அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 December 2021

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 31 arrow வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Thursday, 22 February 2007

வரதர் - முன்னும் பின்னுமாக சில குறிப்புகள்.

வரதர்      
கமல்ஹாசனின் 'ஹேராம்' படததைப் பார்த்தபோது  வரதர்தான்   நினைவுக்கு வந்தார். வரதர் காலமாகியபோது ஹேராம் நினைவுக்கு வந்ததானது வேடிக்கையா? அல்லது  உண்மையா? யதார்த்தமா?  அல்லது எல்லாமே  கலந்த  துன்பியலா?
'ஹேராம்' ஒரு துயர்மிகு  சினிமா.  அதை ஏனையவர்கள் எப்படி  அதை விளங்கினார்களோ தெரியவில்லை.  அதைப்பார்த்தபோது  எனக்கு அப்படித்தான்  பதிந்ததாக ஞாபகம்.
யுத்தம் முழுச் சந்நதமாடிய "ஜெயசுக்குறு"  காலகட்டத்தில்   ஒரு  முன்னிரவில்  எதிர்பாராத விதமாக 'ஹேராமை'ப் பார்க்கக்  கிடைத்தது.
ஏழு பேர் பார்க்க  இருந்தோம். படத்தின்  பாதியிலிருந்து நான்   மட்டுமே மிஞ்சியிருந்தேன். துயரத்தைப் பகிர்வதற்கு அதிகம்பேர்   இருப்பதில்லை என்பார்கள். அது  உண்மைதான்.  உண்மையில்  ஹேராம் கமல்ஹாசனுக்கு தோல்வியுமல்ல,  சேதாரமுமல்ல.  ஆனால் அதற்காக அதற்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை.
அதுவொரு முதன்மைச்சினிமா. அதற்கு எப்போதும் ஒரு  இடமுண்டு. துயர்மிகு காலமும், வாழ்வும் நிகழும்வரையில்  அதற்கிடமுண்டு.
ஹேராமில் கமல்ஹாசன்  சொல்கிற  அதே சேதிதான் வரதர்  சொல்வதும். ஹேராமில் இந்திய அவலத்தை கமல்ஹாசன்  சொல்கிறார். வரதரோ தன்னுடைய கதைகளில் ஈழத்தமிழரின்  அவலங்களைச் சொல்கிறார்.
ஹேராமில் இந்திய  சுதந்திரத்துக்கு முன்பே இந்து முஸ்லீம்  வன்முறை தொடங்கிவிட்டது என்பதைக்காட்டப்படுகிறது.  சுதந்திரத்தின் பின்னர் இப்போதும் இந்து முஸ்லீம் கலவரங்களும்,  வன்முறையும் தொடர்கிறது. இடையில் காந்தி மீதான   கடுமையான விமர்சனங்களும் காந்தியின் அணுகுமுறை மீதான   ஆட்சேபணைகளும் வைக்கப்படுகின்றன. காந்தி  சுட்டுக்கொல்லப்படுகிறார். வன்முறை அடங்கவில்லை. இன்றும்  தொடர்கிறது.
எங்கே தவறு ….? வன்முறையால்  சுதந்திரத்துக்கு  முன்பு   ஒருமனிதர் தன்  துணையை அநியாயமாக இழக்கிறார். அதே  வன்முறையால் சுதந்திரம்  கிடைத்து ஏறக்குறைய  ஐம்பது  வருடங்கள் எட்டுகிறபோதும்  அதே மனிதர் பாதிப்புக்குள்ளாகிறார்.  இவ்வளவுக்கும்  அந்த வன்முறைக்கும் அந்த மனிதருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை.
வன்முறைகள் எப்போதும் பொது மனிதர்களையே தின்கின்றன.  வன்முறைக்குத் தூண்டப்பட்டு, வன்முறையத் தூக்கி,  வன்முறையிலேயே பொது மனிதர்கள் அழிந்து போகிறார்கள்.  ஆனால், வன்முறையின் சூத்திரதாரிகள், அல்லது வன்முறை  மையங்கள் அப்படியே பாதிப்பில்லாமல் இருக்கின்றனர். அத்துடன்  அவை  மேலும்  பலம் பெறுகின்றன.
இக்குறிப்பு 'ஹேராம்' மீதான விமர்சனமல்ல.  வரதர் பற்றி  சிந்திக்கும்போது 'ஹேராமி'ன் நினைவு தவிர்க்கமுடியாமல் வந்து   குவிவதால் எழுதவேண்டியிருக்கிறது.
வரதர் 1958இலோ 60ஆம் ஆண்டிலோ 'கற்பு' என்ற சிறுகதையை   எழுதியிருந்தார். 1958 இல் கொழும்பு, மற்றும்  சிங்களப்பகுதிகளில்  சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடாத்திய  வன்முறையை   பதிவுசெய்த கதை அது. அந்தக்கதை இதுவரையில் ஐம்பது   தடவைக்குமேல் பிரசுரமாகியிருக்கும். பல இதழ்கள் மீளமீள அதை பிரசுரிக்கின்றன. இன்னும், அந்தக்கதை மீள்  வெளியீட்டுக்குள்ளாகும். அதற்கான சூழல் மாறாதிருக்கும்வரை  அது மீளமீள வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும்.
இதுவொரு துன்பியல் நாடகம். துயரமும், அருவருப்பும் தருகிற  கதை அது. ஆனால், அதுதான் யதார்த்தமாக இருக்கும்போது  அந்தக்கதைதானே வேண்டியிருக்கிறது. அதாவது இனக்குரோதமும்  வன்முறைச் சூழலும் தீராதவரையில் வாழ்க்கை தவிர்க்க  முடியாதவாறு அருவருப்பூட்டுவதாகவேயிருக்கும்.
'கற்பு' கதையை வரதர் எழுதுவதற்கு 1958 இல் தமிழர்கள்  சிங்களவர்களால்  கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்  காரணமாகியது. களுத்துறையில் வன்முறையின்போது சிங்கள  வன்முறைக் கும்பலால் சிதைக்கப்பட்ட  தமிழ்ப்பெண்களை ஒரு  குறியீடாக்கினார் வரதர்.
தன் துணைவியை – தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும் கணவனின்  கதையே 'கற்பு'. அவள் மீது எந்தக்குற்றமும் இல்லையென்று    கணவருக்குத்தெரியும். அவர் வன்முறையை விரும்பவில்லை.  ஆனால்,  அதுவொரு பெரும் பிசாசாக வெறிகொண்டுவரும்போது  அதனை  எதிர்க்க அவரால் முடியவில்லை. ஆனால் அவர்  தனக்குள் வளர்த்து கொண்ட பக்குவத்தினால் அதனை   தன்னளவில் கடந்து செல்கிறார்.
வரதர் அந்தக் கதையை எழுதத்தூண்டிய சூழலும் நிலவரங்களும்  இன்றும் மாறவில்லை. அது  மாறக்கூடிய சாத்தியங்களும்  தென்படவில்லை. காலம் நகர்ந்துவிட்டது. உலகில் பல   மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.  தலைமுறைகள்  மாறிவிட்டன.  சிறுகதையின் வடிவத்தில்கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.   கதை சொல்லும் முறைகள்  எல்லாம் மாறியுள்ளன. ஆனால்,  காயங்கள் ஆறவில்லை. வலி தீரவில்லை. மூடத்தனமும்,  வன்முறையும், இனவெறியும் நீங்கவில்லை. வாழ்வில்  தொடரப்படும் ஈனக்கதைகள் மாறவில்லை. வரதரின் 'கற்பு'   சொல்லும் 'ரணகளம்' திரும்பத் திரும்பத் நிகழ்ந்தபடியே  இருக்கிறது. குருதியும், ஓலமும் குரூரமாக வெளிச்சிதற  வன்முறை  நிகழ்கிறது. அது முடிவற்ற வன்முறை.  வாழ்வைத்தின்னும் தீராப்பசி கொண்ட வன்முறை. இந்த  வன்முறைபற்றி ஒவ்வொருவரும் அவரவர் தத்தம்  நிலைப்பாட்டிலிருந்து ஆயிரமாயிரம் நியாயங்களை  முன்வைக்கலாம். ஆனால் அது வாழ்வைத்தினகிறது என்பது மட்டும்  உண்மை.
வரதர் தமிழரசுக்கட்சிப் பாரம்பரிய அரசியலை முன்நிறுத்திய  இலக்கியப்படைப்பாளி. இதனால், அவர் ஒருபக்கம்   அங்கீகரிக்கப்பட்டார். இன்னொரு பக்கத்தில் விமர்சிக்கப்பட்டார்.  ஆனால், அவர்மீதான விமர்சனங்களையும், கண்டனங்களையும்  இதுவரை  யாரும் காட்டியதோ, கடுந்தொனியிலோ  முன்வைக்கவில்லை.
வரதர் ஒரு 'சனாதனி' என்று சொல்லுவோர்கூட அவரை முற்றாகப்  புறக்கணிக்கவில்லை. வரதரின்  இயல்பே இதற்கு முக்கிய   காரணம் என்று  நினைக்கிறேன். அவர் அமைதியானவர்.  தன்னுடைய  எழுத்துக்களிலோ, உரையாடலிலோ என்றைக்கும்   உரத்ததொனியை அவர் எழுப்பியதில்லை. விமர்சனங்கள்,  சர்ச்சைகள், மறுப்புக்கள், எதிர்வினைகள் எதிலும் அவர் கடுமையாக ஈடுபட்டதாகவும் இல்லை.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக  படைப்புத்துறையில்  இயங்கிவந்த வரதருக்கு எதிர்முகாம்கள் இருந்ததாக  அறியமுடியவில்லை. பதிலாக சகல தளங்களிலும் இயங்கிய  அவரையொத்தவர்களிடையேயும், அடுத்தடுத்த  தலைமுறையினரிடத்திலும்  அவருக்கு உறவிருந்தது. அவரவர்  கருத்துக்களுக்கும், நிலைப்பாட்டிற்கும் அவரவரே பொறுப்பு என்ற  நிலைப்பாடுடையவர் அவர். அதேபோல தன்னளவில்  தன்னிடம்   ஒரு கருத்துநிலையும் செயற்பாட்டுக்களமும் உண்டு என்ற   கருத்துடையவர். இது  ஒருவகைப் பண்பு ஜனநாயகம். வரதர்  இதைக் கடைசிவரை பின்பற்றினார்.
மறுமலர்ச்சிக்காலத்தில் இருந்து படைப்புத்தளத்தில் இயங்கிய  வரதர் இலக்கியத்தின் பண்முகத்தன்மையராகவே இருந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி எனப் பல வடிவங்களில்   எழுதியிருக்கிறார். எழுத்தைவிட   பதிப்புமுயற்சிகளிலும்;   செயற்பட்டுள்ளார்.
வரதர் பதிப்பகம்  நூறுவரையான புத்தகங்களை   வெளியிட்டிருக்கிறது. இப்போது வரதர் இறக்கும்வேளையிலும்  நான்கு புத்தகங்களை அவர் அச்சிட்டுக்கொணடிருந்தார்.அவை  இனிமேல்தான் வெளியிடப்படவுள்ளன.   மகாகவியின் வள்ளி  தொடக்கம் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை சொக்கன் எனப்  பலரின் புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். தவிர அரசியல்  ரீதியான பதிவுகளையும் துணிச்சலாக நெருக்கடிக் காலகட்டத்தில்  வெளியிட்டார்.
'யாழ்ப்பாணம் எரிகிறது'  '24 மணிநேரம்'   உட்பட முக்கியமான   வன்முறை அழிவு சார்ந்த பல வெளியிடுகளை அந்த கொதிப்பான  சூழலில் வெளியிட்டவர் அவர். அதுவும்  துணிச்சலுடன்  தன்னுடைய பதிப்பகத்தின் பெயரில் வெளிப்படையாக 'வரதர்'  வெளியீடாகவே வெளியிட்டிருந்தார். அந்த நூல்களை  எழுதிய  செய்கை ஆழியான் அவற்றை நீலவண்ணன் என்று பெயர்  குறிப்பிடும் போது பதிப்பாளரான வரதரோ  துணிச்சலுடன்  தன்னுடைய பதிப்பகத்தின் பெயரிலேயே அவற்றை  வெளிக்கொண்டு வந்தார். இப்படி பலநூல்கள் வரதர் வெளியீடாக  வந்திருக்கின்றன.
வரதர் இதழியல் துறையிலும் இயங்கினார். 'தேன்மொழி' என்று  கவிதைக்கான இதழை நடத்தினார். இதில் வரதருடன் மகாகவி  இணைந்திருந்தார். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து  வெளிவந்த 'மறுமலர்ச்சி' என்ற இதழை 1940களில் வரதர் ஏனைய  படைப்பாளிகளுடன் இணைந்து வெளியிட்டார். பின்பு 'புதினம்' என்ற வாரப்பத்திரிகையும்  வரதரால் வெளியிடப்பட்டது. கூடவே  மாணவர்களின் அறிவுவிருத்தி கல்வி வளர்ச்சிக்காக 'அறிவுக்  களஞ்சியம' என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார்.  தன்னுடைய முதுமைக்காலத்திலும் அவர் தளர்ந்திருந்ததில்லை  போரின் நெருக்குவாரங்கள் சூழ்ந்திறுக்கிய போதும் அவர்  அதற்கெதிராக இயங்கிக்கொண்டேயிருந்தார்.
யாழ்ப்பாணம் 1990களில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு  பொருளாதாரத்தடை இறுக்கமாக வாழ்வை இறுக்கிப்பிடித்திருந்த  காலம் அது. வரதர் அப்போது வெளியிடுகளை கொண்டு வரும்  மும்முரத்தில் இயங்கினார். யாழ்ப்பாணம் கே கே எஸ் வீதியில்  உள்ள ஆனந்தா அச்சகத்தில் தினமும் வரதரை எவரும் காணலாம். நிமிர்ந்த நடை. நல்ல உயரமான தோற்றம். நரைத்த தலை  ஏறக்குறைய 30 வருடமாக இதேமாதிரியான தோற்றத்தில்தான்  வரதரைப் பார்த்திருக்கிறேன். பெரிய தடித்த பிறேம் போட்ட  முக்குக்கண்ணாடி போட்டிருப்பார். வெள்ளை அரைக்கைசேட்டும்  வெள்ளை வேட்டியும் உடுத்திருப்பார். அவர் சத்தமிட்டுப் பேசியோ  சத்தமிட்டு சிரித்தோ நான் கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை.  யாரையும் அவர் திட்டியதையும் குறைசொன்னதையும்  அறிந்ததில்லை அவருடைய இயல்பும் வாழ்வும் ஒரு வகையானது. தனியான அடையாளங்கள் கொண்டது. 
ஆனந்தா  அச்சகத்தில் அவர்  உழைத்ததை  விடவும், அதனைப்  பயன்படுத்தி தன்  விருப்பங்களுக்குரிய  காரியங்களைச்  செய்தார் என்றே சொல்லவேண்டும்.
யாழ்ப்பாண சைவவேளாள வாழ்க்கையிலிருந்து வரதர்  விலகவில்லை என்ற  விமர்சனத்தை  முன்வைக்கும்  தரப்பினருண்டு. ஒருவகையில் அவர் அப்படித்தான் வாழ்ந்தார்  எனலாம்.  அவர்  அந்த வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகவில்லை என்பது உண்மை என்ற போதும் அதற்குள்ளிருந்த  மேலாதிக்கத்தையோ, வன்முறையையோ அவர்  பின்பற்றவில்லை.  ஆனால், அந்த  சைவவேளாள ஆதிக்கத்தையோ, அல்லது  சைவவேளான வாழ்முறையையோ அவர் விமர்சிக்கவும்,  கண்டிக்கவும் இல்லைத்தான். தன் சமூக  அமைப்பிற்குள் தன்னை  ஒழுங்குபடுத்தி அதற்குள் அமையக்கூடிய  அளவுக்கான அறத்தைப்  பின்பற்றி அவர் வாழ்ந்தார். இதை ஒருவகையான சாதுரியம்,  தந்திரம், பதுங்கல், சமாளிப்பு எனக் கூறுகிறார்கள் சிலர். ஆனால்,  வரதரின் இயல்பு குறித்தும், அவருடைய வாழ்க்கை குறித்தும்  பகிரங்கமான  எந்த விமர்சனங்களும் இதுவரை   எழுப்பப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல அவருக்கு  எதிர்முகாம்கள் இல்லாமல் இருந்ததுதான்  இதற்கான காரணமாக  இருக்கலாம். இன்னொரு வகையில் சொன்னால், எதிர்முகாம்கள்  உருவாகமுடியாத அளவுக்கு நுட்பமாக தன்னை அவர்  ஓழங்கமைத்திருந்தாரோ என்னவோ. இனப்பிரச்சினைபற்றிய  வரதரின் நிலைப்பாட்டிற்கும் யாழ்ப்பாணச்சமுகம் பற்றிய  அவருடைய நிலைப்பாட்டுக்குமிடையில் வேறுபாடுகள்  இருந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக  அவருடைய பங்களிப்பை யாரும் மறுத்துவிடமுடியாது.
வரதரின் இலக்கிய இயக்கத்திற்கும், கோட்பாட்டுக்கும் மாற்றான  தளத்தில் இயங்கிய கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே.  ரகுநாதன், தெணியான், எஸ்.பொ. போன்றோர் தங்களுக்குள்  மோதிக்கொண்டார்கள். எதிரெதிர் அணிகளாகினார்கள். ஆனால்,  வரதர் எல்லோருக்குமிடையில் பாலத்தை நிர்மாணித்தே இருந்தார்.  இது தொடர்பாக நிச்சயம் விரிவாக ஆராயவேண்டும்.
வரதருக்கு கைலாசபதியோடும் உறவியிருந்தது. கா.சிவத்தம்பி,  மு.த. டொ மினிக் ஜீவா, யேசுராசா எனச்சகலதரப்புக்குமிடையில்  தொடர்பாடல் நிகழ்ந்து வந்தது. என்றைக்கும் இது  முறிந்துபோனதாக இல்லை. இது எப்படி நிகழ்ந்தது?
தமிழரசுக்கட்சி அரசியலை ஆதரித்த வரதர் அதன்வழியான  தமிழ்த்தேசியத்தையே தொடர்ந்தும் ஆதரித்தார். ஆனால்,  எண்பதுகளில் ஏற்பட்ட  தலைமுறை மாற்றம், ஆயதப்போராட்ட  அரசியலின் பக்கம் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார் என்றோ அவற்றை சார்ந்தார் என்றோ  சொல்ல முடியாது.
அவருடைய முதல் இலக்கிய நோக்கு தமிழ் மக்கள் சிறீலங்கா  அரசினால்  அல்லது சிங்கள ஆளும்வாக்கத்தினால்  வன்முறைக்குள்ளாக்கப்படுவதை எதிர்ப்பதே.  அதன்  வழியாக  தமிழ்மக்கள் நிம்மதியாக நீதியுடன் வாழக்கூடிய ஒரு நிலையைக்  காண்பதே. இதற்கப்பால் புதிய அரசியல் உருவாக்கம்பற்றியோ,  சமூக மாற்றத்துக்கான கலகங்களிலோ அவரின் அக்கறைகள்  கட்டமைவுகொள்ளவில்லை.
வரதர் பின்னாளில் மல்லிகையில்  தொடராக எழுதி பின்னர்  மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த 'தீ வாத்தியார்' ஒருவகையில்  வரதரின் தன்னடையாளத்தைக் காட்டும் படைப்பு. தீ வாத்தியார்  அவரைக் காண்பதற்கும், விமர்சனம் செய்வதற்கும் அதிகம்  இடமளிக்கும் ஒரு பிரதி என்று சொல்லமுடியும். அவருடைய  முதல் சிறுகதைத் தொகுப்பான 'கயமை மயக்கம்' என்பதில்  இருந்து அவர் கடைசிவரை எழுதிய அநேக கதைகளில்  'மூர்த்திமாஸ்ரர்' என்ற  பாத்திரத்தை தொடர்ந்து இயக்கி வந்தார்.  அந்த மூர்த்திமாஸ்ரர் தலைமுறைகளைக் கடந்தாரா? மூர்த்தி  தயங்கிய இடங்கள், தடுமாறிய  இடங்கள், அவருடைய  நிலைப்பாட்டிற்கும், வாழ்க்கைக்குமான  இடைவெளி எந்தளவு  என்பனவும் தனியான கவனத்திற்குரியது. வரதரை  விளங்கிக்கொள்வதற்கும் அவரை வாசிப்பதற்கும் இதுவும்  அவசியமானது.
வரதர் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள்  செய்யப்படவேண்டும். ஆனால் அவை அவரை நிபந்தனையின்றிக்  கொணடாடுவதாகவோ அல்லது காழ்ப்புடன் புறக்கணிப்பதாகவோ  இருக்க்கூடாது.
வரதர் ஒரு முன்னோடி. ஈழத்திலக்கியத்தில் அவருக்கென்றொரு  வலுவான பாத்திரமுண்டு. கைலாசபதி நவீன கவிதையை  அங்கீகரிக்க மறுத்தபோது வரதர் நவீன கவிதையை  அங்கீகரித்திருந்தார். தவிர நவீன கவிதைகளுக்கிடமளித்து தனியாக கவிதைக்கான இதழையும் வெளியிட்டிருந்தார். அத்துடன்  வரதருடைய பதிப்பு முயறசிகள் குறித்தும் சரியாக மதிப்பிட  வேண்டும். ஈழத்தில் பதிப்புத்துறை இன்னும் செழுமையாக  வளர்ச்சியடையவில்லை. ஆக வரதரின் பங்களிப்புக்குறித்து  சரியான புரிதலுடன் மதிப்பீடு செய்தல் அவசியம்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 Dec 2021 16:46
TamilNet
SL President Gotabaya Rajapaksa and Commander of the SL Army, General Shavendra Silva, have deployed the occupying military to suppress the 12th collective Mu'l'ivaaykkaal Remembrance of Tamil Genocide at the sacred memorial site, said former councillor Ms Ananthy Sasitharan on Monday. She was talking to TamilNet after the SL military blocked her from entering Mullaiththeevu. The SL military was using Covid-19 as an excuse to shut down two divisions surrounding the memorial place. War criminal Silva, who commanded the notorious 58th Division that waged the genocidal onslaught in Vanni in May 2009, is now leading Colombo's Operation Centre for Preventing COVID-19 Outbreak in addition to being the commander of the SL Army. His military men were also responsible for destroying, desecrating the memorial lamp and removing the enormous memorial stone brought to Vanni from Jaffna on 12 May.
Sri Lanka: Ananthi blames war criminal Silva for blocking collective memorial at Mu'l'livaaykkaal


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 Dec 2021 16:46


புதினம்
Fri, 03 Dec 2021 16:27
     இதுவரை:  21460690 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2928 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com