Monday, 07 August 2006
19.
கீழ்வானில் nவிடிவெள்ளி உதிக்கு முன்னரே சிங்கராயர் அவர்களுடன் புறப்பட ஆயத்தமானார். செல்லம்மா சோறுகறி சமைத்து ஒரு ஓலைப் பெட்டியில் போட்டுக் கொடுத்தாள். கண்ணீர் மல்கத் தன்னைக் கட்டிக்கொண்டு அழுத நந்தாவதியைக் கொஞ்சி, 'நீ போட்டுவா மோனை!.. உன்னை இந்த ஆண்டாங்குளம் ஐயன் எப்போதும் காப்பாத்துவான்!" எனக் கண்ணீருடன் விடைகொடுத்தாள் ஆச்சி. சிங்கராயர் மறந்துவிடாமல் தனது பெரிய வார்க்கயிற்றை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டார். நீண்ட வில்லுக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு நாய்களுடன் முன்னே நடந்தார். குணசேகரா ஒரு கையில் துவக்கும் மறுகையில் சிறியதொரு தோல்பையுமாக பின்னே வர, நந்தாவதி தலையில் சாப்பாட்டுப் பெட்டியுடன் நடுவே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெட்டிக்கும் கீழ், தன் தலையில் சேனாவின் சாறத்தை நான்காக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அதன் அண்மை அவளுடைய வதங்கிய இதயத்துக்கு ஓர் ஆறுதலை அளித்தது. புறப்படுகின்ற சமயத்தில், தானே அவனுடைய சாறத்தை எடுத்துச் செல்வதை அவனுக்கு உணர்த்தவும், தன் நினைவாக அவனிடத்தில் இருக்கவும், தன் கரங்களில் எப்போதுமே அணிந்திருக்கும் கறுப்பு வளையல்களைக் கழற்றி, அவன் வழமையாகச் சாறத்தைப் போடுகின்ற கொடியில், ஒரு சிறு நூலினால் கட்டிவைத்துவிட்டே வந்தீரந்தாள். பொழுது உதிக்கும் சமயத்தில் அவர்கள் பழையாண்டங்குளத்தை அடைந்திருந்தனர். விரைந்து நடந்த சிங்கராயரைத் தொடர்ந்த நந்தாவதி களைத்துப் போனாள். ஆனால் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்து விடவேண்டும் என்ற ஆவல் குணசேகராவை உந்தித் தள்ளியது. நந்தாவோ எதிலுமே ஒரு பிடிப்பு இல்லாதவளாய் இயந்திரமாய் நடந்து கொண்டிருந்தாள். காலை பத்துமணி போல வழியில் குறிக்கிட்ட ஒரு நீர்மடுவில் அவர்கள் கைகால் கழுவிக்கொண்டு ஆச்சி தந்துவிட்ட கட்டுச்சோற்றை உண்டனர். சிங்கராயரும் குணசேகராவும் கையில் சமண்டலை இலைகளை வைத்திருக்க, நந்தா பெட்டிச் சோற்றைக் கறியுடன் பிசைந்து அவர்களுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டாள். சிங்கராயரும் குணசேகராவும் புகையிலை பிடித்து ஆறிக்கொள்கையில், சாப்பாடு கொண்டுவந்த பனையோலைப் பெட்டியைக் கழுவி, தான் உடுத்திருந்த துண்டின் முனையினால் ஈரம்போகத் துடைத்துவிட்டு, சேனாவின் சாறத்தை அதற்குள் பக்குவமாக மடித்து வைத்தாள் நந்தாவதி. அந்தப் பெட்டி செல்லம்மா ஆச்சி தனது கையாலேயே அழகுற இழைத்தது. அவளுடைய ஞாபகமாகப் பெட்டியும், சேனாவின் நினைவாகச் சாறமும் கிடைத்ததற்கு மகிழ்ந்து, அவற்றைப் பெரும் பொக்கிஷமாய் எண்ணிக்கொண்டாள் அந்தப் பேதைப்பெண். கதிரவன் உச்சிக்கு வந்து பின்னர் மேற்காகச் சரிந்தசமயம் அவர்கள் ஆண்டாங்குளத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தனர். சிலநிமிடங்களில் அவர்கள் ஒரு ஒற்றையடிப் பாதையைக் கண்டு அதன்வழி சென்றபோது, ஒரு வயல்வெளியை அவர்கள் கண்டனர். அங்கே தொலைவில் ஒரு உழவுமிசின் தெரிந்தது. சிங்கராயர் திரும்பிக் குணசேகராவையும், நந்தாவதியையும் பார்த்தார். 'பதிவயா வந்திட்டுது!.. அந்த உழவு மிசினடிக்குப் போனால்.. நீங்கள் ஊருக்கை போகிடிலாம்!.. பிறகு அங்கையிருந்து கண்டிக்குப் போகிலாந்தானே!.. ம்ம்.. நேரம் போட்டுது!.... இருட்டமுதல் நான் ஆண்டாங்குளம் போகவேணும்!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தாவதி கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டாள். சிங்கராயரின் பாதங்களடியில் முழங்காலிட்டு கைகூப்பி, கண்ணீர் ஆறாகப் பெருக அவரிடம் விடைபெற்ற நந்தாவதியின் தலையில் தன் கையை வைத்த சிங்கராயர், 'அழாமல் போட்டு வா அம்மா!" எனச் சொல்லிவிட்டு, குணசேகராவிடமிருந்து துவக்குத் தோட்டாவை வாங்கிக்கொண்டார். குணசேகரா பெண்களைப்; போன்று வாய்விட்டு அழுதான். 'சரி! வாறன்!" எனச் சொல்லிச் சட்டெனத் திரும்பிக்கொண்ட சிங்கராயர் கண்ணிமைக்கும் பொழுதுக்குள் காட்டில் மறைந்துவிட்டதைக் கண்ணீர்த் திரையிட்ட விழிகளினூடாகப் பார்த்தனர் தந்தையும், மகளும். இபபோதும் முழந்தாளிலேயே நின்றிருந்த நந்தாவதியை ஆதராவாக எழுப்பி அணைத்துக்கொண்டு மேலே நடந்தான் குணசேகரா. அவனைப் பின்தொடர்ந்த நந்தாவின் கண்களில் இப்போதும் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது. அவள் தனது நெஞ்சோடு இறுகச் சேர்த்தணைத்துக் கொண்டிருந்த சின்னப் பனையோலைப் பெட்டியை நனைத்தன. நந்தாவதியின் பாசம் இரும்பு இதயம் படைத்த சிங்கராயரையே சற்று நெகிழச் செய்திருந்தது. நெஞ்சிலிருந்து அதைச் சட்டென அகற்றிவிட்டு, சாயும் சூரியனைப் பார்த்து ஆண்டாங்குளம் இருக்கும் திசையைத் தீர்மானித்துக் கொண்ட அவர், அந்தத் திக்கில் நேரே காட்டில் நுழைந்தார். சில நிமிடங்கள் கழிந்திருக்கும். முன்னே சென்ற நாய்கள் திடீரென எதையோ துரத்துவதையும், பெருமிருகம் ஒன்று காடு கலங்கப் பாய்வதையும் உணர்ந்த சிங்கராயர், மெல்லோட்டமாக முன்னோக்கி ஓடினார். ஓடும்போதே அவருடைய கூர்மையான விழிகள் தரையைக் கவனிக்கத் தவறவில்லை. சொற்ப நேரத்திற்குள்ளாகவே நாய்கள் எகிறிப் பாய்ந்த இடத்தை அடைந்துவிட்ட அவர், அங்கே தனக்கு முன்பாகத் தரையில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்டதும் குந்தியிருந்து அவற்றை மிகவும் கவனமாக அவதானித்தார். அப்போது மெல்ல மெல்ல அவருடைய முகம் மலர்ந்தது. ஆமாம்! அத்தனை பெரிய காற்குளம்புகளைக் கொண்ட எருமை வேறு ஏதுமில்லை, பழையாண்டாங்குளத்துக் கலட்டியனே என அவருடைய இதயம் களித்தது. அவருடைய எண்ணத்தை உர்ஜிதம் செய்வதுபோன்று அந்த எருமை பின்னங்காலொன்று ;ழுபட ஓடியிருந்தது. இன்றைக்கு எப்படியும் கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைய, அவர் உற்சாகத்துடன் அடிவழியே ஓடலானார். பதுங்கிப் பதுங்கி மறைவில் முன்னேறிய சிங்கராயருக்கு சற்றுத் தொலைவில் நாய்கள் குரைப்பது கேட்டது. அந்த நாய்களின் குரைத்தல் ஒலியிலேயே அங்கு நடப்பது இவருக்கு இங்கு புரிந்தது. கலட்டியன் நாய்களின் தொல்லை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு ஆழமான நீர் மடுவில் இறங்கி நிற்கின்றது. அவருடைய வேட்டை நாய்கள் இச்செய்தியை தமது குரைப்பொலி மூலம் தமது எசமானுக்குத் தெரியப்படுத்தின. காற்றின் திசையைக் கவனத்திற் கொண்டு, தனது வாடை கலட்டியனுக்குப் போகாத வகையில், மரங்களின் மறைவில் விரைந்து சென்றார் சிங்கராயர். அங்கு நின்ற ஒரு பெரிய காட்டாமணக்கு மரத்தின்பின் மறைந்தவாறு பார்த்தபோது, கலட்டியன் ஒரு பெரிய மடுவில் நின்று நாய்களை முறைப்பதையும், மடுவைச் சுற்றிவந்த நாய்கள் ஆக்ரோமாகக் குரைப்பதையும் கண்டு ஆனந்தத்தில் மிதந்தார் சிங்கராயர். தனது ஆவல் நிறைவேறும் நாள் வந்துவிட்டதென மகிழ்ந்த அவர், மறைந்திருந்தவாறே துவக்கை நீட்டிக் கலட்டியனின் தலைக்கு மேலே, அதன்மேல் குண்டு பட்டுவிடாதபடி ஒரு சத்தவெடியைத் தீர்த்தார். வெடி தீரும்போதே சூ வென நாய்களை ஏவியவண்ணம் முன்னே பாய்ந்தார். சிங்கராயரின் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்த வேட்டை நாய்கள் மிகவும் சாதுரியமானவை. துவக்குவெடி தீர்ந்ததும் திகிலடைந்த கலட்டியன் மடுவைவிட்டு வெளியே பாய்ந்தது. சிங்கராயரும் உரத்த குரலில் நாய்களை ஏவவே கலட்டியன் புயலெனக் காட்டில் பாய்ந்தது. கலட்டியனுக்குக் குண்டடி பட்டுவிட்டது, இனி மிக இலகுவாகப் மடக்கிப் பிடித்துவிடலாம் என்ற பிரமையை நாய்களுக்கு ஏற்படுத்தவே அவர் அந்தச் சத்தவெடியைத் தீர்த்திருந்தார். அவரைக் கண்ட வெருட்சியில் கலட்டியன் மேலும் மிரண்டு பாய, சிங்கராயரும் கூடவே துரத்தி வருவதைக் கண்டு புதிய உற்சாகம் பெற்றனவையாகத் துரத்தின வேட்டை நாய்கள். கலட்டியனுடைய பின்னங்கால் ஒன்று சேனாதியின் வெடிபட்டு பலவீனமடைந்திருந்தது. அதன் காரணமாக அதனால் வேகமாக வெகுதூரம் ஓடமுடியவில்லை. போதாக்குறைக்கு அது ஓடிய காட்டுப்பகுதியின் நிலம் சுனைத்து ஈரமாக இருக்கவே, கலட்டியனின் கால்கள் அதன் இராட்சத நிறையின் காரணமாக புதையத் தொடங்கிவிட்டன. வெகு சுPக்கிரமே வேட்டைநாய்கள் அதன் தொடையைப் கவ்விப் பற்ற ஆரம்பித்துவிட்டன. நான்கு நாய்களும் போட்டி போட்டுக்கொண்டு கடித்துக் குதற, பின்னாலேயே சிங்கராயரும் நிழல்போலவே ஓடிவரக் கலட்டியன் இன்னமும் வேகத்தை அதிகமாக்கி, கண்மண் தெரியாமல் ஓடியது. சிங்கராயரின் முகம், கலட்டியன் பாய்கின்ற திசையை அவர் அவதானித்தபோது மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஆமாம்! அவருடைய அருமை நாய்கள், கலட்டியனை ஆண்டாங்குளம் பக்கமாகவே துரத்துவதைக் கண்டு அகமகிழ்ந்தவராய், தனது வேகத்தை மேலும் அதிகப்படுத்தி நாய்களையும் உற்சாகமூட்டி ஏவினார் சிங்கராயர். அவருடைய சிம்மக் குரல், நாய்களின் பயங்கர உறுமல்கள், கலட்டியனின் சூறாவளி வேகம் என்பவற்றினால் காடே அதிர்ந்தது. மந்திகள் மரங்களில் பயத்துடன் ஒட்டிக்கொண்டன. பறவைகள் கலைந்து சிதறிப் பறந்தன. சிங்கராயர் ஒருவரைத் தவிர வேறு யாருமே இப்படியானதொரு முயற்சியில் இறங்கவே தயங்குவார்கள். காலையில் இருந்தே வெய்யிலில் கிட்டத்தட்டப் பதினைந்து மைல்கள், அந்தப் பெரிய வார்க்கயிற்றைச் சுமந்த சிங்கராயர், இப்போது தனது துவக்கையும் தூக்கியவாறு ஓடிக்கொண்டிருந்தார். அடர்ந்த காட்டில் வழியே இல்லாத திசையில் இவ்வளவு பாரத்தையும் சுமந்து, கலட்டியனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட, சிங்கராயர் ஒருவரினாலேயே முடியும். இன்று எப்படியும் கலட்டியனை மடக்கிக் கட்டில் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கை வலுக்க வலுக்க, தனது வேகத்தை மேலும் அதிகரித்து நாய்களை ஏவிக்கொண்டிருந்தார் சிங்கராயர்.
000
தண்ணீரூற்றில் சேனாதிராஜன், 'இந்தக் கலவரநேரம் நீ போகவேண்டாம்!" என்று, காலையில் மனம்மாறிய தாய் கண்ணம்மாவைச் சரிக்கட்டிப் புறப்படுவதற்குள், காலை பஸ்நேரம் கடந்துவிட்டிருந்தது. பத்துமணி பஸ்சுக்காவது போகலாம் எனத் தெருவுக்கு வந்தவனுக்கு, பஸ் ஓட்டம் இல்லையென்பது பன்னிரண்டு மணியளவிலேயே தெரிந்தது. இனி வீட்டிற்குப் போனால் தாய் ஆண்டாங்குளம் போகவே விடமாட்டாள் எனத் தெளிவாக உணர்ந்த சேனாதி, தெருவிலேயே ஏதாவது டிரக்டர் வாகனமாவது குமுளமுனைக்குப் போகாதா எனக் காத்திருந்தபோது, நேரம் நழுவி ஒரு மணியாகி விட்டிருந்தது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என உணர்ந்தவனுக்கு, ஏன் நடந்தே குமுளமுனைக்குச் சென்றால் என்ன என்று தோன்றவும், தன் எண்ணத்தைச் செயலாக்கினான். கொதிக்கின்ற வெய்யிலில் அந்த ஆறுமைல் தூரத்தையும் அவன் நடந்து குமுளமுனை மலைவேம்படிச் சந்தியை அடைந்தபோது, பொழுது சரிந்து நிழல் சாயத் தொடங்கிவிட்டிருந்தது. மாலை மயங்குவதற்குள் நந்தாவைக் கண்டுவிடலாம் என்ற இனிய எதிர்பார்ப்புக்களுடன், எஞ்சிய இரண்டுமைல் தூரத்தையும் அவன் கடந்து, பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டை மிதித்தபோது, மாலை வெய்யிலின் உக்கிரம் தணிந்திருந்தது. ஆறாகப் பெருகிய வியர்வையைத் துடைத்து ஆற்றுநீரில் முகத்தைக் கழுவிக்கொண்டான் சேனாதி. கடைசியாக ஆண்டாங்குளத்தை விட்டுச் செல்கையில் நந்தா இந்த வட்டம் பூக்களின் அருகே நின்று, அழகாகச் சிரித்துக் கையசைத்துத் தனக்கு விடை தந்ததை நினைத்தவாறே சேனாதி வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான் பனைகளினூடாக விரைந்து வீட்டை அடைந்தபோது செல்லம்மா ஆச்சி தொடுவானத்தை வெறித்துப் பார்த்தவாறு வெறுந்தரையில் அமர்ந்திருக்கக் கண்டு திகைத்துப் போனான். ஆச்சியின் முகம் இப்படி இருண்டுகிடந்ததை அவன் ஒருபோதும் கண்டதில்லை. அவளை நெருங்கிய சேனாதிக்கு ஆச்சி சொன்ன செய்தியைக் கேட்டதுமே இடி விழுந்தது போலாகிவிட்டது. அப்படியே அதிர்ந்துபோய் அமர்ந்துவிட்டான். ஆச்சிகூடத் தனது வழமைப்படி சேனா வந்ததுமே அவனை அழைத்துச் சாப்பிடச் செய்யாமல், பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். துயரிலும், களைப்பிலும் துவண்டுபோன சேனாதி ஒன்றுஞ் செய்யத் தோன்றாது, தான் வழமையாகப் படுக்கின்ற அடுக்களை மோடையில் போய் விழுந்தான். அந்தத் திண்ணையின் தண்மை அவனடைய கொதிக்கும் மனதுக்கும், உடலுக்கும் சற்று நிம்மதியைத் தந்தது.
|