அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விழித்துக்கொண்ட முல்லை.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்.  
Thursday, 14 September 2006

பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற
வயலோரம் முளைத்ததனால்
முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத்
தானும் படர்ந்திருந்த வேளையில் தான்
அவ்வழியால் பாரிமன்னன்
பவனிவந்தான்.

பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன்
பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட
கொடிகண்டான்.

என்னேயிது நீதியிங்கு ஏற்றம்பெறக்
கொம்பிலா வாழ்வுற்றதோ முல்லைக்கென
நெகிழ்ந்தான்.

பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று,
'சின்னஞ்சிறு கொடியே, உன் விதிகண்டு
மனம் நொந்தேன் யான்' என உரைத்தான்.

'என்னேயுன் பெருமை மன்னா,
சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம்
நெகிழ்தாய் கண்டேன்
போதுமதுவெனக்குப்போதும்
புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக'
என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி.

'யாரங்கே,
யான் பவனிவந்த தேரை வழங்குங்கள்
இம்முல்லைக்கு,
படந்ர்ததிலேயேற்றமுற்றுப் பாரெல்லாம்
மகிழப் பூத்துக்குலுங்கட்டும் பந்தலிலே'
என உரைத்தான் மன்னன்.

'நிலத்திருந்தே நான் மலர்வேன்.
உன் தேர் வேண்டாமெனக்குப் பார் வேந்தே.
உந்தன் தேரியற்றப் பசுமரங்கள்
பலவெட்டி இழைத்த பழியை
என்தலையிலிடவா பரிசளிக்க விரும்புகிறாய் ?

தேர்கள் பல இயற்றத் தறித்த
வானுயர் மரங்கள்பால் நினக்கிலா இரக்கம்
எழுந்ததேன் இச்செடிபால்
ஆயிரம் மரக்கொலை புரிந்துபின்
அறுகம் புல்லுக்கு நீரூற்றில்
ஓயுமோ பழி என ஒருகால் உணர்
வேந்தே' என விளம்பி விளித்தது
முல்லைச் செடி.

'வெட்டி வீசுங்கள் இச்செடியை' எனக்கூறுவதா
அன்றில் விட்டு விலகிச் செல்லுவதா
என விக்கித்து நின்றான் தேரில்
பவனி வந்த பாரி மன்னன்.

01.09.2006.


     இதுவரை:  24783390 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5566 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com