அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow அமெரிக்க நாட்குறிப்புகள் -02
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அமெரிக்க நாட்குறிப்புகள் -02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சூரியதீபன்  
Wednesday, 30 August 2006

01.
இன்னுமொரு வாசகம்
18-02-06
'Fuck the Muslim Pigs'
கழிப்பறையில் எழுதி வைத்திருந்தார்கள். அர்த்தம் புரியுமென்பதால் தமிழில் தரவில்லை.
ஏற்கனவே எழுதியதன் பேரில் வெள்ளையடித்திருந்தார்கள். கறுப்பு மார்க்கர் பேனா கொண்டு மீண்டும் எழுத கூடுதல் வசதியாகிவிட்டது. சியாட்டில் நகரின் மதிப்பு வாய்ந்த 'எலியட் பே புத்தக நிலையத்தின்' கழிப்பறையில் இந்த வாசகம். கை கழுவ வருகிற எவரும் கண்ணாடி பார்க்காமல் இருக்க முடியாது. கண்ணாடி பார்க்கிற யாரும் அதற்கு மேலே எழுதியதைப் பார்க்காமல் போக முடியாது.
கண்ணாடிக்கு பக்கமாக ஒரு கரும்பலகை. அதில் எழுதுவதற்கென பல வண்ணங்களில் சாக்கட்டிகள். கழிப்பறைக்கு வருகிறவர்கள் உடலில் உள்ளவற்றை கழித்துவிட வருகிறார்கள். உள்ளத்தில் உள்ளவைகளையும் (கழிவுகளையும்) எழுதிவைக்க கரும்பலகை ஏற்பாட்டை புத்தக நிலையத்தார் செய்திருந்தார்கள். கண்ட கண்ட இடத்தில் எழுதி சுவரை அசிங்கப்படுத்திவிடக் கூடாது என்று கருதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தென்பட்டது. உள்ளே இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரமாக அனுமதிக்கிறார்கள். அனுமதிக்கப்ட்ட இடத்தையும் கடந்து சுதந்திரம் வேறொரு இடத்தை எடுத்துக்கொண்டது.
கரும்பலகையில் எழுதினால் அவ்வப்போது துடைத்து சுத்தப்படு்த்தி விடுகிறார்கள். ஆகவே அதையும் தாண்டி சுவரில் அழிபடாமல் பொறிக்கப்பட்டிருந்தது அந்த வாசகம்.
கழிப்பறையை அங்கு(அமெரிக்காவில்) ஓய்வு அறை (Rest Room) என்று குறிப்பிடுகின்றார்கள். நுழையும் இடத்தில் ஆண், பெண் படம் போட்டிருக்கிறார்கள்.
உடம்பிலிருந்து கழிவு வெளியேறுகையில் உடல் லேசாகி ஓய்வெடுக்கும் இன்பம் கிடைப்பதால் - அந்த நேரம் துன்ப நீக்கம் நிகழும் நேரமாக உருவெடுத்தலால் ஓய்வு அறை என்று குறிக்கிறார்களா? அமெரிக்க பாணியை வேறெந்த நாடுகள் கைக்கொள்கின்றன என்று தெரியவில்லை. அடுத்த கண்டத்தில் இருக்கிற பக்கத்து நாடான ஜெர்மனிக்கு வந்ததும் ஓய்வறை கழிப்பறையாக மாறிவிட்டிருந்தது. ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் (Toilet) என்று எழுதியிருப்பது தென்பட்டது.
காபி, சிகரெட், மதுபானம், கிரிக்கெட் போன்ற வெள்ளைக்கார இறக்குமதி வகையறாக்களை இன்னும் நாம் கைவிடவில்லை என்பதைப்போல் பிரித்தானியாவின் டாய்லெட்டையும் நாம் விட்டுவிடவிலலை.
ஓய்வறை என்றோ டாய்லெட் என்றோ சொல்வதைவிட தமிழில் கழிப்பறை என்று சொல்வது எவளவு காரியப் பொருத்தாமாக இருக்கின்றது.
கழிவுகளை இறக்க பொருத்தமானது என்பது மட்டுமல்ல, பொன்மொழிகள் பொறிக்கவும் பொருத்தமான இடம் கழிப்பறைதான் என்று தமிழர்களைப்போல் அமெரிக்கர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

02.
வித்தியாசமான எதிர்ப்பு
இன்று (16-06-06) அதிபர் புஷ் சியாட்டில் வந்தார். தனது குடியரசுக் கட்சிக்கு நிதி சேகரிக்க வந்திருந்தார். நிதி அளிப்பவர்கள் நூறு பேர் ஏற்கனவே தயாராக கூட்டி வைக்கப்டடிருந்தார்கள். நூறு பெரிய மனிதர்களிடம் ஏறக்குறைய எட்டு இலட்சம் டாலர்கள் நிதி திரட்டியதாக அடுத்தநாள் செய்தித்தாள்கள் வெளியிட்டன.
உலகின் ஆகப்பெரும் கணிணி செல்வந்தரான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பில்கேட்சுடன் அன்று விருந்துண்டார். பில்கேட்ஸின் சொந்த ஊர் சியாட்டில். பில்கேட்சிடம் எவளவு நன்கொடை வாங்கினார், அவர் எவ்வளவு வழங்கினார் என்ற விபரம் வெளிப்படுத்தப்படவில்லை. தான தர்ம நிதி (Charity Fund) வழங்கினால் வருமானவரி கிடையாது. தானதர்ம நிதிக்கு வரிவிலக்கு. Charity Fund என்ற கணக்கில் மட்டும் இருபத்தொன்பதாயிரம் கோடி டாலர்களை ஒளித்து வைத்துள்ளார் பில்கேட்ஸ். அவர் தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பில்கேட்ஸ் தனது 25வது வயதில் சுயமாக சம்பாதிக்க தொழில் தொடங்கியிருப்பார். அப்படி கணக்கிட்டால் இவர் தன் வாழ்வின் 25 ஆண்டுகளில் உலகத்தை சுருட்ட முடிந்திருக்கின்றது.
கணிணி என்றால் இன்று மைக்ரோ சாப்ட் தான்.
'தனது 50வயதில் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற நுணுக்கத்தை அறிந்து அவர் சம்பாதித்து முடித்தார். மீதியுள்ள ஆண்டுகளில் எப்படி செலவிடுவது என்பதையும் அவர் அறிவார்.' இப்படி பாராட்டிப் பேசினார் புஷ்.
விமான நிலையத்தில் இருந்து புஷ் வரும் வழியில் 'மெடினா' என்கிற முக்கிய சந்திப்பில் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள் பலர்.
'இனியும் காத்திருக்க முடியாது, புஷ்ஷை விரட்டு'
வாசகங்கள் எழுதிய பதாகைகள், அட்டைகளை உயர்த்திப் பிடித்திருந்தார்கள்.
'பெல்வியு' பூங்காவிலிருந்து 125பேர் ஊர்வலமாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களோடு கலந்து கொண்டார்கள். அவர்கள் ஈராக் அபூகிரைபி சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட கைதிகள் உடையை - காலிலிருந்து கழுத்துவரையிலான காவி வண்ண ஆடையை - அணிந்திருந்தார்கள். கைகளை பின்னால் கட்டியபடி நடந்து வந்தார்கள். அவர்கள் புஷ்ஷின் கண்களில் பட்டுவிடாமல் மறைக்க பொலிசார் திணற வேண்டியிருந்தது. பெரிய பெரிய தீயணைப்பு வண்டிகளை வரிசையாக நிறத்தியிருந்தார்கள். முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து கையசைத்து சிரித்தபடி காரில் பறந்தார் புஷ்.
'சிரம் அறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்க,
மக்களுக்கு உயிரின் வாதனை.'
என்ற பாரதிதாசனின் கவிதை வரி நினைவில் முட்டியது.


03.
ஸ்ராபெர்ரி திருவிழா
சின்னச் சின்ன சிவப்புப் பம்பரங்களை தொங்க விட்டதுபோல் செடியின் அடியில் குவிந்து கிடந்தன ஸ்ராபெர்ரி பழங்கள். பளிங்கு் தரையில் சுற்றிவிட்டால் பம்பரமாய் ஆடும் என்று சொன்னார்கள். பள்ளத்தாக்குகளின் (Valleys) தொகுதி வாசி்ங்டன் மாநிலமென சொல்லப்படுகின்றது. பசுமை மாநிலம் என்ற அடைமொழியை தனக்குப் பாத்தியதையாய் தக்க வைத்து வருகின்றது. பசுமை நகரம் என்ற பெயரை சியாட்டில் கம்பீரத்துடன் காத்துவருகின்றது.
எவரெட்டா (Everetta) பள்ளத்தாக்கில் மாஸ்ஸிவெலி வட்டாராத்தில் ரிங்கர் பண்ணையில்(Kringer Farm) ஸ்ராபெர்ரிப் பழத்திருவிழா! சுற்றிவர நிற்கும் குன்றுகளின் அடர்த்தி கொண்ட பசுமை முதலில் கறுப்பாயும் வெயில் ஏற ஏற நீலமாயும் உருமாறியது.
சனி ஞாயிறு இருநாட்களும் நேரடியாகப்போய் பண்ணையில் இறங்கி பழங்கள் எவளவு பறிக்க முடியுமோ பறித்துக் கொள்ளலாம். பண்ணை முகப்பில் உள்ள அலுவலகத்தில் பணம் பெற்றுக்கொள்கிறார்கள். நகரில் வெளிச்சந்தையில் விற்பதில் கால்வாசி விலையில் பழங்கள். அவரவருக்கு விருப்பப்பட்டதை பறித்துக்கொள்ளும் வாய்ப்பு ஸ்ராபெர்ரி திருவிழா (Pick up Strawberry) எனப்படுகின்றது.
பண்ணையின் முகப்பில் இருந்து பார்த்தால் எங்கெங்கும் குனிந்து உட்கார்ந்து மக்கள் பழம் பறித்துக்கொண்டிருந்தார்கள். பருத்தி, மிளகாய் அழிகாடுகளில் இறக்கி விடப்பட்ட ஆடுகள்போல் குனிந்தகுனி நிமிரவில்லை. முகப்பில் இருந்து டிராக்டர்களில் கொண்டுபோய் நிரை நிரையாய் புஞ்சைகளில் இறக்கி விடுகிறார்கள். பழம்பறிப்பு முடிந்தவர்களை நிரை நிரையாய் திரும்ப ஏற்றிவருகிறார்கள்.
சால்சாலாய் ஸ்ராபெர்ரிச் செடிகள். ஒரு சாலுக்கும் இன்னொரு சாலுக்கும் இடையில் இரண்டடிப் பள்ளம். தண்ணீர் பாய்ச்ச பயிரானபின் ஆட்கள் நடந்து போகவர அந்தப் பள்ளம். சாலக்களின் மேல் தலையாட்டமில்லாமல் அமராவதி போய் உட்கார்ந்திருக்கின்ற ஸ்ராபெரிச் செடிகள். கொஞ்சம் படர்ந்தாற்போல் தெரிகின்ற குத்துச் செடிகள் அவை. கிளைகளின் கைவிரித்து பழங்களை காட்டிவிடுகின்ற தக்காளி மிளகாய்ச் செடிகள் போலல்லாமல் ஸ்ராபெர்ரிச் செடிகள் தமது செட்டைக்குள் (இறக்கை) பழங்களை மறைத்துக் கொள்கின்றன.
ஸ்ராபெர்ரிக் காலம் முடிந்ததும் பிராஸ்பெரி (Prosberry) பழம் வருமாம். அது முடிந்து மக்கர்ச சோளம், ஓட்ஸ் என மாற்றி மாற்றி  சுழற்சி முறையில் விவசாயம் செய்கிறார்கள்.
விவசாயப் பண்ணைதான் ஆனால் குழந்தைகள் விளையாட ஊஞ்சல், ஸ்லைடு, குட்டி ரயில் என்று ஏகப்பட்ட விளையாட்டுக் கருவிகள். எங்கு போனாலும் அமெரிக்கர்கள் குழந்தைகளை மறக்கவில்லை. போகுமிடமெல்லாம் விளையாட்டு திடல், பூங்காங்கள்.
'இது நிரந்தரமாக இருக்குமா?' அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். பழத் திருவிழாவுக்கு மடடும் ஜோடித்து வைத்துவிட்டு பிறகு திருப்ப எடுத்துச் சென்று விடுவார்களோ என்று நியாயமாய் சந்தேகம் வந்தது. நிரந்தரமாய் இருப்பவைதாம். சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களும் நகரத்திலிடருப்பவர்களும் கூட விடுமுறை நாட்களில் வந்திருந்து உணவு உண்டு குழந்தைகளை விளையாட விட்டு வொழுது போக்கிச் செல்கிறார்கள்.
பொறுக்கி எடுக்கையில் சிந்திய பழங்கள் செடியடியில் பள்ளத்தில் சிதறிக் கிடந்தன. கால்களில் மிதிபட்டு ரத்தச் சேறாகியிருந்தன. மனவருத்தம் உண்டாகியது. 'எல்லாம் வீணாகின்றது. பேசாமல் ஆட்கள் வைத்துப் பறித்து வருகிறவர்களுக்கு விற்பனை செய்யலாமே?'
'பழம் பறிப்புக்கு கூலி கொடுத்து கட்டுபடியாகுமா? அதனால்தான் அவரவரே பறித்துக் கொள்ள விடுகிறார்கள். கூலி மிச்சம்' என் மகள் பதில் சொன்னாள்.
நல்ல காரியம் போல் தெரிகிற ஒன்றிலும் இப்படியொரு தந்திரம் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. என்று தெரிந்தது. எந்த ஒரு விசயமானாலும் அதில் ஒரு 'க்' வைத்து பார்க்க வேண்டுமென்று மக்களுக்கு தெரிகின்றது. சாதாரண புத்திக்கு தென்படுவது எனக்குத் தென்படாமல் போனது.

04.
மலர்களின் காலம்
பூக்களின் புன்சிரிப்பு உதிர்க்கின்றன. குழந்தைகள்போல் தத்தி தததி நடைபயில்வதில்லை. பூக்கள் மெளனம் பேசுகின்றன. குழந்தைபோல் மழலை சிந்துவதில்லை. மொழியும் குதியாட்டமுமென மலர்களுக்கு கொடுப்பினை இல்லை. மலர்கள் கட்டளைகளை விரும்புவதில்லை குழந்தைகள் போலவே.
'தேர்ந்த தூரிகை
கட்டளையிட முடியுமோ
எந்த ஒரு செடிக்கும்
எப்படி பூப்பதென!'
-இன்குலாபின் கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன குழந்தையும் பூவும்.
பூந்தோட்டம், மலர்க்காடு என்பவைதாம் நமக்குரிய சொற்கள். தமிழ் வாழ்க்கையில் என்ன உண்டோ, அது வார்த்தைக் கூட்டமாய் வெளிப்படுத்துகினறது. முல்லைத் தோட்டம், முல்லைக்காடு, மல்லிகைத் தோட்டம் என்ற சொல்வதுதான் நம் வாழக்கைக்கும் மொழிக்கும் பழக்கம்.
கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு என்னும் முந்தைத் தமிழ் இலக்கியத்தில் 99 மலர் வகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ரோஜா இல்லை. தமிழர் வாழ்வியலில் ரோஜா இருந்ததுண்டா. இருப்பின் இயற்கையை நேசித்த புலவரிடமிருந்து தப்பி நழுவியிருக்க முடியுமா?
அந்தக் காலத்தில் ரோஜா இல்லை.
ஆனால்' ரோஸாப்பூ ரவிக்கைகாரி ரோட்டோரம் வீட்டுக்காரி' என நாட்டார் பாடல்களில் பதிவாகிற அளவுக்கு வேர்கொண்டுள்ளது ரோஸா. தென் மாவட்டங்களில் ரோஜா இல்லை. 'ரோசா'தான்.
இஸ்லாமியர் காலத்தில் இறக்குமதியான ரோஜா நமது வாழ்க்கைக்குள்ளும் வருகின்றது. இறக்குமதி செய்யபபட்ட ரோஜாவையும் சேர்த்தால் 99 நூறாகி நூறு பூக்கள் என்றாகின்றது.
ரோஜாத் தோட்டம் என்று சொல்கிறோம். முல்லை வயல், மல்லிகை வயல், ரோஜா வயல் என்ற வார்த்தைப் பயன்பாடு இல்லை. அங்கு சியாட்டில் (அமெரிக்காவில்) மலர் வயல்கள் இருக்கின்றன.
ஏப்ரல் மாதம் டூலிப், டேஃபடில்ஸ் மலர்களின் காலம். சியாட்டில் நகருக்கு 60 மைல் தொலைவிலுள்ள ஸ்கஜித் (Skagit County) ஹாலந்து நாட்டுக்க அடுத்து டூலிப் மலர்களுக்கு பிரசித்தம். நாற்பது ஐம்பது ஏக்கர் வரை ஒரே மட்டுக்கு டூலிப் வயல்கள் பூத்திருக்கின்றன. நவீன வேளான் முறையில் டூலிப், டேஃபடில்ஸ் பூச்செடிகள் பயிரிடுவது, பூச்சி பொட்டு அண்டாமல் மருந்து தெளிப்பது என விவசாயம் செய்கிறார்கள். சால் சாலாய் உழுவது, பாத்தி பாத்தியாய் நடுவது, மருந்து தெளிப்பது வரை இயந்திரங்கள். பிறகு இயந்திரங்கள் விலகிக் கொள்ள வளர்வது, பூப்பது, சிரிப்பது என எவரும் சொல்லித்தராமல் இயற்கையாய் நடக்கின்றது.
உமி தூவுவது போல் மழைத்தூறல் பறந்த ஒரு நாளில் டூலிப் வயல்களுக்கு போனோம். காலடிகளில் பிசுக், பிசுக் என்று சகதி ஒட்டியது. சுவர் வைக்க குழைத்த மண் மிதிப்பதுபோல் நசுக், பிசுக் என்று மிதித்து மீண்டோம்.
அழகாயிருக்கின்ற பூக்கள் வாசனையோடும் இருக்க வேண்டும். வாசனையாய் இருக்கின்ற பூக்கள் அழகாயும் இருக்க வேண்டும். வெப்ப பிரதேசத்து பூக்களுக்கு மட்டுமே வாசனை, குளிர் பிரதேச பூக்களுக்கு வாசனை இல்லை.
வாசனை துளியும் இல்லாது வண்ண வண்ணமாய் அசையும் டூலிப் மலர்கள் ஒரு பூ இரண்டு டாலர்கள். ஐந்து மலர்களுள்ள கொத்து பத்து டாலர்கள். ஸ்கஜித் பள்ளதாக்கிலிருந்து அமெரிக்கா முழுவதுக்கும் ஏற்றுமதியாகின்றன. ஒரு டாலர் இன்றைய இந்திய மதிப்பில் சற்றேறக்குறைய 50 ரூபாய். ஒரு பூங்கொத்து 250 ரூபாய்கள். பத்து மலர்களுள்ள கொத்து 500 ரூபாய்கள் என்று இந்திய ரூபாயில் கணக்குப் போடுகையில் மலர்களின் அழகும் தொலைந்து போகின்றது.
டேஃபடில்ஸ் வயலின் நடுவில் நின்றேன். ஆங்கிலக் கவி வேர்ட்ஸ்வோர்த்தின் கவிதையில் அழகைக் கொடடிய டேஃபடில்ஸ் பூக்கள்.
வயல்களின் பரப்பில் இரு கைகளை விரித்து நினைப்பில் மூழ்கினேன். 'வோர்ட்ஸ்வோர்த் கவியே உன் பாடல்களில் மட்டுமே நான் டேஃபடில்ஸ்களை ரசிக்க முடியும். அவைகளின் செளந்தரியங்களை அமெரிக்க டாலர் எடுத்து விடுகின்றது.'

நாட்குறிப்பு தொடரும்..


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 13:09
TamilNet
HASH(0x55f45359c500)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 13:09


புதினம்
Mon, 15 Jul 2024 13:09
     இதுவரை:  25361406 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2489 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com