைத்திருக்கும்.
ஈழத்துக் கல்வியாளரும் நாடகக்காரருமான மௌனகுருவோடு நிகழ்த்திய  உரையாடலின் பரிமாணம் வேறுதளத்தில் அமைந்திருக்கலாம்.  மௌனகுருவைப் புரிந்து கொள்ள போதுமானதாக இல்லை. உரையாடலில்  பொதுவான கேள்விகள் உள்ளன.  மௌனகுரு என்ற நாடகக்காரரைப்  புரிவதற்கான வாய்ப்புகள் இப்பேட்டியில் அதிகமில்லை. ஒருகால், எனக்கு  மௌனகுருவோடு இருக்கும் பரிச்சயத்தால் இப்படித் தோன்றுவதாகவும்  இருக்கலாம்.
கல்வியாளர்கள் பேரா. நா. சுப்பிரமணியன் மற்றும் பரமு. புஸ்பரட்ணம்  ஆகியோர் உரையாடலும் அறிவியல் தமிழ் பரப்புநர், மணவை முஸ்தபா  அவர்களின் உரையாடலும் இத்தொகுப்பில் புதிய பரிமாணங்களைப்  புரிந்துகொள்ள உதவுகின்றன. தமிழில் வரக்கூடிய இதழ்கள், நூல்களை  எல்லாம் தேடி சேகரித்து வாசிக்கும் பண்புடையவர் நா. சுப்பிரமணியன்  அவர்கள். ஈழத்தில் உருவான செழுமையான கல்விப்புலம் சார்ந்த  பயிற்சியால், அவர் பல திறனாய்வு முயற்சிகளைச் செய்துவருகிறார்.  பலவற்றையும் தமக்குப் புரிந்த கண்ணோட்டத்தில் அணுகுவதையும் அதனை வெளிப்படுத்துவதில் நேர்மையோடு இருப்பதையும் அறியமுடிகிறது. இவரது  இவ்வித அணுகுமுறை குறித்தப் புரிதலுக்கு இவ்வுரையாடல் களம்  அமைத்துக் கொடுத்திருக்கிறது. தொல்லியல்துறை ஆய்வாளர் புஸ்பரட்ணம்  அவர்களின் பேட்டி, இத்தொகுப்பில் தனித்துக்கூற வேண்டிய பல்வேறு  தன்மைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்தியாவில் நடக்கும்  தொல்பொருள் ஆய்வுகளில், வடநாடு, தென்நாடு என்ற அடிப்படையான  முரண்பாடுகள் இருக்கும். தொல்பழம் சான்றுகள் இல்லாத இந்துமதத்தைக்  கட்டிக் காப்பதற்காக, வரலாற்றுத் தரவுகளை மாற்றுவர். இங்குள்ள அவைதீக சமயங்களின் செல்வாக்கை மறுப்பர். சிந்துசமவெளியின் வரலாற்றுத்  தகவல்களைத் தலைகீழாக மாற்றிப் பேசுவர். இந்தியாவில் நடைபெறும்  தொல்லியல் ஆய்வு தொடர்பான 'அரசியல்'  மிகவும் சுவையானது.  இலங்கையிலும் இவ்வகையான தமிழர் - சிங்களவர் இனம் தொடர்பான  தொல்லியல் தரவுகள் பற்றிய செய்திகளும் சுவையாகவே  விவாதிக்கப்படுகின்றன. இனப்போராட்டம் நடக்கும் சூழலில், ஒவ்வொரு  இனம் தொடர்பான தொல்சான்றுகள், உணர்ச்சி நிலையில்  முன்வைக்கப்படும்.  ஆனால், இவ்வுரையாடலில், தமிழரின் தொல்வரலாறு  தொடர்பான புஸ்பரட்ணம் அவர்களின் விவாதங்கள், ஆய்வு பூர்வமாக  இருப்பதைக் காணமுடிகிறது. சமூக வரலாறு சார்ந்த தர்க்க நெறியிலும்  அமைந்திருப்பதைக் காண்கிறோம். இன்றைய ஈழத்துச் சூழலில்  இவ்வுரையாடலின் முக்கியத்துவம் பெரிதும் கவனத்தில்  கொள்ளத்தக்கதாகும்.
திரு. மணவை முஸ்தபா அவர்கள் 'யுனெஸ்கோ கூரியர்' மூலம் பெரும்  சாதனை புரிந்தவர். அத்தன்மை இவ்வுரையாடலில் முதன்மைப்படுத்தப்பட்டு,  வெளிப்பட்டுள்ளது. மணவை அவர்களின் பலத்தை, ஐங்கரநேசன் சிறப்பாகவே வெளிக்கொணர்ந்துள்ளார். தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்கச்  செயல்பாட்டில், பெரிதும் முனைப்பாகச் செயல்படுபவர் முஸ்தபா அவர்கள்.  இத்தொகுப்பில் இப்பேட்டியும் ஒருவகையில தனித்து அமைந்திருப்பதாகக்  கருதலாம்.
இத்தொகுப்பில் கொசுறு போல ஒரு மொழிபெயர்ப்பாளரையும் ஒரு  ஓவியரையும் ஐங்கரநேசன் பேட்டி கண்டு இணைத்துள்ளார். தி.சு. சதாசிவம்  என்ற மனிதர், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட அவரது வாழ்க்கையும்  அரசியல் பார்வையும் எவ்வகையில் காரணமாக அமைந்தன என்ற புரிதல்  நமக்குக் கிடைக்கிறது. தாய்மொழிச்சூழல் இல்லாத இடத்தில் பணிபுரியும்  வாய்ப்பும் நேரும்போது, மொழியைக் கற்றல் என்பது தவிர்க்க முடியாத  ஒன்றாக அமைகிறது. அவ்வகையில் தி.சு. சதாசிவம் அவர்கள்  கன்னடத்தையும் மலையாளத்தையும் கற்றிருக்கிறார். இதன்மூலம்  மேற்குறித்த மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வதைத்  தொடர்ந்து செய்துவருகிறார். சினிமா, நாடகம், ஆகிய துறைகள் சார்ந்த  அவரது ஈடுபாடு, கன்னட, மலையாள மொழிகளின் அத்துறைகள் தொடர்பான பல செய்திகள் தமிழில் வந்துள்ளன. கன்னடத்தின் சிறந்த  புனைகதைகளையும் தமிழில் கொண்டுவந்துள்ளார். இவர், இவ்விதம்  செயல்படும் முறைமைகள் குறித்தப் பதிவை ஐங்கரநேசன்தான் முதன்முதல் ஆவணப்படுத்தியுள்ளார் என்று கருதுகிறேன். இவரையும் தேர்வு செய்து  உரையாட நினைத்த ஐங்கரநேசன் செயல் பாராட்டுதலுக்குரியது.
மருது என்ற மனிதரின் கோடுகளுடனான வாழ்வை, ஐங்கரநேசன்  சிறப்பாகவே பதிவு செய்துள்ளார். இளமை தொடங்கி, தமக்கு உருவான  ஓவிய உலகம் தொடர்பான புரிதல்களை மருது அழகாகப் பதிவு  செய்துள்ளார். அவரது அரசியல் பார்வை உருவாக்கத்தின் பரிமாணங்களைத்  தெளிவாக முன்வைத்துள்ளார். சிறுவயதில் உருப்பெற்ற மனநிலையின்  படிப்படியான வளர்ச்சிப் போக்குகளை மருதுவின் உரையாடல் மூலம்  அறியமுடிகிறது. வெறும் ஓவியராக இல்லாமல், அச்சு ஊடகம், காட்சி  ஊடகம், நாடகம் ஆகிய துறைகளில் மருதுவின் பங்களிப்புச்  செழுமையையும் இவ்வுரையாடலில் நாம் உணரமுடிகிறது.
இத்தொகுப்பில் உரையாட ஒரு பெண்பால் மனுஷி ஐங்கரநேசனுக்கு  கிடைக்கவில்லையே! ஏன்ற மனச் சஞ்சலமும் இருக்கிறது. உருவப்  புகைப்படங்களை அச்சிடுவதற்கு தயங்கும், கூச்சப்படும் காலம் ஒன்று  இருந்தது. ஆனால் இந்நூலில் உரையாடும் மனிதர்களை நேரில் காணும்  அநுபவத்தை இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் தருகின்றன. நேரடியாகப்  பார்த்தவர்களுக்கே இவ்வகையான அநுபவம் தரும் இப்படங்கள், நேரடியாகப்  பார்க்காதவர்களின் புலன்களில் ஆழமான பதிவை ஏற்படுத்தும் வகையில்  அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். இதழியல் துறையின் ஒரு பரிமாணமான  புகைப்படம், அத்துறையின் செழுமையான வளர்ச்சியான செல்வி காணுதல்  ஆகியவற்றை நிலையான பதிவாகச் செய்திருக்கும் ஐங்கரநேசன் நமது  பாராட்டுக்கு என்றும் உரியவர்.


நன்றி – புதிய பார்வை (ஜுன் 16-30,2006)
வேர் முகங்கள் (நேர்காணல்களின் தொகுப்பு)   
பொ. ஐங்கரநேசன்
வெளியீடு : சாளரம்
348.ஏ. டி.டி.கே சாலை,
சென்னை 14.
முதல்பதிப்பு : ஏப்ரல் 2006.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 09:16
TamilNet
HASH(0x555bd7d3a0e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 09:19


புதினம்
Thu, 18 Apr 2024 09:19
















     இதுவரை:  24776643 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2619 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com