Monday, 07 August 2006
17.
அடுத்த சனிக்கிழமை மாலையில் தாய் கண்ணம்மாவே சேனாவை ஆண்டாங்குளம் அனுப்பியிருந்தாள். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக பஸ்ஸில் இருந்து இறங்கித் துடிக்கம் மனதுடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தவனுடைய விழிகள் தற்செயலாகத் தரையைப் பார்க்கவே, அவன் அதிர்ந்து போனான். பரவைக் கடலோர ஈரத்தில் பதிந்திருந்தத அந்த அழகான சிறிய பாதச்சுவடுகள்? .. ஆம்! அவை நிச்சயமாக நந்தாவினுடையவைதான்! முன்னே குணசேகரா நடக்கு அவனைத் தொடர்ந்து அவள் நடந்துவந்த தடத்தைக் கண்டு, எங்கு போயிருக்கிறாள் நந்தா? இன்று காலையில்தான் அவர்கள் போயிருக்கின்றனர் என்பதை அடிச்சுவடுகள் புலப்படுத்தின. அவர்கள் திரும்பிவந்த அடிகள் தெரிகின்றனவா என அவன் தரையையே கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 'என்ன தம்பி தேடுறீங்க?.. ஏதாவது தொலைச்சிட்டீகளா?" என அந்தக் கடற்கரையோர மேட்டில் குடிசைபோட்டு வாழும் சாகுல்கமீது, கையில் இறால் வலையுடன் வந்துகொண்டிருந்தான். சேனாதி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, 'ஒண்டுமில்லை காக்கா! ஆண்டாங்குளத்தாலை ஆரோ கனபேர் காலமை போய்க் கிடக்கு.. அப்புவும் எங்கையோ போட்டாரோ எண்டு அடிப் பாக்கிறன்!" என்றான். 'அவங்க காலையிலை போகல்லை தம்பி!.. மத்தியான பஸ்சிலைதான் போறாக.. ஒங்க அப்பு போகலை!.. குணசேகராவும், மவளும் மக்கைய பொடியளுந்தான் போறானுக... அடுத்த கிழமை எலச்சன் வரூதில்லை!... அதுக்கு வோட்டுப் போடத்தான் தங்க ஊருக்குப் போறாகபோல!" எனச் சாகுல்கமீது விளங்க்கப் படுத்தியபோது, வானமே இடிந்த தலையில் விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனான் சேனாதி. கமீதுவிடம் சொல்லிக்கொண்டு அவன் கனக்கும் இதயத்துடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தான். வழமைபோல் அவனால் இன்று காலை பஸ்சில் வரமுடியவில்லை. அவனுடைய தகப்பனார் முள்ளியவளையில் விதைக் கச்சான் கட்டுவதற்கு அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். ... காலையிலேயே வந்திருந்தால் நந்தாவை அவள் ஊருக்குப் பொவதற்குமுன் கண்டிருக்கலாம்... கண்டிக்குப் போய்விட்டவள் ஒருவேளை இனிமேல் ஆண்டாங்குளத்திற்கே வராமல் இருந்துவிட்டால்!... என நினைக்கவே சேனாவின் இதயம் கலங்கியது. அவனுடைய உள்ளத்தைத் துன்பம் கௌவிக்கொண்டது போன்றே, ஆண்டாங்குளத்தை அவன் அடையும்போது இருள் கவிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வீட்டிலும் எவரையும் காணாதது மேலும் திகைப்பை ஊட்டியது. பன்பையைத் திண்ணையில் வைத்துவிட்டு, தட்டிக் கண்டாயத்தடி மணலைக் கவனித்தான். சிங்கராயரும் செல்லம்மா ஆச்சியும் விண்ணாங்கம்வெளிப் பக்கம் போயிருப்பதை அவர்களுடைய காலடிகள் தெரிவித்தன. நந்தா போய்விட்டாள், அவள் இனி இங்கு வரவே மாட்டாள் என்ற எண்ணம் வளரவளர, அவனுடைய கால்கள் அவனையுமறியாமல் நந்தாவின் குடிசைப்பக்கமாக அவனை இட்டுச்சென்றன. குடிசையின் படலையில் ஒரு ஆமைப்பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. கால் போனபோக்கில் நடந்தவன், கிணற்றடியைக் கடந்து செல்கையில், அன்று நந்தா குளித்துவிட்டு நீர்முத்துக்கள் உருளும் நிலவு முகத்துடன் சந்தணமாய் மணத்ததும், இவன் நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்னபோது கன்னங்குழியச் சிரித்ததும் நினைவில் வந்து தீய்த்தன. காட்டு எல்லையின் மேலாகத் தெரிந்த கீழ்வானை நோக்கினான் சேனாதி. ஆம், இன்றும் அங்கு பூரணநிலவு ஒளிரக்கண்டு அவன் இதயம் அழுதது. அவன் மெல்ல நடந்து ஐயன்கோவில் வெட்டைக்குச் சென்று, அங்கே கிடந்த பாறையொன்றில் அமர்ந்தபடி, வானில் சிரித்துக்கொண்டே எழுந்துவரும் நந்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'நந்தா! நீ என் நிலா! நிலா!" என்ற அவனுடைய பாட்டு இதயத்தில் சோகம் சொட்டச்சொட்ட ஒலித்துக் கொண்டேயிருந்தது. குணசேகரா தேர்தலில் வோட்டுப் போடுவதற்கு செல்லும் தனது சகாக்களுக்குச் சம்பளப் பணத்தை எடுத்துக் கொடுப்பதற்காகவே அன்று முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தான். நந்தாவதிக்கு அன்று காலையும் சேனா ஆண்டாங்குளம் வராதது பெரும் ஏமாற்றமாகப் போயிற்று. தந்தையுடன் தானும் முல்லைத்தீவுக்குச் சென்றால் ஒருசமயம் அவனைத் தண்ணீரூற்றுத் தெருவிலாவது பார்க்கலாம் என்ற ஆசையில், தானும் முல்லைத்தீவுக்கு வருகிறேன், சில துணிமணிகள் வாங்கவேண்டி உள்ளது எனத் தந்தையிடம் கேட்டபோது, அவனும் சம்மதித்து நந்தாவைத் தன்னுடன் கூடவே முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருந்தான். குணசேகரா தானும் கண்டிக்குச் சென்று தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. அவனுடைய அருமை மனைவியின் இழப்புக்குப் பின்னர் அவனுக்குக் கண்டியே பிடிக்காமல் போய்விட்டது. அவர்கள் சென்ற பஸ் தண்ணீரூற்றைக் கடந்து சென்றபோது ஆவலுடன் வெளியே பார்த்திருந்த நந்தாவதியின் கண்களில் சேனாதி தென்படாதது அவளுக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது. எனவே அவள் சுரத்தில்லாமல், முல்லைத்தீவில் தனது அலுவல்களைக் கவனித்து, சம்பளப் பணத்தை எடுத்துப் பகிர்ந்து தனது சகாக்களுக்குக் கொடுத்து வழியனுப்பிய குணசேகராவுடன் இருந்தாள். சேவையரைச் சந்திக்கவும், இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கவும் வெகுநேரம் எடுத்தமையால், அவர்கள் மாலை பஸ்சைத் தவறவிட்டிருந்தனர். எனவே குணசேகரா ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, அளம்பில் கிராமத்தினூடாகக் குமுளமுனையை நந்தாவதியுடன் வந்தடைந்தபோது, பொழுது கருகிக் கொண்டிருந்தது. ஆண்டாங்குளத்துக்கு வந்தபோது இருட்டிவிட்டது. விண்ணாங்கம் வெளியில் விறகு சேர்க்கப் போயிருந்த சிங்கராயரும் மனைவியும் அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழமைபோலத் தனது சம்பள நாளன்று ஒரு சாராயப் போத்தலை வாங்கிக் கொண்டு வந்திருந்த குணசேகரா, அதைச் சிங்கராயருடன் சேர்ந்து அனுபவிக்கும் அவசரத்தில் தனது குடிசைக்குச் செல்லாமலே, சிங்காராயர் வீட்டுக்குச் சென்றுவிட்டான். நந்தாவதி கொண்டுவந்த பொருட்களைக் குடிசையில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வருவதாக ஆச்சியிடம் சொல்லிச் சென்றாள். அவள் வன்னிச்சியாவயல் வளவுக் கிணற்றடிக்கு வந்தபோது, முழுநிலவு மேலே எழுந்து கொண்டிருந்தது. குளிப்பதற்காக துண்டை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவள் அந்த நிலவையும், அன்று நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்ன சேனாவையும் நினைந்து மனம் கசிந்தாள். மனம் சோர்ந்தவளாய், குளிக்கவும் மனதில்லாமல் அங்கு கிடந்த துணிதுவைக்கும் கல்மேல் அவள் துவண்டு போய் இருந்தபோதுதான் ஐயன் கோவிலடிப் பக்கமாகக் காற்றில் மிதந்துவந்த அந்தப் பாடல் அவளுக்குக் கேட்டது. சரேலென எழுந்து காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தபோது, 'நந்தா, நீ என் நிலா நிலா!" எனச் சேனாவின் குரல் கேட்டதுமே அவள் அந்தத் திக்கில் பறந்தாள். விரைந்து ஓடிச்சென்று அந்த இடத்தை அடைந்தபோது, அடக்கமாக ஆனால் அழுத்தமாக உள்ளத்தை உருக்கும் வகையில், நந்தா நீ என் நிலா, நிலா! என்ற சொற்கள் மனதை ஈர்க்கவே, அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு பாறையில் அமர்ந்து, வானத்து நிலாவைப் பார்த்தவாறே தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த சேனாவைக் குழப்ப மனதின்றி, தான் சென்ற பாதையிலே அப்படியே நின்றுவிட்டாள் நந்தாவதி. சேனாதியின் கம்பீரமான இனிமைசெறிந்த குரல் இந்த உலகத்தின் சோகத்தையெல்லாம் சுமந்துகொண்டு, பாலாய்ப் பொழியும் அந்த இரவின் தனிமையில் இசையாய்ப் பிரவகித்தபோது, நந்தாவதி தனது ஊனும் உயிரும் உருகும் ஒரு புதிய உணர்வில் அப்படியே நெகிழ்ந்து போனாள். அவளுக்கு அந்தப் பாடலின் முழு அர்த்தமும் புரியவில்லை. ஆனால் அடிக்கடி, பாசமும் சோகமும் தோய இசைத்த, நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரிகள் மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தன. சேனா தன்மேல் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தினை அந்நேரம் இதயம் பூரிக்கப் புரிந்துகொண்ட நந்தாவதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள். நிலவில் பளபளத்த அவளுடைய அகன்ற கருவிழிகளில் கண்ணீர் குளமாகத் தேங்கிப் பின் செழுமையான கன்னக்கதுப்புக்களில் உருண்டோடி நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது. மிகவும் உன்னதமானதொரு உணர்வை அனுபவிக்கும் இன்பவேதனையைத் தாங்க முடியாதவளாய் அவள் உடல் நடுங்கியது. இதயத்தின் ஆழத்திலிருந்து தனக்காகவும், சேனாவுக்காகவும் வெடித்துக் கிளம்பிய விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் அழுதபோது, அந்த அழுகையின் ஒலிகேட்டுப் பாட்டை நிறுத்திச் சட்டெனத் திரும்பிய சேனாதி திகைத்துப் போனான். அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. பூரணநிலவின் ஒளியிலே மார்புக்குக் குறுக்கே வெறும் துண்டு மட்டும் அணிந்து பளிங்குச் சிலைபோன்று நின்றிருந்த நந்தா அழுது கொண்டிருக்காவிட்டால் அது தன் மனப் பிரமையே என்றுதான் அவன் எண்ணியிருப்பான். அது நந்நதாவேதான் எனக் கணத்தினுள் கணித்தவன் பாறையிலிருந்து குதித்து ஓடிவந்து அவளை இறுகத் தழுவிக் கொண்டான். அடக்கமுடியாத ஆதங்கத்துடன் அவனை ஆரத்தழுவிய நந்தாவதியின் கண்ணீரில் நனைந்த கண்களையும் கன்னங்களையும் தன் இதழ்களால் அழுத்திய சேனா, 'நந்தா!.. ஏன் நந்தா என்னை விட்டிட்டுப் போனனீ?" என மெல்ல முணுமுணுத்து பின் விசும்பி வெடித்துக் கதறியபோது, அவன் முகத்தை அப்படியே தன் மார்பில் சேர்த்து அழுத்திய நந்தாவதியின் இதயத்தில் தாய்மையுணர்வு சுரந்தது. அப்படியே அவனை இழுத்துத் தரையில் அமர்ந்துகொண்டே தன் நெஞ்சில் முகம்புதைத்து அழுது வெடித்தவனின் முதுகை ஆதரவாக வருடிய நந்தா, 'நா ஒங்களை விட்டுப் போகலையே சேனா!.. நா ஒங்களைவுட்டு போகவே மாட்டன்!" என அவனுடைய முகத்தை நமிர்த்தி, சின்னக் குழந்தையைத் தேற்றுவதுபோல் அவனுடைய ஈரமான விழிகளைத் தன் செவ்விதழ்களால் நந்தா அழுந்தத் துடைத்தபோது அமைதியடைந்த சேனாதி, அவளுடைய இளம் மார்பில் மறுபடியும் முகம் பதித்துக்கொண்டான். அவனை அப்படியே நெஞ்சார அணைத்துக்கொண்ட நந்தாவதி அந்தக் கணத்திலேயே, தாய்மையின் இயல்பெல்லாம் இயற்கையாகவே ஊற்றெடுத்து அவளுள் சுரந்து பெருக, அவனைக் குழந்தையாக்கித் தான் தாயாகிப் போனாள். இதுவரை காலமும் குழந்தையாக இருந்த நந்தா இப்போ சட்டென வயசுக்கு வந்துவிட்ட முதிர்ச்சியுடன், 'வாங்க சேனா! வூட்டுக்குப் போகலாம்! அவங்க தேடுவாங்க!" என அமைதியாக எழுந்து அழைத்தாள். அவளுடன் சேர்ந்து கிணற்றடியை நோக்கி நடந்தான் சேனாதி. அவள் குளிக்கும்போது, தான் அவனைப் பார்க்கும் ஆசையில் தந்தையுடன் சென்றதை நந்தா சொல்ல, தான் எப்படி மம்மது காக்கா நந்தாவதி ஊருக்குப் போய்விட்டதாகச் சொன்னதைக் கேட்டுத் துடித்துப்போனான் என்பதைச் சேனா சொல்லிக் கொண்டான். நந்தா குளித்து ஆடை மாற்றியதும், தண்ணீர்க்குடத்தை இடுப்பில் ஏற்றியபடி, 'நா இப்பிடியே வூட்டுக்குப் போயிட்ட வாறன் சேனா!" என விடைபெற்றுக் கொண்டாள். கிணற்றடியிலிருந்து ஒரே பாதையாகப் புறப்பட்ட ஒற்றையடிப் பாதை கிளைவிட்டு இருவேறு திசைகளில் பிரியும் இடத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து நடந்தார்கள். இருவருடைய இளநெஞ்சங்களும்; ஒரு நிறைவான, புனிதமான அமைதியை அடைந்தவையாய் சிலிர்த்துக்கொண்டன. அடுத்தநாள் முழுவதுமே நந்தா சேனாவைவிட்டுப் பிரியாமல் ஒன்றாகவே இருந்தாள். காலையில் சிங்கராயரும் குணசேகராவும் காட்டுக்குப் போய்விட்டிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று. மாலையில் மான்குட்டி சகிதம் சென்று பாலையடி வெண்மணல் மேட்டில் நின்று, சேனாவின் உருவம் மறையும்வரை பார்த்திருந்து கையசைத்து விடைகொடுத்துக் கண்ணில் நீர்முட்ட வீட்டுக்குத் திரும்பினாள் நந்தாவதி.
|