அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 26 February 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow வெயிலின் நிழலில்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வெயிலின் நிழலில்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி.  
Monday, 05 February 2007

வெயில் திரைப்படத்தை முன்வைத்து

தமிழ் சினிமா, சினிமா ரசனை, தமிழ் அடையாளம்  - சில கருத்துருவாக்கங்கள்.


தமிழ்சினிமாவிற்கும் அதன் பார்வையாளனுக்கும் இடையிலான தொடர்பு அலாதியானது - ஒரு விதத்தில் விசித்திரமானதும்கூட. கலைப்படைப்பு Î§ நுகர்வோன் (ரசிகன்) என்ற தளப்பரப்பையும் தாண்டி வாழ்வின் சகல இயக்கங்களையும் கலைத்துப் போடக்கூடியதாகவிருக்கிறது இந்த உறவும் நெருக்கமும். தமிழ்சினிமா பார்வையாளர் வட்டத்திற்கு வெளியே நிற்கும் ஒருவர்கூட மேற்குறித்த பிணைப்பை மீற இயலாதவராக இருக்கிறார். இதை தமிழ் மனதொன்றின்மீது தமிழ்சினிமா நிகழ்த்தும் இலேசான அத்துமீறல் என்று குறிப்பிடலாம். இது ஒரு வகையான வன்முறையும்கூட.
எமது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் தமிழ்சினிமாவை நாம் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. தமிழ் வாழ்வின் அனைத்துத் திசைகளிலும் அது வியாபகமடைந்திருக்கிறது. அண்மையில் எனது நண்பர்களான ஒரு தம்பதியினர் (அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரியும் சூழலியல் விஞ்ஞானிகள் அவர்கள்) தமிழகம் சென்றிருந்தனர். தமிழ்சினிமா குறித்த அடிப்படை அறிவு ஏதுமற்ற - தமிழ்சினிமா என்ற வட்டத்திற்கு வெளியே தமது வாழ்வை கட்டமைத்துக்கொண்ட அவர்கள் தமிழகத்தில் சந்தித்த சிக்கல்கள், சங்கடங்கள் கவலை தருகின்ற போதிலும் ஒரு வகையில் சுவாரசியமானவை.
சென்னைத் தெருக்களில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு முச்சந்தியில் வீதியின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அடி உயர 'கட்அவுட்டை' பார்த்துவிட்டு ஆட்டோ சாரதியிடம் "யார் இது?" என்றுஅப்பாவித்தனமாக இவர்கள் கேட்டபோது அவர் இவர்களை ஏதோ வேற்றுக்கிரக ஜீவராசிகளைப்போல் பார்த்த பார்வையை இன்றும்கூட எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறுகிறார்கள். அத்துடன் பெருத்த அவமானமாகவும் உணர்கிறார்கள். (பின்புதான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது அது யாரோ நடிகர் விஜயினுடையதாம் - அவர்கள் அறிவியலின்படி அவர்களுக்கு நடிகர் விஜய்கூட யாரோதான்).
தமிழகத்தில் அரசியல், வாழ்வு, பண்பாடு, ஊடகம் என்று அனைத்துப்பரப்பிலும் தமிழ்சினிமா செலுத்தியிருக்கிற செல்வாக்கை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்வும் தமிழ்சினிமா குறித்த கதையாடல்களால் நிரப்பப்பட்டிருக்கிறது என்றும் சினிமா என்ற சொல்லை தமிழகத்திலிருந்து வேறாகப் பிரித்தெடுத்து விடடால் தமிழகம் 'தற்கொலை' செய்து விடுமோ என்று தோன்றுகிறது என்று கூறி வியக்கிறார்கள்- அவர்கள் வியப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை, தமிழகத்திற்கு வெளியிலும் தமிழ் வாழ்வு மேற்குறித்த அவதானிப்புக்களுடன் ஒப்பிட்டுப்பேசக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
தமிழ்சினிமா என்ற சொல்லாடல் பொருத்தமற்ற ஒன்றாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. தமிழக சினிமா என்பதே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தமிழகத்திற்கு வெளியே உலகப்பரப்பில் தமிழ் சினிமா "முயற்சி" என்ற அளவிலேயே நிற்கிறது. அது இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. எனவே தமிழக சினிமாவைத்தான் தமது சினிமாவாக உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தமிழக சினிமா தமிழ் வாழ்வை மட்டுமல்ல தமிழக வாழக்கையைக்கூட தன்னூடாக வெளிப்படுத்துவதில்லை. அது கற்பனையுலகில் சஞ்சரிக்கிறது. நிஜவாழ்விலிருந்து நழுவி யதார்த்தத்திற்கும் அப்பால் நோய்க்கூறு நிரம்பிய சிந்தனைகளை வெளித்தள்ளுகிறது. இந்த 'சிந்தனைகளை' உள்வாங்கும் ஒரு சமுகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்கமுடியும்?
'ஆழ்வார்'களும் 'போக்கிரி'களும் இடைவிடாது எம்மைத் தாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். இதுதான் சினிமா என்று ஒன்றை அது கட்டமைத்துவிட்டது. இந்தச் சூத்திரத்திலிருந்து - வாய்ப்பாட்டிலிருந்து விலகித் திரைப்படம் எடுப்பவர்களை தமிழ்ச்சமுகம் பைத்தியக்காரனாக்குகிறது அல்லது கடன்காரனாக்குகிறது. இத்தகைய அகபுறச்சூழலில் தமிழ்சினிமா குறித்த அவதானங்களை பதிவு செய்வதென்பது மிகச்சிக்கலானது. ஆனால் அதன் தேவையோ மிகப் பெரியது.
தமிழ் சினிமா பார்வையாளர் (ரசிகர்) வட்டத்தை à®®à¯‚ன்று விதமாகப் பிரிக்கலாம். ( உலகத்தமிழர்களின் பரம்பலைக்கூட இந்த அடிப்படையில்தான் பிரிக்கமுடியும்)
01. தமிழகம்
02. தமிழகத்திற்கு வெளியே தமிழக மரபிலிருந்து விடுபடாத அதாவது இந்திய வம்சாவளித் தமிழ்ப்பரப்பு (உதாரணம்: சிங்கப்பபூர், மலேசியா, தென்னாபிரிக்கா இன்னும் பிற )
03. ஈழம் (ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களையும் உள்ளடக்கியது)
ஒரு மனிதனுக்கு வாழ்வு தரும் நெருக்கடிகள் இடம், சூழலைப்பொறுத்து வேறுபட்டவை.அதேபோல்தான் மேற்குறிப்பிட்ட 3 பிரிவினரதும் வாழ்வு மீதான எதிர்கொள்ளலும் வேறுபடுகிறது. எனவே ஒரு கலைப்படைப்பு மீதான பார்வையும் விமர்சனமும் அவர்களது வாழ்வியல் சார்ந்து வேறுபாடானதாக இருக்க வேண்டும் ( இங்கு 'வேறுபாடு' என்ற சொல்லின் அழுத்தத்தை குறைத்து வாசிக்கவும்). ஆனால் தமிழ் சினிமா மீதான பார்வையும் ரசனையும் அனைத்துத் தளங்களிலும் ஒரே மாதிரியானதாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதை ஒரு கலைப்டைப்பாக தமிழ்சினிமாவின் வெற்றி என்று கொள்ளலாமா? ஏனெனில் இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து உணர்வுகளால் ஒன்றச்செய்யும் ஒரு படைப்புத்தான் உண்மையான கலை வடிவமாகக் கொள்ளப்படும் என்று உலகப்பொது விதி ஒன்று முன்வைக்கப்படுகிறது. எனவே தமிழக சினிமாவும் எல்லைகளைக்கடந்து மேற்குறிப்பிட்ட 3 தளங்களிலும் ஒரே மாதிரியாக உள்வாங்கப்படுவதை முன்வைத்து யாரேனும் அது ஒரு 'முழுமையான' கலைப்படைப்பு என்று வாதாட முன்வரலாம். ஆனால் தமிழக சினிமா தன்போக்கில் வளர்த்திருக்கும் மோசமான ரசனையின் வெற்றியேயன்றி அது படைப்பின் வெற்றி அல்ல.
இந்த இடத்தில்தான் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது. இந்த விமர்சனக்கட்டுரையின் நோக்கமும் அதுதான். உணர்வுரீதியாக பதிவு செய்ய நினைத்திருந்த விடயத்தை விமர்சனரீதியாக முன்வைக்க வேண்டிய தேவையை உருவாக்கியிருப்பதும் இக்கேள்விதான்.
மேற்குறிப்பிட்ட 3 தளங்களிலும் முதல் இரு தளப்பரப்பும் மனித இனத்திற்கே பொதுவான வாழ்வு சார்ந்த நெருக்கடிகளை எதிர் கொள்பவை. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் மேற்குறித்த பொதுவான வாழ்வியல் நெருக்கடிகளுடன் வேறு சில சிக்கல்களையும் சேர்த்து எதிர்கொள்கிறோம். அவர்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்- நாம் போராட்டத்தையே வாழ்வாக வரித்துக்கொண்டுள்ளோம். அதாவது எமது வாழ்வு பிளவுண்ட இரட்டை மனநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. காதல், கல்யாணம், குடும்பம், சொந்தம், உறவுகள், கல்வி, தொழில் என்று எமது வாழ்வு ஒரு புறமும் மறு புறம் போர், அழிவு, துயரம், புலம்பெயர்வு என்று எமது வாழ்வு மிக உக்கிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வாழ்வியற் கோலங்களை சித்திரிக்காத ஒரு கலை வடிவத்தை எப்படி நாம் எமது கலை வெளிப்பாடாகக் கருதலாம். இதுதான் அந்தக் கேள்வி.
இந்த இடத்தில் இன்னொரு கேள்வி ஒன்றும் எழுகிறது. அழிவின் விளிம்பில் நின்று விடுதலைக்காகத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனம் சினிமா குறித்த கதையாடல்களில் தம்மை ஈடுபடுத்தவேண்டுமா என்பதுதான் அது. சினிமாவை கேளிக்கை- களியாட்ட வடிமாக 'தமிழக' சினிமா முன்வைத்திருக்கும் சூழலில் இந்தக் கேள்வி நியாயமானதாகப்படலாம். ஆனால் உலகப்போராட்ட வரலாறுகளை ஆழ்ந்து கற்றதன் அடிப்படையிலும் இன்று 'தமிழக சினிமா' ஈழத்தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் குறிப்பான அசைவியக்கத்தின் அடிப்படையிலும் சினிமா குறித்த கதையாடல்களை நாம் நிகழ்த்தவேண்டிய தேவையும் அவசரமும் எம்மை முன்தள்ளுகின்றன.
ஒரு போராடும் இனக்குழுமத்திற்கு அவற்றின் கலைகளும் ஒரு போராட்ட வடிவம்தான். உலகப்போராட்ட வரலாறுகள் சொல்லும் எளிய பாடம் இது. தமது கலைவடிவங்களினூடாக போராட்டத்தை ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற வரலாறுகளெல்லாம் எம்மில் பலருக்குத்தெரியாது. சினிமா என்பது எமது போராட்டத்தை சர்வமயப்படுத்தக்கூடய - தீவிரப்படுத்தக்கூடிய வெகுஜனப்பண்பாட்டில் ஆதிக்கம்; செலுத்தும் எளிய கலைவடிவம். இதில் நாம் போதிய தேர்ச்சி பெறாதது கவலையளிக்கிறது என்பது மட்டுமல்ல எமது அடையாளத்தை, எமது போராட்டத்தை சித்திரிக்காத ஒரு கலைவடிவத்தை எமது கலையாக இன்று பலர் சித்திரிக்க முற்படுவது வேதனையுமளிக்கிறது.
(அண்மையில் நான் விரும்பி ரசித்துப் படித்த நூல் அமில்கர் கப்ரால் எழுதிய 'விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்' - விடியல் வெளியீடு - அதில் விடுதலைப் பேராட்டத்தில் ஒரு இனத்தின் கலையும் பண்பாடும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து ஆழந்த கருத்துக்களை அமில்கர் கப்ரால் முன்வைக்கிறார். ஈழத்தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.)
எனது கொரிய நண்பர் ஒருவரை சிலர் தமிழ் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. "ஏன் படத்தில் உங்களுடைய வாழ்க்கை முறையையோ, போராட்டத்தையோ, அடையாளங்களையோ காணமுடியவில்லை, நீங்கள் உங்கள் நாடு குறித்துச் சொல்லும் எந்த செய்தியும் அதில் இல்லையே. என்ன எல்லாம் ஒரே மாயமாக இருக்கிறது" என்று கேட்டார்.  "அது உங்களுடைய படம் இல்லை என்றால் ஏன் அதைப் பார்க்கிறீர்கள்? நீங்களே ஏன் பணத்தைச் செலவளித்து அதைத் திரையிடுகிறீர்கள்? நீங்கள் ஏன் திரைப்படம் எடுப்பதில்லை?" என்று தொடர் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை அதை விளக்குவதற்கான காரணமும் இல்லை என்னிடம். அவருக்கு விளக்கமளிப்பதற்குள் என்பாடு பெரும் பாடாகிவிட்டது.
இதற்குத் தீர்வாக மூன்று விடயங்களை நாம் பரிசீலனை செய்யலாம்.
01. முற்றாக தமிழக சினிமாவை நாம் நிராகரிப்பது.
02. தமிழக சினிமாவிற்குத் தீர்வாக ஒரு எதிர் சினிமாவை அதாவது மாற்று சினிமாவை ஈழத்தமிழ்ச்சூழலை முன்னிறுத்தி தீவிர தளத்தில் முன்வைப்பது.
03. சில விமர்சனங்களுடன் தமிழக சினிமாவுடன் சமரசம் செய்து கொள்வது.
முதலாவது விடயம் என்றைக்குமே சாத்தியமில்லாதது. அதைப் புறக்கணிப்பது போல் அபத்தம் வேறில்லை. ஈழத்தமிழ் வெகுஜனப்பண்பாட்டில் அதன் எல்லாக் குறைகளையும் தாண்டி தமிழக சினிமா வீரியம் மிக்கதாக மாறிவிட்டது. அடுத்ததாக மாற்று சினிமாவின் தேவை தமிழ்த்தளத்தில் நீண்ட காலமாகப் பேசபப்பட்டு வருகின்ற போதிலும்  அது தன் போதாமையும் இயலாமையையும்தான் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. முன்றாவதாக உள்ள விடயம்தான் நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியது மட்டுமல்ல தற்போது சாத்தியமானதும்கூட.
ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி ஒரு சந்தை வாய்ப்பை புலம்பெயர் சூழலில் தமிழ்சினிமா பெற்றிருக்கிறது. ஒரு தமிழக சினிமாவின் வெற்றியை குறிப்பாக அதன் லாப நட்டக் கணக்கைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக நாங்களும் இருக்கிறோம்.  நாம் 'படையப்பா'வையும் 'அந்நியனை'யும் பெரு முதலீட்டில் வாங்குவதும் 'அழகி' யையும் 'தவமாய் தவமிருந்து' வையும் சிறு முதலீட்டில் கூட வாங்க மறுப்பதற்கும் பின்னாலுள்ள அரசியல் விளைவுகளும் பின்னடைவுகளும் ஏராளம். இந்த அபத்தம் முதலில் மாற வேண்டும். எமது ரசனையை நாம் தெளிவாக முன் வைக்கவேண்டும். தமிழகச் சினிமாவில் சிறு முதலீடுகளைச்செய்து எமது அடையாளங்களைப் பேச்கூடிய நல்ல திரைப்படங்களை தமிழகக் கலைஞர்களை வைத்தே தயாரிக்க முன் வரவேண்டும். அரசியல் காரணங்களுக்காக நீண்ட காலம் நிலவி வந்த இடைவெளி தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே குறைந்து வருகிறது. இதை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஆர்வமுள்ளவர்களும் வசதியுள்ளவர்களும் தமிழகம் சென்று தமிழகக் கiலைஞர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து சினிமா தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதுடன் ஒரு பாலமாகவும் செயற்படலாம்.
எம்மை இணைத்துப் பணியாற்றக்கூடிய ஆர்வமுள்ள திறமையான கலைஞர்கள் இன்று நிறையப்பேருள்ளனர். பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, சேரன், தங்கர்பச்சான், சீமான், ஜோண், பாலா என்று அதன் பட்டியல் நீளம். அதன் நல்ல தொடக்கப்புள்ளிதான் 'ஆணிவேர்'.
எமக்கான சினிமாவை நாம் இதனூடாகத்தான் சென்றடையலாமே தவிர மாற்று வழி ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
சுயமாக புலம்பெயர் சூழலிருந்து வெளிவந்த சில ஈழத்துத் திரைப்படைப்புக்களை நாம் உற்று நோக்கினால் ஏதோ ஒரு வகையில் தமிழக சினிமாவின் தாக்கத்தை குறைந்தளவேனும் உணரக்கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து முதலில் நாம் விடுபடவேண்டும். எல்லாவற்றிற்குமான ஒட்டுமொத்தத் தீர்வு சினிமா ரசனையை சரியான முறையில் வளர்ப்பதுதான். அதற்கு ஒரே வழி ஊடகங்கள் வழி ஆக்கபூர்வமான காத்திரமான விமர்சனங்களை முன்வைப்பதுதான்.
வெகுஜன ஊடகங்களில் இப்போதுள்ள விமர்சனம் வாந்தி வருமளவிற்கு அபத்தம் நிறைந்தது. விமர்சனம் என்பதைவிட அதை 'ஒத்து ஊதுதல்' என்று சொல்லலாம். அதற்காக விமர்சனம் என்பது எதிர்ப்பதுதான் என்று அர்த்தமும் கற்பிக்கக்கூடாது. உண்மையைச் சொன்னால் தமிழக சினிமாவில் 99 விழுக்காடு திரைப்படங்கள் விமர்சனத்திற்கே தகுதியில்லாதவை. நாம் மிகுதியுள்ள தகுதியான ஒரு விழுக்காடு திரைப்படங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் ஒரு விமர்சன இயக்கத்தை வளர்ப்போம்.
இன்று உலகத்தையே மிரட்டுமளவிற்கு சிறு முதலீட்டில் காத்திரமான திரைப்படங்களை எடுத்து உலகத் திரைப்பட விழாக்களில் பரிசுகளை அள்ளிச்செல்லும் இரு நாடுகள் ஈரானும், கொரியாவும். அவற்றின் வெற்றிக்கும் படைப்புச் செறிவுக்கும் காரணம் அங்கு வளர்ந்திருக்கும் விமர்சன இயக்கம். தமது நாட்டு மக்களுக்கு தமது விமர்சனத்தினூடாக நல்ல சினிமா ரசனையை வளர்த்திருக்கின்றன அங்குள்ள ஊடகங்கள்.
தமிழக ஊடகங்களும் சரி அதையொட்டி நடைபோடும் ஈழத்தமிழ் ஊடகங்களும் சரி வளர்த்திருக்கும் சினிமா ரசனை சொல்லியா தெரியவேண்டும். இதை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான் 'வெயில்' திரைப்படம் குறித்தான எனது பார்வையையும் விமர்சனத்தையும் முன்வைக்கிறேன். நேரடியாக 'வெயில்' குறித்துத்தான் பேச முதலில் நினைத்திருந்தேன். சில வாசக சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகத்தான் இந்த முற்பகுதியை எழுதியிருக்கிறேன். இதை வெயில் திரைப்படம் குறித்த எனது விமர்சனத்தின் முன்னுரையாகவும் கொள்ளலாம் அல்லது ஈழத்தமிழ் சூழலில் தமிழக சினிமா குறித்த ஒரு பதிவாகவும் தனித்த கட்டுரையாகவும் கொள்ளலாம்.
அடுத்த பகுதியில் ஒரு  சினிமா ரசிகன் என்பதையும் விட, ஒரு விமர்சகன் என்பதையும் விட, ஒரு சக மனிதனாக 'வெயில்' தந்த விளைவுகளை ஒரு அகவய விமர்சனம் ஒன்றினூடாக முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


 


மேலும் சில...
வெயிலின் நிழலில் - 02

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 26 Feb 2024 12:09
TamilNet
HASH(0x5626bdc07660)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 26 Feb 2024 12:09


புதினம்
Mon, 26 Feb 2024 12:09
     இதுவரை:  24604417 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4376 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com