அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow நூல்நயம் arrow நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொன்-மணி  
Wednesday, 24 January 2007

இக்கட்டுரையை முன்பே எழுதியிருக்கவேண்டுமென்று  நினைக்கத்தோன்றுகிறது. இருந்தாலும் இன்னும் காலம் கழிந்து  விடவில்லை. தரமான இலக்கியங்கள் எந்தக்காலம் சென்றாலும் மெருகு குன்றாமல் அப்படியே சுவை தரும் என்பதற்கு திரு  பாலமனோகரனின் 'நிலக்கிளி',  'வட்டம்பூ' நாவல்கள்  எடுத்துக்காட்டு. இந்த நாவல்களைத் திரும்பவும்  வாசிக்கவேண்டுமென்று முப்பது வருடகாலங்களாகத்  தேடித்திரிந்தேன். என் ஆசையைப்பூர்த்தி செய்த 'அப்பால்  தமிழுக்கு' என்றும் நன்றிகள். அவரது மூன்றாவது நாவலான  'குமாரபுரம்' வெளிவருகின்ற இவ்வேளையிலாவது இந்த ஆக்கம் வெளிவருவது எனக்கொரு  மனநிறைவைத் தருகிறது..  வாசகர்களுக்கும் ஒரு உற்சாகத்தைத் தருமென்று  நினைக்கின்றேன்.
ஒரு காலகட்டத்தில் இந்திய எழுத்தாளர்களின் இலக்கியங்களில் மூழ்கிக்கிடந்த என்னை ஈழத்து இலக்கியத்தின்பால் ஈடுபாடு  கொள்ள வைத்தது. 'நிலக்கிளி' நாவல் தான், என்பதை  பெருமையோடு கூறமுடியும். வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த  இந்நாவல் அந்த ஆண்டின் சாகித்திய மண்டல  விருதைப்பெற்றது. மேலும் என்னை ஆர்வத்தில் ஆழ்த்தியது.  நாவலைத்தேடி படித்தபோது பூரித்துப் போனேன்.  பாத்திரங்களோடு வாழ்வது போல், எப்போதும் எனக்குத்  தோன்றும்.. இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இன்னுமொரு  நாவலான 'யுகசந்தி' நாவலும்  வீரகேசரி வெளியீடாக  வெளிவந்தது. இந்நாவலும் வாசகர்களால் பெரிதாகப்  பேசப்பட்டது. இந்நாவலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த திரு  இரத்தினசபாபதியவர்கள் எழுதியிருந்தார் .'மணிவாணன்' என்ற  புனைபெயர் அவருடையது. அவர் இன்று உயிரோடு இல்லை.  அந்தக்காலகட்டத்தில் பத்திரிகைகளில் பல சிறு கதைகளை  எழுதியிந்தார்.'காற்றில் மிதக்கும் சருகுகள்' என்ற குறு நாவல்  மாணிக்கப்பிரசுரமாக வெளிவந்தது. இந்தக்காலகட்டங்க
ளில் வன்னியில் தோன்றிய எழுத்தாளர்களில்; 'முல்லைமணி'  திரு சுப்பிரமணியம் ஆசிரியர், முள்ளியவளை மதுபாலன், திரு  மெட்றாஸ்மெயில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
முல்லை மணி அவர்கள் பண்டாரவன்னியன்  நாடகத்தின்  மூலம் பிரபல்யமானவர். அவர் எழுதிய 'அரசிகள் அழுவதில்லை' என்கின்ற சிறுகதைத்தொகுப்பும் வீரகேசரிப் பிரசுரமென்று  நினைக்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் பல நாவல்களை  எழுதி வெளியிட்டதுடன் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி பல  பட்டங்கள் பாராட்டுக்களுடன் வவுனியாப்பகுதியில் வாழ்ந்து  வருவதாக அறிந்து சந்தோசமடைகிறேன். இதேபுகழுடன் திரு  மெட்றாஸ் மெயிலும் வாழ்கின்றார் என்ற செய்தியை  பத்திரிகையில் பார்த்தேன்.
வன்னியில் தோன்றிய, குறிப்பாக முல்லைத்தீவுப் பிரதேசத்தில்  மிளிர்கின்ற எழுத்தாளர்களில் என்னை அதிகம் கவர்ந்தவர் திரு  பாலமனோகரன் அவர்கள் தான்.  அவர் தேர்ந்தெடுக்கும்  பகைப்புலங்கள், கதைமாந்தர்கள் எமது பிரதேசத்தை  நினைவுபடுத்துவதாக இருக்கும். பலதடவைகள்  வாசிக்கத்தூண்டும் எழுத்து வடிவம், கிராமத்து மணம் கமழும்  வார்த்தைப் பிரயோகம். பாத்திரங்களை கிராமந்தோறும்  தேடித்திரிந்து, அவர்களின் குணாம்சங்களுடன், நாவல் உருவில்  எங்கள் கரங்களில் தவழவிட்டிருக்கின்றார். நல்லதொரு  நகைச்சுவை விரும்பி, சாதாரண நடையில் சங்கதிகள்  வெளிவரும் சக்தி அவருக்கே உரியது. எடுத்தால் புத்தகத்தை  வைக்க எனக்கு மனம்வராது, என்ற சொன்னவர்களே அதிகம்.
இவர் எழுத்துக்களின் தாக்கமே என்னையும் எழுத்துலகில்  காலடி எடுத்து வைக்கத்தூண்டியது என்றால் மிகையாகாது.  அவர் ஒரு பெரிய எழுத்தாளர், அப்படியிருந்தும்
எம்மைத் தட்டிக்கொடுக்குமாக தனது பாராட்டுக்களைத் தந்து  மகிழவைத்துக்கொண்டிருக்கிறார்.
இவரால் பல எழுத்தாளர்கள் முல்லைத்தீவில்  உதயமாகியிருக்கிறார்கள் என்பதை நானறிவேன்.
'நிலக்கிளி' நாவலின் பகைப்புலம் தண்ணிமுறிப்பு பிரதேசம்,  பலகுடும்பங்களோடு எங்கள் வாழ்க்கையின் அட்சயபாத்திரமும்  அங்குதான் இருக்கிறது. சிறிய வயதிலிருந்து ஒவ்வொரு  வருடமும் பல நாட்கள் அங்கு வாழ்ந்திருக்கிறேன்  தண்ணிமுறிப்பின் வன்மையும், மென்மையும், தண்மையும்,  வரட்சியும் நானறிவேன். இந்தக்கதை வாசித்த காலம்  எங்களுக்கும் காதல் வரும் காலம். அருமையான காட்டுக்காதல், அதற்கேற்ற பகைப்புலம் வாசித்தபோது நெகிழ்ந்து போனேன்.  இந்தப்பிரதேசத்தில் எங்களுக்கும் ஒரு வயல் இருக்கிறது.  எங்கள்குடும்பத்தை வாழ வைக்கும் அட்சயபாத்திரம் அதுதான்  என முதலே எழுதினேன். சிலவருடங்களில் இரண்டு போக  நெற்செய்கை அங்கேயே குடில் அமைத்துத் தங்கிவிடுவோம்.  எங்கள் வீட்டில் இருந்து பதினாறு மைல்கள் பிரயாணம்  செய்யவேண்டும், உழவு காலம், அரிவு வெட்டுக்காலங்களில்  அங்கு தங்கவேண்டும். வாய்க்காலில் மேவிப்பாயும்  தண்ணிமுறிப்புக்குளத்தின் நீர். அது சுமந்து வரும் காட்டு  மலர்கள், கொள்ளை அழகு. வேலைமுடித்து நீந்தி  விளையாடும்போது களைப்பை மறப்பதுண்டு. குடிலுக்குள்  நுழைந்து கொதிக்கக்கொதிக்க அம்மா ஆத்தித்தரும் தேனீரை  செதுக்கி வைத்த சிரட்டையில் குடிக்கும் சுவை  அந்தப்பிரதேசத்திற்குரியது. இரவு கருவாட்டுக்குழம்புடன்  சாப்பிட்டதை நினைக்கும்தோறும், எச்சில் ஊறும்.  கிடுகளைப்பரப்பி அதன்மேல் சாக்கை விரித்து, இடுப்பு வரை  சாக்குக்குள் காலைவிட்டு மேலே சாரத்தால் மூடிப்படுக்கும்  போது, நுளம்பிற்காகவும், பனிக்குளிருக்காகவும் மூட்டி  விட்ட  வீரம் விறகு தலைமாட்டில் விடிய, விடிய எரிந்து  கொண்டிருக்கும். அந்தக்கணகணப்பில் களைப்பை மறந்து  நித்திரை கொள்வோம். காடு வெட்டி களனியாக்கிய காலங்களில் காட்டு மிருகங்களுக்குப் பயந்து போடுகின்ற குடிலை தடிபரப்பி  கழி மண்போட்டு மெழுகி, மேல்மாடியாக்கி விடுவதுண்டு. கீழே  மூட்டிவிட்ட நெருப்பின் வெப்பம் பரப்பி விட்ட கழி மண்ணில்  பட்டு கதகதப்பாக இருக்கும். இரவு ஆற்றுக்குள் விழுந்து அழும்  மறிக்கரடிகளின் சத்தம் குழந்தைகள் அழுவது போல் கேட்கும்.  உறுமும் சிறுத்தைகளின் சத்தம் பயத்தை ஏற்படுத்தும். இரவு  பெய்யும் கடும் பனியும், அதிகாலை பனியை விலக்கி  வெளிவரும் ஆதவனின் கதிர் வீச்சின் அழகும் தண்ணிமுறிப்பின் சிறப்புகளில் ஒன்றாகும். இந்தப்பிரதேசத்தைத் தேர்ந்ததெடுத்த  கதாசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.
திரு à®….பாலமனோகரன் அவர்களை நாவல் வெளி வருவதற்கு  முன்பே வித்தியானந்தக்கல்லூரியின் ஆசிரியராக அறிவேன்.  முல்லை தண்ணீருற்றில் அண்ணாமலை  தம்பதிகளுக்குப்பிள்ளையாகப் பிறந்தவர். மாங்குளம் வீதியில்  அவரது வீடு இருக்கிறது. பார்த்தமாத்திரத்தே தன்மீது  ஒருபிடிப்பை ஏற்பத்திவிடும் காந்த சக்தி
அவரிடம் இயல்பானது. அழகானவர், அறிவுள்ளவர்,  அமைதியானவர். அவரது வீடு மாமரம், பலாமரம்  தென்னைமரங்களின் சோலை எனலாம். வாசல்வரை  நிறைந்திருக்கும் பூமரங்கள் கொள்ளை அழகு. வீட்டிற்கு  'நிலக்கிளி' என்றே பெயர்வைத்திருந்தார். அந்த அளவிற்கு  இந்நாவல் அவர் உணர்வுகளோடு நிறைந்திருந்தது.
இன்றைய நாட்டு நிலமை அவரது எழுத்து வாழ்க்கையையும்  பாதித்திருக்கலாம். அவர் ஊரில் வாழ்ந்த காலத்தில் நிறையவே  இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார். கிராம வாழ்க்கையோடு  ஒன்றிய கதாபாத்திரங்களை வன்னியின் செழுமை நிறைந்த  கிராமங்களில் உலாவவிட்டு மகிழ்ந்திருந்தார். தண்ணிமுறிப்புப்  பிரதேசம் நிலக்கிளியால், பட்டி தொட்டியெங்குமுள்ள  வாசகர்களால் அறியப்பட்டது. மலையர், பாலியார், கதிராமன்,  பதஞ்சலி பாத்திரங்கள் என்றும் நினைவைவிட்டு அகலாதவை.  எங்கள் வயலில் இருந்து அதிக தூரமில்லை கதைமாந்தர்  வாழ்ந்த பிரதேசம். அம்மா கட்டித்தந்த கட்டிச்சாதத்துடன்  தண்ணிமுறிப்பு வயலுக்கு அடிக்கடி நீர்பாய்ச்சப் போவதுண்டு.  கட்டிச்சாதத்தின் வாசம் இப்போது நினைத்தாலும் வாயில்  எச்சிலை வரவழைக்கிறது. வாட்டிய வாழையிலையில் மணக்க,  மணக்க இறால்குழம்பு, முட்டைப்பொரியல், சிவப்பு பச்சை  அரிசிச்சோறு. கோர்லிக்ஸ் போத்தலில் குழம்பு எண்ணை  பிறந்திருக்கும். எப்படா சாப்பாட்டுப்பொதியை திறந்து ஒருபிடி  பிடிப்போம் என்பதுபோல் வாசம் மூக்கைத்துழைக்கும்.  வயலுக்குள் நீரைத்திருப்பிவிட்டு சாப்பாட்டில் பாதியை ருசித்து  விட்டு, குடிலுக்குள் சிறிது நேரம் இழைப்பாறுவதுண்டு.  சோவென்று  காற்றுக்கு ஆடும் நெற்கதிர்களின் அழகு  பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும். எறிக்கும் வெய்யிலின்  வெப்பம் மாலை நாலு மணிவரை வாட்டும். குடிலின் தளம்  தண்ணென்றிருக்கும். கிடுகையும், சாக்கையும் விரித்து
கொஞ்சம் சரிவோம் என்று ஆசைவரும். சரிந்தால் தாலாட்டும்  காற்றின் சல சலப்போடு சுமந்து வரும் மூலிகையின் வாசம்  சுகமான தூக்கத்தைத தரும். மதிய வெய்யிலின்  கொடுமையைத்தாங்காமல் கானல் குருவிகள் கத்துகின்ற  சகிக்கமுடியாத கதறல் அடிக்கடி கேட்கும். மயில் அகவும்  சத்தம் மான் கூச்சல் போடும் சத்தம் காட்டுக்கோழிகளின்  குரல்கள் என்று எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.  பாம்புகள் தவழைகளை விழுங்குகின்ற அவலக்குரல்  பயத்தைத்தரும். மிருகங்களின் சத்தங்களைக்கேட்டு தரம்பிரித்து இது எந்த மிருகத்தின் குரல் என்று சொல்லுகின்ற அனுபவம்  எங்கள் அம்மாவுக்கும் இருந்தது. இது அனுபவப்பாடங்கள்,  அங்கு தொடர்ந்து வாழ்ந்திருந்தால் நாங்கள் கூட  இதில்  அனுபவசாலிகளாகியிருந்திருப்போம். நித்திரைவிட்டு எழும்பும்  போதுதான் இவ்வளவு நேரம் தூங்கினோமா? என்பதை  நினைக்கத் தோன்றும். அநேகமாக சிலவேளைகளில் இரவும்  தங்குவதுண்டு. குடிலைவிட்டு வெளியில் வந்து நிமிர்ந்து  பார்த்தால் பக்கத்தில் நிற்பதுபோல் உயர்ந்து நிற்கும் குருந்தூர்  மலை பச்சைப்பசேலென்று அழகாகக்காட்சி தரும். எங்கள்  வயலில் இருந்து இரண்டு மைலாவது போகவேண்டும்.  வரம்புகளால் ஒரு நடை நடந்து சுற்றி வயலைப்பார்த்து விட்டு,  நிலக்கிளி கதையில்  வாழும் கதை மாந்தர் வாழ்ந்த  இடத்தைப்பார்த்து வர மனம் கிடந்து துடிக்கும். அவர்கள்  உயிரோடு வாழ்வதாக அப்போது நான் நினைப்பதுண்டு.  சைக்கிளை எடுத்துக்கொண்டு குளக்கட்டைநோக்கி ஓடுவேன்  பாதையைக் குறுக்கறுத்துப்பாயும் ஆறு, அதற்கு  மேலாகக்காணப்படும் பிரதேசத்தைத் தேரோடும் வீதியென்று  அழைப்பதுண்டு. ஏனம்மா இந்தஇடத்தைத் தேரோடும்  வீதியென்று சொல்லிறது என்றுகேட்டால், இந்த இடத்தில்  சிலகாலங்களில் இரவுநேரங்களில் மேளச்சத்தம் கேட்குமாம்,  இதனைத் தொடர்ந்து தேரோடி வருவதுபோலவும், சனங்கள்  நிறையச்சேர்ந்து வருவதுபோலவும் ஆரவாரம்கேட்குமாம். என்று நம்ப முடியாத பயங்கரமான கதையை அம்மர்சொல்லுவா.  சின்னவயசில் இந்த கதையைக்கேட்டு அந்தப்பக்கம் பயத்தில்  போவதில்லை. பின்னாளில் இதற்கு வேறுகாரணம் இருக்கலாம்  என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. பக்கத்தில் உயர்ந்து  நிற்கும் குருந்தூர் மலையில் ஆலயங்கள் இருந்ததற்குரிய  அழிபாடுகள் தடையங்கள் இருந்ததை நானே இரண்டு  தடவைகள் சென்று பார்த்திருக்கிறேன். இந்த இடங்களில் பல  ஆண்டுகளுக்கு முன் மக்கள் செறிந்து வாழ்ந்திருக்கலாம். இங்கு காணப்படும் தண்ணிமுறிப்பு குளம் அடிக்கடி  உடைப்பெடுத்ததால் மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம்.  பின்னாளில் காடுகளாகி, குளம் தகுந்த முறையில் சீர்  அமைத்தபின்பு காடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டு  களனிகளாகியிருக்கலாம். இதுவே உண்மையென்று  நினைக்கிறேன். குளம் முறித்துப்பாய்வதால்  தண்ணிமுறிப்பென்று பெயர் வந்ததென்பதை உணரலாம்.  தேரோடும் வீதியைக்கடந்து சென்றால் பழையபாதை வந்து  சந்திக்கும் சந்தி, வரும்.இதற்கு மேலாகத்தான் ஐந்தாறு  குடிமனைகள் இருக்கின்றன இதில் பொருத்தமான வீடுகளில்  கதிர்காமனும் பதஞ்சலியும் , பக்கத்து வீட்டில மலையர்  குடும்பம் வாழ்வதாகவும் நினைத்துக்கொள்வேன்.;.  குளக்கட்டிற்கப்போகும் பாதை பிரதானமானது. இதனையொட்டி  வலது பக்கத்தால் குளத்தில் இருந்து  வரும் நீர் பாய்ந்து வரும் பெரிய வாய்க்கால் அமைந்திருக்கும். மலைப்பிரதேசத்தை  அண்டியபகுதியில் குடிமனைகள் அங்கொன்றும்  இங்கொன்றுமாகக்காணப்படும். தொடர்ந்து செல்ல  பாடசாலை  அமைந்திருக்கிறது. இங்குதான் நிலக்கிளி கதையில்வரும்  சுந்தரம் வாத்தியார் படிப்பிப்பதாக ஆசிரியர் எழுதியிருக்கின்றார்.  இதன்பக்கத்தே இடது பக்கம் நிற்கும் வீர மரத்தின் அடியில்  ஐயன் கோவில் அமைந்திருக்கிறது. ஒரு கல்லைத்தான்  வைத்துக் கும்பிடுவார்கள். காடுகளில்  வேட்டையாடப்போகிறவர்கள் காடுமாறிப்போகாமல்  இருப்பதற்காக கற்பூரம் கொழுத்தி, தடியொன்றை நடுவார்கள்.  இந்தக்கோவிலில்தான்  கதை நாயகன் கதிர்காமன்  பலதடவைகள் வழிபடுவதாக ஆசிரியர் எழுதியிருக்கின்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஓரு முறை பழுக்கும் முரலி மரங்கள்  தண்ணி முறிப்புக்காடுகளில் செறிந்து காணப்படும்.  இந்தக்கதையில் ஆசிரியர்  நாயகன் நாயகியுடன்  பழம்பிடுங்குவதற்கு எங்களையும் அழைத்துச் செல்கிறார்.  நிறையப்பழங்கள் பழுத்திருந்தமையால் கொப்புகள் வில்லாக  வழைந்து நின்றன. முரலிப்பழம் அதிகம் பழுத்துக் காடே  மணத்தது என்பதைக்கூறுமிடத்தில் எங்கள் நாவே  சுவைத்தது.  சுவைக்கின்றது. முரலிப் பழத்தைச் சாப்பிட்டவர்தான் அதன்  சுவையை அறிவார்கள். நல்ல வாசமும் தேன்போன்ற சுவையும்  நிறைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கதையை  வாசித்ததால் முரலிப்பழத்தைச் சுவைத்தேன். கள்ளங்கபடம்  இல்லாமல் பழகுகின்ற அவர்கள் உணர்வால் ஏற்படுகின்ற  அன்பின் நிமிர்த்தம் துடிக்கின்ற துடிப்பும். காட்டுத்தேனை  படைபடையாகக் கைகளில்  பதஞ்சலியிடம் கொடுக்க அவள்  குழந்தையாகத் துள்ளிச்சாப்பட்டதும். சந்தர்ப்பம் அவர்களைத  தம்பதிகளாக்கியதும், அதன் நிமிர்த்தம் மலையருக்கு ஏற்பட்ட  ஆத்திரமும், அதன்விளைவாக குடும்பமே சிதறியதும், கிராமத்து  வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறும் நிகழ்வுகள். அவரின்  ரோசத்தால், மகனை இழந்த தாய் பாலியார் படும்  வேதனைகளும், மறக்கமுடியாதவை. சுந்தரம் வாத்தியாரும்,  கதிர்காமனும் வயலில் வேலை செய்து விட்டு வரும்போது,  பதஞ்சலி அன்போடு படைக்கும், குருவித்தலைப் பாவக்காய் கறி, ஆசிரியரின் அனுபவித்த எழுத்தாற்றலால், சுர்ரென்று நாவில்  எச்சிலை வரவழைக்கின்றது. தண்ணிமுறிப்புப் பகுதியில்  இந்தப்பாவற்கொடி தன்னிச்சையாகக் காடுகளில் வளர்ந்து  செழித்துக் காய்ச்சிருக்கும், கானல் கொச்சி,  காட்டுக்கருவேப்பிலை, பொன்னாங்காணி
வல்லாரை எல்லாமே காட்டுப்பயிர்கள்தான். வாய்க்காலில் நீர்  நிறைந்து பாயும்போது இந்தப்பிரதேசமே பச்சைப்பசேலெனக்  காட்சியளிக்கும். காட்டுக்கொன்றை மரங்கள்  பொன்னாகப்பூத்துக்குலுங்கும்.
வெட்டியகாட்டிற்கு நெருப்புவைக்கின்ற மலையரின் ஆத்தரம்,  கொழுந்து விட்டெரியும் காட்டைப்பார்த்து இதைவிட நெருப்பு  வைக்கப் பொருத்தமான காலம் வேறில்லையென்று  பெருமைப்படும் கதிர்காமன். வைத்தது தகப்பன் தான் என்பதை  கண்டு  கொள்வதும், விறு விறுப்பானவை. காட்டுப்பூவாக  மலர்ந்த பதஞ்சலி கொடும்புயலில்  தன்னை இழந்து  தவிக்கும்  தவிப்பு, வயிற்றில் தீச்சுமையொன்று வளர்வதாகக் கலங்குவதும், தண்ணிமுறிப்பில் ஏற்படும், வரட்சியோடு ஒப்பிடுகின்றார்,  ஆசிரியர்.
மலையர்குடும்பம், கதிர்காமன், பதஞ்சலி இவர்களின்  வாழ்க்கையை இயற்கையின் கொடுமையோடு, இணைத்துக்  கூறுகின்ற இடங்கள் அருமை. மழையின்றி வாடும்  தண்ணிமுறிப்பில் வெப்பத்தின் அகோரம் பேயாய் அலைந்தது  என்கின்றார். முடிவு  எப்படி வரும் என்பதில்  எத்தனை பட  படப்பு வாசிக்கும்பேர்து அனைவருக்குமே ஏற்படும். முடிவை  கருமேகங்களின் குளிர்ச்சியோடு எதிர்பாராத, எல்லோரும்  ஏற்றுக்கொள்ளக்கூடியதாக முடித்திருந்தார். வாசகர்கள் நிச்சயம்  வாசிக்கவேண்டும், என்பதற்காக இத்துடன் நிறுத்துகிறேன்.  ஒவ்வொரு அத்தியாயத்திலும் தனது எழுத்தின் முத்திரையைப்  பதித்திருக்கின்றார் எழுத்தாளர். திரு பாலமனோகரன்.
இக்கதையில் இடம்பெற்ற பாத்திரங்களின் பெயர்கள் எனிவரும்  காலங்களில் இதுபோன்ற கதைகளில்தான் காணலாம்.  மீண்டும்  'வட்டம்பூ' நாவலோடு சந்திக்கிறேன்.
(தொடரும்)

                          


மேலும் சில...
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 13:06
TamilNet
HASH(0x55658bdcd858)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 13:06


புதினம்
Thu, 28 Mar 2024 13:06
















     இதுவரை:  24712405 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5661 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com