அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow நூல்நயம் arrow பெர்லின் இரவுகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பெர்லின் இரவுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Monday, 26 February 2007

பயணங்களும் அவை தரும் விசித்திர அனுபவங்களும் பல்வகை இலக்கியப்படைப்புகளாக பல்வகைப்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளன. ஒரு திசையைத் தீர்மானித்து  இந்த இடத்திற்குதான் செல்கிறோம் எனச் செல்லுமிடமறிந்து தீர்மானமாகப் பயணிப்பதற்கும் ரக்ஸியில் மற்றவர்களுக்காக வாடகைக்குச் சவாரி செய்வதற்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் உண்டு.

பயணிகளுக்காகக் காத்திருந்து அல்லது அவர்களால் அழைக்கப்பட்டு அவர்கள் ரக்ஸி- க்குள் ஏறி அமர்ந்து முகவரியையோ அல்லது ஒரு இடத்தின் பெயரையோ குறிப்பிட்டுக் கூறியபின் ஆரம்பிக்கும் சவாரி ஒரு விசித்திரமானதும் ஆச்சரியங்கள் அடங்கியதுமான சவாரிதான். விதம் விதமான மனிதர்களுடன் ஏற்படும் விதம் விதமான உரையாடல்களும் அதன் சூழ்நிலைகளும் ரக்ஸி ஓட்டுனர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அனுபவங்கள்தான்.

ஒவ்வொரு குட்டிச்சவாரியும் ரக்ஸி ஓட்டுனருக்குக் கிடைக்கும் ஒவ்வொரு புதிய அறிமுகமே.

ரக்ஸியின் உள்வெளி பொது வெளியல்ல. பயணிகள் அவ்வெளியை தாம் விரும்பிய விதத்தில் உபயோகம்செய்யமுடியாது. அதே நேரத்தில் பயணிக்கும் பயணிக்கு எப்போது இவ்வெளி வாடகைக்கு விடப்படுகிறதோ அக்கணத்திலிருந்து ரக்ஸியின் உள்வெளி முழுக்க முழுக்க ரக்ஸிக்காரரின் முழுமையான இறைமையுள்ள தனிப்பட்ட வெளியென்றும் கூறமுடியாது. இவ்வுண்மை எத்தனை தூரம் வெளிப்படையாகப் புரியப்படுகிறதோ இல்லையோ, ரக்ஸிப் பயணம் இந்த யதார்த்தம் சார்ந்த உளவியல் உறவை ரக்ஸி ஓட்டுனருக்கும் பயணிக்குமிடையில் உருவாக்கிவிடுகிறது.

பொ.கருணாகரமூர்த்தி அவர்களின் "பெர்லின் இரவுகள்" நூலை வாசிக்கும்போது ஒரு விசித்திரமான உணர்வலையோட்டம் எழுந்தது. நகரங்களெல்லாம் ரக்ஸிகளால் நிறைந்து கிடக்கிறது. பல்லாயிரக்கணக்கான தெருக்களில் பல்லாயிரக்கணக்கான ஓட்டுனர்கள் ரக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ரக்ஸி ஓட்டுபவர்களில் ஒருவர் தன்னிலை அனுபவத்தை நூலாக்கியுள்ளார். வாசிக்கும்போது வாசிப்போர்களுக்குத் தாமும் ரக்ஸி ஒட்டுனர்களோ என ஒரு உணர்வை ஏற்படுகிறது. நமக்கும் இவ்வனுபவம் வாய்த்தால்... என ஒரு ஆதங்கமும் உருவாகுவதாகத் தோன்றுகிறது.

ஆனால் இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், எல்லை தாண்டிய இரவு நேரங்களில் அடிக்கடி ரக்ஸி எடுப்பவன் என்ற வகையில் நான் ரக்ஸி ஓட்டுனர்களைப் பற்றியும்  அவர்களது உரையாடல்கள் அல்லது மெளனங்கள் பற்றியும் கொண்டுள்ள அனுபவங்கள் இவ்வாசிப்பின் போது சமாந்தரமாக ஓடிக்கொண்டேயிருந்ததுதான். அநேகமாக ஒரு மணிநேரத்தைத் தாண்டாத குறுகிய நேர ரக்ஸிபயணங்கள், அவற்றின் போது ஒட்டுனருக்கும் பயணிப்பவருக்குமிடையில் உருவாகும் குறுகிய உரையாடல்கள் அல்லது இறுகிய மௌனம் எப்போதுமே விசித்திரமானதுதான்.

கடந்த வருடம் இசைவாணன் மொசாட்டின் இருநூற்றாண்டு ஞாபகவருடம். பிரபல பிரஞ்சு எழுத்தாளரான பிலிப் சொலயர் இதையொட்டி எழுதிய நூல் அவருக்கும் சீன இனத்தவரான ஒரு ரக்ஸி ஓட்டுனருக்கும் இடையிலான உரையாடலாக அமைந்துள்ளது. செவ்விசை பற்றிய நுண்மையான உரையாடலை ரக்ஸி ஓட்டுனருக்கும் அவருடன் பயணிக்கும் ஒரு எழுத்தாளருக்குமான கருத்துப்பரிமாறலாக உருவகப்படுத்திய அந்த நூலை வாசிப்பவர் யாருக்கும் மொசாட்டின் இசையைக் கேட்கவேண்டுமெனும் ஆவலெழும்.

பலரால் அறியப்படாத பிரஞ்சுத் தத்துவஞானி Jean Baptiste Botul  ஒரு ரக்ஸி ஓட்டுனர். அவரின் பெயரால் "பொத்துயிலிசம்" என்றும் "பொத்துயில் அற்றிறியூட்" என்றும் சொல்லப்படும் விடயங்களைப்பற்றி இவ்விடத்தில் என்னால் குறிப்பிடாதிருக்க முடியாது.
சோக்கிரட்டீஸ் பாணியில் தத்துவத்தை வாய்வழியாக மட்டுமே பேணவேண்டும் எனும் பிடிவாதம் கொண்ட ரக்ஸி ஓட்டித் தத்துவஞானியான பொத்துயில் தேவை கருதி தான் எழுதியதனைத்தையும் எரித்துப் போட்டுவிட்ட சம்பவம் துரதிஸ்ரமான ஒன்று. இருப்பினும் பரிஸ் ரக்ஸிக்காரர்கள் சங்கம் அவருக்கு வழக்கு வைத்தபோது அவரின் சுயவிளக்க உரை நீதிமன்றத்தால் பதியப்பட்டிருந்தது. அது ஒரு நூலாகவும் வந்துள்ளது. அந்த நூலின் தலைப்பு: "நீட்சேயும் மதியப்பிசாசும்".

பரிஸில் பொத்துயிலின் ரக்ஸியில் ஏறிச் சவாரி செய்பவர்கள் எங்கோ ஒரிடத்திற்குச் செல்லும் நோக்கில் பயணம் செல்வதில்லை. பொத்துயிலின் தத்துவ உரை கேட்டல் மட்டுமே அவர்களது சவாரியின் நோக்கம். பொத்துயிலும் தனது பயணிகளை பரிஸின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவ்வவ்விடங்களின் முக்கியத்தைக் கூறி அதிலிருந்து சவாரி செய்து கொண்டே தனது தத்துவ உரைகளை முன்வைப்பாராம். அரிஸ்ற்ரோட்டல் காலத்தில் ரக்ஸியிருந்திருந்தால் அவரும் ரக்ஸி ஓடிக்கொண்டே தனது தத்துவப் பிரச்சாரங்களைச் செய்திருப்பார் என்பது பொத்துயிலின்வாதம். சிந்தனைத் தெளிவென்பது அசைந்து கொண்டிருக்கும் போதுதான் பெறப்படுகிறது என்பதும் அவரின் கூற்றுத்தான்.

பொத்துயிலைப் பற்றியும் அவரது ரக்ஸிச் சவாரிகளைப் பற்றியும் ஏராளம் சொல்லலாம். ஆனால் முக்கியமான விடயத்திற்கு வருகிறேன். பொத்துயிலின் ரக்ஸி ஒரு மாலைப்பொழுதில் பதினேழே வயதான ஒரு இளம்பெண்ணால் நிறுத்தப்படுகிறது. அவள் ரக்ஸிக்குள் ஏறியதும் "ஆசையை ஓடவிடு" எனும் அர்த்தம் படும்படியான ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பிடுகிறாள். ஆனால், ஒரு தத்துவ மனோநிலையில் அப்பெண்ணின் குரலுக்கு வேறு அர்த்தம் பெறப்படுகிறது. இரவு முழுவதும் ரக்ஸி இடம்விட்டு இடமாக ஓடிக்கொண்டிருந்தது. மறுநாட்காலை இளம்பெண்ணின் தாய்தந்தையர் பொத்துயிலுக்கெதிராக வழக்குத்தொடுத்தனர். பொத்துயில் அச்சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பொத்துயிலின் செல்வாக்குக்காரணமாக வழக்கு முடக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் பரிஸ் ரக்ஸிக்காரர்கள் சங்கம் பொத்துயிலை  விடவில்லை. இச்சங்கம் அவருக்கு எதிராக வழக்கு விசாரணையை மேற்கொண்டது. மாலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான வழக்குவிசாரணை மறுநாள் அதிகாலை வரையும்தொடர்ந்தது.

சற்றும் சளைக்காமல் பொத்துயில் இரவிரவாக பிரபல ஜேர்மனியத் தத்துவஞானியான நீட்சேயிக்கும் அவர் காதல் கொண்ட இளம் பெண்ணான லூ வொண் சலோமேயிற்குமிடையிலான உறவுபற்றிய தத்துவ விசாரங்களில் முற்றுமுழுதாக இறங்கினார். ஆச்சரியப்படும் வகையிலமைந்த இந்தத் தத்துவ விசாரங்களே Nietzsche et le démon de midi (Edition: Mille et une nuits) எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண ரக்ஸிக்காரராகிய பொத்துயிலின் தத்துவப்போக்கும் அவரது கருத்து நிலைப்பாடுகளும் தற்போது முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கின்றன.

பொ.கருணாகரமூர்த்தி அவர்களின் ரக்ஸிச்சவாரிகளின் போது பெறப்பட்ட அனுபவச் சிதறல்களின் பதிவுகள் ஏதோ ஒரு வகையில் பொத்துயிலை நினைவிற்குக் கொண்டு வந்தன. கருணாகரமூர்த்தி அவர்கள் தான் சந்திக்கும் பயணிகளின் பல்வேறுபட்ட முகங்களையும் உளப்பாங்குகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார். ஒரு சமுகத்தில் பல்வேறுபட்ட மட்டங்களிலும் பல்வேறுபட்ட நிலைகளிலிருந்தும் வரும்பாத்திரங்கள் அவரின் விபரணங்களுக்குள் அகப்படுகின்றன. சாதாரண சூழநிலைகளில் சந்திக்கும் மனிதர்களுக்கும் சவாரியின் போது சந்திக்கும் மனிதர்களுக்குமான இடைவெளிகள் தெளிவுறத் தெரியும் வகையில் அவரது விபரிப்புகள் அமைந்துள்ளன.

பொத்துயில் சவாரி செய்துகொண்டே தத்துவக் கல்வி கற்பித்தார். கருணாகரமூர்த்தி சவாரிசெய்து கொண்டு தனது பயணிகளை உளவியற்பகுப்பாய்வு செய்து தத்துவங்களை உள்வாங்கிக்கொள்கிறார்.

தனது அனுபவங்களை ஒரு வித நகைச்சுவையுடன் அவர் உள்வாக்கியிருப்பதால் அவற்றை அவர் நகைச்சுவையுடனேயே வெளிப்படுத்தியுமிருக்கிறார். ரக்ஸி ஓட்டுனர்கள் பெரிய அளவில் கல்வி கற்காதவர்கள் என்னும் ஒரு பொதுக்கருத்து உண்டு. ஆனால், ரக்ஸிப்பயணங்களின்போது ஓட்டுனர்களுடன் அரசியல், தத்துவம் போன்ற இன்னபிற விடயங்கள் சார்ந்து கதைவிட்டுப் பார்தால் புரிகிறது அவர்கள் உலகம்பற்றி கொண்டிருக்கும் ஆழமான பார்வை.

ரக்ஸி ஓட்டுனரின் பயணிகள் மீதான பார்வை இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்குமளவிற்கு, ரக்ஸி ஓட்டுனர்களின் உலகம் பற்றிய விபரிப்புகள் போதாமையாயிருப்பது ஒரு குறைபாடாகத் தெரிகிறது.

'பெர்லின் இரவுகள்" பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதைக் காட்டிலும் அவற்றை வாசியுங்கள் என்று எவருக்கேனும் ஆலோசனை கூறுவதுதான் முக்கியமான விடயமாகப் படுகிறது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 00:52
TamilNet
HASH(0x55ed3bf41078)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 00:52


புதினம்
Thu, 25 Apr 2024 00:52
















     இதுவரை:  24803221 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5093 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com