 |
அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க  |
|
  |
|
எழுதியவர்: அ.பாலமனோகரன்
|
|
|
Monday, 07 August 2006
20.
மத்தியானம் கலட்டியனை விரட்டத் தொடங்கிய சிங்கராயர், இப்போ பொழுது சயாயும் சமயத்திலும் தனது வேகத்தைச் சிறிதும் குறைக்காமல், நாய்களை ஏவியபடியே தொடர்ந்து கலட்டியனின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தார். நாய்களும் வெகுவாகக் களைத்திருந்த போதிலும், ஆண்டாங்குளம் சமீபித்துவிட்டதை உணர்ந்து, கலட்டியனை விடாமல் துரத்தின. பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் இப்போ நன்றாகக் களைத்து விட்டிருந்தது. வியர்வையில் கன்னங்கரேலென மினுமினுத்த அதன் உடலில், நாய்களின் கோரமான பற்கள் பிடுங்கிய இடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது. செவிகள் இரண்டும் அடிக்கடி நாய்கள் கடித்துப் பிடுங்கியதால் இரணமாய்ச் சிதைந்து காணப்பட்டன. வாயில் நுரைதள்ள, சோர்ந்துபோன கலட்டியன் எங்காவது நீர்நிலை தென்படாதா, அதில் இறங்கியாவது இந்தக் கொடிய நாய்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஏங்கி ஓடிக்கொண்டிருக்கையில், காற்றில் தண்ணீரின் வாடை அதற்கு விழுந்தது. சரேலென அந்தத் திக்கில் கலட்டியன் தனது பாதையை மாற்றியபோது, பின்னாலேயே வந்து கொண்டிருந்த சிங்கராயர், 'அச்சா!" என மனதுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டார். கலட்டியன், திருக்கோணம் வயலருகில் உள்ள சுனையை நோக்கி ஓடுகின்றது, நாய்களின் கொடுமையும், களைப்பும் தாங்காது அந்தச் சுனையில் போய் விழப்போகின்றது, என்ற அனுமானம் அவருக்கு அசுரபலத்தைக் கொடுக்கவே, பதிய உற்சாகம் பீரிட அவர் நாய்களுக்கும் முன்னே, வார்க்கயிற்றுடன் ஓடவே அவையும்; ரோஷமம் மிக்கவையாக அவரைத் தொடர்ந்தன: சுனையைக் கண்டதுமே முன்பின் யோசிக்காது கலட்டியன் அதனுள் பாய்ந்தது. அவ்வளவுதான்! ஆடுசுனையாகக் கிடந்த அந்த மடுவின் நடுவே நான்கு கால்களும் குத்தெனப் புதைய, கலட்டியன் அசையமுடியாத வகையில் சேற்றில் சிக்கிக் கொண்டது. நேரத்தைச் சிறிதும் விணாக்காது, துவக்கைத் தரையில் போட்டுவிட்டு, துணிந்து கலட்டியனை நெருங்கிய சிங்கராயர், அதன் தலைக்கு வார்க்கயிற்றின் சுருக்கை எறிந்து இறுக்கி, சுனையருகில் நின்ற மரத்தில் கெட்டியாகக் கட்டினார். சுனையில் புதைந்த கலட்டியன் மிரள்வதற்குக்கூடச் சக்தியின்று, சரணாகதியடைந்த பகைவனைபபோல விழித்தது. கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைக் கண்ட நாய்கள் நான்கும் நாக்குகளைத் தொங்கப்போட்டு, அப்பாடா! வேலை முடிந்தது! என்பதுபோல, சுனையருகு ஈரத்தில் நீளமாக நெஞ்சில் கிடந்து வெம்மையைப் போக்கிக்கொண்டன. இதுவைரை தன்னையே உணராது கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற வெறி உந்த ஓடிவந்த சிங்கராயர், தலையிலிருந்து முகத்தில் ஆறாகப் பாய்ந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு கலட்டியனைப் பார்த்தார். இந்தச் சேற்றிலிருந்தும், தனது வார்க்கயிற்றிலிருந்தும் இனிக் கலட்டியன் தப்பிப் போவதென்றால் இது இயலாத காரியம் என முடிவசெய்த சிங்கராயர், தனது நாய்கள் ஒவ்வொன்றினதும் அருகில் சென்று, அவற்றைப் பாசத்துடன் வருடிப் பாராட்டியபோது, அவை முனகக்கூடப் பலமற்றுக் களைத்தவையாய்க் கிடந்தன. தனது இலட்சியத்தை நிறைவேற்றிய களிப்பில் சிங்கராயரின் முகத்தில் வெற்றிச் சிரிப்புப் படர்ந்தது. கொல்லன் உலைத் துருத்திபோல எகிறிக்கொண்டிருந்த தனது ஓநாய் வயிற்றை அப்போதுதான் அவர் பார்த்தார். கொஞ்ச நஞ்சத் தூரமா! எனச் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த புல்;மேட்டில் அமர்ந்த சிங்கராயர், கலட்டியனைப் பெருமிதத்துடன் பார்த்தார். மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளி பரவ ஆரம்பித்த அவ்வேளையில், அந்த ராஜநாம்பனின் அழகை மனதார மாந்திக்கொண்ட சிங்கராயருக்கு இலேசாகத் தலைசுற்றவது போன்றிருந்தது.
21.
அடுக்களைத் திண்ணையில் படுத்தபடி முகட்டை வெறித்தவாறே கிடந்த சேனாதியின் கண்கள் ஏதேச்சையாக மேலே கட்டியிருந்த கொடியில் பதிந்தபோது, அதில் மெல்லிய நூலினால் பிணைக்கப்பட்டு அசைந்த, நந்தாவின் கறுப்பு வளையல்கள் தென்படவே சட்டென எழுந்து அவற்றைப் பிடுங்கியெடுத்தான் சேனாதி. அதைத் தன் விழிகள்மேலும், இதழ்களிலும் தேய்த்தவனுக்கு, என் நந்தா இங்கே வந்து எனக்காகவே இவற்றை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள் என உணர்ந்து கொண்டான். மீண்டும் அந்தக் கொடியைப் பார்த்த சேனாதி, தனது சாறத்தை எனது நினைவாக எடுத்துச் செல்லும் நந்தா, அவளுடைய ஞாபகமாக எனக்கு இந்த வளையல்களை விட்டுப் போயிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான். உடனேயே, அவளுடைய காலடி உள்ள இடங்களையாவது காணவேண்டும் என்ற தவிப்பில் சேனா எழுந்து நந்தாவின் குடிசைக்கு ஓடினான். அங்கு அவளுடைய அழகிய சிறிய பாதச்சுவடுகள் பதிந்துகிடந்தன. அவற்றைப் பார்த்த சேனாவின் இதயம் ஓவெனக் கதறியது. பொழுது சாய்ந்துவிட்ட வேளையில் அன்று, நிலவொளியில் நந்தா தன்னை தனது இளமார்புடன் இறுக அணைத்து, 'நா ஒருநாளும் ஒங்களைவுட்டு போகமாட்டேன் சேனா!" எனத் தேற்றியது நினைவுக்கு வரவே, சேனாதி வெறிபிடித்தவன் போன்று கையில் நந்தாவின் கறுப்பு வளையல்களுடன் ஐயன் கோவிலடியை நோக்கி ஓடினான். அவர்கள் இருவரும் அமர்ந்து ஆரத்தழுவிக்ககொண்ட இடத்தில் அவன் சென்று நின்றுகொண்டு கிழக்கு வானைப் பார்த்தான். அங்கு நந்தாவைக் காணவில்லை. மாலையும் இருளும் சங்கமிக்கும் அந்தச் செக்கல் பொழுதில், தனியே ஐயன்கோவில் வெட்டையில் நின்ற சேனாதியின் செவிகளில் அந்த ஒலி விழுந்தபோது விக்கித்துப் போனான். நாய்கள் பரிதாபமாக ஓலமிடும் அந்த ஒலிவந்த திக்கை நோக்கி ஓடினான் சேனாதி. எதிர்ப்பட்ட பற்றைக் காட்டினூடாகப் பாய்ந்து, அவன் சுனையடி வெட்டையில் திடீரென வெளிப்பட்டபோது, அங்கு கண்ட காட்சி அவனை அப்படியே உலுக்கியது. பரவைக் கடலுக்கும் அப்பால் குருதியில்; தோய்ந்த பந்தாய் கதிரவன் சரிகையில், அந்த இடம் முழுவதுமே இரத்தச் சிவப்பாய் காட்சியளித்தது. அங்கே, புல்மேட்டின்மேல் சிங்கராயர் நீட்டிநிமிர்ந்து படுத்திருந்தார். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த அவருடைய அருமை நாய்கள், குருதிக் கடலாய்க் கிடந்த வானத்தை நோக்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தன. சுனையின் நடுவே பொன்முலாம் பூசிய கருங்குன்று போலக் கலட்டியன் வார்க்கயிற்றில் கட்டுண்டு கிடந்தது. அந்தக் காட்சியைச் சில கணங்கள் ஜீரணிக்கமுடியாமல் மலைத்து நின்ற சேனாதி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு சிங்கராயரிடம் ஓடினான். சிங்கராயர் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் விழிகள் மூடிப் படுத்திருந்தார். காட்டினூhடாக ஓடிவருகையில் தடியும், முள்ளும் கிழித்த காயங்களிலிருந்து வடிந்த குருதி காய்ந்திருந்தது. மடியும் சூரியனின் செங்கதிர்களில் அவருடைய கரிய உடல் அற்புதமான தேஜசுடன் மின்னியது. தான் எண்ணியதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் சாதித்து முடித்த வட்டம்பூத் தலைவனுடைய கதை சேனாதியின் நினைவுக்கு வந்தது. போர்க்களத்தில் வீரமலணம் எய்திய ஒரு மாவீரன் போன்று, கம்பீரமாய்க் கிடக்கும் அந்த மாமனிதனாம் சிங்கராயரின் வாரிசு நான் என்ற எண்ணம் சேனாதியைச் சட்டென, அந்த ஒரு கணத்தினுள், ஒரு முழு மனிதனாக்கியது! நந்தாவின் கறுப்பு வளையல்களைத் தனது சேட்டுப்பைக்குள் வைத்து இதயத்தோடு சேர்த்து அழுத்திய சேனாதிராஜன், குனிந்து, சிங்கராயரின் வலது கையில் இறுகப் பற்றியிருந்த துவக்கை மெல்ல விடுவித்துக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நிமிர்ந்து நின்றான். ஓரு முழுமனிதனாக மாறியிருந்த சேனாதிராஜன் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்தவனாக வினைமுடிக்கப் புறப்பட்டான்.
முற்றும்
|
|
|
|
  |
செய்திச் சுருக்கம் |
|
|
 |